அல்லி பாத்திமாவின் பாண்டிச்சி
- லக்ஷ்மி சரவணகுமார்

- 3 minutes ago
- 4 min read

( 2022 ம் வருடம் எழுதப்பட்ட கட்டுரை)
ஜீரோ டிகிரி நாவல் போட்டிக்கு நடுவராக இருந்தபோது அல்லி பாத்திமாவின் செல்லக்கருப்பி என்னும் நாவலும் போடிக்கு வந்திருந்தது. அதன் எளிமையும் மொழியின் அலங்காரங்களுக்குப் பின்னால் ஓடாத இயல்புத்தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. தான் சொல்ல நினைத்தக் கதையைச் சரியாக சொல்ல வேண்டுமென்கிற கவனத்துடனும் அந்தக் கதாப்பாத்திரங்களை வாசிக்கிறவர்களின் கண்முன்னால் உயிர்ப்போடு நிறுத்தவேண்டுமென்கிற மெனக்கெடலும் அதில் இருந்தது. அந்த நாவல் போட்டியில் பரிசு வெல்லவில்லை எனினும் எனக்குப் பிடித்திருந்தது.
செல்லக்கருப்பிக்குப் பின் அல்லி பாத்திமாவின் முந்தைய நாவலான பாண்டிச்சியை வாசித்தேன். செல்லக்கருப்பியைப் போலவே பாண்டிச்சியும் எனக்குப் பிடித்திருந்தது.. இந்த நாவல் வெறுமனே ஒரு காதல் கதையோ அல்லது பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணமோ அல்ல. இவை இரண்டுக்கும் இடையில், காடு, மனிதன், காதல், நம்பிக்கை, மரபு, நவீனத்துவம், அதிகாரம் ஆகியவற்றை ஒரே கதைப்பரப்புக்குள் கொண்டுவர முயற்சிக்கும் படைப்பாக இருக்கிறது. நகரத்திலிருந்து காட்டுக்குள் ஒருவர் நுழைவது என்பது இந்த நாவலில் ஒரு நிலவியல் பயணமாக இல்லாமல் அகப்பயணமாக மாறுகிறது.
நாவலின் துவக்கத்திலேயே அந்தக் காடு கதைக்கு வெறும் பின்னணியாக மட்டும் இருக்கப்போவதில்லை என்பதை நாம் உணர்த்திவிடுகிறோம். இருளைத் துளைத்துச் செல்லும் வெளிச்சம், மரங்களுக்கிடையே பரவும் பொற்கதிர்கள், பறவைகளின் இயக்கம், வேர்களின் முடிச்சுகள் என இயற்கை உயிருள்ள கதாபாத்திரமாகவே வருகிறது. செல்வன் காணும் கனவிலிருந்து தொடங்கும் அந்தக் காட்சிகள், பின்னர் நாவல் முழுவதும் விரியும் ஒரு மனநிலைக்கான முன்னறிவிப்பைப் போல இருக்கின்றன.
செல்வன், கதிர், சியாமா, மாயா போன்ற நகரத்தோடு தொடர்புடைய மனிதர்கள் பொன்வளக்காட்டுக்குள் நுழையும் போது அவர்கள் பார்ப்பது ஒரு ‘வித்தியாசமான’ உலகம். ஆனால் நாவல் மெதுவாக அவர்களுடைய பார்வையையே மாற்றுகிறது. ஆரம்பத்தில் அவர்கள் பார்க்கும் காடு, பின்னர் அவர்கள் வாழத் தொடங்கும் உலகமாகிறது. ஆரம்பத்தில் அவர்கள் ‘அந்த மக்கள்’ என்று பார்க்கும் மனிதர்கள், பின்னர் அவர்களுடைய உணர்வுகளையும் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ள வேண்டிய மனிதர்களாக மாறுகிறார்கள். இரண்டு மாதங்கள் காட்டில் தங்க அனுமதி வழங்கப்படும்போது, அவர்களிடம் அந்த மக்களின் பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்ற நிபந்தனை வைக்கப்படுகிறது. இது நாவலின் அடிப்படை முரண்களில் ஒன்றைத் திறக்கிறது: யார் யாரை ஆய்வு செய்கிறார்கள் என்கிற கேள்வி தான் பாண்டிச்சியின் முக்கியமான இடமாகத் தோன்றுகிறது.
நகரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் காட்டுக்குள் செய்து அங்கே வாழும் மக்களைப் பற்றி எழுதப் போகிறார்கள். ஆனால் காட்டுக்குள் சென்றபின் அவர்களே அந்த வாழ்க்கையால் மாற்றப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் செல்வனின் மனத்தில், நகர வாழ்க்கைக்கு வெளியிலும் முற்றிலும் வேறொரு மனித உலகம் இருக்கிறது என்ற உணர்வு உருவாகிறது. சிறுவயது முதல் கடற்கரை, பூங்கா, திரையரங்கம், துரித உணவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றையே உலகமாகக் கொண்டிருந்த அவனுக்கு, காட்டுக்குள் வாழும் மக்களைப் பற்றிய வாசிப்பு முற்றிலும் புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது.
இதுதான் பாண்டிச்சியை வெறும் ‘காடு பற்றிய நாவல்’ என்பதிலிருந்து தள்ளி நிறுத்துகிறது. காடு இங்கு எதிர்-நகரம். ஆனால் நகரத்திற்கு எதிரான ஒரு ரொமான்டிக் சொர்க்கமாக மட்டும் அது சித்தரிக்கப்படவில்லை. அதற்கென்று தனியான ஒழுங்கு இருக்கிறது. தனியான அரசியல் இருக்கிறது. தனியான நம்பிக்கைகள் இருக்கின்றன. இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவு அங்கே வெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அல்ல; வாழ்வின் அடிப்படையான நெறியாக இருக்கிறது. ஒரு புல்லைப் பறிப்பதற்குக்கூட மண்ணிடம் மன்னிப்பு கேட்கும் மனநிலை பற்றி நாவல் பேசுகிறது.
இந்த இடத்தில் பாண்டிச்சியின் பண்பாட்டு முக்கியத்துவம் வெளிப்படுகிறது. பொங்கல் திருவிழா, வழிபாட்டு முறைகள், உணவு, திருமண ஒழுங்குகள், ஆண்-பெண் உறவுகளுக்கான கட்டுப்பாடுகள், இறப்பு மற்றும் துக்கச் சடங்குகள், இயற்கையை அணுகும் விதம் என ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்வியலை நாவல் பதிவு செய்கிறது. இதை ஆய்வு நூலின் தகவல்களாகக் கொடுக்காமல், கதையின் உடலுக்குள் கலக்க முயற்சித்திருக்கிறார் அல்லி பாத்திமா. அவருடைய முன்னுரையிலேயே, கேட்டறிந்த தகவல்கள் அனைத்தையும் எழுதிவிட்டால் அது ஆய்வு நூலாகிவிடும் என்பதால், கற்பனை ஓட்டத்துக்குத் தேவையானவற்றை மட்டுமே இணைத்திருப்பதாக கூறுகிறார்.
அதனால்தான் இந்த நாவலை வாசிக்கும்போது நாம் ஒரு கற்பனைக் கதையை வாசிக்கிறோமா அல்லது மறைந்து கொண்டிருக்கும் வாழ்வியலின் நினைவுகளை வாசிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பமே நாவலின் பலம். குறிப்பாக காட்டுக்குள் தமக்கென வாழ்க்கை முறையையும் ஆட்சிமுறையையும் அமைத்துக்கொண்டு வாழும் குறிஞ்சி நில மக்களை மையக் கதாபாத்திரங்களாகக் கொண்டுவருகிறது. ஆனால் இந்த நாவலின் மையம் அந்தப் பண்பாட்டு பதிவுகளிலும் இல்லை. அதன் மையம் பாண்டிச்சி.
பாண்டிச்சி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட உலகின் உருவகமாக மாறுகிறாள். அவள் ஒரு பெண்; ஒரு தலைவி; ஒரு காதலி; ஒரு பாதுகாவலர்; ஒரு சமூகத்தின் நினைவுகளைச் சுமப்பவள். அதே சமயம் அவள் மரபுக்குள் நிற்பவளாக இருந்தாலும் நவீன அறிவை நிராகரிப்பவள் அல்ல. நாவலுக்குள் அவளுடைய ஆளுமை இப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது. மூப்பனுக்குப் பிறகு தேவிநாச்சியாராக அவள் ஏற்றுக்கொள்ளப்படும் தருணங்களிலும், அவள் ஒரு மதச் சின்னமாக மட்டும் நிற்கவில்லை; கல்வியறிவும், மனிதர்களைப் பற்றிய அக்கறையும், சமூகத்தை வழிநடத்தும் திறனும் கொண்ட பெண்ணாகத் தோன்றுகிறாள்.
பாண்டிச்சியைப் பற்றி நகரத்திலிருந்து வரும் மனிதர்களுக்குள் உருவாகும் பிரமிப்பு கூட கவனிக்கத்தக்கது. அவளைச் சந்தித்தவர்கள் அவளிடம் ஏதோ ஒன்றை இழந்துவிட்டு திரும்பிச் சென்றவர்களைப் போல உணர்கிறார்கள். அவள் அறையை விட்டு வெளியேறிய பிறகு அங்கு காற்றே இல்லாத வெற்றிடம் நிரம்பியதுபோல உணரப்படுவது, கதாபாத்திரத்தின் இருப்பை ஆசிரியர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம். அவள் காட்டின் ‘தேவதை’ என்று மட்டும் சொல்லிவிட்டால் அவளுடைய அரசியல் சிக்கலான தன்மை மறைந்துவிடும். அவள் தன் சமூகத்தின் பாதுகாப்பிற்காக கடுமையான முடிவுகளை எடுக்கிறாள். அதே நேரத்தில் நகரத்திலிருந்து வருபவர்களுடனும் பேசுகிறாள்; அவர்களுடைய உலகத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறாள். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையில் அவள் ஒரு பாலமாக நிற்கிறாள். இந்த இரட்டைத் தன்மையே அவளை சுவாரஸ்யமான கதாபாத்திரமாக்குகிறது.
ஒரு பெண் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது, அவளுடைய உடலும் காதலும் தனிப்பட்ட விஷயங்களாக மட்டும் இருக்க முடியாது. அவள் மீது சமூகத்தின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அந்தக் குடியின் எதிர்காலத்தோடு இணைக்கப்படுகிறது. இந்த இடத்தில் அவளுடைய காதல் கூட தனிப்பட்ட காதலாக மட்டும் இருக்க முடியாமல் போகிறது. செல்வனுக்கும் பாண்டிச்சிக்கும் இடையிலான ஈர்ப்பு இந்த நாவலின் இன்னொரு முக்கியமான அடுக்கு. ஆரம்பத்தில் அது ஒரு நகர மனிதனின் காட்டுப் பெண்ணைப் பற்றிய ஈர்ப்பாகத் தோன்றலாம். ஆனால் நாவல் நகரும்போது அந்த ஈர்ப்பு மெதுவாக மரியாதையாகவும், பின்னர் ஆழமான காதலாகவும் மாறுகிறது. அந்தக் காதல் வழக்கமான தமிழ் நாவல்களின் காதல் அல்ல என்பதே இங்கே முக்கியமானது. காதல் இருக்கிறது; உடல் ஈர்ப்பு இருக்கிறது; பிரிவு இருக்கிறது; வலி இருக்கிறது. ஆனால் அந்தக் காதலைவிட பெரியதாக பாண்டிச்சியின் சமூகப் பொறுப்பு நிற்கிறது. செல்வன் தன் காதலை உண்மையென்று அறிவித்தாலும், பாண்டிச்சியின் வாழ்க்கை அவனுடைய காதலுக்காக மட்டும் மாற முடியாது. அவள் ஒரு தனிமனிதி என்ற அளவைக் கடந்து ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக நிற்கிறாள். அதனால் இந்தக் காதலில் வெற்றி என்றால் இருவரும் இணைவது மட்டுமல்ல; ஒருவருடைய உலகத்தை இன்னொருவர் புரிந்துகொள்வதும்கூட.
பாண்டிச்சியை வாசிக்கும்போது எனக்குத் தொடர்ந்து நினைவுக்கு வந்தது செல்லக்கருப்பி. இரண்டுக்கும் இடையில் எழுத்தின் பரிணாமத்தைப் பார்க்க முடிகிறது. செல்லக்கருப்பியில் என்னைக் கவர்ந்திருந்த அந்த இயல்பான கதைசொல்லும் தன்மை இங்கேயும் இருக்கிறது. ஆனால் பாண்டிச்சியின் பரப்பு பெரியது. கதைக்குள் அதிகமான தகவல்கள் வருகின்றன. பண்பாடு, சூழலியல், அரசியல், காதல், நம்பிக்கை, நவீன வாழ்க்கை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாளும் முயற்சி இருக்கிறது. அந்தப் பெரும்பரப்பின் காரணமாக சில இடங்களில் நாவல் சற்று அதிகமாக விளக்குகிறது; சில இடங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வாசகரே கண்டடைய வேண்டிய இடத்திலும் ஆசிரியர் அவற்றைச் சொல்லிவிடுவதும் முக்கியமான குறை.
ஒரு மனிதனுக்குள் அவன் வாழும் நிலம் இருக்க முடியுமா? அவன் மொழியில் அவன் நிலத்தின் நினைவுகள் இருக்க முடியுமா? அவன் காதலில் அவன் சமூகத்தின் வரலாறு கலந்திருக்க முடியுமா? இந்த நாவல் இவற்றுக்கெல்லாம் ‘ஆம்’ என்று சொல்கிறது. அதனால்தான் மனித உணர்வுகளின் தாக்கம் இயற்கையிலும் பிரதிபலிக்குமா என்ற கேள்வி நாவலுக்குள் எழுகிறது. மரமும் செடியும் உயிர்களும் மனிதர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்கின்றனவா என்ற கேள்வியும் வருகிறது. அறிவியல் ரீதியாக அந்தக் கேள்விகளுக்கு நாம் வேறு விதமாகப் பதில் சொல்லலாம். ஆனால் இலக்கியம் கேட்பது அறிவியல் கேள்வியை அல்ல; மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்தவன் என்று நம்பத் தொடங்கிய அந்த நொடியிலிருந்து அவன் எதை இழந்தான்? என்பதையே.
நகரம் காட்டை நோக்கிப் போகும்போது, அது வெறும் பயணமாக இருப்பதில்லை. அது அதிகாரத்தின் பயணமாகவும் இருக்கிறது. ஆய்வு, பத்திரிகை, சுற்றுலா, வளர்ச்சி, அரசு, நவீன அறிவு என நகரத்திடம் பல்வேறு கருவிகள் இருக்கின்றன. காட்டிடம் வேறு விதமான அறிவு இருக்கிறது. அந்த இரண்டின் சந்திப்பில் யார் மாறுகிறார்கள் என்பதே நாவலின் சுவாரஸ்யம். காட்டுக்குள் சென்றவர்கள் இறுதியில் காட்டைப் பற்றி மட்டும் எழுதிக் கொண்டு வெளியேறவில்லை; அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் புதிதாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.
நான் செல்லக்கருப்பியைப் படித்தபோது அல்லி பாத்திமாவின் எழுத்தில் இருந்த எளிமையை ரசித்தேன். பாண்டிச்சியைப் படித்தபோது அந்த எளிமையின் பின்னால் இருந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது. எளிமையாக எழுதுவது எளிதல்ல. அதைவிடக் கடினமானது, ஒரு பெரிய உலகத்தை எளிய மொழிக்குள் கொண்டுவருவது. பாண்டிச்சி அந்த முயற்சியைச் செய்கிறது. சில இடங்களில் அதன் ஆர்வம் மொழியைவிடப் பெரிதாகிவிடுகிறது; சில இடங்களில் அதன் விளக்கங்கள் கதையைவிட முன்னால் வந்து நிற்கின்றன. ஆனால் அந்தக் குறைகளைக் கடந்து நாவலின் மையத்தில் நிற்கும் பாண்டிச்சி நம்மை விட்டுப் போவதில்லை.
இந்த நாவலை வாசித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது இதுதான்: காட்டுக்குள் சென்ற செல்வனும் கதிரும் அங்கே ஒரு சமூகத்தைப் பார்க்கச் சென்றவர்கள். ஆனால் திரும்பி வந்தபோது அவர்கள் பார்த்தது தங்களுக்குள் இன்னும் அழியாமல் இருந்த ஒரு காட்டை. அந்தக் காட்டின் பெயர்தான் பாண்டிச்சி.
Top of Form
Bottom of Form



