Midsommar - வெளிச்சத்தின் இருள்


அதிகாலை நான்கு மணிக்கு Midsommar படம் பார்த்தேன். படம் முடிவதற்கு முன்பாகவே விடியத் துவங்கி நல்ல வெளிச்சம் வந்துவிட்டது. அந்தத் திரைப்படத்திலிருந்த அச்சமூட்டும் வெளிச்சம் இன்றைய நாளின் வெளிச்சத்தையும் அச்சம் நிறைந்ததாக உணரவைத்தது. பொதுவாக ஒரு horror திரைப்படம் முடிந்ததும் அதன் இருளிலிருந்து வெளியே வர முயல்வோம். விளக்கை ஏற்றுவோம். ஜன்னலைத் திறப்போம். வேறு ஏதாவது பேசுவோம். ஆனால் Midsommar அப்படியல்ல. படம் முழுவதும் வெளிச்சம். சூரியன் முழுக்க ஆக்ரமித்திருக்கிறது. நீல வானம் இருக்கிறது. பசுமையான புல்வெளி இருக்கிறது. மஞ்சள் நிற வீடுகள், வெள்ளை ஆடைகள், மலர்கள், மலர் கிரீடங்கள், சிரித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள். ஆனாலும் அந்த வெளிச்சத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே ஒரு விசித்திரமான அச்சம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. படம் முடிந்தபிறகுதான் பயம் இருளில் இல்லை, வெளிச்சத்தில்தான் இருந்தது என்பதை உணர முடிகிறது.
இதுதான் Midsommar என்னை மிகவும் ஆழமாகப் பாதித்த காரணம். நான் பார்த்த horror திரைப்படங்களில் இவ்வளவு வெளிச்சத்தை இவ்வளவு அச்சமூட்டும் விதத்தில் பயன்படுத்திய படம் வேறு நினைவுக்கு வரவில்லை. இருளை அகற்றிவிட்டால் பயமும் அகன்றுவிடும் என்ற நம்முடைய அடிப்படை நம்பிக்கையை Ari Aster இந்தப் படத்தில் உடைத்துவிடுகிறார். இங்கே இருள் எதையும் மறைக்கவில்லை. எல்லாமே நம் கண்களுக்கு முன்னால் நடக்கிறது. மரணம் , கலவி, வன்முறையென எல்லாமும். ஆனால் அந்த வெளிப்படைத்தன்மையே நம்மை அதிகமாக அச்சுறுத்துகிறது.
இந்த இடத்தில் எனக்கு Ingmar Bergman நினைவுக்கு வந்தார். குறிப்பாக Persona, Cries and Whispers, Scenes from a Marriage போன்ற திரைப்படங்களை நினைத்துக்கொண்டேன். Ari Aster பெர்க்மனை நேரடியாகப் பின்பற்றுகிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் Bergman உருவாக்கிய மனித மனத்தின் இருண்ட அறைக்குள் Aster சென்று, அங்கிருந்த கேள்விகளை ஒரு folk horror உலகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.
Bergman-ன் திரைப்படங்களில் மனிதர்களுக்கிடையேயான உறவுகள் ஒருபோதும் வெறும் உறவுகளாக இருப்பதில்லை. கணவன்–மனைவி, காதலர்கள், சகோதரிகள், நண்பர்கள் இவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களா என்பதைக் காட்டிலும், ஒருவருக்குள் இன்னொருவர் எவ்வளவு தூரம் நுழைய முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கும். ஒரே படுக்கையில் படுத்திருக்கும் இரு மனிதர்கள் கூட எவ்வளவு தனிமையானவர்களாக இருக்க முடியும் என்பதை Bergman தொடர்ந்து காட்டினார்.
Midsommar-ல் Dani மற்றும் Christian-ன் உறவும் இப்படித்தான் இருக்கிறது. படம் தொடங்கும்போதே அவர்களுடைய உறவில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அவர்கள் காதலர்கள் என்ற பெயர் மட்டும் இருக்கிறது. ஒருவருக்கொருவர் அருகில் இருக்கிறார்கள்; ஆனால் உண்மையில் ஒருவர் மற்றவரின் துயரத்திற்குள் நுழைய முடியவில்லை. Dani-க்கு குடும்பம் அழிந்தபோது Christian அவளுடன் இருக்கிறான். ஆனால் அவளுடைய துக்கத்தை அவன் சுமக்கவில்லை. அவளுக்கு தேவையான இடத்தில் அவன் இருக்கிறான்; ஆனால் அவளோடு இல்லை.
இந்த உணர்வை Aster பின்னர் மிகக் கொடூரமான ஒரு காட்சியில் உடலாக்குகிறார். Christian-ன் mating ritual காட்சி எனக்கு அந்தப் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று. அதை வெறும் உடலுறவுக் காட்சி என்று பார்க்க முடியவில்லை. அது ஒரு தனிமனிதனின் உடல் எப்படி ஒரு சமூகச் சடங்குக்குள் கரைந்து போகிறது என்பதைக் காட்டுகிறது. சுற்றிலும் பெண்கள். அவர்களுடைய உடல்கள். பாடல்கள். நிர்வாணம். சடங்கு. Christian-ன் உடல் அந்தக் கூட்டத்தின் நடுவில் தனக்கான agency-யை இழக்கிறது. அவன் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அவன் ஏற்கனவே அந்தச் சமூகத்தின் விதிகளுக்குள் சிக்கிவிட்டான்.
அந்தக் காட்சியின் visual composition என்னை அற்புதமான ஒன்று. அதை பார்த்துக்கொண்டிருக்கும்போது மத்தியகால ஐரோப்பிய ஓவியங்கள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக மதச் சடங்குகள், பாவம், உடல், தண்டனை, பலி ஆகியவற்றை ஒரே frame-க்குள் அடைத்து வைத்திருந்த medieval paintings. மனித உடல் அங்கே தனிப்பட்ட உடலாக இருப்பதில்லை. அது ஒரு theological image ஆகிவிடுகிறது. Midsommar-லும் உடல் அப்படித்தான் மாறுகிறது. பாலியல் என்பது தனிப்பட்ட intimacy அல்ல; அது சமூகத்தின் சடங்கு. தனிமனித விருப்பம் அல்ல; அது கூட்டு நினைவின் ஒரு பகுதி.
இதற்கு நேர்மாறாக Dani-யைச் சுற்றி பெண்கள் இணையும் காட்சி வருகிறது.
அந்தக் காட்சியில் எந்த வன்முறையும் வெளிப்படையாக நிகழ்வதில்லை. ஆனால் அது Christian-ன் காட்சியை விட எனக்கு அதிகமாக அச்சமூட்டியது. Dani உடைந்து அழுகிறாள். அவளைச் சுற்றி இருக்கும் பெண்கள் அவளுடன் சேர்ந்து அழத் தொடங்குகிறார்கள். முதலில் அது ஆறுதலாகத் தோன்றுகிறது. பிறகு அது வேறொன்றாக மாறுகிறது. Dani-யின் தனிப்பட்ட அழுகை கூட்டத்தின் அழுகையாக மாறுகிறது. அவளுடைய மூச்சு, குரல், உடல் அசைவு—எல்லாமே அந்தப் பெண்களின் உடல்களுக்குள் பிரதிபலிக்கிறது.ன்
அந்தக் காட்சியையும் ஒரு medieval painting போலவே பார்க்க முடிகிறது. ஒரு புனிதரின் துயரத்தைச் சுற்றி நிற்கும் மக்கள். ஒருவரின் வேதனை முழு சமூகத்தின் வேதனையாக மாறுவது. உடல்கள் தனித்தனியாக இருந்தாலும், ஓவியத்தின் composition அவற்றை ஒரே உடலாக மாற்றுவது. Aster அந்த painting-ன் stillness-ஐ சினிமாவின் movement-க்குள் கொண்டு வருகிறார். அதனால்தான் அந்தக் காட்சிகள் அத்தனை ஆழமான visual experience-ஆக மாறுகின்றன.
இரண்டு காட்சிகளையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது படத்தின் மையத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. Christian-ன் உடல் சமூகத்துக்குள் செல்கிறது.
Dani-யின் துயரம் சமூகத்துக்குள் செல்கிறது. ஒன்றில் உடல் collective ritual-ஆக மாறுகிறது. இன்னொன்றில் உணர்ச்சி collective ritual-ஆக மாறுகிறது. இந்த இரண்டிற்கும் இடையேதான் Hårga-வின் முழு உலகமும் இருக்கிறது. இதனால்தான் அந்தச் சமூகம் Dani-க்கு மிகவும் ஆபத்தானதாகவும் அதே நேரத்தில் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அவர்கள் கொலை செய்கிறார்கள். மனிதர்களின் உடலைச் சடங்காகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தனிமனித சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் அவளுக்கு ஒரு விஷயத்தைத் தருகிறார்கள்—அவள் இதுவரை பெறாத belonging.
அவள் அழும்போது அவள் தனியாக இல்லை. இதுதான் Dani-க்கு அந்த உலகத்தின் மிகப் பெரிய கவர்ச்சி. Bergman-ன் Persona-வை நினைத்துப் பார்க்கும்போது இது இன்னும் சுவாரஸ்யமாகிறது. Persona-வில் இரண்டு பெண்களுக்கிடையே identity-யின் எல்லைகள் மெதுவாகக் கரைகின்றன. யார் யார் என்பதைப் பிரித்தறிவது கடினமாகிறது. Midsommar-ல் அந்த identity dissolve தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையில் நடக்கிறது. Dani தனது தனிப்பட்ட துயரத்தை மெதுவாக அந்தக் கூட்டத்தின் துயரமாக மாற்றிக்கொள்கிறாள். அவள் தனியாக அழுவதிலிருந்து அனைவருடனும் சேர்ந்து அழும் நிலைக்கு வருகிறாள். இறுதியில் அவள் தனியாக ஒரு பெண்ணாக இருக்கிறாளா, அல்லது Hårga உருவாக்கிய ஒரு புதிய அடையாளத்தின் பகுதியாகிவிட்டாளா என்ற கேள்வி எழுகிறது. இதுதான் படத்தின் மிகப் பெரிய பயம்.
ஒரு cult நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும்போது அதை எதிர்ப்பது எளிது. ஆனால் நாம் விரும்பிய ஒன்றை—ஆறுதலை, அன்பை, belonging-ஐ, நம்முடைய துயரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு சமூகத்தை—அதே cult நமக்குக் கொடுக்கும்போது என்ன செய்வது? Midsommar இதற்கு எளிதான பதிலைத் தரவில்லை. அதனால்தான் Dani-யின் இறுதி சிரிப்பு இவ்வளவு சிக்கலானது.
அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? அவள் விடுதலை அடைந்துவிட்டாளா? அல்லது அவள் இன்னொரு வகையான சிறைக்குள் நுழைந்துவிட்டாளா? மூன்றுமே உண்மையாக இருக்கலாம்.
Cries and Whispers நினைவுக்கு வருவதற்கும் இதே காரணம். Bergman அங்கே உடலையும் வலியையும் நிறங்களின் வழியாகப் பேசுகிறார். சிவப்பு நிறம் வெறும் visual decoration அல்ல; அது உடலின் உள்ளே இருக்கும் வலி போல மாறுகிறது. Aster இதை முற்றிலும் வேறு நிறங்களில் செய்கிறார். வெள்ளை, மஞ்சள், பச்சை, நீலம். எல்லாமே தூய்மையான நிறங்கள். ஆனால் அந்தத் தூய்மையின் உள்ளே அழுகல் இருக்கிறது. மலர்களின் நடுவில் மரணம் இருக்கிறது. சிரிப்பின் நடுவில் பயம் இருக்கிறது. பாலியல் சடங்கின் நடுவில் தனிமை இருக்கிறது. அதனால் Midsommar-ன் aesthetics வெறும் அழகியல் அல்ல. அது படத்தின் தத்துவம்.
அழகு என்பது எப்போதும் நல்லதல்ல. வெளிச்சம் என்பது எப்போதும் பாதுகாப்பல்ல. தூய்மை என்பது எப்போதும் innocence அல்ல. கூட்டமாக இருப்பது எப்போதும் companionship அல்ல.
இந்த நான்கு முரண்களையும் படம் தொடர்ந்து நம்மிடம் வைத்துக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக அந்த வெளிச்சம். அதுதான் என்னை இன்னும் விடவில்லை. சினிமாவில் வெளிச்சம் பொதுவாக revelation-ஐ குறிக்கும். இருளில் மறைந்திருப்பதை வெளிச்சம் காட்டுகிறது. உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால் இங்கே வெளிச்சம் உண்மையை காட்டுவதால் பயமாகிறது. நாம் பார்க்கக்கூடாததை அது மறைக்காமல் காட்டுகிறது. ஒரு horror படத்தில் camera நமக்கு எதையாவது காட்டாமல் இருப்பது ஒரு பாதுகாப்பு. இங்கே camera எதையும் மறைக்கவில்லை. அதனால் பார்வையாளனுக்கும் தப்பிக்க இடமில்லை.
இரவு வந்தால் நாம் கண்களை மூடிக்கொள்ளலாம். இந்தப் படத்தில் பகலாக இருப்பதால் கண்களை மூடிக்கொள்ள முடியவில்லை. Ari Aster-ன் மிகப்பெரிய திறமை, horror-ஐ ஒரு வெளிப்புற அச்சமாக உருவாக்காமல் மனிதனுடைய மிக ஆழமான தேவைகளிலிருந்து உருவாக்குவதுதான். நாம் நேசிக்கப்பட வேண்டும். நம்முடைய துக்கத்தை யாராவது புரிந்துகொள்ள வேண்டும். நாம் தனியாக இருக்கக்கூடாது. நம்முடைய வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை மனித தேவைகளையே ஒரு horror mechanism-ஆக அவர் மாற்றுகிறார். அதனால்தான் Midsommar முடிந்த பிறகு அதன் கதையைவிட அதன் காட்சிகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மலர்களும் அந்த வெள்ளை உடைகளும் சிரிப்போடு இருக்கும் அந்தக் கூட்டமும் கூட நமக்குள் தீவிரமான நினைவுகளாக மாறுகிறது. Christian-ன் உடல். Dani-யின் முகம். அவளைச் சுற்றி ஒன்றாக அழும் பெண்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த முடிவில்லாத பகல்.
ஒரு medieval painting-ன் முன்னால் நின்றிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒன்று உண்டு. முதலில் அதன் அழகைப் பார்க்கிறோம். பிறகு அதன் உள்ளே மறைந்திருக்கும் வன்முறையைப் பார்க்கிறோம். பின்னர் அந்த வன்முறை எவ்வளவு இயல்பாகவும் புனிதமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறோம். Midsommar அதையே சினிமாவில் செய்கிறது.
அதனால்தான் இந்தப் படம் என்னை இவ்வளவு ஆழமாகப் பாதித்திருக்கலாம். ஒரு நல்ல horror திரைப்படம் நம்மை பயமுறுத்தும். Midsommar முடிந்த பிறகு என்னுடன் இருந்தது அச்சமோ கேள்வியோ அல்ல வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் நான் இன்னும் ஒரு விஷயத்தைப் பார்க்கிறேன்—ஒரு பெண் தனிமையிலிருந்து வெளியே வந்து ஒரு கூட்டத்தின் நடுவில் நிற்கிறாள். அவள் முகத்தில் ஒரு சிரிப்பு. அவளைச் சுற்றி மலர்கள். பகல். வானம். எல்லாமே அழகாக இருக்கிறது.
ஆனால் அந்த அழகுக்குள் இருந்து ஒரு மிகப் பழைய பயம் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது.


