எங்கிருந்து தொடங்கலாம் ?


ஏன் எழுத வேண்டும்?
“எப்படி எழுத வேண்டும்?” என்ற கேள்விக்கு உலகம் முழுக்க ஏராளமான
எழுத்தாளர்கள் விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு கதையை எங்கே
தொடங்குவது, கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது, ஒரு காட்சியை எவ்வாறு
விவரிப்பது, என்று எழுதுவதற்கான முழுமையான இலக்கணம்
உருவாக்கப்பட்டிருக்கிறது. ( அவற்றை முழுமையாகக் கற்றுக்கொண்டுதான்
எழுதவேண்டுமா எனக் கேட்டால், என் பதில் இல்லை என்பதுதான். முதலில் எழுத
வேண்டும் அவ்வளவுதான். ) ஆனால் எழுத விரும்பும் ஒருவர் அடிப்படைகளைக்
கற்றுக்கொள்வது நலம். எப்படி எழுதவேண்டுமென்கிற தேடலுக்குள்
செல்வதற்குமுன் நான் முக்கியமானதொரு கேள்வியை வைப்பேன்.
ஏன் எழுத வேண்டும்?
இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைச்
சொல்லக்கூடும். எழுதத் துவங்குவதற்கு முன் வாழ்க்கை குறித்தும் இலக்கியம்
குறித்தும் ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கைகளும் லட்சியங்களும் தொடர்ந்து
எழுதுவதன் வழியாக மாறும். பொதுவாக ஒருவர் புகழுக்காகவும்
பணத்திற்காகவும் எழுதலாம். ( இது இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில்
அபூர்வமாக எழுத்தாளனுக்குக் கிடைக்கும்.) கொஞ்சம் லட்சியவாதமாக
சொல்லவேண்டுமானால் தன் காலத்தில் நிகழ்ந்த அநீதிகளுக்கு எதிராக
எழுதலாம். இன்னொருவிதமாகச் சொல்லவேண்டுமானால் பரந்த உலகில்
தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை, இந்த சமூகத்தில் எனக்கான இடம் என்ன
என்பதைத் தேடிக்கண்டடைய எழுதலாம். எழுத்தாளர் கருத்தடையான் தனது ஒரு
நூலின் முன்னுரையில் ’’எதற்காக எழுதுகிறாய் எனக் கேட்கிறார்கள்? சாக
மாட்டாமத்தான்’ என குறிப்பிட்டிருப்பார். இதுவும் நல்லதொரு காரணம்தான்.
இந்த சமூக்திடம் தான் சொல்ல விரும்பும் ஒன்றை சொல்வதற்காக எழுதும்
ஒருவர் உண்மையில் என்ன செய்கிறார். தனது சிந்தனைகளையும்
எண்ணங்களையும் தவிப்புகளையும் காயங்களையும் சொற்களாக மாற்றி
வீசுகிறார். அந்த சொற்கள் அனுபவங்களாகத் திரும்பிவருகின்றன. இந்த
உலகத்தைப் பற்றிதான் எழுதுகிறேன் என நாம் நினைக்கிறோம். உண்மையில்
இந்த உலகம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களையே எழுதுகிறோம். ஒரு கதையில்
நாம் உருவாக்கும் உலகம் நமது அகத்திலிருந்து எழக்கூடியது. நாம் பார்த்த
வீதிகள், மனிதர்கள், விலங்குகள், நமது விருப்பு வெறுப்புகள் அச்சங்கள் என
எல்லாமே நாம் கண்டுணர்ந்தவை, அல்லது கேட்டுப் பெற்றவை. அடிப்படையில்
ஒருபோதும் மீண்டும் பெற முடியாத காலத்தை எழுதிக்கொண்டிருக்கிறோம்.
அந்தக் கதையுலகில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களும் நமது விருப்பு
வெறுப்புகளின்படி வாழ்ந்து முடிக்கிறார்கள். ஒரு கதைக்குள் நாம் உருவாக்குவது
நமக்குக் கிடைக்காத அல்லது நாம் அதிகம் நேசிக்ககூடிய வாழ்வின் சிறிய
பகுதியைத்தான்.
எழுத்து என்பது நமது நினைவுகளின் இன்னொரு வடிவம்.
ஆனால் இந்த நினைவுகள் விசித்திரமானவை. நமக்கு நடந்த எல்லாவற்றையும்
அப்படியே வைத்துக்கொள்வதில்லை. தனது விருப்பப்படி களைத்துப்போடுகிறது.
எதுவெல்லாம் தனக்குத் தேவையோ அதை மட்டும் வைத்துக்கொண்டு
மற்றவற்றை அழித்துவிடுகிறது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய சம்பவம்,
இன்று நம் நினைவில் ஒரு பேரழிவாக இருக்கலாம். நாம் மறந்துவிட்டதாக
நினைத்த ஒருவரின் குரல், திடீரென ஒரு மாலை நம்முடைய அறைக்குள் திரும்பி
வரலாம். இறந்தவர்கள் சில நேரங்களில் உயிரோடு இருப்பவர்களைவிட நம்முடன்
நெருக்கமாக இருக்கிறார்கள். இந்த விசித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவதுதான்
நினைவுகளின் தந்திரம். இந்த தந்திரமான விளையாட்டுப் பிடித்துப்
போவதால்தான் நாம் எழுதுகிறோம்.
இறந்தவர்களுடன் பேசுவதற்காகவும், திரும்பிச் செல்ல முடியாத இடங்களுக்குத்
திரும்புவதற்காகவும் மறந்துபோன மனிதர்களை நினைத்துக்கொள்வதற்காகவும்
எழுதுகிறோம். எழுத்து காலத்தை வெல்லும் கருவி மட்டுமல்ல, காலம் நம்மிடம்
பறித்துக்கொண்டவற்றை மீண்டும் ஒரு முறை தொடுவதற்கான முயற்சி.
ஒருவர் தனது குழந்தைப் பருவத்தை எழுதத் தொடங்கும்போது, அந்தப்
பருவத்திற்குத் திரும்புவதில்லை. அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கும்
இன்றைய மனிதனாக மாறுகிறார்.. அங்கேதான் எழுத்தின் ஆச்சர்யம் நிகழ்கிறது.
கொமோரா நான் எழுத நினைத்த முதல் நாவல். ஆனால் கடந்த காலத்தின்
துயரங்களிலிருந்து வெளியே வந்து அந்தக் கதையைச் சொல்ல போதுமான
பக்குவம் என்னிடம் அப்போதில்லை. வாசிப்பும் அனுபவமும் கூடியபின் அந்த
நாவலை எழுதத் துவங்கியபோது எனது முதல் நோக்கம் கடந்தகாலத் துயரில் இனி
நான் பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதுதான்.
சாத்தானின் மனவெளிக் குறிப்புகள் என்ற பகுதியை எழுத நீண்ட அவகாசம்
எடுத்துக்கொண்டேன். அந்தப் பகுதியை எழுதி முடித்தபின் எனக்குள் நிகழ்ந்த
முக்கியமான மாற்றம் என் கடந்த காலத்திலிருந்து நான் வெளிவரத்
துவங்கியிருந்தேன். அந்த நாவல் வெளியானபின் சற்றேறக்குறையா முற்றாகவே
வெளியில் வந்துவிட்டேன். உங்களுக்குள்ளிருக்கும் பழைய மனிதனையும் பழைய
நினைவுகளையும் கடந்துவர நீங்கள் எழுத வேண்டியிருக்கிறது. **நாம் நம்முடைய
வாழ்க்கையை வாழும்போது அதன் அர்த்தங்களைக் குறித்து அறிந்துகொள்ள
முயற்சிப்பதில்லை, அந்த அனுபவங்களை எழுதத் தொடங்கும்போதுதான் நமக்கு
அர்த்தங்கள் பிடிபடுகிறது.
சம்பவங்களின் தொகுப்பாகவே நமது வாழ்வைப் பார்க்கிறோம். ஒரு மனிதன்
பிறப்பது, வளர்வது, சிறுவயதில் கிடைத்த மகிழ்ச்சியான அனுபவம் வளரும்
பருவத்தில் வரும் காதல்கள், நாம் எதிர்கொள்ளும் துரோகங்கள், மன்னிப்புகள்,
வெற்றிகள், படித்து முடித்து வேலைக்குச் செல்வது, பின் திருமணம் செய்து புதிய
குடும்பத்தைத் துவங்குவது என எல்லாவற்றையும் சம்பவங்களாகவே நினைவில்
வைத்துக் கொள்கிறோம். வாழ்க்கையின் முழுமை இந்த சம்பவங்களையும் இதன்
வழியாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் தொகுத்துப் பார்த்துக்
கொள்ளும் போதுதான் நமக்குக் கிடைக்கிறது. புதிய அர்த்தங்களும்
வெளிச்சங்களும் கிடைப்பதோடு மறந்துபோன தருணங்களும் நினைவுக்கு
வருகின்றன. ஏதோவொரு தருணத்தின் நினைவு சிரிக்க வைக்கும், இன்னொரு
தருணத்தின் நினைவு பழைய காயத்தைக் கிளறி வேதனைப்படுத்தும். காலத்தோடு
நாம் நிகழ்த்தும் இந்த மாயவிளையாட்டுதான் கதை.
கதை சொல்லத் தொடங்கிய நாளிலிலிருந்து மனிதர்கள் வாழ்வை சம்பவங்களாகப்
பார்ப்பதை நிறுத்துகிறார்கள். கதைகள் அவர்களுக்குக் கேள்விகளை
உருவாக்குகிறது. 2015 ம் வருடம் சென்னையில் கடுமையான புயல் வந்தது
என்பது ஒரு சம்பவம். ஆனால் “புயல் ஏன் வந்தது?” என்று ஒருவர் கேட்கத்
துவங்கும் நொடியிலிருந்து கதை பிறக்கிறது. யாரோ ஒருவர் இறந்தார் என்கிற
செய்திக்குப் பின் எப்படி இறந்தார் என்கிற கேள்வியில் கதை பிறக்கிறது.
மனிதன் பதில்களை அறிந்ததால் கதைகளை உருவாக்கவில்லை. **அவனுக்குப்
பதில் தெரியாததால் கதைகளை உருவாக்கினான்.** எழுத்தாளனின் மிகப் பெரிய
சொத்து அவனுக்குத் தெரிந்த விஷயங்கள் அல்ல. அவனுக்குத் தெரியாத
விஷயங்கள்தான். நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றி எழுதுவது எளிது. தெரியாத
ஒன்றைத் தேடி கற்றுக்கொண்டு தெரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் எழுத்து.
நீங்கள் கொலைகாரனைப் பற்றி எழுதும்போது கொலைகாரனாக மாற
வேண்டியதில்லை. ஆனால் “ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்லும்
அந்தக் கணத்தில் அவனுக்குள் என்ன நடக்கிறது?” என்ற கேள்வியைத்
தேடவேண்டும், தஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல்
ரஸ்கோல்னிகோவ் என்னும் மனிதன் எந்த தருணத்தில் கொலை
செய்யத்தூண்டப்படுகிறான் என்பதையும் அந்தக் கொலையை செய்தபின்னால்
என்னவிதமான குற்றவுணர்வுக்கு ஆளாகிறான் என்பதையும் உளவியல்ரீதியாக
பேசுகிறது. எளிய குற்றக்கதையாக மாறிவிடக் கூடிய சாத்தியமிருந்த அந்த
நாவலை மகத்தானதாக மாற்றுவது எது? குற்றன்களுக்குப் பின்னாலிருக்கும் சமூக
அழுத்தத்தை அதற்கு முன்னால் எவரும் எழுதியதில்லை.
தீமையின் காரணமாக ஒருவன் எப்படி அழிந்தான் என்பதைச் சொல்வதைவிடவும் காலம் கடந்தபின்
அவன் என்னவானான் என்பதைக் கண்டறிவது முக்கியமானது. எழுத்தாளன்
நீதிபதி அல்ல. அவன் சாட்சியும் அல்ல. குற்றம் நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு
சிறிய கண்ணாடி.அதில் குற்றவாளியின் முகமும் தெரியும். பாதிக்கப்பட்டவனின்
முகமும் தெரியும். பார்ப்பவனின் முகமும் தெரியும். சில சமயங்களில் அந்தக்
கண்ணாடியில் எழுத்தாளனுடைய முகமும் தெரிந்துவிடும். அதனால்தான்
எழுதுவது ஆபத்தானது.
நாம் மற்றவர்களைப் பற்றி எழுதத் தொடங்கி, நம்மைப் பற்றிய உண்மைகளைக்
கண்டுபிடிக்கிறோம். நாம் ஒரு தந்தையைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது
நம்முடைய தந்தையிடம் சொல்லாமல் விட்ட எவ்வளவோ செய்திகள் நினைவுக்கு
வருகிறது. நமது கதையில் வரும் காதலி பேசும் வசனம் பல வருடங்களுக்கு
முன்னால் நாம் நேசித்த பெண் நம்மிடம் பேசியதன் பிரதிபலிப்பாக இருக்கிறது.
கதைக்குள் நிலவும் அன்பையும், உலகின் மீதான கரிசனத்தையும்,
கோவங்களையும் உற்று கவனித்தால் அங்கு எழுதுகிறவனை அடையாளம்
கண்டுகொள்ளலாம். ’படைப்பு அதை படைத்தவனை விடவும் மேன்மையானது’
என்பதுதான் நிதர்சனம்.
முதலில் நாம் கதையை எழுதுகிறோம். பிறகு கதை நம்மை எழுதத் தொடங்குகிறது.
ஒரு நல்ல கதை நீண்டகாலங்களுக்கு நமது நினைவுகளில் தங்குகிறது. அதன்
கதாபாத்திரங்கள் நீண்டகாலம் நம்முடைய நினைவுகளில் தங்குகிறார்கள்.
அவர்கள் நடந்த வீதிகள் நமக்கு பரிட்சயமானவையாய் ஆகின்றன, . அவர்கள்
பார்த்த வானத்தை நாமும் பார்க்கிறோம். அவர்கள் செய்த தவறுகள் நம்மை
உலுக்கும்போது நமது வாழ்வில் அதுபோல் செய்யக்கூடாதென படிப்பினைகளை
உருவாக்கிக் கொள்கிறோம். எழுதி முடித்தபின் கதை எழுத்தாளனுடையது அல்ல.
வாசகருடையது.
இதனால்தான் ஒருவர் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்விக்கு நான் எளிய
பதிலைச் சொல்ல விரும்பவில்லை.
புகழுக்காக எழுதாதே என்று சொல்ல முடியாது. பணத்திற்காக எழுதாதே என்றும்
சொல்ல முடியாது. உலகத்தை மாற்றுவதற்காக எழுதாதே என்றும் சொல்ல
முடியாது.** இவை அனைத்தும் உண்மையான காரணங்களாக இருக்கலாம்.
இவற்றையெல்லாம் கடந்து, இன்னொரு காரணம் இருக்கிறது.
நாம் வாழ்ந்த வாழ்க்கை நம்மிடம் இருந்து மறைந்து போகும் முன், அதைப்
பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறோம்.
நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு
செல்கிறது. முகங்கள் மாறுகின்றன. நகரங்கள் மாறுகின்றன. வீடுகள்
இடிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன. நண்பர்கள் தொலைந்து
போகிறார்கள். காதல்கள் முடிந்துபோகின்றன. நம்முடைய உடலும் மெதுவாக
நம்மிடமிருந்து விலகுகிறது. ஒரு நாள் நாமும் இல்லாமல் போய்விடுவோம். அதற்கு
முன்பு, நாம் பார்த்த உலகத்தில் இருந்து சில சொற்களை எடுத்துவைத்து விடலாம்.
அவை நம்முடைய உயிரை காப்பாற்றாது. காலத்தை நிறுத்தாது. இறந்தவர்களை
உயிர்ப்பிக்காது.
ஆனால் ஒருகாலத்தில் இங்கே ஒருவர் வாழ்ந்தார், பார்த்தார், காதலித்தார்,
வெறுத்தார், பயந்தார், தோற்றார், கனவு கண்டார், இறுதியில் தன்னுடைய
வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தேடினார் என்று சொல்லிக்கொண்டிருக்கும்.
அதற்காகத்தான் எழுத வேண்டும். இந்த உலகம் நம்மை மறந்துவிடாமல்
இருப்பதற்காக மட்டும் அல்ல. **நாம் நம்மையே மறந்துவிடாமல் இருப்பதற்காக.
அதனால் “எப்படி எழுத வேண்டும்?” என்ற கேள்விக்குள் செல்வதற்கு முன், ஒருவர்
இன்னொரு கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும்:
“எதைச் சொல்லாமல் என்னால் வாழ முடியவில்லை?”
அந்தக் கேள்விக்கான பதிலில்தான் உங்கள் எழுத்தின் முதல் வரியும் பிறக்கிறது.
மனிதன் ஏன் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தான்?
மனிதர்களின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு கதைகள். நம் ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு கதைசொல்லி இருக்கிறான். நம் வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றையும்
கதைகளாகத்தான் சொல்கிறோம். எழுத்தைக் கண்டிபிடிப்பதற்கும்
பலகாலங்களுக்கும் முன்பாகவே கதைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்.
குகையின் வாயிலில் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்த வேட்டைக்காரன், அன்று
தான் சந்தித்த காட்டெருமையைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். அவன் நடந்ததை
மட்டும் சொல்லவில்லை. தனது பயத்தையும், வீரத்தையும் சேர்த்தான். சில சமயம்
நடக்காத விஷயங்களையும் சேர்த்தான். அந்த மிகைப்படுத்தலில்தான் புனைவு
பிறந்தது. அந்த இரவு அந்தக் கதையைக் கேட்ட குழந்தைகள், தங்கள் தந்தை உலகிலேயே
மிகப் பெரிய வேட்டைக்காரன் என்று நம்பியிருப்பார்கள். அந்தக் கதை அடுத்த
தலைமுறைக்குச் சென்றபோது புராணமாக மாறியது. கதை சொல்லும் திறன்
மனிதனின் உயிரியல் தேவையல்ல. ஆனால் நாகரிகத்தின் அடிப்படைத்
தேவையாக அதுவே இருக்கிறது. ஒரு பண்பட்ட சமூகத்தை அதன் கதைகளால்
அறியலாம். மதத்தை அதன் புராணங்களால் அறியலாம். தேசத்தை அதன்
இலக்கியத்தால் அறியலாம். கதை சொல்லுதல் என்பது பொழுதுபோக்கு அல்ல.
மனித இனம் தன்னை நினைவில் வைத்துக்கொள்ள உருவாக்கிய மிகப் பெரிய
கருவி.
எழுத்து உருவான பிறகு, மனிதன் ஒரு புதிய சக்தியைப் பெற்றான். நினைவுகள்
மறந்துபோகும். ஆனால் எழுத்து மறக்காது. ஒரு அரசன் இறந்துவிடலாம்.
அவனுடைய அரண்மனை இடிந்து விழலாம். அவன் கட்டிய நகரம் மணலுக்குள்
புதைந்துவிடலாம். ஆனால் அவனைப் பற்றி எழுதப்பட்ட கதைகள் ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தாலும் உயிரோடு வாழும். நாம் இன்று எகிப்தைப் பற்றி
அறிந்திருப்பது பிரமிடுகளால் மட்டும் அல்ல; அவர்கள் விட்டுச் சென்ற
எழுத்துகளாலும்தான். உலகின் மிகப்பழமையான நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்,
ஆதிக்குடிகள் என நம்மை மார்த்தட்டிக் கொள்கிறோம். இதற்கு ஆதாரமாக
இருப்பது சங்க காலத் தமிழர்களைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள்.
அதனால் எழுதுவது என்பது வெறும் பதிவு செய்வது அல்ல. மறதிக்கு எதிராக
மனிதன் நடத்தும் கிளர்ச்சி. வரலாற்றைப் பார்த்தால், உலகத்தை மாற்றிய
பெரும்பாலான சிந்தனைகளுக்கு முன் ஒரு புத்தகம் இருந்திருக்கிறது. சில நூல்கள்
ஒரு நாட்டின் சட்டத்தை விட நீண்ட காலம் வாழ்கிறது.ஒரு கவிதை பேரரசை விட
சக்திவாய்ந்ததாகிறது. மதங்கள் தங்கள் புனித நூல்களால் வாழ்கின்றன. எழுத்து
இல்லையென்றால், மனிதன் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாக ஆரம்பிக்க
வேண்டியிருந்திருக்கும். நாம் இன்று நின்றிருப்பது, நமக்கு முன் வாழ்ந்த
எண்ணற்ற மனிதர்களின் எழுத்துகளின் மேல்.
ஒரு எழுத்தாளர் உலகத்தை மாற்ற முடியுமா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும்போது மிகைப்படுத்தலோ, போலியான
தாழ்மையோ தேவையில்லை. ஒரு நாவல் மட்டும புரட்சியை
கொண்டுவந்துவிடாது. ஆனால் நல்ல நாவல், ஒரு சமூகத்தின் மனசாட்சியைத்
தொந்தரவு செய்யும். ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் *Uncle Tom's Cabin*
அமெரிக்காவில் அடிமைத்தனத்தைப் பற்றிய பொது விவாதத்தை ஆழமாகத்
தாக்கிய நூல்களில் ஒன்று. அதேபோல் அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் நாவலும்
ஆப்ரோ-அமெரிக்கர்களின் வரலாற்றையும் துயரங்களையும் புரிந்துகொள்ள
ஆவணமாக இருப்பதை நாம் அறிவோம். ( அந்த நாவல் எழுதப்பட்ட ஐமபதாவது
வருடம் இது.) ’லத்தீன் அமெரிக்கர்கள் தங்களது வரலாற்றை எப்போதும் முதுகில்
சுமந்துகொண்டிருக்கிறார்கள்.’ என எட்வர்டோ கலியானோ தனது நூலொன்றில்
குறிப்பிடுவார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளுக்கு
இலக்கிய சாட்சியம் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ’தனிமையின் நூறு
ஆண்டுகள். ஒரு கிராமத்தின் கதையைச் சொல்லி லத்தீன் அமெரிக்காவின்
வரலாற்றை உலக இலக்கியத்தின் மையத்திற்குக் கொண்டுவந்தார்.
எழுத்தாளர்கள் அரசர்கள் இல்லை. அவர்களிடம் படைகளும் இல்லை. ஆனால்
அதையெல்லாம் மீறிய அபூர்வமான சக்தி இருக்கிறது. மனிதர்கள் இந்த
உலகத்தைப் பார்க்கும் முறையை மாற்றிவிடும் வாக்கியத்தை அவர்களால்
எழுதிமுடியும். நல்ல எழுத்து ஒருவரை நிரந்தரமானவராக மாற்றுகிறது. ’ஒரு
துண்டு வானம்’ என என்னுடைய சிறுகதயொன்றில் ’எங்கு நம்பிக்கை உள்ளதோ
அங்கு அற்புதம் நிகழும்’ என்றொரு வரியை எழுதியிருப்பேன். இன்றைக்கு
பலமேடைகளில் பிரபலங்கள் அந்த வரியைச் சொல்கிறார்கள். இந்தக் கதையில்
எழுதப்பட்டது இன்னார் எழுதியது என்பதையெல்லாம் கடந்து அந்த வரி
எல்லோரையும் சென்றடைகிறது.
எழுத வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வருகிறது. ஆனால் எல்லோரும்
எழுத்தாளர்களாக மாறுவதில்லை. ஏன்?
எழுத வேண்டுமென ஆசைப்படுவதற்கும் எழுதமுடியாத நிலைக்கும் இடையே
பெரிய வித்தியாசம் இருக்கிறது. நீண்டகால வாசிப்பின் காரணமாக ஒருவருக்கு
நாமும் எழுதினால் என்ன எனத் தோன்றலாம். இந்த உணர்வுகள் இயல்பானவை.
ஆனால் சில நாட்களில் இந்த ஆர்வம் மறைந்துவிடும். வாழ்க்கைச் சூழல்,
நேரமின்மை என இப்படி பல காரணங்களைக் கூறினாலும் அடிப்படையில்
வாசிப்பதை விடவும் எழுதுவதற்கு அதீதமான கூருணர்வு தேவைபப்டுகிறது.
எழுதும் முயற்சியைக் கைவிடும் பலரைக் கவனித்திருக்கிறேன், அவர்கள்
உலகைக் கவனிப்பதைக் கைவிடும்போது எழுதவேண்டுமென்கிற ஆர்வத்தையும்
கைவிடுகிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டும் அந்த விருப்பம் மறையாது.
பேருந்தில் பயணம் செய்யும்போது மனிதர்களைக் கவனிப்பார்கள்.
புதிய நிலக்காட்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள முயல்வார்கள். வீதிகள்ஈலும்
தேநீர் கடைகளிலும் கேட்ட செய்திகளை அசைபோடுவார்கள். இருபது
வருடங்களுக்கு முன்னால் எழுதவந்தபோது எனக்கொரு பழக்கம் இருந்தது.
வித்தியாசமான பேர்கள், ஊர்களின் அடையாளங்களைக் கவனித்தால் உடனே
அதனை எழுதி வைத்துக் கொள்வேன். ஒரு நிகழ்ச்சியில் நண்பரும்
எழுத்தாளருமான சுனீல் கிருஷ்ணன் என்னைப்பற்றிச் சொல்லும்போது இதனைக்
கேலியாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த குறுகுறுப்பும் ஆர்வமும் எழுத
விரும்புகிறவனுக்கு அவசியமானது.
எழுத விரும்பும் நிறைய பேர் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி உண்டு.
நான் நிறைய புத்தகம் படிக்கிறேன். நானும் எழுதலாமா?
என் பதில் எப்போதும் ஒன்றுதான்.
படிப்பதும் எழுதுவதும் இரண்டு வெவ்வேறு செயல்கள்.
ஒரு நல்ல வாசகர், நல்ல எழுத்தாளராக மாறலாம். ஆனால் வாசிப்பது மட்டுமே
அவரை எழுத்தாளராக மாற்றிவிடாது. வாசிப்பு உங்களுக்கு மொழியைக்
கற்றுத்தரும். எழுத்து உங்களிடம் கடுமையான உடல் உழைப்பையும்
நேர்மையையும் கேட்கும். நல்ல வாசகராக இருப்பது பாதுகாப்பானது. ஆனால் .
எழுதத் துவங்கியபின் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கற்பனையை மட்டும்
அல்ல, உங்களுக்கேத் தெரியாமல் ஆழ்மனதில் கிடக்கும் பயங்களையும்,
பொய்களையும், குற்றவுணர்வுகளையும், குரூர ஆசைகளையும் சந்திக்க
வேண்டியிருக்கும். உலகின் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் முதல்
படைப்புகளை எழுதும்போது மற்றொரு எழுத்தாளரின் நிழலில்
இருந்திருக்கிறார்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. நாம் முதலில் நமக்கு
விருப்பமான எழுத்தாளர்களின் குரல்களையே பிரதிபலிக்கிறோம். கோணங்கி,
ஜி.நாகராஜன், தஞ்சை ப்ரகாஷ் என எனது ஆரம்ப காலத்தில் நிறைய
எழுத்தாளர்களின் தாக்கம் இருந்தது. கோணங்கியின் துவக்ககால கதைகள்
எனக்கு நன்கு அறிமுகமான கரிசல் நிலத்தின் மனிதர்களை முற்றிலும்
புதிதானவர்களாகக் காட்டியது. பெருநகர தனிமையும், வெக்கையும் தவிப்பும்
ஜி.நாகராஜனின் படைப்புகளோடு இயல்பான நெருக்கத்தை உருவாக்கித் தந்தது.
இன்றைக்கும் இவர்களைத் திரும்ப வாசிக்கிறேன். ஆனால் அந்த உலகிலிருந்து
எனது கதையுலகம் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கிறது.
தொடர்ந்து எழுதுவதன் வழியாகவும் உலகை உற்றுக் கவனிப்பதன் வழியாகவும்
நம்முடைய குரல் தனியாக நமக்குக் கேட்கும். நமது எழுத்தில் நம்மை பாதித்த
எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கலாம் ஆனால் நாம் உருவாக்கும் உலகம் நமது
கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும். எனவே முடிந்தவரை உங்களை
மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் முதலில்
வாசகராகத்தான் பிறக்கிறார்கள். ஜார்ஜ் ஆர்வெல் எழுதுவதைக் குறித்துச்
சொல்லும்போது நீண்ட, சோர்வூட்டும் நோய் என்று குறிப்பிட்டது மிகையானது
அல்ல.
எழுத்து கடுமையான உடல் உழைப்பையும் மன சஞ்சலங்களையும் உருவாக்கக்
கூடிய வேலை. அது மகிழ்ச்சியான செயலாக இருந்திருந்தால் இன்றைக்கு
எல்லோரும் எழுத்தாளர்களாக இருந்திருப்பார்கள். எழுத்தாளர் டோனி மோரிசன்
ஒரு அழகான கருத்தைச் சொல்கிறார்:
"நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை என்றால், அதை
நீங்கள் எழுத வேண்டும்."* இந்த ஒரு வாக்கியம் ஒருவர் எழுதுவதற்கான
அடிப்படைத் தகுதியாக என்னகொண்டிருக்கவேண்டும் என்பதைச்
சொல்லிவிடுகிறது. உலகத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குவதற்காக
எழுதுங்கள். உங்களைப் போன்ற ஒருவருக்கு தேவைப்படும் ஒரு கதையை
எழுதுங்கள். நல்ல புத்தகம் நம்மை அமைதியிழக்கச் செய்ய வேண்டும். நாம்
இதுவரை கவனிக்காத ஒரு உண்மையைப் பார்க்க வைக்க வேண்டும். நம்முள்
உறைந்திருக்கும் ஏதோ ஒன்றை உடைக்க வேண்டும். அப்படிப்பட்ட
புத்தகங்கள்தான் காலத்தைத் தாண்டி வாழ்கின்றன. ”நம்முள் உறைந்திருக்கும்
கடலை உடைக்கும் கோடரியாக இருக்க வேண்டும்; என காஃப்கா புத்தகங்களைக்
குறித்துச் சொல்கிறார்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்றும் ஒரு புதிய கதையின் முதல் பக்கத்தை எழுத அமரும்போது பயம்
வருகிறது. ’இந்தக் கதையை ஏன் எழுதவேண்டும்?’
இந்த மனிதர்களை நான் உண்மையாகப் புரிந்துகொண்டிருக்கிறேனா?
இது போலியாக இருக்கிறதா? இப்படி ஓராயிரம் கேள்விகள் கேட்டுக்கொள்ளும்
பழக்கம் மாறவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறிவிட்டது. முன்பு அந்தப்
பயம் என்னை எழுதவிடாமல் தடுத்தது. இப்போது அதே பயம்தான் என்னை எழுத
வைக்கிறது. **பயம் இல்லாத எழுத்து பெரும்பாலும் உயிரற்றதாகவே இருக்கும்.
இந்தப் புத்தகம் உங்களை எழுத்தாளனாக மாற்றும் என்று நான் சொல்ல
மாட்டேன். அப்படி ஒரு வாக்குறுதியை எந்தப் புத்தகமும் தர முடியாது. ஆனால்,
ஒரு வெற்றுத் தாளின் முன்னால் நீங்கள் தயக்கத்தோடு அமரும்போது நீங்கள்
மட்டும் அந்தப் பயத்தை அனுபவிப்பதில்லை என்பதை நினைவூட்டும். உலகின்
எல்லா பெரிய எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தங்களது முதல் வரியை எழுதத்
தயங்கியவர்கள்தான். அவர்களுக்கும் தெரியாத பாதைதான் அது. உங்களுக்கும்
அதே பாதைதான். அந்தப் பாதையில் நான் உங்களைவிட சில ஆண்டுகள்
முன்பாக நடந்திருக்கிறேன். அவ்வளவுதான்.


