எங்கிருந்து துவங்கலாம்?


எழுத வேண்டும் என்கிற எண்ணம் பல நேரங்களில் சிறிய அனுபவத்திலிருந்தே பிறக்கிறது; ஆனால் அந்த எண்ணத்தை எழுத்தாக மாற்றும் தருணத்தில் நம்மைத் தயக்கம் சூழ்ந்துவிடுகிறது. கதை எங்கிருக்கிறது என்பதைவிட, அதை எப்படித் தொடங்குவது என்பதே பெரிய கேள்வியாகிறது.
எதை எழுதுவது?எப்படி எழுதுவது?கதை எங்கிருந்து தொடங்கும்?ஒரு கதாப்பாத்திரத்தை எப்படி உருவாக்குவது?நமக்குத் தோன்றுவது உண்மையிலேயே கதையா?நாம் எழுதுவது இலக்கியமாகுமா?
இப்படியான கேள்விகளோடு பலர் எழுதுவதற்கு முன்பாகவே நின்றுவிடுகிறார்கள். இந்த நூல் அந்தத் தயக்கத்திலிருந்து விடுபட்டு முதல் அடியை எடுத்து வைக்கச் செய்வதற்கான முயற்சி.
கடந்த ஆறேழு ஆண்டுகளாக கல்லூரிகளிலும், வெவ்வேறு இலக்கியக் கூட்டங்களிலும், பயிலரங்குகளிலும் புனைவெழுத்து குறித்து தொடர்ந்து உரையாடி வருகிறேன். பல இடங்களில் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். எழுத விரும்புகிறவர்களுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். ஏற்கனவே எழுதி வருகிறவர்களின் கதைகளை வாசித்து விவாதித்திருக்கிறேன். எழுத வேண்டும் என்கிற தீவிரமான விருப்பம் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியாமல் நிற்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இது ஒரு நாளில் எழுதப்பட்ட நூல் அல்ல. பல வருடங்களாக நடந்த உரையாடல்களின் தொடர்ச்சி. கேள்விகளிலிருந்து பிறந்த நூல். சில சமயம் மாணவர்களின் குழப்பங்களிலிருந்தும், சில சமயம் எனது சொந்த எழுத்துப் பயணத்திலிருந்தும் உருவானது.
கதை எழுதுவதற்கு சில உத்திகள் இருக்கின்றன. கட்டமைப்பு இருக்கிறது. கதாப்பாத்திர உருவாக்கம் இருக்கிறது. காட்சிகளை அமைக்கும் முறை இருக்கிறது. மொழி இருக்கிறது. உரையாடல் இருக்கிறது. கதை எப்போது தொடங்க வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பதற்கான சில புரிதல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளலாம். பயிற்சி செய்யலாம். தவறு செய்யலாம். மீண்டும் எழுதலாம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்னால் இன்னொரு விஷயம் இருக்கிறது.
ஏன் எழுத வேண்டும்?
அந்தக் கேள்விக்கான பதில் இல்லாமல் எழுதுவதைப் பற்றி பேசுவது முழுமையற்றதெனத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளன் முதலில் தன்னுடைய வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் கவனிக்காமல் கடந்து செல்லும் சிறிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒருவரின் பேச்சுக்குள் மறைந்திருக்கும் முரண்பாட்டைக் கேட்க வேண்டும். நகரம் எவ்வாறு அதன் மனிதர்களை மாற்றுகிறது என்பதை கவனிக்க வேண்டும். எழுத்து என்பது முதலில் பார்ப்பதற்கான கலை. அதற்குப் பிறகுதான் சொல்லும் கலை.
பல ஆண்டுகளாக நாவல்களையும் சிறுகதைகளையும் வாசித்துக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இலக்கியத்தைப் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம். பல எழுத்தாளர்களை வாசித்திருக்கலாம். ஆனால் “நானும் எழுத வேண்டும்” என முடிவு செய்யும் தருணத்தில் வாசிப்பவனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலிருந்த தூரம் மாறிவிடுகிறது. வாசிக்கும்போது நாம் கதையைப் பார்க்கிறோம். எழுதத் தொடங்கும்போது அந்தக் கதையின் பின்னால் இருக்கும் இருளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒரு கதை எதனால் நம்மைத் தொட்டது? ஒரு கதாப்பாத்திரம் ஏன் நினைவில் நிற்கிறது? ஒரு முடிவு ஏன் நம்மைத் திடுக்கிடச் செய்கிறது? ஒரு வாக்கியம் ஏன் நம்மை நீண்ட நேரம் துரத்துகிறது? ஒரு எழுத்தாளன் எதைச் சொல்கிறான், எதைச் சொல்லாமல் விடுகிறான்? இவற்றை கவனிக்கத் தொடங்கும்போதுதான் வாசிப்பு மெதுவாக எழுத்துக்கான பயிற்சியாக மாறுகிறது. அதே நேரத்தில், “நான் அதிகம் வாசிக்கவில்லை; ஆனால் எழுத வேண்டும்” என்று நினைப்பவர்களுக்கும் இந்த நூல் உரியது.
எழுத்தில் முதல் முயற்சியே சிறப்பாக இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. முதல் கதை மோசமாக இருக்கலாம். இரண்டாவது கதை அதைவிட மோசமாக இருக்கலாம். பத்தாவது கதையிலும் நாம் தேடுவது கிடைக்காமல் போகலாம். ஆனால் எழுதிக்கொண்டே இருப்பதன் வழியாகத்தான் நமக்குள் இருக்கும் எழுத்தாளனை கண்டுபிடிக்கிறோம். இந்த நூல் உங்களுக்கு “இப்படி எழுதினால் சிறந்த எழுத்தாளராகிவிடலாம்” என்று எந்த உத்தரவாதத்தையும் கொடுக்காது. அப்படிப்பட்ட உத்தரவாதத்தை கொடுக்கவும் முடியாது. மாறாக, இது சில கேள்விகளை உங்களிடம் கேட்கும்.
கதை எங்கிருந்து வருகிறது?
ஒரு கதாப்பாத்திரம் எப்போது உயிர்பெறுகிறது?
ஒரு சம்பவம் எப்போது கதையாகிறது?
மோதல் ஏன் தேவை?
ஒரு மனிதனின் ஆசை எப்படி கதையை நகர்த்துகிறது?
எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லாமல் விட வேண்டும்?
கதை எங்கே தொடங்க வேண்டும்?
எங்கே முடிக்க வேண்டும்?
இவற்றுக்கான இறுதியான பதில்களை இந்த நூல் வழங்க முயற்சிக்கவில்லை. ஏனென்றால் புனைவில் இறுதியான பதில்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. ஒரு எழுத்தாளனுக்கு பயன்படும் புரிதல் இன்னொருவருக்கு தடையாக இருக்கலாம். எனவே இந்த நூலை விதிகளின் புத்தகமாக அல்ல; எழுத்தை நோக்கிச் செல்லும் ஒரு உரையாடலாக பார்க்க வேண்டும்.
இந்த நூலை எழுதும்போது நான் ஒன்றைக் கவனித்தேன். எழுத விரும்புகிறவர்களில் பலர் தங்களுக்குள் ஏற்கனவே எழுத்து இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானது சில சமயம் வழிகாட்டுதல் மட்டுமே. “இங்கிருந்து தொடங்குங்கள்” என்று யாராவது சொல்ல வேண்டும். அந்த குரலாக இந்த நூல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனென்றால் எழுத்தைப் பற்றி எவ்வளவு பேசினாலும், எவ்வளவு வாசித்தாலும், எவ்வளவு கற்றுக்கொண்டாலும், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு முதல் வாக்கியத்தை எழுத வேண்டிய தருணம் வரும். அந்தத் தருணத்தை நோக்கித்தான் இந்த நூல் உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறது.
எழுதுவதற்கு முன் அச்சப்படாதீர்கள். நீங்கள் எழுதப்போகும் கதை நல்லதா கெட்டதா என்பதை முதல் வாக்கியத்திலேயே தீர்மானிக்க வேண்டியதில்லை. அது இலக்கியமா இல்லையா என்பதைப் பற்றியும் இப்போதே முடிவு செய்ய வேண்டியதில்லை.
முதலில் எழுதுங்கள், பிறகு வாசியுங்கள், மீண்டும் எழுதுங்கள். உங்கள் சொந்தக் குரலைத் தேடுங்கள்.
ஒரு நாள், நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கதாப்பாத்திரம் உங்கள் திட்டத்தை மீறி ஏதோ ஒன்றைச் செய்யும். நீங்கள் எதிர்பார்க்காத வாக்கியம் உங்கள் கதையில் பிறக்கும். நீங்கள் எழுத நினைக்காத இடத்துக்கு கதை சென்று நிற்கும். அந்தத் தருணத்தில் இந்த நூலின் உண்மையான நோக்கம் உங்களுக்குப் புரியலாம். எழுத்து என்பது நாம் கதையை உருவாக்குவது மட்டும் அல்ல; நம்மால் இதுவரை அறியப்படாத நம்மையே எழுதிக்கொண்டே கண்டுபிடிப்பது.
இங்கிருந்து நீங்கள் தொடங்கலாம்.
லஷ்மி சரவணகுமார்


