top of page

மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் வேண்டுமா?

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Sep 9
4 min read


நேற்றிரவு வாட்ஸ்அப்பில் காதல் பாடல்களாக ஸ்டேட்டஸ் வைத்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. அப்படியே போய்க்கொண்டிருந்தது. காலையில் ஒரு தம்பி மெசேஜ். “என்னண்ணே, ஒரே லவ் சாங்கா வருது. எதும் புது காதலா?” நான் உடனே பதில் அனுப்பினேன். “நான் பத்து பதினைஞ்சு நாளா சீரியல் கில்லர் படமா பாத்துட்டு இருக்கேன் தம்பி. அதனால சீரியல் கில்லர் ஆகிடுவேனா?” அவன் சிரித்தான். நானும் சிரித்தேன். விஷயம் முடிந்தது.


நம்முடைய செயல்களுக்கு எல்லாம் காரணம் வேண்டுமா? ஒருவர் திடீரென்று சிரித்தால், “என்னாச்சு?” ஒருவர் அழுதால், “என்ன பிரச்சினை?” ஒருவர் கோபப்பட்டால், “யாரும் எதுவும் சொன்னார்களா? ” ஒருவர் காதல் பாட்டு வைத்தால், “காதலா?” ஏன்? மனிதன் ஒரு பாடலைப் போடக்கூட காரணம் சொல்ல வேண்டுமா? நாளைக்கு “காலை டிபனுக்கு இட்லி சாப்பிட்டேன்” என்ற ஸ்டேட்டஸ் போட்டால், “உங்களுக்கு சாம்பார் பிடிக்குமா?” என்று ஆராய்ச்சி ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.


இன்று மதியம் ஒரு நண்பனைப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு மணி. வெயில் நாற்பது டிகிரி. சென்னை வெயில் என்பது வெறுமனே வெயில் இல்லை. தனிப்பட்ட பகை. “வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கலாமே?” என்று சூரியன் நம்மைத் திட்டுவது போல இருக்கும். போனமாதம் மதுரைக்காரர்களுக்கு நான் விட்ட சாபத்தின் பலனை இந்த மாதம் அனுபவிக்கிறேன். ஆட்டோ பிடித்தேன். காதில் ஹெட்ஃபோன். பாடல் ஓடிக்கொண்டிருந்தது. என்ன பாடல் என்று கேட்டால் சொல்ல முடியாது. என் பிளேலிஸ்ட்டுக்கு ஜனநாயகமும் கிடையாது. ஒழுங்கும் கிடையாது. கொத்துப்பரோட்டா ஒரு கை, மெது வடை ஒரு கை, அடப்பிரதமன் இரண்டு ஸ்பூன். எல்லாவற்றையும் கலந்துகட்டி சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் என் பாடல்களின் வரிசை. தமிழ். மலையாளம். ஹிந்தி. தெலுங்கு. ஆங்கிலம். ஒரு பாடலில் காதல். அடுத்ததில் பிரிவு. அடுத்ததில் யாரோ கத்துகிறார். அதற்குப் பிறகு ஒரு மலையாளப் பெண் உலகத்தில் வேறு யாருமே இல்லாத மாதிரி மெதுவாகப் பாடிக்கொண்டிருக்கிறார். அடுத்த நிமிடம் ஹிந்தியில் தாளம் காதை அடிக்கிறது. வாழ்க்கைக்கு இவ்வளவு வரிசை இருக்கும்போது பாடலுக்கு மட்டும் ஏன் இருக்க கூடாது?

கூடாது


ஆட்டோ போய்க்கொண்டிருந்தது. நான் பாடலோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். சத்தமாக. ஹெட்ஃபோன் போட்டிருக்கிறேன். எனக்கு வெளியே சத்தம் போகாது என்ற நம்பிக்கை. மனிதனுக்கு இருக்கிற நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய குரல் வெளியே கேட்காது. ஆனால் எதிரில் இருப்பவருக்கு எல்லாம் கேட்கும். ஆட்டோ அண்ணா ரியர் வியூ மிரரில் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிரிப்பு. முதலில் கவனிக்கவில்லை. பிறகு அவர், “என்ன தம்பி… நல்லா பாடுறீங்க!” என்றார். நான் சிரித்தேன். “பாட்டு நல்லா இருக்கு அண்ணே,” என்றேன். “அதான் கேக்குறேன்,” என்றார். அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன். இரண்டு அந்நியர்கள். ஒருவருடைய பெயர் இன்னொருவருக்குத் தெரியாது. வாழ்க்கையில் மீண்டும் சந்திப்போமா என்பதும் தெரியாது. ஆனால் அந்த மூன்று நிமிடங்களுக்கு நாங்கள் நண்பர்கள்.


நண்பனைப் பார்த்துவிட்டு திரும்பினேன். மனநிலை இன்னும் ஹேப்பி. ஏன் என்று தெரியவில்லை. பெரிய விஷயம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் லாட்டரி சீட்டு கொடுக்கவில்லை. ( இது அரசியல் பதிவல்ல) யாரும் எனக்கு பணம் அனுப்பவில்லை. காதலில் விழவில்லை. யாரும் என்னைப் பாராட்டவில்லை. உலகம் என்னைத் தேடி வந்து “நீ ஒரு நல்ல மனிதன்” என்று சர்டிபிகேட் கொடுக்கவில்லை. ஈவிபி ஸ்டிடியோ வாசலில் எனக்கு சிலையும் வைக்கவில்லை. ஒன்றுமே இல்லை. இருந்தும் மனசு நன்றாக இருந்தது. இதுதான் மனிதர்களுக்குப் புரியாத விஷயம். சோகமாக இருந்தால் காரணம் இருக்க வேண்டும். சந்தோஷமாக இருந்தால் இன்னும் பெரிய காரணம் இருக்க வேண்டும். “என்ன ஆச்சு?” என்று கேட்பார்கள். “ஒண்ணுமில்ல.” “அப்புறம் ஏன் சந்தோஷமா இருக்க?” இதற்கு என்ன பதில் சொல்வது? “சந்தோஷமா இருக்கறதுக்கு சந்தோஷமா இருக்கேன்” என்றால், நம்மை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள் போல.


இரண்டாவது ஆட்டோ வந்தது. ஏறினேன். மீண்டும் பாடல். ஹெட்ஃபோன். கொஞ்ச நேரம் கழித்து ஆட்டோக்காரர் கேட்டார், “அப்படி என்ன தம்பி பாட்டு?” நான் ஹெட்ஃபோனை கழற்றினேன். “அண்ணே நல்ல . பாட்டு.” அவர் விடவில்லை. “என்ன பாட்டு?” சொன்னேன். உடனே, “நானும் போடுறேன்,” என்றார். ஆட்டோவில் ஒரு ஸ்பீக்கர். பாடலைத் தேடி எடுத்துப் போட்டார். அடுத்த சில நிமிடங்கள் நாங்கள் இருவரும் ஒரே பாடலைக் கேட்டுக்கொண்டு போனோம். எனக்குச் சிரிப்பு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு அது என் தனிப்பட்ட பாடல். இப்போது பொதுச் சொத்து. இதுதான் இசையின் சாமர்த்தியம். ஒரு மனிதனுடைய காதுக்குள் தனியாக இருந்ததை எடுத்துக் கொண்டு, சாலையில் எல்லாருக்கும் கொடுத்துவிடும். பாஸ்போர்ட் வேண்டாம். ஆதார் வேண்டாம். சாதி வேண்டாம். மதம் வேண்டாம். யாருடைய கட்சி என்று கேட்காது. பாடல் மட்டும் போதும்.

சில நேரங்களில் நம்முடைய மகிழ்ச்சி எவ்வளவு சின்ன விஷயங்களில் இருக்கிறது என்று யோசித்தால் கொஞ்சம் வெட்கமாகக்கூட இருக்கிறது.


ஒரு நல்ல டீ. ஒரு பழைய பாடல். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு. மழைக்கு முன்னால் வரும் மண்வாசனையை வைத்து ஒரு வாசனை திரவியம் வந்திருக்கிறது. பிரத்யேகமான அந்த வாசனை திரவியத்தைப் பூசியிருக்கும் பெண் கடந்து செல்லும்போது வசீகரிக்கிறது. முன்பின் தெரியாத ஒருவன் சிரித்துப் பார்ப்பது. ஒரு புத்தகத்தில் திடீரென்று பிடித்துவிடும் ஒரு வரி. கடையில் நமக்குப் பிடித்த பிஸ்கட் கடைசியாக ஒன்று இருப்பது. இவையெல்லாம் பெரிய சாதனைகள் அல்ல. ஆனால் வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருப்பது பெரும்பாலும் இவைகள்தான். பெரிய மகிழ்ச்சிகள் வருடத்திற்கு இரண்டு மூன்று முறை வரலாம். சிறிய மகிழ்ச்சிகள் தினமும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை. அவற்றை கவனிக்க நமக்கு நேரமில்லை. ஏனென்றால் நாமெல்லாம் வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொண்டு இருக்கிறோம். வாழ்க்கை நம்மை சீரியஸாக எடுத்துக்கொள்கிறதா என்பது வேறு விஷயம்.


நாம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டோம். ஒருவர் சிரிக்கிறார். காரணம் என்ன? ஒருவர் தனியாக சாப்பிடுகிறார். ஏன்? ஒருவர் இரவு இரண்டு மணிக்கு பாடல் கேட்கிறார். காதல் தோல்வியா? ஒருவர் திடீரென்று புதிய சட்டை வாங்குகிறார். யாருடைய கல்யாணம்? ஒருவர் ஜிம் போக ஆரம்பிக்கிறார். காதல் வந்துவிட்டதா? ஒருவர் மீசை வளர்க்கிறார். ஏதோ பிரச்சினை. ஒருவர் மீசையை எடுத்துவிடுகிறார். அதைவிட பெரிய பிரச்சினை. மனிதனை அவன் இருக்கிறபடியே விடுவதற்கே நாம் தயாராக இல்லை. ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு விளக்கக் குறிப்பை நாமே எழுதிவிட வேண்டும். அப்போதுதான் நமக்கு நிம்மதி.


சில விஷயங்களுக்கு காரணமே இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் காதல் பாடல் கேட்டேன். அதனால் நான் காதலில் இருக்கிறேன் என்று அர்த்தமில்லை. நாளைக்கு நான் சீரியல் கில்லர் படம் பார்த்தால் சீரியல் கில்லர் ஆகிவிடுவேனா? அதுதான் லாஜிக் என்றால் தினமும் போலீஸ் சீரியல் பார்க்கிறவர்கள் எல்லாரும் போலீஸ் ஆகிவிட வேண்டும். சமையல் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் எல்லாரும் சமையல்காரர்களாகிவிட வேண்டும். கிரிக்கெட் பார்ப்பவர்கள் எல்லாரும் பேட்டிங் செய்ய வேண்டும். டிஸ்கவரி சேனல் பார்ப்பவர்கள் நாளைக்கே காட்டுக்குள் போய் புலியுடன் செல்ஃபி எடுக்க வேண்டும். மனிதனுடைய கற்பனைக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் நடுவில் ஒரு கதவு இருக்கிறது. அதைத் திறந்து வைக்க வேண்டியதில்லை.


இன்று வீட்டுக்குத் திரும்பும் வழி முழுக்க பாடல்தான். தமிழ் முடிந்து மலையாளம். மலையாளம் முடிந்து ஹிந்தி. அங்கேயிருந்து தெலுங்கு. பிறகு ஆங்கிலம். சில பாடல்கள் என்னை பழைய வயதுகளுக்குக் கொண்டு போயின. சில பாடல்கள் பழைய மனிதர்களிடம் கொண்டு போயின. சில பாடல்கள் எந்த இடத்துக்கும் கொண்டு போகவில்லை. இருந்தாலும் கேட்டேன். எல்லா பயணத்துக்கும் destination வேண்டுமா? சில சமயம் ரயிலில் ஏறி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே போவது போதும். எங்கே இறங்கப் போகிறோம் என்பது அப்போது முக்கியமில்லை. பாடலும் அப்படித்தான். அது எங்கே கொண்டு போகிறது என்று தெரியாமல் போய்க்கொண்டிருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது.

முழுக்க


சற்றுமுன் வீட்டு வாசலில் இறங்கியபோது தட்டத்தின் மறையத்தில் படத்தின் தீம் மியூசிக் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு படம் முடிந்தது போல இருந்தது. காலையில் ஒரு சின்ன வாட்ஸ்அப் உரையாடல். மதியம் நாற்பது டிகிரி வெயில். இரண்டு ஆட்டோக்கள். இரண்டு அந்நியர்கள். சில பாடல்கள். ஒரு நண்பன். முடிவில் ஒரு தீம் மியூசிக். இதுதான் அன்றைய நாள். இதற்கெல்லாம் என்ன பெரிய அர்த்தம் என்று கேட்டால் ஒன்றுமில்லை. அதுதான் அதன் அழகு.


நமக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. சோகமாக இருந்தால் காரணம் தேடுவோம். சரிதான். சோகத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டிருந்தால் அவரை வெளியே அழைக்க வேண்டும். ஆனால் சந்தோஷமாக இருக்கும்போது ஏன் விசாரணை நடத்த வேண்டும்? “என்ன விஷயம்?” “யாராவது மெசேஜ் பண்ணாங்களா?” “காதலா?” “பணம் வந்துடுச்சா?” “ஏதாவது நல்ல நியூஸா?” ஒன்றுமில்லை சார். மனசு நன்றாக இருக்கிறது. இன்று அவ்வளவுதான். நாளைக்கு என்ன ஆகுமோ தெரியாது. இன்று நல்லா இருக்கிறது. அதை அனுபவித்துவிடலாம்.

உண்மையில் மகிழ்ச்சி என்பது ஒரு காரணத்தின் விளைவு அல்ல. சில சமயம் அது நம்மைத் தேடி வரும் ஒரு stray dog மாதிரி. வாசலில் நின்றுகொண்டிருக்கும். “உள்ளே வரலாமா?” என்று கேட்காது. நீங்கள் கதவைத் திறந்தால் வரும். இல்லையென்றால் போய்விடும். நாம்தான் “நீ யார்? எங்கிருந்து வந்தாய்? உன் background என்ன? ஏன் என்னைத் தேடி வந்தாய்?” என்று விசாரணை நடத்துகிறோம். அதற்குள் அது போய்விடும்.

அதனால் இனிமேல் யாராவது என்னைப் பார்த்து, “என்னண்ணே… ஒரே லவ் சாங்கா இருக்கு. புது காதலா?” என்று கேட்டால் நான் சொல்லப் போவது ஒன்றுதான். “இல்ல தம்பி. வாழ்க்கை நல்லா இருக்கு. காரணம் கேக்காதே.”


பிறகு ஹெட்ஃபோனை மாட்டிக்கொள்வேன்.

ஒரு பாடல் போடுவேன்.

சத்தமாகப் பாடுவேன்.

நாற்பது டிகிரி வெயிலாக இருந்தாலும் சரி.

ஆட்டோக்காரர் சிரித்தாலும் சரி.

யாராவது காதலா என்று கேட்டாலும் சரி.


மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் தேவையில்லை. ( வீட்டிற்குள் நுழைந்தும் உடையைக் கூட மாற்றாமல் உடனே எழுதவேண்டுமெனத் தோன்றியது. )

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page