top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

Wild wild countryதன்னை மெட்டீயலிஸ்ட்டிக் ஸ்ப்ரிச்சுவலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஓஷோவை விரும்பி வாசிப்பவர்களில் நானும் ஒருவன். வன்முறையையும் பாலியலையும் கடந்த பிறகான தியான முறையை டைனமிக் மெடிடேஷன் முறையில் அறிமுகப்படுத்திய ஓஷோ கடந்த நூற்றாண்டின் சிந்தனை மாற்றத்தில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சி அல்லது சாதனை என்று சொல்லலாம். ஆனால் இந்த பக்கங்கள் மட்டுந்தான் அவருக்கானதா என்கிற கேள்வி வரும் போதுதான் நிதானித்து எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டியதாகிறது.


தியானம் ஆன்மீகம் போன்றவற்றை பேசுகிறவர்களிடம் இயல்பாகவே நமக்கொரு ஈர்ப்பு வந்துவிடும். நாம் தற்காலிகமாக நம்மிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். வாழ்க்கை தரும் சுமை, நெருக்கடிகள் அவஸ்தைகள் இவற்றிலிருந்து யாரோ ஒருவர் நம்மை மீட்டுவிடக் கூடுமென்கிற நமது நம்பிக்கையின் மீதுதான் இவர்களின் சொற்கள் சாதுர்யமாக கல்லெறிகின்றன. ஞான மரபில் ஊர்ந்து திளைக்கும் ஒருவனுக்கு சொற்களின் மூலமாய் எதிரிலிருக்கும் மனிதர்களை எவ்வாறு வசியம் செய்வதென்பது ஆகி வந்த கலை. இதனாலேயே நாம் அந்த தருணங்களில் அறிவார்த்தமான சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு முழுக்க அவர்களின் சொற்களுக்கு வசியப்படுகிறோம், ஒரு மசாஜ் பார்லரில் ரசித்து கண் மூடியிருக்கையில் நமது சிந்தனை முழுக்க ஹாப்பி எண்டிங் குறித்து மட்டுமே இருக்கமல்லவா அது போல்.

ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஓஷோவோடு சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களின் பார்வையிலும், ஆசிரமும் இருந்த ஆண்ட்லோப் மக்களின் பார்வையிலும், வழக்கறிஞர்கள் போலிஸ்காரர்கள் பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானவர்களின் பங்களிப்பிலும் ஆசிரமத்தில் படம் பிடிக்கப்பட்ட முக்கியமான வீடியோக்களின் தொகுப்புகளாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஓசோவைக் குறித்த முழுமையான சித்திரத்தை நமக்குத் தர முயற்சிப்பதில்லை, மாறாக புனேயிலிருந்து ஏன் தனது ஆசிரமத்தை அமெரிக்காவிற்கு மாற்றிக் கொண்டார். 1981 லிருந்து 1985 வரை அங்கு என்ன நடந்தது என்பதை விலாவாரியாகப் பேசுகிறது. புனேயில் இருக்கும் போதே தான் இனிமேல் பேசுவதில்லை என ஓஷோ அறிவிக்கிறார். ஓரகானில் ஆண்ட்லோப் சின்ன ஊர். அதிகமாகப் போனால் 50 லிருந்து அறுபது குடும்பங்கள் வரை மட்டுமே வசிக்கும் அந்தப் பகுதியை அவர்கள் தங்கள் ஆசிரமம் அமைப்பதற்கான இடமாக தேர்ந்தெடுக்கையில் அமெரிக்கர்களுக்கு இந்த சாமியாரும் அவரைச் சார்ந்தவர்களும் பெரும் சிக்கலாய் மாறுவார்கள் என்கிற எண்ணமில்லை. அமெரிக்கர்களுக்கு இயற்கையாகவே பெரும் அசம்பாவிதங்கள் குறித்த அச்சமுண்டு. சொல்லப் போனால் சாவு குறித்து பயம். அமெரிக்க சாகச சினிமாக்களில் தொடர்ந்து சூப்பர் ஹீரோக்கள் வந்து அமெரிக்காவையும் இந்த உலகையும் காப்பாற்றியபடியே இருக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கும் காமிக்ஸ் வாசிக்கும் சிறுவர்களுக்கு இருக்கும் மனநிலைதான். ஒன்று அதீத அச்சம் மற்றொன்று அதீத சாகசம்.


80 களில் ஓஷோவின் நூல்களும் சொற்பொழிவுகளும் உலகம் முழுக்க பிரபலமடைய முக்கிய காரணம் அவரது டைனமிக் மெடிடேடஷன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் வன்முறையை கட்டற்ற பாலியல் வேட்கையை கடந்த பிறகு அவனை ஆழ்ந்த அமைதிக்கு உட்படுத்திய பின் தியானத்திற்கு இட்டுச் செல்லும் இந்த புதிய முறையில் மகத்தான விடுதலையைக் கண்டு கொண்டதாகவே லட்சக்கணக்கான மக்கள் நம்பினார்கள். யூ டியூபில் ஏராளமான வீடியோக்கள் டைனமிக் மெடிடேசன் குறித்து காணக்கிடைக்கின்றன. இது ஒரு சாபிளுக்காக.எங்கெல்லாம் ஆன்மீகம் வியாபாரம் ஆகிறதோ நிறுவனம் ஆகிறதோ அங்கெல்லாம் குற்றங்களும் தானாக நுழைந்து கொள்கின்றன. ஒரு புறம் புனே ஆசிரமம் அங்கு வரும் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை என்கிற காரணம் சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் ஆசிரமத்தின் மீதும் ரஜ்னிஷ் மீதும் ஏராளமான வழக்குகள் பதியப்பட்டதாலேயே அவர்கள் அங்கிருந்து வெளியேற நினைத்தார்கள் என்று ஆதாரங்கள் சொல்கின்றன. அப்போது அவரின் பெர்ஷனல் செக்ரட்டரியாக இருக்கும் லஷ்மி இந்தியாவெங்கும் தங்கள் புதிய ஆசிரமத்திற்கான இடத்தைத் தேடிச் செல்ல இளம் வயதிலேயே ஓஷோவின் ஆசிரமத்திற்கு வந்து சேரும் ஷீலா தான் அமெரிக்கா செல்லும் யோசனையைச் சொல்கிறார். “நான் இதைச் சொன்ன நொடியில் அவரின் கண்களும் முகமும் பிரகாசமாய் மாறின” என்கிறார் ஷீலா.


ஓஷோவை சர்வதேச அளவில் மார்க்கெட் செய்ததில்( ஆம் சந்தைப்படுத்துதல் எல்லோருக்கும் உண்டு) ஷீலாவிற்கு முக்கியமான பங்குண்டு. “அவரைப் பார்த்த முதல் நொடியிலேயே அவர் மீது காதலுற்றுவிட்டேன்.” என தயக்கமின்றி சொல்கிறார். ஷீலாவின் பழைய வீடியோக்களைப் பார்க்கையில் தீட்சண்யம் மிக்க அவரது கண்கள் அவர் எத்தனை வலிமையானவராய் இருக்கக் கூடுமென்பதை புரிய வைக்கிறது. அமெரிக்காவில் தங்கள் ஆசிரமத்திற்கான இடத்தை உறுதி செய்துவிட்டபின் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ரஜ்னிஷ் தனது பிரதானமான இருபது சீடர்களுடன் கிளம்பி ஓரேகன் செல்கிறார். அதற்கு முன்பாகவே ஷீலாவை தனது பெர்ஷனல் செக்ரட்டரியாக நியமித்து பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துவிடுகிறார். “இந்த பொறுப்பு உண்மையில் அவருக்காக எல்லா சிலுவைகளையும் நானே சுமக்கும் இடத்திற்கு என்னைத் தள்ளியது” என்கிறார் ஷீலா. ரஜ்னிஷின் மீதிருந்த காதலால் அவர் அதை விரும்பியே செய்கிறார். ஷீலா என்றில்லை, ரஜ்னிஷின் அத்தனை சீடர்களும் அப்படித்தான் கண்மூடித்தனமாக அவரை நம்புகிறவர்களாய் இருக்கிறார்கள். ( பிற்பாடு படத்தின் இறுதிப்பகுதிதியில் அவரை விட்டு விலகி வரும் ஷீலா ‘அவர் தன் மீது மயக்கம் கொண்டு பின் தொடர்பவர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்’ என கசப்போடு சொல்கிறார். இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்து முடிக்கும் நிமிடம் நமக்குப் புரிவதும் அதுதான்.)


சுற்றிலும் மலைகள் நடுவில் பாய்ந்தோடும் ஆறு. பாலைவனத்தில் அபூர்வமாக ஒரு நதி ஓடினால் அதன் மகத்துவம் எவ்வாறு இருக்கும்? கரடுமுரடான அந்தப் பகுதியில் வெடி வைத்து தகர்த்து ஒரு புதிய நிலத்தை உருவாக்குகிறார்கள். மனிதர்கள் வாழவே தகுதியற்ற அந்த நிலத்தை முழுக்க முழுக்க சொர்க்கபுரியாய் மாற்றுவது ஷீலாவின் தொலை நோக்குப் பார்வை. பார்க்க மிக சாதாரணமான பெண்ணாகத் தோன்றும் அவருக்கு எத்தனை பெரிய கூட்டத்தையும் கட்டி வேலை வாங்கும் சாமர்த்தியம் இருந்திருக்கிறது. ஓஷோ தனது புதிய ஆசிரமத்தை ஆண்ட்லோப்பில் துவங்க இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு உலகம் முழுக்கவுமிருந்து அவரின் சீடர்கள் ஏராளமானோர் அங்கு வருகிறார்கள். ஆண்கள் பெண்கள் என அவர்களின் கடும் உழைப்பால் அந்த நிலம் புதிய பூமியாய் மாறுகிறது. அவர்களிடம் காணப்படும் மூர்க்கத்தையும் கட்டற்ற தன்மையையும் கண்டு அங்கிருக்கும் உள்ளூர் மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆசிரமத்திற்கும் உள்ளூர்வாசிகளுக்கும் எதிரெதிரான போக்கு இங்கிருந்தே துவங்குகிறது. அந்த பெரும் நிலத்தை சீர்படுத்தி விவசாயம் செய்யும்படி மாற்றும் அவர்கள் புதிய அணையைக் கட்டுகிறார்கள், அத்தோடு தங்களுக்கென தனி விமான நிலையம், விமான சர்வீஸ், போஸ்ட் ஆஃபிஸ், வங்கி எல்லாம் அங்கு வருகிறது. மதங்களே இல்லை என்பதை அறிவித்துக் கொண்ட ஒரு வழிபாட்டு நிறுவனமாய் மாறுகிறது. என்னதான் ஓஷோ நான் குருவுமில்லை நீங்கள் என்னை பின் தொடர்கிறவர்களும் இல்லை என்று சொல்லிக் கொண்டாலும் தன்னை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர வேண்டுமென்பதைத் தான் விரும்பினார். தான் எளிய மனிதன் எல்லோருக்கும் தோழன் என்று சொல்லிக் கொள்வது கார்ப்ரேட்டுகளின் அடிப்படைத் தகுதி. ரஜ்னீஷ்புரம் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட ஒரு வணிக நிறுவனத்தின் சி.இ.ஓ அவர்.


ஆசிரமும் தயாரானதும் உலகெங்கும் இருந்து ஏராளமான சன்யாசிகள் அங்கு வந்து சேர்கிறார்கள். இப்படி வருகிற எல்லோருமே பெரும் பணக்காரர்கள். மீடியாக்களுக்கும் பணக்காரர்களுக்கும் பிடிக்காத ஒரு ஆன்மீக குரு ஒருபோதும் பிரபலமடைவதில்லை. ( ஜக்கியும், நித்தியும் இன்னும் பல சமகால சாமியார்களூம் மீடியாக்கள் வளர்த்த குழந்தைகள். பணக்காரர்களின் செல்லப்பிள்ளைகள். அவர்கள் தான் தங்களின் நிதிகளின் மூலமாய் இந்த சாமியார்களை நிறுவனமாக்குகிறார்கள். இந்த மடங்களுக்குள் வரும் பல்லாயிரம் கோடிகள் குறித்து நாம் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆன்மீகம் அரசியல் இரண்டும் திருட்டுத்தனமாய் ஒட்டிக் கொண்ட குழந்தைகள் ஒருவர் செய்யும் அயோக்கியத்தனத்தை இன்னொருவர் சரிசெய்ய முடியும். இதில் ஆன்மீக அரசியல் வேறு? சரி அது தனிக்கதை பின்னொரு முறை பார்க்கலாம்.) அந்த சின்னஞ்சிறிய ஊர் உலகம் முழுக்க கவனிக்கப்படுகிறது. டைனமிக் மெடிடேஷன் போது உருவாகும் வினோத சத்தங்கள் கட்டற்ற செக்ஸ் என அங்கு நடக்கும் எல்லாமே அந்த மக்களை அச்சுறுத்துகிறது. ( குடும்பம் என்கிற அமைப்பை வேறு யாரையும் விட கிறிஸ்டியானிட்டி அழுத்தமாக கடைபிடிக்கிறது. அதனால் தான் அமெரிக்காவில் ஓஷோவிற்கு எதிராய்க் கிளர்ந்து எழும் முதல் ஆட்கள் மதகுருமார்களாய் இருக்கிறார்கள்.)


ஆசிரமத்தின் அத்தனை காரியங்களும் ஷீலாவின் வழிகாட்டுதல்களால் மட்டுமே நடக்கின்றன. சொல்லப் போனால் அந்த சின்னஞ்சிறிய பிராந்தியத்தின் அறிவிக்கப்படாத ராணி அவர். தினமும் ஒரு மணி நேரம் அவரிடம் மட்டுமே ஓஷோ பேசுவார். மற்றபடி பெரும்பாலும் தனது அறையை விட்டு வெளி வருவதில்லை. ஏன்? காரணம் இருக்கிறது. ஏராளமான நிதிகள் வந்து குவிகின்றன. அதை நிர்வாகிக்க பெருமளவிலான ஆட்களும் வருகிறார்கள். இந்தச் சூழலில் உள்ளூர்க்காரர்கள் தங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்பதால் ஆண்ட்லோப் முழுக்க ஏராளமான நிலங்களை பெரும் விலை கொடுத்து ஷீலா வாங்குகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் அந்த ஊரை ரஜ்னிஷ் புரம் என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றுகிறார்கள். இதன் பிறகு ஆண்ட்லோப் மக்களின் பிரச்சனை அமெரிக்க மக்களின் பிரச்சனையாக மாறுகிறது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியும் சொல்லப்படுகிறது. நைக் ஷூக்கள் அந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் வேகமாய் பிரபலமடைந்து கொண்டிருருந்தன. அதன் உரிமையாளர் ஓரேகானைச் சேர்ந்தவர். ஆண்ட்லோப் பகுதியில் பெரும் நிலத்தை வாங்கி தனது தொழிற்சாலையை அமெரிக்க விரும்பிய அவரை ஓஷோவின் ஆஷ்ரம் வரவிடாமல் தடுக்கிறது. ( ஓசோவின் பக்தராகவும் பின்பு ரஜ்னிஷ்புரத்தின் மேயராகவும் இருந்த ஒருவர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இந்த அரசுக்கு ஒரு குணம் உண்டு. ஏதாவது ஒன்றை உங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அதை எப்படியும் எடுத்துக் கொள்ளும்.’) ஆக இரண்டு பக்கங்களிலும் இருந்து இந்தப் படம் நமக்கு வெவ்வேறான கண்ணோட்டங்களைத் தருகிறது. பெருமளவில் தங்களுக்கு எதிர்ப்பு உருவாவதைக் கவனிக்கும் ஷீலா அதிரடியான ஒரு முடிவை எடுக்கிறார். வாஸ்கோ கவுண்ட்டி எலெக்‌ஷனில் தங்கள் ஆட்களை போட்டியிட வைப்பதென. எந்த தேசமும் புதிய மனிதர்களுக்கு இத்தனை அதிகாரங்களை இத்தனை வேகத்தில் தூக்கித் தர முனைவதில்லை. இந்தத் தேர்தலை அமெரிக்க மக்கள் கெளரவ பிரச்சனையாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் பிறகு பிரச்சனைகள் இயல்பு வாழ்க்கையில் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு வளர்ந்துவிடுகின்றன. திடீரென டல்லாஸில் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 750 பேர் ஒரே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவ ஆய்வுகள் எல்லாம் வேறு வேறு காரணங்களை சொல்ல ஒரு செனட்டர் மட்டும் இது பக்வான் ரஜ்னிஷ் ஆட்களின் வேலையாக இருக்குமென உறுதியாக மீடியாக்களில் சொல்கிறார். அப்போது எந்த விதத்திலும் இது நிரூபிகப்படவில்லை.


பேராசைகளால் மட்டுமே நிறைந்திருக்கும் சாம்ராஜ்யங்கள் வீழ எளியக் காரணங்கள் போதுமானது. ஹாலிவுட்டை சேர்ந்த ஒரு குழு ஆசிரமத்திற்குள் பக்தர்களாய் வருகிறார்கள். காட்ஃபாதர் பட தயாரிப்பாளரின் மனைவியும் அதில் ஒருவர். ஹேயாஸ் என்ற அந்த பெண் தனது ஆண் நண்பரான மருத்துவரோடு தன்னை அங்கு பிணைத்துக் கொள்கிறார். அண்ட்ய்ஹ மருத்துவர் தான் ஓஷோவின் அந்தரங்க மருத்துவராகிறார். அவர்கள் தான் ஓஷோவிற்கு விலை உயர்ந்த அன்பளிப்புகளைத் தருகிறார்கள். மில்லியன் டாலர் ரோலக்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் என டாலர்கள் அங்கு பொருட்களாக குவிகின்றன. இந்த புதிய குழு மிக வேகமாக ரஜ்னிஷுடன் நெருங்கும் நேரத்தில் தங்கள் ஆசிரமத்தை அங்கு வலுவாக்க ஷீலா ஒற்றை ஆளாய் போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் மீது சந்தேகம் வலுக்க தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு பக்வானின் அறையில் நடக்கும் உரையாடல்களை ஒட்டு கேட்கும்படியான வசதிகளை செய்கிறார். ஏராளமான டேப்கள் ஷீலாவிடம் வந்து சேர்கின்றன. அதில் ஒன்றில் ஓசோ வலியில்லாமல் மரணிப்பது குறித்துக் கேட்க, அவரின் மருத்துவர் அதற்கான வழிமுறைகளை சொல்கிறார். அதற்கான மருந்துகளை எல்லாம் கொண்டு வரச்சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைத்து வைக்கச் சொல்கிறார்.. ( ஜூலை 6ம் தேதி நான் இறந்துவிடுவேன் என ஷீலாவிடம் தெரிவிக்கும் ஓசோவிற்கு வேதி மருந்துகள் மூலமாய் மரணத்தை எய்தும் எண்ணமிருந்தது. அவர் தனது உடலை பரிசோதனையாய்க் கொண்டிருக்கிறார். அல்லது இதுவும் ஒருவிதமான மார்க்கெட்டிங் உத்தி. ஏனெனில் ஓரிடத்தில் அவர் தனது அறையில் எப்போதும் சிரித்தபடியே இருப்பதற்கான வாயுவை சுவாசித்துக் கொண்டிருந்ததாக அதிர்ச்சியோடு ஒரு பக்தர் சொல்கிறார். போதை மருந்துகளுக்கு எதிரானதென தனது ஆசிரமத்தை அறிவித்துவிட்டு தனியறையில் ஓஷோ முழுக்க சரணடைந்திருந்தது போதை மருந்துகளிடம் தான்.)


வெளியில் பிரச்சனை முற்றும் அதே நேரத்தில் ஷீலாவுக்கும் ஆசிரமத்திற்குமான சிக்கல்களும் அதிகமாகின்றன. இந்த புதிய குழு அளவிற்கு மீறி உரிமை எடுத்துக் கொள்வது நல்லதல்ல என பக்வானிடம் சொல்லும் ஷீலாவை நீ இதில் தலையிடாதே என்கிறார். அந்த நிமிடமே உடைந்து போகும் ஷீலா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக முடிக்க வேண்டுமென வேறு யாரும் ஒருபோதும் செய்யாத ஒரு காரியத்தை செய்கிறார். அமெரிக்கா முழுக்க தனது சன்யாசிகளை அனுப்பி வீடற்றவர்களை பிச்சைக்காரர்களை எல்லாம் இங்கு கொண்டு வருகிறார். ஏறக்குறைய 35,000 பேர். அவர்கள் அவ்வளவு பேருக்கும் புதிய உடை, உணவு எல்லாம் வழங்கப்படுகிறது. அமெரிக்க ஊடகங்கள் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர்கள் அவ்வளவு பேருக்கும் தேர்தலில் வாக்களிக்க வாக்குரிமை அளீக்க வேண்டுமெனக் கேட்டு தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் சாதுரியமாக இனி புதிய வாக்காளர்களை சேர்த்துக் கொள்ள முடியாதென அறிவிக்க இந்த திட்டம் பெரும் தோல்வியடைகிறது. அங்கு கொண்டு வரப்பட்ட எல்லோரையும் மறுபடியும் வெவ்வேறு இடங்களில் கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள். ஆசிரமத்தை தங்கள் வீடு, பக்வான் தங்களது கடவுள் என்று சொன்ன அதே மக்கள் இப்பொழுது காறி உமிழ்கிறார்கள்.


ஜூலை 6 ஓஷோ சொன்னது போல் இறக்கவில்லை. தனது நம்பிக்கைக்குரிய ஒருவரின் மூலம் அந்த மருந்தை ஷீலா திருடிவிடுகிறார். அதோடு தங்களுக்கு எதிரான சிலரைக் கொலை செய்ய முயன்ற வழக்கும் அவருக்கு எதிராக வலிமையாகிறது. ஒரு கட்டத்தில் தனது குழுவோடு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து தப்பித்து ஜெர்மனி சென்றுவிடுகிறார். நான்கு வருட காலம் பேசாமல் இருந்த ஓஷோ எல்லா மீடியாக்களையும் அழைத்து “ஷீலா 43 மில்லியன் டாலர்கள் திருடிவிட்டாள் என்ற குற்றச்சாட்டைதான் முதலில் சொல்கிறார். என்னோடு செக்ஸ் வைத்துக் கொள்ள எப்போதும் விரும்பினள், ஆனால் பெர்ஷனல் செக்ரட்டரியோடு ஒருபோதும் நான் செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டேன் என சிரிக்கிறார். எப்படி ஒரு பெண் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்து கசிந்துருகி அவருக்காக எல்லா சிலுவைகளையும் சுமந்தாள் என்பதெல்லாம் அந்த ஒரு நிமிடத்தில் காணாமல் போய் அவள் ஒரு சூன்யக்காரி ஆகிறாள். இந்த இடத்தில் தான் ஓஷோ என்ற குரு சாதாரண மனிதனாய் நமக்குத் தெரிகிறார். இதன் பிறகு இரண்டு பக்கங்களில் இருந்தும் வெவ்வேறான பேட்டிகளும் குற்றச்சாட்டுகளும் வருகின்றன. டல்லாஸில் 750 பேர் உடல் நிலை சரியில்லாமல் போனதற்கு ஷீலா தான் காரணமென ஓஷோவே ஆதாரங்களோடு அறிவிப்பதோடு அவர் யாரையெல்லாம் கொலை செய்ய முயன்றார் என்றும் சொல்கிறார். ( எப்போதும் போதை மருந்துகளில் மயங்கிக் கிடந்த அந்த மனிதருக்கு மிண்டும் ஞானம் கை வந்துவிடுகிறது.) ஜெர்மனியில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும் ஷீலா அவரின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்குப் பதிலாக அங்கு புதிதாக வந்த குழுவின் மீதுதான் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்க>. அவர்கள் ஆசிரமத்தில் வெள்ளையர் அல்லாதவர்களிடம் காட்டிய நிற வேறுபாடு அதோடு மறைமுகமாக அவர்களுக்கு ஆசிரமத்தை தங்கள் வசப்படுத்திக் கொள்ளும் திட்டம் இருந்ததையும் ஆதாரத்தோடு சொல்கிறார்.


ஓஷொவே வாயைத் திறந்துவிட்டதால் மர்மங்கள் உடைந்து எஃப் பி ஐ உள்ளே இறங்குகிறது. ஏராளமான குற்ற ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆசிரமத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எவ்வாறு க்ரீன் கார்ட் வாங்கினார்கள் என்பதைக் குறித்து விலாவாரியாய் சொல்லி இருக்கிறார்கள். அமெரிக்க வரலாற்றில் இன்றளவும் மிகப்பெரிய ஃபோர்ஜரி அது. ஓஷோ கைது செய்யப்படுகிறார், ஜெர்மனியில் அதே நேரத்தில் ஷீலாவும் அவரது குழுவினரும் கைது செய்யப்படுகிறார்கள். பிற்பாடு நடந்ததெல்லாம் ஓஷோவின் வீழ்ச்சியில் அல்லது பேராசை கொண்ட ஒரு நிறுவனத்தின் குரூரமான இன்னொரு பக்கம். ஆம் ஷீலா பிரதிபலித்தது ஓஷோவின் பேராசைகளைத்தான். “இந்த அமெரிக்காவை இதன் அரசியல் போக்கை நாம் மாற்ற வேண்டுமென பேசுகிறார் ஓஷோ.” அவர் உலகை மாற்றுவதாக சொல்லி இருக்கலாம். அல்லது தனது சொந்த தேசமான இந்தியாவை மாற்றுவதாக சொல்லி இருக்கலாம். ஏன் அமெரிக்கா? மில்லியன்களில் வந்து குவியும் டாலர்கள். உலகை தன் பக்கம் எப்போதும் திருப்பி வைத்திருக்கும் ஒரு ஈர்ப்பை அமெரிக்கா அவருக்குக் கொடுத்திருக்கிறது.


படத்தின் இறுதி நொடி வரை ஷீலாவே நம்மை முழுமையாக ஆச்சர்யப்படுத்துகிறார். இந்த வயதிலும் அதே உறுதி. இதில் ஷீலோவோடு அவரின் குழுவிலிருந்த ஒரு பெண்ணும் பேசுகிறார். அவரின் கதையும் இறுதிக் கட்டத்தில் அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. அவர்கள் யாரும் இப்போது ஓஷோவைத் தொடர்வதில்லை. எல்லாவற்றையும் துறக்க நமக்குக் கற்றுக் கொடுக்கும் ஆன்மீகம் அடிப்படையில் பேராசை மிக்கது. தியானம் அறவழி உலகின் மீதான காதல் இவையெல்லாம் அவர்கள் தங்களை மார்க்கெட்டிங் செய்து கொள்ள கற்றுக் கொண்டிருக்கும் வார்த்தைகள். நீங்கள் மெட்டிரியலிஸ்ட்க் ஸ்ப்ரிச்சுவலிஸ்ட்டாக இருங்கள். அது உங்கள் தேர்வு. ஆனால் அதை கண்மூடித்தனமாக பின் தொடர்வது முன்பே சொன்னதுபோல் மசாஜ் பார்லரில் ஹாப்பி எண்டிங்கிற்காக காத்திருக்கும் நொடியே வாழ்வின் மகத்தான தருணம் என்னும் மாயயைப் போன்றது. இத்தனை சொல்வதால் நான் ஓஷோவை நிராகரிக்கிறேன் என்பதல்ல, வாசிக்கிறேன். சில விஷயங்களுக்காக கொண்டாடுகிறேன். ஆனால் குருவாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். பேராசை கொண்ட ஒரு மனிதனை குருவாக ஏற்றுக் கொண்டால் அது என் வாழ்விற்கும் ஆன்மாவிற்கும் நான் செய்யும் துரோகம்.


டிம் ஜோன்ஸை உங்களில் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். 1978 ல் தன்னைப் பின் தொடர்ந்த இன்னும் சொல்லப் போனால் கடவுளாக வழிபட்ட 900 சீடர்களும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஆன்மீக குரு. டிம் ஜோன்ஸ் தன்னைக் கடவுளென்று அவர்களிடம் அறிவித்துக் கொண்டவர். அவர் செய்தது ஒரு மாபெரும் படுகொலை. டிம் ஜோன்ஸ் தனது ஆயுதமாக பாவித்தது சொற்களையும், சொற்களை நம்பின தனது சீடர்களின் நம்பிக்கையையும். ஜோன்ஸை இங்கு குறிப்பிட முக்கியமான காரணமுண்டு. ஜோன்ஸின் மகள் தன் தந்தை செய்தது வரலாற்றுப் பிழை அவரைப் போல் இல்லாமல் ரஜ்னிஷ் மக்களுக்கானவராய் இருக்கிறார் என ஒரு கட்டத்தில் ஆண்ட்லோப் ஆசிரமத்தில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறார். டிம் ஜோன்ஸைப் போல் கூட்டுத் தற்கொலைகளுக்கு தனது சீடர்களைத் தூண்டவில்லையே தவிர ரஜ்னிஷ் செய்ததும் அதே போன்றதொரு வேலையைத்தான்.


ஓஷோவை பின்பற்றாளர்களை ஒரு கல்ட் இயக்கமாக சொல்கிறார்கள். அமெரிக மக்களுக்கு கல்ட் புதிதானதா என்றால் நிச்சயமாக இல்லை. பீட் இயக்கம் அதற்கும் முன்பாகவே அங்கு வலுவாக இருந்திருக்கிறது. பீட் இயக்கத்தினரை அமெரிக்க மக்கள் மட்டுமல்ல உலகமெ கொண்டாடி இருக்கிறது. பாப் டிலான், ஜாக் கெரக் போன்ற மகத்தான கலைஞர்களை உலகிற்குத் தந்த இயக்கம் அது. மத அடிப்படைவாதமும் பாலியல் சிறுபான்மையினரிடமும் ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட அமெரிக்க அரசியல் இயக்கங்களுக்கு எதிராக வலுவான குரல்களை இயற்றியவர்கள் பீட் இயக்கத்தினர். சொல்லப் போனால் அமெரிக்க மக்களுக்கு புதிய வகையான வாழ்க்கைமுறையை அவர்கள் கற்றுத் தந்தார்கள். அவர்களை ஏற்றுக் கொண்ட கொண்டாடிய சமூகம் இவர்களை ஏன் நிராகரித்தது? இவர்கள் குடியேறிகள் என்பதால் மட்டுந்தானா? அது ஒரு காரணம். அமெரிக்கர்களின் இறுக்கமான கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தது ஒரு காரணம். அதை விடவும் முக்கியமான காரணம் அப்பட்டமாய்த் தெரிந்த ஆசிரமத்தின் பேராசை. இந்த தேசம் தங்களுக்கானது எல்லாவற்றையும் உடமையாக்கிக் கொள்ளலாம் என்னும் பேராசை. இந்தப் பேராசை தான் ஹாலிவு குழு உள்ளே வரும் போது ஷீலாவை ஒதுக்குகிறது. தனது வேலைகளுக்கு ஏவலாளியாக, தனது பாதுகாப்பு அரணாக மட்டுமே ஓஷோ ஷீலாவை பயன்படுத்திக் கொண்டார். இன்புற்று வாழ்வதிலும் கூட ஒரு ஆன்மீகக் குருவிற்கு சில அறம் முக்கியமானது. அல்லாது போனால் டிம் ஜோன்ஸிற்கும் ஓஷோவிற்கும் என்ன வித்தியாசம்?

74 views

Comments


bottom of page