top of page

இந்திய சிறுகதைகள் - ஓர் அறிமுகம் ( புதிய நூல் )

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 1 day ago
  • 1 min read

ree

 

‘சமகால இந்தியச் சிறுகதைகளின் கதைக்களமானது,  நம் நாட்டின் நிலவியல் மற்றும் சமூகவியல் வேறுபாடுகளைப் போலவே, மிக விரிவானதும், பன்முகத்தன்மை கொண்டதுமாக இருக்கிறது. ஒருவகையில், இதுவே ஒரு முழு உலகம் போல் உள்ளது.’

- சிசில்குமார் தாஸ்


கவிஞர் ஸ்ரீஷங்கரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு நிலவெளி  மாத இதழ் தொடங்கப்பட்டபோது என்னிடம் ஒரு தொடர் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தனர். நீண்ட காலம் சிறுகதைகள் எழுதாமலிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு விருப்பமான இந்தியச் சிறுகதைகளை அந்தத் தொடரில் அறிமுகப்படுத்த விரும்பினேன்.

வெவ்வேறுகலாச்சார அடையாளங்களைக் கொண்ட புனைவுகளை வாசிக்கையில் அந்த வாழவின் ஒரு துளியைத் தெரிந்துகொண்ட  நிறைவு கிடைக்கும். மலைகளையும், வனங்களையும் தேடிப் பயணிக்கும் எனக்கு அங்கு வாழும் மக்களின் வாழ்வைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இலக்கியங்களின் வழியாகவே கிடைத்தது.

இந்தத் தொடருக்காகத் தேடி வாசித்தபோது ஒவ்வொரு நிலத்தின் தனித்துவமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதே சமயம் சுதந்திர இந்தியாவில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் தொடர்ந்து வடக்கிலிருந்து  தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் இடம் பெயர்கிறார்கள்.


கடந்தகாலத்தைக் குறித்த நினைவேக்கங்களே கலாசாரத்தின் அடையாளமென்று நினைப்பது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு நம்பிக்கையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரே நேரத்தில்  பழமையிலிருந்து விடுபடுவதுகுறித்த ஆர்வமும் மீளமுடியாத அளவிற்குப் பிணைப்பும் கொண்ட கதாபாத்திரங்களை ஏராளமான புனைவுகளில் பார்க்க முடிகிறது. காஷ்மீரி எழுத்தாளரான ஹரிகிஷனின் ‘ஞாயிறு ஒளி’ இதற்குச் சிறந்த உதாரணம். சற்றேறக்குறைய இதேபோன்றதொரு கதாபாத்திரத்தை எம்.முகுந்தனின் மையழிக் கரையோரம் நாவலிலும் பார்க்கலாம்.


இப்படி ஒரேவிதமான மனநிலை கொண்ட கதாபாத்திரங்களை வரிசைப்படுத்தினால் ஒவ்வொரு மொழியிலிருந்தும் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். நீண்டகால காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நமக்கு இந்தப்புதிய நிலத்தில் எங்கு நம்மைத் 

தக்கவைத்துக் கொள்வது என்கிற குழப்பமும் கவலையும் நம் மனங்களில் குடி கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.


ஒரு வங்காளச் சிறுகதையைத் தழுவி கெளதம் கோஷால் இயக்கப்பட்ட   ‘பார்’என்ற திரைப்படத்தில் பீஹாரில் ஒரு கிராமத்திலிருந்து அரசியல் காரணங்களுக்காகத் தப்பித்து கொல்கத்தா வரும் தம்பதிகள் அந்தப் பெருநகரில் வாழமுடியாமல் பசியோடும் வலிகளோடும் மீண்டும் ஊர் திரும்புவதைப் பேசி இருப்பார்கள். நகரங்களின் மீதான இந்த அச்சத்தை  நீண்டகாலம் இந்திய இலக்கியங்கள் பிரதிபலித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.விதிவிலக்காக ஒரு சில எழுத்தாளர்களைச் சொல்லலாம்.ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு வேகமாக நடந்த மாற்றங்களும் நகர்மயமாதலும் ஒவ்வாமையாகவே இருந்திருக்கின்றன.

நகர்மயமாதலின் மீதான இந்த ஒவ்வாமையை எழுதுகிறவர்களின் சமூகப் பிண்ணனி இங்கு ஆயுவுக்குரியது.


மராத்திமற்றும் கன்னட தலித் இலக்கிய எழுச்சிக்குப்பின் சொந்த ஊரிலிருந்து 

விடுபட்டு மையநீரோட்டத்தில் கலப்பது குறித்த விவாவதங்கள் முக்கியமானதாக 

மாறுகின்றன. அவர்களிடம்தங்களது கடந்த காலம் குறித்த நினைவேக்கங்கள் இல்லை. இந்த வேறுபாடு முக்கியமானது. புனைவிலக்கியத்தில் நிகழ்ந்த  புதிய மாற்றங்களுக்கான தொடக்கம் இதுதான்.


டோக்ரி மொழியில் முதல் சிறுகதை நூல் 1948ம் வருடம்தான் பதிப்பிக்கப்பட்டது. அதேபோல் காஷ்மீரி மொழியில் 1955வரை சிறுகதை நூல்கள் பதிப்பிக்கப்படவில்லை. 1970கள் வரை போடோ மொழிக்குச் சரியான எழுத்து வடிவம் அமைந்திருக்கவில்லை. இந்த மொழிகளில் எழுதப்படும் கதைகளை வாசிக்க வேண்டியது அவசியம். அவர்கள் மற்ற இந்திய மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைமொழியைக் 

கண்டடைந்திருக்கிறார்கள்.இன்னொருபுறம் தொண்ணூறுகளுக்கு முன்பு வரை 

செழித்திருந்த டோக்ரி, மைதிலி, ராஜஸ்தானி என ஏராளமான மொழிகளில் இன்று எழுத்தாளர்களின் எண்ணிக்கை 

குறைந்து வருகிறது.


வட்டார இலக்கியங்கள் சுவடில்லாமல் போவது ஆரோக்கியமானதல்ல. ஒற்றை மொழியில் சிந்திக்கும்போது அந்தந்த மொழிகளுக்கான தனித்துவம் அழிக்கப்படுவதோடு அவர்கள் தங்களது கலாச்சார அடையாளங்களையும் இழக்க நேரிடும்.

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் வேகமாக குறைந்து வருவது நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றம் அல்ல.


பிரதேச மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த மக்களை ஹிந்தி மொழியைக் கற்க வைத்து அதிலேயே சிந்திக்க வைப்பதன் வழியாக அவர்களது மரபார்ந்த செய்திகளை மறக்கச் செய்துவிடுகிறோம். கடந்த காலத்தைக் குறித்த செய்திகள், ஒவ்வொரு நிலத்திற்குமான மருத்துவமுறைகள் என மொழிக்குள்ளிருக்கும் அறிவை ஆவணப்படுத்த வேண்டியது நம் கடமை.


பிரதேச மொழி இலக்கியங்கள் தொடர்ந்து வளமோடு இயங்கும்போதுதான் அசலான 

இந்திய இலக்கியம் என்ற முழுமையை நாம் அடையாளம் காணமுடியும். வெவ்வேறு அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய புனைவுகளாயினும் சில 

அடிப்படைக் குணங்கள் எப்படி நம்மை ஓர் எல்லைக்குள் கட்டமைத்திருக்கிறது 

என்பதைக்கண்டுகொள்ளலாம். 

சிறுகதைஎன்னும் வடிவம் உயிர்ப்பெற்ற ஒரு நூற்றாண்டிற்குள் இந்த வடிவத்தில் 

நிகழ்ந்திருக்கும் பெரும் பாய்ச்சல் வியத்தகு விஷயம்தான். கதை சொல்லியின் கவனத்தையும் உழைப்பையும் கோரக்கூடிய இவ்வடிவத்தில் எல்லா இந்திய மொழிகளிலும் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் நிகழ்ந்துள்ளன. உருது, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சாதனையாளர்களின் எண்ணிக்கை கூடுதல் என்றும் சொல்லலாம்.

இந்தப் புனைவுகள் நமக்குப் புதிய நிலங்களையும் கலாசாரத்தையும்  அறிமுகப்படுத்துவதோடு வாழ்வைப் பற்றிய விசாலமான பார்வையைத் தருகிறது. பெரும்பாலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளையே இந்தத் தொடருக்காக வாசித்தேன். சில கதைகளின் மொழிபெயர்ப்பு மனநிறைவு தராத போது அவற்றை மீண்டும் ஆங்கிலத்தில் வாசித்தேன்.


கதைத் தேர்வுகளில் எந்த முன் தீர்மானங்களையும் வைத்துக் கொள்ளவில்லை. அதேபோல் காலகட்டத்தின் அடிப்படையிலும் எடுத்துக் கொள்ளவில்லை. எனது விருப்பத்திற்கு வாசித்தவற்றிலிருந்து சில கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டேன். உண்மையில் நீண்ட ஆய்வாக செய்திருக்க வேண்டிய வேலை. அப்படித்தான் எழுதவும் விரும்பினேன்.எனது சோம்பேறித்தனமும் கவனச்சிதறலும் அந்தப் பெரிய வேலையைச் சுருக்கிவிட்டன. இந்தத் தொகுப்பில் உன்னிஆரின் ‘காளிநாடகம்’ குறித்து எழுதிய கட்டுரையையும் ஹன்ஸ்டா 

செளபேந்திராவின் சிறுகதை குறித்து எழுதிய கட்டுரையையும் சேர்க்க முடியவில்லை. இன்னொரு தனி நூலாக மேலும் சில சிறுகதைகள் குறித்து எழுத வேண்டுமென்பது 

எனது விருப்பம்.


வடகிழக்கு கதைகளைக் குறித்தும் உருது மொழிக் கதைகள் குறித்தும் மட்டும் 

தனித்தனியாக இரண்டு நூல்கள் எழுதும் திட்டமும் இருக்கிறது.

 இந்தக் கட்டுரைகள் எழுதுவதற்கான தூண்டுதலாக இருந்த கவிஞர் ஸ்ரீஷங்கர் அவர்களை இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் வாசகர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்த 

மொழிபெயர்ப்பாளர்களை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page