top of page

எதிலிருந்து விடுபடவேண்டும்?

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
8 minutes ago
5 min read

மனச்சோர்வு என்பது ஒரு துயரமான சம்பவத்திலிருந்தோ, எதிர்பாராத இழப்பிலிருந்தோ தொடங்குவதில்லை. சில சமயங்களில் நாம் விரும்பியபடி வாழ்க்கை நகரவில்லை என்ற உணர்விலிருந்தே உருவாகிறது. மனம் செல்ல விரும்பும் திசையில் உடல் ஒத்துழைக்க மறுக்கும்போது ஏற்படும் கையறுநிலை ஒருவகையானது என்றால் நாம் வாழ விரும்பிய வாழ்க்கையை வேறொருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உருவாக்கும் மனநெருக்கடி அதைவிடக் கொடுமையானது,


நீண்ட நேரம் வாசிப்பதும் எழுதுவதுமாக இருப்பதால் எனக்கு அடிக்கடி முதுகுவலியும் கழுத்துவலியும் வருவதுண்டு. இடையில் நான்கு ஆண்டுகள் இந்தத் தொந்தரவு இல்லாமல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதனால் நாவல் எழுதுவதும் தடைப்பட்டிருக்கிறது. எழுத வேண்டும் என்று மனம் உந்தித் தள்ளுகிறது. ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஒரு நாளில் செய்து முடிக்க நினைக்கும் வேலைகளுக்கும் உண்மையில் செய்து முடிப்பவற்றுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும்போது தோல்வியுணர்ச்சியே மிஞ்சுகிறது.


ஒரு கட்டத்தில் செயலின்மையே என்னுடைய மனச்சோர்வுக்குக் காரணம் என்று நினைத்தேன். எழுத முடியவில்லை, அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் நகரவில்லை, திட்டமிட்ட காரியங்களைச் செய்ய முடியவில்லை. இவைதான் என்னைச் சோர்வடையச் செய்கிறது என்று நம்பினேன். ஆனால் அதுமட்டுமில்லை இன்னொரு காரணமும் உண்டு என்பதை இன்று கண்டுகொண்டேன். என்னுடைய நீண்டகால வாசகியும் தோழியுமான ஒருவர் எழுதிய செய்தி, இந்தப் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை புரிய வைத்தது.

கடந்த சில மாதங்களாக அடுத்த திரைப்பட வேலைகள் தாமதமாவது குறித்து அவரிடம் அடிக்கடி பேசுவதுண்டு. அவர் எப்போதும் பொறுமையாகக் கேட்டுக்கொள்வார். நேற்று வழக்கம்போல சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டுவிட்டு அதை மறந்துவிட்டேன். இன்று அவர் எனக்கு ஒரு நீண்ட செய்தியை அனுப்பியிருந்தார்.

மற்றவர்களோடு உங்களைத் தொடர்ந்து ஒப்பிட்டுக்கொள்வது உங்களைச் சோர்வடையச் செய்துவிடும். எழுத்தோ சினிமாவோ, ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நூறு காரணங்கள் இருக்கின்றன. இன்னொருவருக்கு நடந்துவிட்டது நமக்கு நடக்கவில்லை என்ற கவலையைச் சுமக்கத் தொடங்கினால் அந்தச் சுமை வெகுவிரைவில் உங்களை முடக்கிவிடும். அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று எழுதியிருந்தார்.


அதோடு அவர் எழுதியிருந்த வேறு சில விஷயங்களும் என்னை யோசிக்க வைத்தன. ஒரு எழுத்தாளனாக இந்தக் கருத்துகளை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். மற்றவர்களின் வாழ்க்கையோடு தங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அதே பிரச்சினை எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை இத்தனை காலம் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். நமக்குத் தெரிந்த உண்மைகளுக்கும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது!


அந்தச் செய்தியைப் படித்த பிறகு என்னுடைய செயலின்மை, மனச்சோர்வு, அடுத்த வேலைகள் குறித்த பதற்றம், சம்பாதிப்பது குறித்த கவலை என எல்லாவற்றையும் மீண்டும் யோசிக்கத் தொடங்கினேன்.

ஏன் இன்னொருவரின் வெற்றி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டும்? இன்னொருவரின் தோல்வி ஏன் எனக்குள் குரூரமான மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்? ஒருவருடைய திரைப்படம் வெற்றியடையும்போது, ஒரு எழுத்தாளர் பெரிய விருதைப் பெறும்போது, யாரோ ஒருவர் தொடர்ந்து படைப்புகளை வெளியிடும்போது, அவர்களுடைய மகிழ்ச்சியில் என்னால் ஏன் முழுமையாகப் பங்கெடுக்க முடிவதில்லை? அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் ஏன் உடனடியாகத் தலைதூக்குகிறது?


இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடத் தொடங்கியபோது, பிரச்சினை மற்றவர்களிடம் இல்லை என்பது புரிந்தது. என்னுடைய மனதின் ஏதோவொரு இருண்ட பகுதியில் அது ஒளிந்திருக்கிறது.

மனிதன் தன்னைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இயல்பானது. குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த ஒப்பீடு நம்முடைய வாழ்க்கைக்குள் நுழைந்துவிடுகிறது. கல்வி, வேலை, பொருளாதாரம், திருமணம், வீடு, சொத்து என வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிக்கான பொதுவான அளவுகோல்களைச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அந்த அளவுகோல்களைக் கொண்டு நம்மை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது. படைப்புலகில் இந்த ஒப்பீடு இன்னும் சிக்கலானது. ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இன்னொருவருக்குக் கிடைப்பதில்லை. ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் அவருடைய உழைப்பு மட்டுமல்லாமல் காலம், சூழல், பொருளாதாரப் பின்புலம், சரியான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அதிர்ஷ்டம் எனப் பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் இன்னொருவரின் வெற்றியைப் பார்க்கும்போது இந்தக் காரணங்கள் எதுவும் நம் நினைவுக்கு வருவதில்லை. நமக்குத் தெரிவது அவருடைய வெற்றி மட்டுமே. அந்த வெற்றியின் எதிரில் நம்முடைய வாழ்க்கையை நிறுத்திப் பார்க்கிறோம். அவருக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில்லை என்ற எண்ணம் நம்மை ஆக்கிரமிக்கிறது.


இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்வதை நிறுத்திவிட்டு இன்னொருவருடைய வாழ்க்கையைக் கண்காணிக்கத் தொடங்கிவிடுகிறோம்.

ஒரு படைப்பாளி தனது படைப்பின் வழியாகத் தன்னைக் கண்டடைய வேண்டியவன். ஆனால் அவன் இன்னொருவரின் வெற்றியின் வழியாகத் தன்னை மதிப்பிடத் தொடங்கினால் அவனுடைய படைப்பாற்றலே பாதிக்கப்படுகிறது. அவன் படைக்க விரும்புவதற்கும் தன்னை நிரூபிக்க விரும்புவதற்கும் இடையில் ஒரு போராட்டம் உருவாகிறது. அந்தப் போராட்டத்தில் மெல்ல மெல்ல படைப்பு தோற்றுப்போகிறது.

பொறாமை என்பது இன்னொருவரிடம் இருப்பதை நாம் விரும்புவதிலிருந்து மட்டும் உருவாவதில்லை. நம்மிடம் இருக்க வேண்டியதாக நாம் கற்பனை செய்துகொண்ட ஒன்றை இன்னொருவர் பெற்றுவிட்டார் என்ற உணர்விலிருந்தும் உருவாகிறது. நம்முடைய இருப்புக்கு வெளியிலிருந்து ஓர் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது நம்முடைய இருப்பே கேள்விக்குள்ளாகிறது.


ஒரு திரைப்படம் உருவாகாமல் போனால் அது ஒரு தொழில்முறைத் தாமதம் மட்டுமே. ஆனால் அந்தத் தாமதம் நீடிக்கும்போது அதை நம்முடைய தனிப்பட்ட தோல்வியாக மாற்றிக்கொள்கிறோம். ஒரு நாவலை முடிக்க முடியாமல் போனால் அது உடல், மனம், சூழல் சார்ந்த தடையாக இருக்கலாம். ஆனால் அதை நம்முடைய படைப்பாற்றல் அழிந்துவிட்டதற்கான அடையாளமாகப் புரிந்துகொள்கிறோம்.

இப்படித்தான் வெளியில் நிகழும் சம்பவங்கள் நம்முடைய அகத்துக்குள் நுழைந்து சுயமதிப்பீட்டையே மாற்றிவிடுகின்றன. நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதற்குப் பதிலாக, அந்த வேலை நமக்குப் பெற்றுத்தர வேண்டிய பலன்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். எழுதுவதற்கு முன்பே அந்த எழுத்து எங்கே போய்ச் சேரும் என்று யோசிக்கிறோம். திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே அது வெற்றியடையுமா என்ற கவலை ஆக்கிரமிக்கிறது. நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய வேலையை எதிர்காலத்தின் அச்சங்கள் விழுங்கிவிடுகின்றன.


இன்னொருவரின் தோல்வியில் நமக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்ற கேள்வி இன்னும் அசௌகரியமானது.

ஒருவர் தோற்றுப்போகும்போது நமக்குள் ஏற்படும் அந்தச் சிறிய நிம்மதி எங்கிருந்து வருகிறது? அவருடைய தோல்வி நம்முடைய வெற்றியை உறுதிப்படுத்துகிறதா? அல்லது நாம் தோற்றுப்போயிருக்கிறோம் என்ற அச்சத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறதா? நம்மைவிட முன்னேறியிருப்பதாக நாம் கருதும் ஒருவர் தோற்றுப்போகும்போது நம்முடைய தோல்வி அவ்வளவு பெரியதாகத் தெரியாமல் போகிறது. அவரும் தோற்றுவிட்டார் என்ற எண்ணம் நமக்கு ஆறுதலை அளிக்கிறது. ஆனால் அந்த ஆறுதல் எவ்வளவு குரூரமானது!

ஒருவரின் தோல்வி நம்முடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் மேம்படுத்துவதில்லை. அவருடைய படைப்பு தோல்வியடைவதால் நம்முடைய படைப்பின் தரம் உயர்ந்துவிடுவதில்லை. அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்படுவதால் நமக்கான வாய்ப்பு உருவாகிவிடுவதில்லை.


நம்முடைய வாழ்க்கையை நமது அளவுகோலின்படி வாழ்வதை நிறுத்திவிட்டதன் விளைவுதான் இது. இன்னொருவர் எங்கே இருக்கிறார் என்பதைப் பொறுத்தே நாம் எங்கே இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டோம். அவருடைய வீழ்ச்சி நம்முடைய உயரமாகவும், அவருடைய உயரம் நம்முடைய வீழ்ச்சியாகவும் தோன்றுகிறது. இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து விடுபடாமல் ஒரு மனிதனால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியுமா? மற்றவர்களின் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படாமல் இருப்பது மட்டுமே போதாது. அவர்களுடைய மகிழ்ச்சியில் பங்கெடுக்கவும், துயரத்தில் உடனிருக்கவும் நம்மால் முடிய வேண்டும். அதற்குத் தடையாக இருப்பது மற்றவர்களின் வெற்றியோ தோல்வியோ அல்ல; நம்முடைய இருப்பை அவர்களுடைய இருப்பின் எதிரில் நிறுத்தி அளந்து பார்க்கும் மனப்பழக்கம்.


மனிதன் எதிலிருந்து விடுபட வேண்டும்?


பொருளாதார நெருக்கடியிலிருந்து, உடலின் வலிகளிலிருந்து, சமூகத்தின் நெருக்கடிகளிலிருந்து விடுபட வேண்டும். இவையெல்லாம் அவசியமானவை. ஆனால் இவற்றுக்கு இணையாக நம்முடைய மனதுக்குள் உருவாகியிருக்கும் சில சிறைகளிலிருந்தும் விடுபட வேண்டியிருக்கிறது.

மற்றவர்களுடைய வாழ்க்கையை அளவுகோலாகக் கொண்டு நம்மை மதிப்பிடும் சிறை. அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து ஏங்கிக்கொண்டிருக்கும் சிறை. தோல்வியைக் கண்டு அஞ்சும் சிறை. இன்னொருவர் அடைந்துவிட்ட ஒன்றை நாமும் அடைந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சிறை.

இந்தச் சிறைகளிலிருந்து வெளியேறுவது உலகத்திலிருந்து விலகிச் செல்வதல்ல. உலகத்தோடு நாம் கொண்டிருக்கும் உறவை மறுபரிசீலனை செய்வது.


நாம் ஏன் எழுதுகிறோம்? ஏன் திரைப்படம் எடுக்க விரும்புகிறோம்? ஏன் ஒரு கதையை உருவாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் உழைக்கிறோம்? இவற்றுக்கான பதில்கள் எப்போதும் வெற்றியும் அங்கீகாரமும் மட்டும்தானா? நம்முடைய படைப்புகள் உலகத்தால் கவனிக்கப்பட வேண்டும் என்று ஆசைபபடுசதில் தவறில்லை. ஆனால் அந்த விருப்பங்கள் நம்முடைய படைப்பின் அடிப்படையான மகிழ்ச்சியையே அழித்துவிடக் கூடாது. ஒரு நாவலை எழுதுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, அது வெளிவந்த பிறகு கிடைக்கும் அங்கீகாரத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் கிடைக்கும் நிறைவு அதன் வசூலை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது.


உடல் ஒத்துழைக்காத நாட்களில் அதனோடு சண்டையிடாமல் இருப்பதும் ஒரு வகையான விடுதலைதான். எழுத முடியாத நாட்களில் நம்முடைய படைப்பாற்றலைச் சந்தேகிக்காமல் இருப்பதும் அவசியம். ஒரு திரைப்படம் தாமதமாகும்போது நம்முடைய வாழ்க்கையே தாமதமாகிவிட்டதாக நினைக்காமல் இருப்பதும் முக்கியம். நம்முடைய வாழ்க்கைக்கு இன்னொருவருடைய கால அட்டவணை தேவையில்லை.

அந்தத் தோழி அனுப்பிய செய்தியைப் படித்தபோது இன்னொரு விஷயமும் புரிந்தது. நாம் சில நேரங்களில் நம்முடைய பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அவற்றை உண்மையில் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மனச்சோர்வுக்கான காரணங்களை வெளியில் தேடிக்கொண்டிருப்போம். நமக்குக் கிடைக்காத வாய்ப்புகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்போம். ஆனால் நம்முடைய மனதுக்குள் நாமே உருவாக்கிக்கொண்டிருக்கும் நெருக்கடிகளைப் பரிசோதிக்கத் தயங்குவோம்.


சில நேரங்களில் நம்மை நேசிப்பவர்கள், நாம் பார்க்க மறுக்கும் ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்தச் சொற்கள் நம்மை நம்மிடமே திரும்ப அழைத்துச் செல்லக்கூடும்.

இப்போது என்னிடம் எழும் கேள்வி, இத்தனை ஆண்டுகளாக நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதல்ல. இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்பதுமல்ல.


இன்றைக்கு நான் யார்?


என்னுடைய எழுத்துகளா நான்? நான் இயக்கிய திரைப்படமா நான்? இன்னொருவருக்குக் கிடைத்துவிட்டதாக நினைத்து நான் ஏங்கிக்கொண்டிருக்கும் வெற்றிகளா நான்? அல்லது இன்னொருவருடைய தோல்வியில் ரகசியமாக மகிழ்ச்சியடையும் அந்தச் சிறிய, குரூரமான மனிதனா நான்?

நம்முடைய எல்லா அடையாளங்களையும் கழற்றிவிட்டு நம்மை நாமே பார்க்க முயற்சிப்பது எளிதானதல்ல. ஆனால் அந்த முயற்சியைத் தொடங்க வேண்டியிருக்கிறது.


எல்லாவற்றையும் வென்றுவிட வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தும் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்தும் விடுபட வேண்டும். நம்மைவிட முன்னால் சென்றுகொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பதற்றமடைவதிலிருந்து விடுபட வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இன்னொருவருடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

எனக்கு இப்போது மீண்டும் எழுத வேண்டும். நாவலைத் தொடர வேண்டும். அடுத்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இந்த முறை என்னுடைய பயணம் இன்னொருவரை முந்திச் செல்வதற்கானதாக இருக்க வேண்டியதில்லை. என்னுடைய வாழ்க்கையை என்னுடைய வேகத்தில் வாழ்வதற்கானதாக இருக்க வேண்டும்.


மனிதன் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுவிட முடியாது. அவனுடைய ஆசைகள், அச்சங்கள், பொறாமைகள், ஏக்கங்கள் அவனுடைய வாழ்க்கையின் பகுதிகளாகவே இருக்கும். ஆனால் அவை அவனுடைய வாழ்க்கையை முழுமையாகத் தீர்மானிக்க அனுமதிக்காமல் இருக்க முடியுமா என்பதுதான் கேள்வி.

விடுதலை என்பது எல்லாவற்றையும் அடைவதில் இல்லை. எதையெல்லாம் அடைந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருந்து வெளியேறுவதில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது.

நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு இன்னொருவருடைய வெற்றியோ தோல்வியோ தேவையில்லை. இந்த எளிய உண்மையை உணர்ந்துகொள்வதற்குத்தான் சில நேரங்களில் ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறது.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page