top of page

புனைவென்னும் எதிர் வரலாறு

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Oct 28
6 min read


டிடி ராமகிருஷ்ணனின் ஃப்ரான்சிஸ் இட்டிகோரா, மாதா ஆப்ரிக்கா, சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகி ஆகிய மூன்று நாவல்களை முன்வைத்து.




நமக்கு அருகிலிருக்கும் நிலமென்றாலும் கேரளத்திற்கும் நமக்கும் தனித்த இலக்கிய மரபுகளும் வரலாறும் உண்டு. இருபது வருடங்களுக்கும் மேலாக மலையாள எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற வகையில் சமகால மலையாள எழுத்தாளர்களில் என்னை அதிகம் ஈர்த்தவராக டிடி ராமகிருஷ்ணனைச் சொல்வேன். ஃப்ரான்சிஸ் இட்டிகோரா தமிழில் வெளியானபோதே வாசித்திருந்தாலும் கடந்த வருடம் தேவநாயகி நாவலை வாசித்தபோது மீண்டும் ஒருமுறை வாசித்தேன். இடையில் கே.ஆர் மீரா என்னும் ஓவர் ரேடட் எழுத்தாளரின் நாவல்களை ஒட்டுமொத்தமாக வாசிக்கக்கூடிய துர்பாக்கியமும் நேர்ந்தது. அவரது முதல் இரண்டு படைப்புகளைப் படித்தபோது சுவாரஸ்யமாக கதை சொல்கிறார் என்கிற எண்ணம் வந்தது. அடுத்தடுத்த நாவல்களை வாசிக்கையில் அவர் சற்றேறக்குறைய ஒரேமாதிரியான கதையைச் சொல்கிறார் என்பது புரிந்தது. அதுகூட பிரச்சனையில்லை, அவரது புனைவுகள் சம்பவங்களின் அடுக்குகளாக மட்டுமே நீள்கின்றன, அந்த சம்பவங்கள் வாசிக்கிறவர்களை சிந்திக்கும் வைக்கும்படியான அமைதியோ விசாரணையோ அவரது புனைவுகளில் இல்லை. ஆராச்சர் என்னும் நாவல் மட்டும் இதில் விதிவிலக்கு. இந்த நாவல்களை வாசித்த சோர்விலிருந்து மீள மீண்டும் இட்டிகோராவை வாசித்தபோது மாதா ஆப்ரிக்கா என்ற அவரது இன்னொரு நாவலும் கிடைத்தது. இந்த மூன்று நாவல்களையும் வாசித்தபோது அதைக் குறித்து எழுதவேண்டுமென்கிற உந்துதல் ஏற்பட்டது.


ஒரு மொழியின் இலக்கியத்தில் சில எழுத்தாளர்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் மரபுகளுக்குள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், அந்த மரபின் எல்லைகளை விரிவாக்குகிறார்கள். டி.டி. ராமகிருஷ்ணனை இரண்டாவது வகையைச் சேர்ந்தவராகப் பார்க்கிறேன். ஃப்ரான்சிஸ் இட்டிகோரா, மாதா ஆப்ரிக்கா, சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகி ஆகிய மூன்று நாவல்களும் வெவ்வேறு காலங்களிலும் நிலப்பரப்புகளிலும் பயணித்தாலும், அவற்றின் அடியில் ஒரு பொதுவான இலக்கியத் தேடல் இருக்கிறது: வரலாறு நமக்கு வழங்கியிருக்கும் உண்மைகளை மறுபரிசீலனை செய்வது; அதிகாரபூர்வமான வரலாற்றின் விளிம்புகளில் விடப்பட்ட மனிதர்களையும் அவர்களது னைவுகளையும் புனைவின் மையத்திற்குக் கொண்டுவருவது. அவ்வாறு செய்வதன் மூலம் அரசியல், மதம், அறிவு, வன்முறை ஆகியவை மனித வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளமுயல்வது. இந்தத் தேடல்தான் அவரைச் சமகால மலையாள இலக்கியத்தில் தனித்துவமாக முன்னிறுத்துகிறது.


வரலாறு என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல. எவை பதிவு செய்யப்பட வேண்டும், எவை மறக்கப்பட வேண்டும், எவை ஒரு சமூகத்தின் பெருமையாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் அதிகாரம் தீர்மானிக்கிறது. ஒரு பேரரசின் வெற்றிகளைப் பதிவு செய்யும்போது, அந்த வெற்றிகளுக்காக அழிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைகள் வரலாற்றுக்கு வெளியே தள்ளப்படுகின்றன. ஒரு நாகரிகத்தின் சாதனைகளைப் பேசும்போது, அவற்றின் பின்னாலிருக்கும் சுரண்டல்கள் மறைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைக்கூட அதன் இலட்சியங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது; அந்தப் போராட்டத்தின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இத்தகைய முரண்பாடுகளுக்குள் நுழைவதற்கான புனைவுச் சாத்தியங்களையே டி.டி. ராமகிருஷ்ணன் தனது நாவல்களில் உருவாக்குகிறார். வரலாற்றை மறுவாசிப்புச் செய்வது என்பதற்கு ஏற்கெனவே நிறுவப்பட்ட உண்மைகளுக்குப் பதிலாக வேறொரு உண்மையை வெளிப்படுத்துவது என்று அர்த்தமல்ல, கதைகளின் வழியாக உண்மைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, யாருடைய அதிகாரத்தால் அவை நிலைநிறுத்தப்படுகின்றன என்பதைக் கேள்விக்குள்ளாக்குவதே அதன் நோக்கம்.


ஃப்ரான்சிஸ் இட்டிகோரா இந்த அணுகுமுறையின் துணிச்சலான வெளிப்பாடு. பதினைந்தாம் நூற்றாண்டின் கேரளத்தைச் சேர்ந்த வணிகரான ஃப்ரான்சிஸ் இட்டிகோராவை மையமாகக் கொண்ட இந்த நாவல், உள்ளூர் வரலாற்றின் எல்லைகளைக் கடந்து வணிகம், மதம், அறிவு, பாலியல், வன்முறை ஆகியவற்றை உலக வரலாற்றின் பரந்த பின்புலத்துடன் இணைக்கிறது. நிகழ்காலத்தில் ஃப்ரான்சிஸ் இட்டிகோராவின் வம்சாவளியைத் தேடும் ஜூனியர் இட்டிகோராவின் பயணத்தின் வழியாக, வரலாற்றுத் தகவல்கள், மர்மங்கள், சாகசங்கள், பல்வேறு அறிவுத்துறைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன. இங்கே வரலாறு என்பது கதை நிகழும் காலத்தைச் சுட்டிக்காட்டும் பின்னணி அல்ல; எதை அறிவாக ஏற்றுக்கொள்கிறோம், எதை வரலாற்றின் பகுதியாக அங்கீகரிக்கிறோம் என்ற கேள்விகளை எழுப்பும் புனைவுக் களமாக இருக்கிறது.



ஐரோப்பியர்களின் வருகையிலிருந்து இந்தியாவின் நவீன வரலாற்றை எழுதிப் பார்க்கும் காலனியப் பார்வை, அதற்கு முந்தைய வணிக மற்றும் அறிவுப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியிருந்த சமூகங்களின் வரலாற்றை ஐரோப்பிய நவீனத்துவத்தின் அளவுகோல்களைக் கொண்டு மட்டுமே மதிப்பிட முடியாது. இந்தப் புரிதலை நோக்கி நகரும் ஃப்ரான்சிஸ் இட்டிகோரா, காலனியம் என்பது நிலப்பரப்பைக் கைப்பற்றும் அரசியல் நடவடிக்கை மட்டுமல்ல, அறிவின் மீதான உரிமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் என்பதையும் உணர்த்துகிறது. எது நாகரிகம், எது அறிவு, எது உண்மை என்று முடிவுசெய்யும் அதிகாரம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கைமாறும்போது, வரலாற்றின் வடிவமும் மாறுகிறது.


இந்த நாவலின் தனித்துவம் அதன் வரலாற்றுப் பார்வையில் மட்டுமல்ல; அந்தப் பார்வையை வாசிப்பின் சுவாரசியத்துடன் இணைக்கும் கதைசொல்லல் முறையிலும் இருக்கிறது. மர்மம், சாகசம், ஆவணங்களை நினைவூட்டும் விவரங்கள், அறிவுசார் குறிப்புகள் ஆகியவற்றை ஒரே கதையாடலுக்குள் கொண்டுவருவதன் மூலம், தீவிரமான வரலாற்று விவாதங்களைப் எவ்வாறு சுவாரசியமான அனுபவமாக மாற்ற முடியும் என்பதை டி.டி. ராமகிருஷ்ணன் வெளிப்படுத்துகிரார். அதே நேரத்தில், தகவல்களின் விரிவும் கதையின் வேகமும் சில இடங்களில் கதாபாத்திரங்களின் உளவியலைப் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்ற விமர்சனத்திற்கும் இடமிருக்கிறது. இந்தச் சாத்தியங்களையும் வரம்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் நாவலின் கலைமுறையை முழுமையாக மதிப்பிட முடியும்.


மாதா ஆப்ரிக்காவில் இந்த வரலாற்றுத் தேடல் வேறொரு திசையில் விரிகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனிய வரலாறு, ரயில்வே கட்டுமானத்துடன் தொடர்புடைய இந்தியர்களின் இடப்பெயர்வு, உகாண்டாவில் வாழும் மலையாள வேர்களைக் கொண்ட எழுத்தாளரான தாரா விஸ்வநாத்தின் புனைவுலகம் ஆகியவற்றின் வழியாக, இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே உருவான சிக்கலான வரலாற்றுத் தொடர்புகளை நாவல் அணுகுகிறது. மலையாளத்தில் எழுதப்பட்டு ஆங்கிலத்திலும் சுவாஹிலியிலும் மொழிபெயர்க்கப்படும் தாராவின் படைப்புகள் என்ற புனைவுத் தந்திரம், எழுத்தாளர், படைப்பு, வரலாறு ஆகியவற்றின் எல்லைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.


இடப்பெயர்வு என்பது ஒரு நிலப்பரப்பிலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்குச் செல்வது மட்டுமல்ல. அது மொழியையும் பண்பாட்டையும் நினைவுகளையும் அடையாளத்தையும் மாற்றியமைக்கும் நீண்டகால அனுபவம். காலனியத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்த மனிதர்களின் சந்ததிகள், புதிய நிலப்பரப்புகளில் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் வாழும் சமூகத்தின் பகுதியாக மாறினாலும், தங்களுடன் கொண்டுசென்ற வரலாற்றை முற்றிலும் இழந்துவிடுவதில்லை. இதனால் அவர்களின் அடையாளம் ஒரு தேசத்திற்கோ மொழிக்கோ மட்டும் உரியதாக இல்லாமல், பல வரலாறுகளின் சந்திப்பாக மாறுகிறது.


இந்தப் பின்புலத்தில் மாதா ஆப்ரிக்காவை வாசிப்பது, காலனியம் ஆப்பிரிக்காவுக்கு என்ன செய்தது என்பதை அறிந்துகொள்வதோடு முடிந்துவிடுவதில்லை. காலனியத்தின் வழியாக உருவான இடப்பெயர்வுகள் இந்திய வரலாற்றையும் எவ்வாறு மாற்றியமைத்தன என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. வரலாற்றின் மையத்திலிருந்து விலக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் புனைவின் மையத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், தேசிய இலக்கியத்தின் எல்லைகளையும் நாவல் விரிவாக்குகிறது. ஒரு மொழியில் எழுதப்படும் புனைவு அந்த மொழி பேசப்படும் நிலப்பரப்புக்குள் மட்டுமே அடங்கிவிட வேண்டியதில்லை; அது பல நாடுகளின் வரலாறுகளுடனும் பல பண்பாடுகளின் நினைவுகளுடனும் உரையாட முடியும் என்பதற்கான சாத்தியத்தை இந்த நாவல் முன்வைக்கிறது. தமிழ் இலக்கியத்திலும் இந்த வகை நாவல்கள் எழுதுவதற்கான தேவைகள் இருக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் எழுதப்படும் தமிழ் புனைவுகள் இந்த வேலையை ஓரளவுச் செய்தாலும் இன்னும் பரந்த எல்லையில் இந்தக் கதைகள் சொல்லப்பட வேண்டும். ஜெயமோகன் திசைவலம் என்கிற பெருநாவலை எழுதுவதற்கான பயணத்தில் இருக்கிறார். அந்த நாவலின் வருகை இன்னும் தமிழ் புனைவுகள் வெளிப்படாத நிலத்திலிருந்து அந்த நிலத்தைச் சேர்ந்தவர்களே எழுதும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.


சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகியில் வரலாற்றின் இந்த மறுவாசிப்பு நேரடியாக அரசியல் வன்முறையின் சிக்கல்களுக்குள் நுழைகிறது. இலங்கையின் உள்நாட்டுப் போரும் ஈழத் தமிழர்களின் அரசியல் அனுபவங்களும் நாவலின் சமகாலப் பின்புலமாக அமைகின்றன. திரைப்படத் திரைக்கதை ஆசிரியரான பீட்டர் ஜீவானந்தத்தின் பயணத்தின் வழியாக, மனித உரிமைச் செயல்பாட்டாளரின் கொலையும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சுகந்தியைத் தேடும் முயற்சியும் ஒன்றோடொன்று இணைகின்றன. சுகந்தியின் கதை, தொன்மத்தின் தேவநாயகியுடன் தொடர்புபடுத்தப்படும்போது, சமகால அரசியல் வன்முறையும் பழங்கால நினைவுகளும் ஒரே புனைவுப் பரப்பில் சந்திக்கின்றன.



இந்த நாவல் எழுப்பும் முக்கியமான கேள்வி, விடுதலை என்ற இலட்சியத்துக்கும் அதிகாரத்தின் நடைமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாகும் ஓர் இயக்கம் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது. ஆனால், அதே இயக்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக தனிமனிதர்களின் சுதந்திரத்தை ஒடுக்கத் தொடங்கினால், அதன் இலட்சியத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இந்தக் கேள்வியை எழுப்புவது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும் அவர்களை ஒடுக்கிய அரசின் வன்முறையையும் ஒரே தராசில் நிறுத்துவதல்ல. அரசின் வன்முறைக்கும் விடுதலை இயக்கத்தின் உள்முரண்பாடுகளுக்கும் இடையிலான வரலாற்று வேறுபாடுகளை உணர்ந்தபடியே, அரசியல் அதிகாரம் எவ்வாறு புதிய ஒடுக்குமுறைகளை உருவாக்கக்கூடும் என்பதை ஆராய்வதாகும்.


இந்த அரசியல் விசாரணையில் பெண்ணின் உடலும் நினைவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. போர்களின் வரலாறு பெரும்பாலும் ஆண் தலைவர்கள், ராணுவ நடவடிக்கைகள், அரசியல் முடிவுகள் ஆகியவற்றின் வழியாக எழுதப்படுகிறது. ஆனால், அந்த வரலாறுகளின் வன்முறையைத் தங்கள் உடலிலும் அன்றாட வாழ்க்கையிலும் சுமப்பவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். பாலியல் வன்முறை, அச்சுறுத்தல், கட்டாய மௌனம் ஆகியவை அரசியல் அதிகாரத்தின் கருவிகளாகச் செயல்படும்போது, பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வது தனிப்பட்ட துயரத்தைச் சொல்வதோடு முடிவதில்லை; அதிகாரபூர்வமான அரசியல் வரலாறு மறைத்துவைத்திருக்கும் அனுபவங்களையும் வெளிப்படுத்துகிறது. தேவநாயகியின் தொன்மத்தையும் சுகந்தியின் சமகால அனுபவத்தையும் இணைப்பதன் மூலம், பெண்களின் துயரமும் எதிர்ப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிந்துவிடுவதில்லை என்ற உணர்வை நாவல் உருவாக்குகிறது.


இந்த மூன்று நாவல்களும் வெவ்வேறு கதைசொல்லல் முறைகளைப் பின்பற்றுகின்றன. ஃப்ரான்சிஸ் இட்டிகோரா வரலாற்றின் மறைக்கப்பட்ட அறிவையும் உலகளாவிய அதிகார உறவுகளையும் ஆராய்கிறது; மாதா ஆப்ரிக்கா காலனியம், இடப்பெயர்வு, பண்பாட்டு நினைவு ஆகியவற்றின் வழியாகத் தேசிய எல்லைகளைத் தாண்டிய வரலாற்றை எழுதுகிறது; சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகி விடுதலை, வன்முறை, பெண் அனுபவம், தொன்மம் ஆகியவற்றின் முரண்பாடுகளை எதிர்கொள்கிறது. இவற்றின் ஒற்றுமை ஒரே அரசியல் முடிவில் இல்லை. வரலாறு வழங்கும் பதில்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அந்த வரலாறு எழுப்பத் தவறிய கேள்விகளைப் புனைவின் வழியாக உருவாக்குவதில்தான் இருக்கிறது.


இந்த இடத்தில்தான் டி.டி. ராமகிருஷ்ணனின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. மலையாள நாவல்கள் சமூக யதார்த்தம், வர்க்க முரண்பாடுகள், சாதி, மதம், அரசியல் ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்கொண்ட வளமான மரபைக் கொண்டது. அந்த மரபிலிருந்து விலகுவதன் மூலம் மட்டுமே ஒரு எழுத்தாளரின் தனித்துவம் உருவாகிவிடுவதில்லை. மாறாக, அந்த மரபுக்குள் அவர் திறந்துவைக்கும் புதிய புனைவுப் பாதைகளின் வழியாகத்தான் அதை அடையாளம் காண முடியும். வரலாறு, தொன்மம், உலக அரசியல், அறிவு, மதம் ஆகியவற்றை இணைத்து, ஒரு உள்ளூர் கதையை உலகளாவிய அதிகார உறவுகளுடன் தொடர்புபடுத்தும் அவரது முயற்சி குறிப்பிடத்தக்கது. நாவல் என்பது சமகாலச் சமூகத்தின் நேரடிப் பிரதிபலிப்பாக மட்டும் இருக்க வேண்டியதில்லை; வெவ்வேறு காலங்களையும் அறிவுத் துறைகளையும் ஒன்றோடொன்று மோதவிட்டு, நிகழ்காலத்தைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்வதற்கான வெளியாகவும் இருக்க முடியும் என்பதை அவரது படைப்புகள் உணர்த்துகின்றன.


இந்தப் புனைவியல் அணுகுமுறையுடன் எனது ரூஹ், கொமோரா, உப்புநாய்கள் ஆகிய நாவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கிறேன். இந்த ஒப்பீட்டின் நோக்கம் படைப்புகளுக்கிடையில் நேரடியான ஒற்றுமைகளை நிறுவுவது அல்ல; வெவ்வேறு கதையுலகங்களில் அதிகாரம் எவ்வாறு மனிதர்களின் வாழ்க்கைக்குள் நுழைகிறது என்பதைப் புரிந்துகொள்வது. ரூஹ் நாவலின் இஸ்லாமியப் பண்பாட்டு மற்றும் ஆன்மிகப் பின்புலத்தை அணுகும்போது, மதம் என்பது நம்பிக்கைகளின் தொகுப்பு மட்டுமல்ல, மனிதர்களின் நினைவுகள், அடையாளங்கள், ஒழுக்கம், அதிகார உறவுகள் ஆகியவற்றுடனும் தொடர்புகொண்டிருப்பதை ஆராய முடிகிறது. ஆன்மிகத் தேடலுக்கும் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு, மனித வாழ்க்கையின் ஆழமான சிக்கல்களை வெளிப்படுத்தக்கூடியது. இந்தப் பரிமாணத்தில் ரூஹ் நாவலுக்கும் டி.டி. ராமகிருஷ்ணனின் வரலாற்று அணுகுமுறைக்கும் இடையே ஒரு சிந்தனைரீதியான உரையாடல் உருவாகிறது: மனிதர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்புகளில் மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் உலகிற்கு அர்த்தம் வழங்கிக்கொள்ளும் நம்பிக்கைகளுக்குள்ளும் செயல்படுகிறது.


கொமோராவில் அரசியல் வன்முறையை மனிதர்களின் உள்ளார்ந்த வாழ்க்கையையும் தார்மீகத் தேர்வுகளையும் பாதிக்கும் பிரச்சினையாக அணுகும் சாத்தியம் இருக்கிறது. வன்முறையை நிகழ்த்துபவர்கள் தங்களை எவ்வாறு நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்? குற்றவுணர்வு, பழிவாங்கும் விருப்பம், அச்சம், மௌனம் ஆகியவை வன்முறைக்குப் பிறகும் எவ்வாறு தொடர்கின்றன? அரசியல் வன்முறையின் ஆன்மிகப் பரிமாணம் என்பது அதை மர்மமான நிகழ்வாக மாற்றுவது அல்ல; மனிதன் தனது செயல்களுடன் எவ்வாறு வாழ்கிறான், தீமையை எவ்வாறு நியாயப்படுத்துகிறான் என்பதைக் குறித்த தார்மீக விசாரணை. இந்தக் கேள்விகளின் வழியாக கொமோராவை சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டு நாவல்களின் அரசியல் களங்களும் வேறுபட்டிருந்தாலும், அதிகாரம் மனிதர்களின் அறவுணர்வையும் வாழ்க்கையையும் எவ்வாறு மாற்றுகிறது என்ற கேள்வி அவற்றை இணைக்கிறது.


உப்புநாய்கள் நாவலின் குற்றவுலகம் அதிகாரத்தின் இன்னொரு வடிவத்தை வெளிப்படுத்துகிறது. குற்றவுலகம் என்பது சட்டத்திற்கு வெளியே இயங்கும் மனிதர்களின் தனிப்பட்ட உலகம் மட்டுமல்ல; பணம், வன்முறை, அச்சுறுத்தல், விசுவாசம், துரோகம் ஆகியவை ஒன்றோடொன்று இணையும் சமூக அமைப்பும்கூட. யாரைக் காப்பாற்ற முடியும், யாரை அச்சுறுத்த முடியும், யாருடைய மௌனத்தை விலைக்கு வாங்க முடியும் என்பதன் வழியாக அதிகாரம் அங்கே செயல்படுகிறது. குற்றத்தைப் பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் அணுகாமல், அதன் பின்னால் இருக்கும் சமூக உறவுகளையும் அதிகாரப் போட்டிகளையும் ஆராயும்போது, குற்றவுலகம் ஒரு அரசியல் வெளியாக மாறுகிறது. இந்த வகையில் உப்புநாய்கள் நாவலையும் டி.டி. ராமகிருஷ்ணனின் படைப்புகளுடன் உரையாடச் செய்ய முடியும். வரலாறு, அரசியல், மதம், குற்றம் ஆகியவை வெவ்வேறு களங்களாக இருந்தாலும், அவற்றின் வழியாக மனிதர்களை இயக்கும் அதிகாரத்தின் இயல்பை ஆராய்வதே இங்கு பொதுவான சிந்தனைப் புள்ளியாகிறது.


இந்த ஒப்பீட்டின் முக்கியத்துவம், நாவல்களின் களங்களை ஒன்றாக்குவதில் இல்லை; அவை உருவாக்கும் கேள்விகளின் வேறுபாட்டை உணர்ந்துகொள்வதில் இருக்கிறது. டி.டி. ராமகிருஷ்ணனின் நாவல்கள் வரலாற்றின் அதிகாரபூர்வமான கதையாடல்களையும் உலகளாவிய அரசியல் உறவுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. எனது நாவல்கள் மதம், அரசியல் வன்முறை, குற்றவுலகம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களின் வாழ்க்கையில் அதிகாரம் செயல்படும் விதங்களை ஆராய்கின்றன. இந்த வேறுபாடுகளுக்கு நடுவே, புனைவு என்பது ஏற்கெனவே அறிந்திருக்கும் உண்மைகளை மீண்டும் சொல்வதற்கான வடிவம் அல்ல; அவற்றின் பின்னால் இருக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான கலைவடிவம் என்ற புரிதல் உருவாகிறது.


இந்த நாவல்கள் முக்கியமானவையாக இருப்பதற்கான காரணமும் இதுதான். வரலாறு, தேசியம், மதம், அடையாளம் ஆகியவை தொடர்ந்து அரசியல் அதிகாரத்தால் மறுவடிவமைக்கப்படும் காலத்தில், அதிகாரபூர்வமான உண்மைகளுக்கு வெளியே என்ன இருக்கிறது என்று கேட்பது அவசியமாகிறது. விடுதலை என்ற பெயரில் உருவாகும் அதிகாரம் புதிய ஒடுக்குமுறைகளை உருவாக்கக்கூடும்; மதம் மனிதர்களுக்கு அர்த்தம் வழங்கும் அதே நேரத்தில் கட்டுப்பாட்டின் கருவியாகவும் பயன்படுத்தப்படலாம்; வளர்ச்சியின் வரலாற்றுக்குள் சில சமூகங்களின் அழிவுகள் மறைக்கப்படலாம். இத்தகைய முரண்பாடுகளை வெறும் கருத்துகளாக அல்லாமல், மனிதர்களின் அனுபவங்களாக மாற்றுவதில்தான் புனைவின் வலிமை இருக்கிறது.

டி.டி. ராமகிருஷ்ணனை நான் முக்கியமான எழுத்தாளராகக் கருதுவதற்குக் காரணம், அவரது நாவல்கள் அனைத்தும் குறைபாடற்றவை என்பதல்ல. மலையாள நாவலின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி, வரலாறு, தொன்மம், உலக அரசியல், அறிவு ஆகியவற்றை இணைக்கும் புதிய புனைவுப் பாதைகளை அவர் தொடர்ந்து சோதித்துப் பார்க்கிறார் என்பதுதான். அவரது படைப்புகள் கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே நிகழ்காலத்தின் அரசியல் முரண்பாடுகளையும் கவனப்படுத்துகின்றன.


என்னைப் பொறுத்தவரை, இலக்கியத்தின் முக்கியமான பணி நாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவற்றின் அடியில் இருக்கும் முரண்பாடுகளை வெளிக்கொண்டுவருவதுதான். வரலாறு மறந்துபோன மனிதர்களை நினைவுகூர்வதும், அரசியல் மறைத்துவைத்திருக்கும் வன்முறைகளை வெளிப்படுத்துவதும், நம்பிக்கையின் பின்னால் இயங்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும், குற்றத்தின் பின்னால் இருக்கும் சமூக அமைப்புகளை ஆராய்வதும் புனைவின் வழியாகச் சாத்தியமாகின்றன.


ஃப்ரான்சிஸ் இட்டிகோரா, மாதா ஆப்ரிக்கா, சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகி ஆகிய நாவல்கள் இந்தச் சாத்தியங்களை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன. அவற்றுடன் ரூஹ், கொமோரா, உப்புநாய்கள் ஆகியவற்றை உரையாடச் செய்வது, ஒரே மாதிரியான படைப்புகளை அடையாளம் காண்பதற்காக அல்ல; புனைவு எத்தனை விதங்களில் வரலாற்றையும் அதிகாரத்தையும் மனித வாழ்க்கையையும் விசாரிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக. ஒரு மொழியின் இலக்கியத்தில் தனித்துவமான எழுத்தாளர்கள் உருவாவது புதிய கதைகளைச் சொல்வதால் மட்டுமல்ல; இதுவரை கேட்கப்படாத கேள்விகளை எழுப்பி, வாசகர்களுக்குப் புதிய கற்பனை வெளிகளை உருவாக்குவதாலும்தான்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page