கோடைகால புற்கள்


”கோடைகால புற்கள்
மாவீரர்களின்
சாம்ராஜ்ய கனவுகளில்
மிச்சமிருப்பவை இவைதான்.”
-பாஷோ ( தமிழில் யுவன் சந்திரசேகர் )
1
புலி கொல்லப்பட்ட இரவில் மழை பெய்துகொண்டிருந்தது.
காட்டின் மேல் விழுந்த மழைத்துளிகள் இலைகளின் நரம்புகளில் ஓடி, பாறைகளின் இடுக்குகளில் இறங்கி, பள்ளத்தாக்கின் அடியில் ஓடிய நீரோடையில் கலந்தன. அந்த ஓடை இரவெல்லாம் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. எங்கோ ஒரு யானை சேற்றில் காலூன்றி எழுந்தபோது, மரங்களின் உச்சியில் அமர்ந்திருந்த இரவுப் பறவைகள் இறக்கைகளை உதறிக்கொண்டன. ஈரமான புற்களின் மீது ஊர்ந்துசென்ற சிறிய உயிரினங்களைத் தவளைகள் வேட்டையாடின. அவற்றின் சத்தங்களுக்கு நடுவே, மழையின் தொடர்ச்சியான இரைச்சல் காட்டின் எல்லாப் பகுதிகளையும் ஒலியால் இணைத்திருந்தது.
நீலகிரி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுகளில் அமைந்த மசினக்குடிக்கு ஒரே முகமல்ல. மேற்கிலிருந்து வரும் ஈரக்காற்று மலைகளில் மோதி மழையைப் பொழிந்துவிட்டுத் திரும்புகையில் அதன் ஈரப்பதம் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதில்லை. ஒவ்வொரு பதினைந்து நிமிடப் பயணத்திலும் அந்தக் காட்டின் முகம் மாறிக்கொண்டே இருக்கும். சில இடங்களில் விண்ணை முட்டும் உயரத்தில் மரங்களும், வேறொரு இடத்தில் இலையுதிர்த்த மொட்டை மரங்களும். சில பகுதியில் மரங்களே இல்லாமல் முட்களால் நிரம்பிய புதர்களும் அடர்ந்திருக்கும்.
மசினக்குடியிலிருந்து முதுமலைக்குள் செல்லும் பாதையில் மனிதர்கள் உருவாக்கிய உலகமும் காட்டின் உலகமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும். நீண்ட தூரம் வரை காட்டுப் பாதையில் பயணித்தபின் சாலையின் ஓரங்களில் தேநீர்க்கடைகளும் அதைச் சுற்றி குடியிருப்புகளும் தெரியும். காட்டை வேடிக்கை பார்க்கிறவர்களுக்கு இயற்கையும் மிருகங்களும் ஒரு காட்சி. யானையோ மிருகமோ பயணத்தின் இடையில் சாலையைக் கடக்காதா என ஆர்வத்தோடு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபடி வருவார்கள். சமயங்களில் யானை சாலையைக் கடக்கும்போது வரிசையாக நிற்கும் வாகனங்களிலிருந்து உற்சாகக் கூச்சல் எழுப்புவார்கள். உண்மையில் அந்தச் சாலையும் கூச்சல்களும் வாகனங்களும் யானைகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையூறாக இருக்கிறது என்பதை ஒருவரும் புரிந்துகொள்வதில்லை.
மசினக்குடியிலிருந்து மோயார் வரை விரிந்திருக்கும் அடர்ந்த வனத்தில் நீரோடைக்கு மேல் கொல்லப்பட்ட புலியின் உடலிலிருந்து தோலும் பற்களும் மீசைமயிர்களும் நகங்களும் பிடுங்கி எடுக்கப்பட்டிருந்தன. ரத்தக் கவுச்சிக்குத் தேடிவந்த கழுகுகளும் செந்நாய்களும் புலியின் உடலை நெருங்கிப் பார்த்து அச்சத்தோடு விலகிச் சென்றன. வேட்டைக்காரர்கள் அந்தக் காட்டை நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததின் அடையாளமாக மனிதர்கள் பயன்படுத்தும் பாதைகளை விட்டுவிட்டு புலியின் தடத்தைத் தொடர்ந்து வந்திருந்தார்கள். ராஜஸ்தானத்தின் வறண்ட பகுதியில் வேட்டையாடிப் பழகிய பவாரியா மக்களுக்கு முதுமலையில் வேட்டையாடுவது அத்தனை கடுமையாக இருக்கவில்லை. சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் புலிகள் வேட்டையாடப்பட்ட விதத்திலேயே இந்த வேட்டையும் நடந்திருந்ததைக் கொண்டு பவாரியா கூட்டம்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்பதை அடுத்த நாள் மாலைக்குள் வனத்துறையினர் உறுதிப்படுத்தினார்கள்.
புலி வேட்டை மலையிலிருந்த கிராமங்களில் பேசுபொருளானபோது, வேட்டையாடிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊருக்குள்ளும் புகுந்து கொள்ளையடிக்கலாம் என்கிற அச்சம் மக்களுக்குள் எழுந்தது. “அவ்ளோ பெரிய புலிய ஈவு இரக்கமே இல்லாம கொல்றானுகன்னா மனுஷங்கள இவனுக என்ன செய்வானுக… ராத்திரில வெளிய நடமாடவே பயமா இருக்குப்பா.” என்கிற வார்த்தைகள் தேநீர்க்கடைகளில் கிசுகிசுக்கப்பட்டன. எஸ்டேட்டுகளிலும் அந்த மலையில் வெவ்வேறு இடங்களிலும் வேலை செய்யும் வட இந்தியர்கள் எவரைப் பார்த்தாலும்ஷோ மக்கள் அச்சப்பட்டார்கள்.
“அதெப்பிடிப்பா அவ்ளோ தூரத்துல இருவனுக்கு இந்தக் காட்டப்பத்தி தெரியும். இங்க இருக்க ஆளுக தடம் சொல்லாம இதையெல்லாம் செய்யவே முடியாது..” டீக்கடையில் கிசுகிசுக்களாக எழுப்பப்பட்ட கேள்விகள் சமூக ஊடகங்களில் அச்சமாக மாறி சுற்றியது. அந்த அச்சம் காட்டில் மனிதர்கள் வாழ்வது காட்டிற்கு பாதுகாப்பில்லை என்கிற வதந்திகளையும் கதைகளையும் உருவாக்கியது. சில நாட்களுக்குள் அந்தப் புலியின் மரணம் ஒரு வனவிலங்கின் மரணமாக இல்லாமல், காட்டின் அழிவாகவும் அந்த அழிவிற்கு வித்திட்டது காட்டில் வசிக்கும் மனிதர்கள்தா என்கிற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் வளர்ந்தது.
மோயார் அணைக்கு மேலாகக் காட்டிற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பழங்குடி மக்கள் வாழும் பதினாறு கிராமங்கள் உண்டு. மலைகளில் தேனெடுத்தும் எளிய விவசாய வேலைகளைச் செய்து பிழைக்கும் அவர்களின் மீதுதான் வனத்துறையினருக்கு முழுமையான சந்தேகம். புலி வேட்டையாடப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்த கிராமங்கள் என்பதோடு காட்டைப்பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்தவர்கள் அந்த மக்கள்தான்.
வேட்டை நடந்த பத்து நாட்களுக்குப் பின் வனத்துறையினர் அந்த கிராமத்துக்குள் வந்தபோது மாதன் தனது வீட்டின் பின்புறத்தில் மரக்கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு முப்பத்தெட்டு வயது. அவனுடைய தந்தை அருகிலிருந்த இன்னொரு குடிசையில் தனித்து வாழ்ந்தார். சாமியாடியான அவர் அதிகம் பேசுவதில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகப் புத்தகப் பைகளைத் தயார் செய்துகொண்டிருந்த மாதனின் மனைவி மல்லி, போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்தாள். கிராமத்திற்குள் அத்தனை வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவது அபூர்வம். அவளுக்குப் பின்னாலேயே அவளது இரண்டு மகன்களும் வாசலுக்கு வந்து நின்றபோது மாதனும் பரபரப்போடு ஓடிவந்தான். ஊரிலிருந்த முப்பது குடிசைகளில் காட்டுக்குச் சென்றுவிட்டவர்களைத் தவிர மற்ற எல்லோரும் வீதிக்கு வந்துவிட்டார்கள்.
வனத்துறையினர் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து தீவிரமாகத் தேடினார்கள். அந்தச் சிறிய குடிசைகளுக்குள் சமையலுக்கான சில பாத்திரங்களையும் படுப்பதற்குப் பயன்படுத்தும் போர்வைகளையும் தாண்டி, எப்போதோ அரசாங்கம் இலவசமாகக் கொடுத்த தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. எல்லாக் குடிசைகளையும் தேடிச் சலித்தபின் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் வீதியில் நின்ற ஆண்களை எல்லாம் பெயரைக்கூட விசாரிக்காமல் அடித்தார்கள். மாதனை இழுத்துக் கீழே தள்ளியபோது சட்டை அணியாத மெலிந்த உடலோடு செம்மண்ணில் உருண்டான். “அய்யோ அம்மா” எனக் கத்தியவனின் வயிற்றில் ஓங்கி மிதித்த ஃபாரஸ்ட்காரன், “தாயோளி என்னடா அயோ அம்மா… எவண்டா ஆள்காட்டி இங்க… புலி வேட்டையாட ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கறிங்களா.. இருக்கற அத்தன பேரு கொட்டையவும் அத்து விட்டதான் சரிப்படுவிங்க…” என அவனைப் பார்த்துக் கத்த, என்ன நடக்கிறதெனப் புரியாமல் மாதன் அச்சத்தோடு எழுந்து உட்கார முயன்றான். “ஐயா நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியல… இந்தக் காட்டுல இருக்க ஆளுகளத் தவிர எங்களுக்கு வெளிய யாரையும் தெரியாது..” எனக் கும்பிடப்போனவனை மீண்டும் அந்த ஃபாரஸ்ட்காரன் உதைத்தான். “வாயமூடிட்டு உக்காருடா சுன்னி… பதிலுக்குப் பதிலா பேசற…” என ஆத்திரமாகச் சத்தம்போட, தனது குடும்பத்தினர் முன்னால் அவமானப்பட்ட வேதனையில் மாதன் ஒடுங்கிப்போனான்.
ஒரு அதிகாரி அங்கிருந்த பெண்களிடமும் முதியவர்களிடமும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்களைக் குறித்த விவரங்களைக் கேட்டுக் குறித்துக்கொண்டிருந்தார். மாதனின் வீட்டை நெருங்கியபோது நடுங்கும் தனது குழந்தைகளை அணைத்துக்கொண்டு மல்லி கையெடுத்துக் கும்பிட்டாள்.
“உன் வீட்டுல எத்தன பேரு?”
“நானு என் புருஷன் என் பயலுக ரெண்டு பேரு…”
“உன் புருசன் யாரு?”
மல்லி திரும்பிக் குடிசையின் ஓரமாக நைந்தத் துணியைப்போல் கிடந்த மாதனைக் காட்டினாள்.
“அவென் என்ன வேலைக்குப் போறான்..?”
“காட்டுல தேன எடுத்துட்டு வரும். பத்து லிட்டர் பக்கமா சேந்ததும் மசினக்குடில போயி வித்துட்டு வரும்.”
அந்த அதிகாரி அவர்களைப் பார்த்துவிட்டு அடுத்த வீட்டிற்கு நடந்தார். மல்லி ஓடிப்போய் மாதனைக் கட்டிக்கொண்டாள். அவனுடலில் இன்னும் நடுக்கம் குறைந்திருக்கவில்லை. அவனது நெற்றியிலிருந்து வழிந்த குருதியைத் துணியால் துடைத்துவிட்டவள் அவசரமாகக் குடிசைக்குள் சென்று மஞ்சளை எடுத்து வந்து காயம் பட்ட இடத்தில் பூசிவிட்டாள். மஞ்சளின் மணம் அவனது மூக்கில் பட்டது.
மாதனின் தந்தை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றார். “யோவ் உங்கிட்ட கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா? என் இடுப்பு உசரத்துக்கு இருந்துக்கிட்டு திமிரா பன்ற..” என அடிக்கக் கை ஓங்கியபோது ஒரு முதிய பெண் பதறிப்போய், “ஐயா அவரு எங்க சாமியாடி.. யாருகிட்டயும் பேசமட்டாரு… அவர எதும் செஞ்சிராதிங்கய்யா..” எனக் கும்பிட்டுக் கேட்டாள்.
“உங்களுக்கெலலம் சர்க்காரு ரேசன் கடைல இலவசமா அரிசி பருப்பு எண்ணைனு குடுக்கறதால நல்லா தின்னுட்டு கொழுப்பேறிப் போயி அலையிறீங்க… சாமியாடியாம் மயிராண்டி..” என அவன் முறைத்தபடியே நகர,
“சர்க்காருன்னா இதையெல்லாம் செஞ்சுதான ஆகனும்… ஒங்க காசுல ஒன்னும் எங்களுக்கு அரிசி குடுக்கலையே… அப்பறம் எதுக்கு மலக்குரங்கு மாதிரி குதிச்சிட்டு இருக்க…” என மாதனின் தந்தை சத்தமாகச் சொல்ல அந்த ஃபாரஸ்ட்காரன் திரும்பி அவரை நெருங்கினான்.
“ஏண்டா கெழட்டுக் கூதியானே. பாவம் பாத்து விட்டுட்டுப்போனா எகத்தாளமாவ பேசற..” என்றபடியே அவரது முகத்திலும் உடலிலும் அடிக்க, அவர் அசையாமல் அப்படியே நின்றார்… சுற்றியிருந்த பெண்களும் குழந்தைகளும் சத்தம் போட்டு அழுதனர். மாதனின் தந்தைக்குத் திடீரென அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. சத்தமாகச் சிரித்தார். அவன் அடிக்க, அடிக்க அவர் சிரிப்பதை நிறுத்துவதில்லை என்கிற உறுதியோடு முன்னைவிடவும் சத்தமாகச் சிரித்தார். கைகளில் வலி தாளாமல் அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை அடிக்கச் சென்றவனை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
“யேய் போதும் போடா.. செத்த பாம்ப அடிச்சிக்கிருக்கான்..” எனச் சொல்ல அந்த ஃபாரஸ்ட்காரன் மூச்சு வாங்கியபடி தனது ஜீப்பின் அருகில் சென்று நின்றான். பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு புகைத்தபோதும் மாதனின் அப்பா சிரிப்பதை நிறுத்தவில்லை. அந்தச் சிரிப்பு காடு முழுக்க எதிரொலிக்க, வனத்துறையினர் தேடுவதை நிறுத்திவிட்டு வந்தனர்.
“ந்தா பாருங்க.. புலி நம்மளோட தேசிய மிருகம். அதக் கொல்றது பெரிய குற்றம், இது உங்க காட்டுல நடந்திருக்கதால உங்க ஊர் ஆம்பளைகள எங்க கேம்புக்குக் கூட்டிட்டுப் போயி விசாரிச்சுட்டுதான் விடுவோம்.”
அதிகாரிகள் கிளம்பிச் சென்றபின்னாலும் ஊரில் பதற்றம் குறைந்திருக்கவில்லை. நாய்களின் குரைப்பொலி ஓய்ந்திருக்கவில்லை. பெண்களின் அழுகை முனகல்களாகவும் கேவல்களாகவும் நீண்டது. இரண்டு அதிகாரிகள் மட்டும் ஊர்க்காரர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக அங்கேயே ஜீப்போடு காத்திருந்தார்கள். அவர்களின் கையிலிருந்த பெயர்ப்பட்டியலில் இருந்தவர்களை எல்லாம் அழைத்துத் தனியாக நிற்கவைத்தார்கள். மாதனின் தந்தையோடு சேர்த்துப் பதினைந்து பேர். இரண்டு அதிகாரிகளில் உயரம் அதிகமான ஒருவன், “எல்லாரையும் ஒரே தடவைல கூட்டிட்டுப் போ முடியாது. நான் ஜீப்புல பாதிப்பேர இப்பக் கூட்டிப்போறேன். அடுத்த ரவுண்ட் இன்னொரு டீமக் கூட்டிப்போலாம். நீ அதுவர இங்கயே இருந்து எவனும் ஓடிராமப் பாத்துக்க…” என மற்றவனிடம் சொல்ல அவன் சரியென ஒத்துக்கொண்டான். முதல் எட்டுப்பேரை ஜீப்பில் நிறைத்துக்கொண்டு அவன் கிளம்பிச் செல்ல, ஊரில் பாதுகாப்பிற்கு இருந்த அதிகாரி, “யாரும் இங்க இருந்து போகக் கூடாது. போன ஜீப் திரும்பி வார வரைக்கும் இங்கதான் இருக்கனும்.” எனக் கடுமையாகச் சொல்ல அவனது முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஊர் மக்கள் அமைதியாக மரத்தடியில் அமர்ந்தனர். ஒரு பெண் மண் கலயத்தில் எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தாள்.
ஜீப் திரும்பிவந்து மற்ற ஆள்களையும் இங்கு காத்திருந்த ஃபாரஸ்ட்காரனையும் ஏற்றிக்கொண்டு சென்றபோது பொழுது வேகமாக மேற்கே சாய்ந்துகொண்டிருந்தது. குடிசையின் முன்னால் முடங்கிக் கிடந்த மாதனை உலுக்கிய மல்லி, “ந்தா… எந்திரி… அவங்க போயிட்டாங்க… இப்பிடியே இருந்தா அடுத்த காரியத்த யாரு கவனிக்கிறது? பதினஞ்சு பேரக் கூட்டிப்போயி விசாரிக்கனுங்கற பேருல என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல… உடனே கூடலூர்ல இருக்க வக்கீலுக்கு ஃபோன் பண்ணித் தகவல் சொல்லனும்..” என அவசரப்படுத்தினாள். மாதன் இயல்பிற்குத் திரும்பாதவனாக யோசனையோடு மல்லியையும் அவளுக்குப் பின்னால் நின்ற ஊர்க்காரர்களையும் பார்த்தான்.
“எந்திரி கண்ணு… பழசெல்லாம் மறந்துபோச்சா.. வீரப்பன தேடறோம். யானையத் தேடறோம்னு வந்து நம்மள கொஞ்சநஞ்சமாவ இந்தத் தாயோளிங்க கொடுமபடுத்தினாங்க… இவனுக விசாரண எப்பிடி இருக்கும்னு நாம மறக்க முடியுமா? நெலம கைமீறி போகமுன்ன ஏதாச்சும் செய்யோனுமுல்ல…” என ஒரு கிழவி சொன்னதும் மாதனுக்கு உரைத்தது. அவசரமாகத் தனது குடிசைக்குள் நுழைந்து செல்ஃபோனை எடுத்து வந்தான். ஓட்டமும் நடையுமாக ஊருக்கு வெளியே இருந்த பாறைக்குச் சென்றவன் அதன் மேலே ஏறி நின்றபோது தயக்கத்தோடு ஒன்றிரண்டு பாயிண்டுகள் நெட்வொர்க் காட்டியது. வழக்கறிஞர் நந்தகுமாரின் எண்ணைத் தேடி எடுத்து அவருக்கு அழைத்தபோது நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பின் இணைப்பில் வந்தார்.
“என்ன மாதா? இருந்திருந்தாப்ள… எதும் விசேசமா?” எனக் கேட்டவரிடம்
“அண்னா அதெல்லாம் இல்லிங்ணா… ஃபாரஸ்ட்காரனுக வந்து ஊர்ல இருக்க ஆளுகள எல்லாம் விசாரிக்கோனும்னு கூட்டிப் போயிருக்காங்க,., எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல..”
எனப் படபடப்போடு சொன்னான்.
“என்ன விசாரிக்கனுமாம் இந்த மயிராண்டிக?” என அவரது குரல் கடுமையானது.
“நம்ம மோயார் காட்டுல புலி அடிச்சாங்களண்ணா… அதப்பத்தி விசாரிக்கோனுமாம்.”
எதிர்முனையில் சிறிய அமைதி. “பேண்டவன விட்டுப்புட்டு பீயப் போட்டு அடிக்கறானுகளா… நீ நாலு பேரக் கூட்டிக்கிட்டு மசினகுடி கேம்ப்புக்கு வந்துரு. நான் பேசிக்கறேன்..” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
மாதன் ஓடிவந்து எல்லோரிடமும் செய்தியைச் சொல்ல, கூட்டத்திலிருந்தவர்களில் ஆறேழு பேர் உடனே கிளம்பத் தயாரானார்கள். பெண்கள் தங்களது சேமிப்பிலிருந்த ஐம்பது நூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுக்க, அந்திசாயும் நேரமாக மாதன் உட்பட எட்டுபேர் கொண்ட குழு மசினகுடி நோக்கிப் பேருந்தில் சென்றனர்.
மாதனும் அவனது ஊர்க்காரர்களும் வனச்சரகரின் கேம்ப்புக்கு வந்தபோது வழக்கறிஞர் நந்தகுமாரின் கார் நின்றிருப்பதைப் பார்த்தார்கள். அலுவலகத்திற்குள் தயங்கியபடியே படியேறியவர்களை வாசலில் நின்ற ஒரு வனக்காவலர், “ஏய் அங்கயே நில்லு… உள்ள பேசிட்டு இருக்காங்க ல…” என மிரட்ட மாதனும் அவனுடன் வந்தவர்களும் வாசலிலேயே குத்தவைத்து அமர்ந்தார்கள்.
“வக்கீல் ஐயா எங்களுக்காகத்தான் பேச வந்திருக்காரு… எங்கள ஒருவாட்டி அவர்கிட்ட பேச விடுங்கய்யா…” என மாதன் கேட்க, “எல்லாம் விடுவாங்க.. பொச்சப் பொத்திக்கிட்டு உக்காருடா..” என இந்தமுறை முன்னைவிடவும் கடுமையாக வனக்காவலர் சொல்ல, சத்தம் கேட்டு வக்கிலின் உதவியாளர் வாசலைப் பார்த்தான். மாதனை அடையாளம் கண்டுகொண்டதும் அவசரமாக வாசலுக்கு வந்தவன், “எதுக்கு இங்கயே இருக்கீங்க? உள்ள வாங்க..” என அழுத்தமாகச் சொல்ல மாதன் அவசரமாக எழுந்து அவனுடன் சென்றான். அவனுடன் வந்த மற்றவர்கள் அதே இடத்திலேயே அமர்ந்திருக்க, வனக்காவலர் உள்ளே செல்லும் மாதனை முறைத்தான்.
“இவங்கதான் கிரிமினல்ஸ்க்கு ஹெல்ப் பண்ணாங்கன்னு எந்த எவிடென்ஸும் இல்லாம உங்க இஷ்டத்துக்கு ட்ரைபல்ஸ தூக்கிட்டு வந்திருக்கிங்க… இப்பவே ரிலீஸ் பண்ணலன்னா நான் இத மீடியால பெரிய இஷ்யூவா ஆக்கிவிட்றுவேன் ஸார்..” என நந்தகுமார் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது தான் மாதன் அவருக்குப் பின்னால் வந்து நின்றான்.
“ஸார். என்கொயரிக்குத்தான் கூட்டிட்டு வந்திருக்கோம். ஒரு ரெண்டுநாள் இங்க வெச்சு விசாரிச்சுட்டு அனுப்பிடுவோம்.” என அந்த அதிகாரி பணிவாகச் சொல்ல, “எந்த எவிடென்ஸும் இல்லாம இங்க வெச்சி விசாரிகக் உங்களுக்கு ரைட்ஸ் இல்ல… நீங்க இப்பவே அனுப்பறிங்களா? இல்ல நான் மீடியாவுக்குப் பேசட்டுமா?” என வக்கீல் கறாரகச் சொல்ல அதிகாரி அங்கிருந்த எல்லோரையும் எரிச்சலோடு பார்த்தார்.
ட்யூப் லைட் வெளிச்சத்தில் அச்சமூட்டக்கூடிய வகையில் அமைதியாக இருந்த அந்த அறையின் ஒரு மூலையில் மாதனின் தந்தை உட்படப் பதினைந்து பேரும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து வந்த அதிகாரி தனது செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று யாரிடமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை மாதன் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.. நந்தகுமார் பொறுமையற்றவராக எழுந்து மாதனின் தந்தையிடம் சென்று, “ஐயா உங்களுக்குச் சாப்பிட எதாச்சும் குடுத்தாங்களா?” எனக் கேட்க அவர் இல்லையெனத் தலையாட்டினார். நந்தகுமார் திரும்பி அங்கிருந்த காவலர்களை முறைக்க, அவர்கள் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அதிகாரி திரும்பி வந்தபோது அவரது முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
“சரி ஸார் நீங்க கூட்டிட்டுப் போகலாம். ஆனா இந்தப் பிரச்சன சீக்கிரத்துல முடியப்பொறதில்ல. இப்ப இல்லன்னாலும் திரும்ப ஒரு நாள் இவங்கள நாங்க விசாரிச்சுதான் ஆகனும்.” என வேண்டாவெறுப்பாகச் சொன்னார்.
“எவிடென்ஸோட வாங்க நானே என்கொயரி பண்ணக் கூட்டிட்டு வாரேன்..” எனச் சொல்லிவிட்டு மாதனிடம் திரும்பி, “நீங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு கிளம்பலாம்.” என நந்தகுமார் சொல்லிவிட்டுத் தனது உதவியாளரோடு வாசலுக்கு வந்தார். அவருக்குப் பின்னாலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களும் வந்து சேர்ந்தபோது அவர்களில் சிலர் நடக்க முடியாமல் சிரமப்பட்டதைக் கவனித்த வழக்கறிஞர், “ஐயா அடிச்சாங்களா உங்கள?” எனக் கேட்க மாதனின் தந்தை ஆம் என்றார். வழக்கறிஞரும் அவரது உதவியாளரும் அவசரமாக மீண்டும் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது மாதன் தடுத்து நிறுத்தினான்.
“வேணாங்கண்ணா விட்றுங்க.. இதோட போகட்டும்,,” என்றான். வழக்கறிஞர் தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு நிதானமானபின் சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்து, “முதல்ல எல்லாரும் போயி சாப்டுங்க…” என்றார். வாங்க மறுத்த மாதன், “எங்ககிட்ட காசு இருக்குங்கண்ணா… நாங்க உங்களுக்கு என்ன கொடுக்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கொம். நீங்க எங்களுக்குக் காசு குடுக்கறிங்க,..” என்றபோது அவர் சிரித்தபடியே தனது காரில் ஏறிக்கொண்டார்.
அவர்கள் கேம்ப்பிலிருந்து வெளியேறியபோது கடுமையான குளிரில் ஊர் அடங்கிப்போயிருக்க, பேருந்து நிறுத்தத்திலிருந்த தேநீர்க் கடையில் ஒதுங்கினார்கள். பால் கலக்காத தேநீர் குவளைகளோடு நின்றவர்களின் உடல்கள் குளிரில் நடுங்க, “ஏப்பா இப்ப ஊருக்கு எதுல போறது?” என மாதனின் தந்தை தனது மகனிடம் கேட்டார்.
“மணி வூட்டு வண்டிக்கு ஃபோன் போட்றுக்கேன். கொஞ்ச நேரத்துல வந்துருவான்..” என்ற மாதன் தனது சிறிய அலைபேசியில் நேரத்தைப் பார்த்துக்கொண்டான். அன்றைய பகல் முழுக்க நீண்டிருந்த பசிக்கு இந்தத் தேநீர் எந்த ஆறுதலையும் கொடுக்கவில்லை. கண்ணாடி சீசாக்களிலிருந்து ரொட்டிகளை எடுத்துக்கொண்டவர்கள் வாகனம் வரும் பாதையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாலையின் இரு புறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி மூடியிருந்தது. பிசாசொன்று நளினமாக நடனமாடிச் செல்வதைப்போல் சாலையை மூடியிருந்த பனிமூட்டத்தினை வாகனத்தின் மஞ்சள் நிற வெளிச்சம் ஊடுருவி வந்தது. அவர்கள் அவசரமாகத் தேநீரைக் குடித்துவிட்டுக் குவளையை வைத்த நேரத்திற்கு அந்த வாகனத்தின் ஹாரன் ஒலி அவர்களை எட்டியது. ஆடுகளைச் சந்தைக்கு ஏற்றிச்செல்லும் அந்தக் குட்டியானை வண்டியின் பின்புறத்தில் தார்ப்பாயை வைத்து மணி முழுமையாக மறைத்திருந்தான். மாதன் தேநீருக்கும் ரொட்டிக்கும் பணத்தைக் கொடுக்கும் நேரத்திற்குள் ஊர்க்காரர்கள் வாகனத்தில் ஏறிவிட்டிருந்தனர். அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டபின் மீண்டும் சாலையைப் பனிமூடிக்கொள்ள வனச்சரகரின் கேம்ப் இருளுக்குள் தொலைந்துபோனது.
அன்றிரவு கிராமத்தில் எவரும் உறங்கவில்லை. குடிசைகளில் அதிகாலை வரையிலும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
“இப்ப நம்மள எதுமே செய்யாம விட்டுட்டான்னா ஏதோ பெருசா செய்யப்போறான்னு நெனச்சுக்க மாதா.. எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்கனும்..” என்று மாதனின் தந்தை அவனிடம் சொன்னபோது அந்தக் குடிசையில் இன்னும் சிலர் இருந்தனர்.
“இனி எந்தப் பிரச்சனையும் இல்லன்னுதான் வக்கீல் சொல்லிட்டாரே… அப்பிடியே பிரச்சன வந்தாலும் மறுபடியும் அவரக் கூப்புடுவோம்..”
என அங்கிருந்த இன்னொரு பெரியவர் சொல்ல மாதனும் அவரது தந்தையும் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். “நமக்கு உதவி செய்றவங்க ஒரு நாள் வருவாங்க… அதுக்காகத் திரும்பத் திரும்ப கூப்புட முடியுமா? நம்மளோட பிரச்சனைய நாமளே பாத்துக்கறதுக்கு என்ன செய்றதுன்னு யோசிக்கனும்… நம்மள ரெண்டு நாள் வெச்சு விசாரிக்கனும்னு கூட்டிப்போனவனுகளுக்கு அத செய்ய முடியலையேன்னு கோவந்தான் இருக்கும். நம்மளுக்கு மட்டுமில்ல இந்தக் காட்டுல இருக்க பதினாறு கிராமத்துக்கும் இதான் நெலம… அவனுகளப் பொறுத்தவரைக்கும் இந்தக் கேஸ முடிக்க இப்போதைக்கு நம்மள பலிகொடுக்கதான் பாப்பானுக…” மாதனின் தந்தை கொடுத்த விளக்கத்தால் அங்கிருந்தவர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள்.



