கோடைகால புற்கள் 2 & 3


2
சில வாரங்களுக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகள் மீண்டும் கிராமத்துக்கு வந்தபோது மழைக்காலம் தொடங்கியிருந்தது. மலைச் சரிவில் இருக்கும் அந்தக் கிராமத்தின் சாலை அரிக்கப்பட்டுக் குண்டும் குழியுமாய் மாறிப்போனதால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு காரணங்களுக்காகக் கிராமவாசிகள் வெளியே செல்வதில்லை. உறக்கத்திலிருந்த காடு மழைச் சத்தத்தில் விழித்துக்கொண்டதைப்போல் இரவில் மரங்களில் கிளைகள் முறியும், யானைகள் பிளிறுவது நெருக்கமாகக் கேட்கும். காட்டிலிருந்து அடித்துவரப்படும் முறிந்த கிளைகளையும் மணலையும் பகலில் ஊர்க்காரர்கள் சுத்தம் செய்துகொண்டிருக்கும்போதுதான் அந்த வாகனம் கிராமத்திற்குள் வந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு இந்தமுறை இரண்டு உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் காட்டிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அரசாங்க ஆணைகளும் அவர்களிடமிருந்தது. வனவிலங்குகளின் வாழிடங்களில் மனிதர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற புதிய விதிகள் எழுதப்பட்ட சட்ட வரைவுகளைக் காட்டியபோது பழங்குடி மக்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் முகங்களிலிருந்த குழப்பத்தைக் கவனித்த அதிகாரி,
“உங்களுக்கு அரசாங்கம் பெரிய உதவி பண்ணி இருக்கு. நீங்க இந்தக் காட்டுல யானைக்கும் புலிக்கும் நடுவுல பயந்து வாழ வேணாம்,. மசினகுடில எல்லாரும் பாதுகாப்பா இருக்க எடம் ஒதுக்கி இருக்காங்க. அங்க போயி வாழலாம்.” சிரித்தபடியே உற்சாகமாகச் சொன்னார். ஊர்க்காரர்கள் அமைதியாக அதிகாரியையும் அவரோடு வந்தவர்களையும் பார்த்தார்கள்.
“ஐயா… நாங்க காலம் காலமா இந்த இடத்துலதான இருக்கோம் நாங்க யானையவோ புலியையோ பாத்து பயந்தது இல்லையே… இப்ப நீங்க எங்களுக்காக ஏன் புதுசா கவலப்படறீங்க…” மாதன் அந்தக் கேள்வியைச் சத்தமாகக் கேட்க அதிகாரி அவனை முன்னால் வரச்சொல்லிக் கையசைத்தார். அவன் அவரை நெருங்குவதற்கு முன்பாகவே ஓங்கி அறைந்தவர்,
“ஏண்டா மயிராண்டி அரசாங்கம் பாவம் பாத்து நல்லது செஞ்சா அகராதி மயிராவா பேசற… காடுங்கறது மிருகங்கள் வாழ்றதுக்கான இடம்… இங்க நீங்க இருக்கக்கூடாது. ரெண்டு நாளைக்குள்ல எல்லாரும் குடிசைய காலி பண்ணிடனும்… இது சர்க்கார் உத்தரவு… ஒருவேள நீங்க காலி பண்ணலன்னா இருக்கற குடிசைய எல்லாம் தீ வெச்சிருவோம்..” எனக் கடுமையாகச் சொல்ல ஊர்க்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அவ்வளவு நேரமும் அமைதி காத்த மாதனின் தந்தை கூட்டத்தை விலக்கி முன்னால் வந்தார்.
“ஐயா காலம் காலமா இந்தக் காட்ட மட்டுமே நம்பி வாழ்ந்த எங்கள புதுசா வேற இடத்துக்குப் போகச் சொல்றீங்களே, அங்க எங்களால தேனெடுக்க முடியுமா? விவசாயம் பண்ண முடியுமா? இல்ல எங்க ஆடு மாடுகள மேய்க்க முடியுமா? எந்த ஆதாரமும் இல்லாம எப்பிடி நாங்க பொழப்பு நடத்தறது?”
“உங்க எல்லாருக்கும் தொண்டு நிறுவனம் மூலமா சின்ன சின்ன வேலைகள் ஏற்பாடு செஞ்சு குடுப்போம். அதோட உங்க பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூட வசதி வீட்டுக்கு வீடு கக்கூஸ் வசதி இப்பிடி எல்லாமே செஞ்சு குடுக்கப் போறோம்.. அப்பறம் என்ன கவல?” என அதிகாரி பேசிக்கொண்டிருந்தபோது மாதன் கூட்டத்தின் நடுவில் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் மல்லி நின்றாள். கூட்டத்தில் ஒருவரையொருவர் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டனர். அவர்களுக்குச் செய்து தருவதாக சொல்லப்பட்ட வசதிகளில் எதுவும் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையானதாக இல்லை. பள்ளிக்கூடம், கழிப்பறை, வேலை என்று அந்த அதிகாரி பட்டியலிட்டவை அத்யாவசியம்தான் ஆனால் அவற்றைக் கொடுத்துவிட்டு அந்த மக்களின் வாழ்விடத்தைப் பறிப்பதன் அவசியத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“நீங்க எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துட்டா எல்லாம் சரியாப் போகுமா ஸார். இந்தக் காட்டுல இருந்து மிருகத்த லாம் புடிச்சுட்டுப் போயி டவுன் ல வேடிக்க காட்ட வெச்சிருக்க மாதிரி இப்போ எங்களையும் வெச்சு வேடிக்க காட்டப் போறீங்களா? மாதனின் தந்தை கேலியாகக் கேட்டார்.
”வேடிக்க காட்ட நீங்க எல்லாம் ராச பரம்பர பாரு... கெழட்டுத் தாயோலி, அன்னிக்கி வாங்கினது பத்தலையா? பேசாம பொத்திக்கிட்டு நில்லு,,,” என்ற அதிகாரி உடன் இருந்தவர்களைப் பார்த்து வண்டியைக் கிளப்பச் சொன்னார். மேற்கு பக்கத்திலிருந்து ஈரக்காற்று வீச, தூறல் துவங்கியது. வீடுகளின் கூரைகளைத் தாண்டி வெளியேறியே அடுப்புப் புகை அந்தத் தூறலோடு சேர்ந்து அழுக்குப் போர்வையென அந்த கிராமத்தை மூடத் துவங்கியது.
அதிகாரிகள் கிளம்பிய பிறகு அந்த மக்கள் என்ன முடிவெடுப்பதெனத் தெரியாத குழப்பத்தில் கோவிலுக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த தகரக் கூரையின் கீழ் அமர்ந்தனர். சில வருடங்களுக்குமுன் அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த படுகா மக்கள் அமைத்துக் கொடுத்த கூரை அது. தகரக் கூரையில் விழும் தூறலின் சத்தம் மட்டும் கேட்கும்படியான அமைதி அவர்களுக்கிடையில் நிலவியது. ஒரு கிழவி கீறல் விழுந்த குரலில் சன்னமாக பாடத் துவங்கினாள். நீண்ட காலமாக இந்தக் காட்டிலும் மலையிலும் அவளது முன்னோர்கள் பாடிய பாட்டு. காடு உறங்கும்போது எழுப்பவும் மலைகளோடு பேசவும் அவர்களுக்கு இந்தப் பாடலே துணையாய் இருந்தது. பெருமழைக் காலங்களில் இந்தக் கிராமத்தினையும் மக்களையும் இயற்கையின் சீற்றத்திடமிருந்து காத்தது பாடல்தான். தங்களது மொழியில் அந்தப் பாடலை அவர்கள் பாடினாலும் காட்டிற்கும் மலைக்கும் புரியும். அவர்கள் இந்த நிலத்தை விட்டுத் துரத்தப்பட்டால் ஆயிரம் வருடங்களாக கேட்ட பாடல்களை இனி யார் பாடுவார்கள்? இந்தக் காட்டிற்கும் மலைக்கு யார் துணையிருப்பார்கள். ?
இந்த மலைகள் தனிமைக்குப் பழகவில்லை என அந்த அதிகாரிகளுக்கு எப்படிச் சொல்வேன். இந்தக் காடும் மிருகங்களும் எங்கள் கதை கேட்காமல் துடித்துப்போவதை சர்க்கார் அறியுமா? கிழவி பாடி முடித்தபோது எல்லோரது கண்களும் கலங்கிப்போயிருந்தன. மழையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக எழுந்து செல்லத் துவங்கினார்கள்.
மல்லி வீட்டுக்குப் பின்புறத்தில் கிழங்குகளைத் தோண்டினாள். மண்ணுக்குள் நன்றாகப் பரவியிருந்த வேர்களைப் பிடுங்கும்போது அவை சிரமத்தோடு முறிந்தன. வேரோடு பிடுங்கிய கிழங்குகளைத் தனியாக வைத்ததை மாதன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன செய்யறே?”
“கிழங்கு எடுக்கிறேன்.”
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு எடுத்திருக்கலாமே?” மல்லி இயலாமையோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“எந்த கொஞ்ச நாள்? ரெண்டு நாளைக்கு அப்ப்பறம் நாம இங்க இருப்பமான்னு தெரியலையே?
மாதன் அவள் அருகே உட்கார்ந்தான். ஒரு கிழங்கை எடுத்துப் பார்த்தான். “ம்ம்ம். கவலப்படாத.. இத அங்கேயும் நட்டுக்கலாம்.”
மல்லி கைகளைத் துடைத்துக்கொண்டே அவனைப் பார்த்தாள். “அந்த மண்ணுல இந்த கிழங்கு வேர்பிடிக்குமா?”
அவன் பதில் சொல்லவில்லை. இந்தக் காட்டில் எந்தச் செடியை எப்போது நடவேண்டும், பிடுங்க வேண்டும், எதை இன்னும் சில நாட்கள் விட்டுவைக்க வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். எந்தக் கிழங்கு உணவுக்கு ஏற்றது, எதை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்பதையும் அறிந்திருந்தாள். ஆனால் தாங்கள் இடம் பெயரப்போகும் புதிய மண் இந்த கிழங்கை ஏற்றுக்கொள்ளுமா என்பதை அவளால் உறுதியாகச் சொல்ல முடியாது. நிலத்தை இழப்பது வாழ்வின் நிச்சயத்தன்மையை இழப்பதைப் போன்றதென்பதை முதல்முறையாக உணர்ந்து அமைதியாக சென்றாள்.
அன்றிரவு மாதன் தந்தையுடன் வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்தான். மழைக்குப் பிறகான பூச்சிகளின் ரீங்காரம் செவியை நிறைக்க, நட்சத்திரங்களே தெரியாத வானத்தை அடர்த்தியான மேகம் மறைத்திருந்தது. ஓடைக்கு சற்றுத் தொலைவிலிருந்து ஒரு விலங்கு குரல் எழுப்பியதைக் கேட்ட அவனது தந்தை புன்னகைத்தார்.
”என்ன மிருகம்னு தெரியுதா?
”மிளா” மாதன் அமைதியாகச் சொன்னான்.
”இணையோட சேரப்போகுது.. அதான் இந்த சத்தம்..” என அவனது தந்தை சொல்ல மாதன் மிளாவின் சத்தத்தை மீண்டும் கூர்ந்து கேட்டான். அவனால் வேறுபாட்டை உணரமுடியவில்லை.
’சத்தத்த வெச்சு எப்பிடி இதையெல்லாம் சொல்ற?” என திரும்பி தனது தந்தையைப் பார்க்க, அவர் சிரித்தார். ”காத்தோட திசைய வெச்சு மழ வருமா இல்லையான்னு படிக்கிறோம். அப்பிடித்தான் எந்தப் பறவ எந்தப் பருவத்துல வரும் அது எதுக்காகவரும்னு தெரிஞ்சிக்கனும். எந்த மிருகத்தோட சத்தம் எந்த நேரத்துல எப்பிடி இருக்கும்னு படிக்கனும். காட்டப் படிக்கிறதுங்கறது இதையெல்லாம் சேத்துதான் மாதா.”
மாதன் இருளில் மறைந்துகிடக்கும் காட்டை வெறித்தபடி ’இந்தக் காட்டுல ஒவ்வொன்னுக்கும் ஒரு கதை இருக்குன்னு சொல்ற... இப்ப நாம இங்க இருந்துப்போயிட்டா கொஞ்சநாள் ல கதையும் இருக்காது காடும் இருக்காது,” என்று சொல்ல தந்தை எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.
மூன்றாவது நாள் காலை ஒரு ஜீப்பும் அதன் பின்னால் இரண்டு சரக்கு வாகனங்களும் வந்தன. வனத்துறையினர் யாரிடமும் பேசவில்லை. வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவு அவர்களிடம் இருந்தது. யாராவது மறுத்தால் குடிசைகளை கொழுத்துவோம் என அச்சுறுத்தினார்கள். இனி நடப்பதை எவராலும் தடுக்கமுடியாதென்கிற யதார்த்தம் உறைக்கவும் அந்த அப்பாவி மக்கள் அவசரமாக தங்களது உடைமைகளை மூட்டை கட்ட ஓடினார்கள்.
மாதனின் தந்தை தான் செதுக்கிக்கொண்டிருந்த மர யானையைக் கையில் எடுத்துக்கொண்டார். முழு உடலும் செதுக்கப்பட்டு தயாராகியிருந்த அந்த பொம்மையின் தலையும் துதிக்கையும் இருக்கிற பகுதிகள் முழுமையடையாமல் இருந்தது. அவர் அதனைத் துணியில் சுற்றிக்கொண்டபின் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துத் துணியின் மடிப்பில் வைத்துக்கொண்டார். இந்தக் காட்டின் நினைவாகவும் மலையின் அடையாளமாகவும் மண் இருந்தால்தான் அந்த யானை முழுமையான வடிவத்திற்கு வரும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
மல்லி அடுப்பின் அருகே கடைசியாக நின்று சுவரில் படிந்திருந்த புகைக்கறையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். தனது வலதுகை சுட்டு விரலால் முதலில் ஒரு ஆணின் தலையையும் அடுத்து பெண்ணின் தலையையும் கோடுகளாக வரைந்தவள் இரண்டு சிறுவர்களின் உருவத்தை தீட்டி முடிக்கும் முன்பாக வெளியே வனத்துறை ஆட்கள் கத்தும் சத்தம் கேட்டது. இந்த இடத்திலிருந்து உடனடியாக துரத்திவிடும் பரபரப்பில் ஒவ்வொரு வீட்டிலும் ஏறி ஆட்களை வெளியேற்றத் துவங்கினார்கள். சிறிய பெட்டிகளிலும் பைகளிலிலும் இருந்த பொருட்கள் வீதியில் வந்து விழுவதும் அந்த மக்கள் பதறிப்போய் கத்துவதும் கேட்டது. அவள் அவசரமாக துணிகளைக் கட்டிவைத்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு திரும்பியபோது வாசலில் நின்றிருந்த இளையமகன்
“அம்மா, நாம திரும்பி வருவோமா?” என பரிதாபமாகக் கேட்டான். மூட்டையை ஒருகையிலும் அவனை இன்னொரு கையிலும் அணைத்துக்கொண்டு வாசலைக் கடந்து வெளியேறியவள்
“தெரியல.” என்றாள். அவர்கள் வீதியில் இறங்கி நடந்தபோது ஊர் மக்கள் எல்லோரது தலையிலும் சுமையாக மூட்டைகள் இருப்பதைக் கவனித்தார்கள். லாரியில் நின்றிருந்த ஆண்களின் முகங்கள் வாடிப்போயிருந்தன. அவர்களுக்கு நடுவே மாதனைக் கண்டுகொண்ட மல்லி பொருட்களைக் கொடுத்தாள். அவளுக்குப் பின்னால் மாதனின் தந்தை இன்னும் சில பொருட்களைத் தூக்கி வந்து கொடுத்தார். மல்லி வீட்டில் மிச்சம் இருக்கும் பொருட்களை எடுக்க ஓடியபோது மகனும் தொடர்ந்தான். வாசலைக் கடந்து அவள் பொருட்களைத் தூக்க, சிறிய பைகளை மகன் எடுத்துக்கொண்டான்.
”ஏம்மா நாம இங்க வரக்கூடாதா?” என அப்பாவியாகக் கேட்க, மூச்சை இழுத்துக்கொண்டவள் ’இந்தக் காட்டுல மனுஷங்க இருக்கக் கூடாதாம் தம்பி. இனிமே நாங்க வரனும்னா அரசாங்கத்துகிட்ட அனுமதி வாங்கனும்..” என்றாள்.
“நம்ம இடத்துக்கு வர நாம ஏன் அனுமதி வாங்கணும்?”
மல்லிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மகனின் தலையைத் வருடியவள் ’வா போலாம்..” என அழைத்துக்கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். பொருட்களை ஏற்றிமுடித்தள்பின் ஆட்கள் லாரியில் ஏறினார்கள். . மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியபெண் அங்கிருந்து செல்லமாட்டேன் என உரத்தக் குரலில் கத்தியவாறு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று கனன்று கொண்டிருந்த அடுப்புக் கங்குகளில் நீரை ஊற்றினாள்.
”இந்தக் காடு பத்தி எரிஞ்சிரும்... காடு அழிஞ்சிரும்..” எனக் கத்தியபடியே ஓடியவளை ஒரு வனக்காவலர் கையிலிருந்த லத்தியால் ஓங்கி அடித்தான். அவள் கத்துவதை நிறுத்தவில்லை. மீண்டும் அவன் அடித்தபோது அவனது முகத்திற்கு நேராகத் திருபி ஆ.... வென அலறினாள். அந்த வனக்காவலன் கம்பைப் போட்டுவிட்டு பயந்து பின்வாங்கினான். இரண்டு பெண்கள் அவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து லாரியில் ஏற்றினார்கள். வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு கிராமத்தைக் கடந்தபோது தூரத்தில் மலைகளை மேகம் மூடியது. காற்று வீசுவது நின்று மயான அமைதி சூழ்ந்தது. ஒரு குட்டிமான் அச்சத்தோடு அந்த கிராமத்தின் வீதியில் குதித்து வந்து எல்லாவற்றையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு பள்ளத்தில் குதித்த ஓடியது.
3
மசினக்குடியில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வீடு சிறியது. சுவர்களில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த வீடுகளின் கதவுக்கு வெளியே மின்சார மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. சாலையில் வாகனங்களின் இரைச்சலை நாள் முழுக்க கேட்கமுடியும். புதிதாக கட்டப்பட்ட இந்தக் காலனிக்கு அருகில் வேறு வீடுகள் இல்லை.. நீண்ட பகலையும் உறக்கமற்ற இரவையும் கடக்க முடியாமல் தவித்த அந்த மக்களுக்கு இந்த ஊரின் இயக்கத்தோடு இணைந்துகொள்வது சிரமமாக இருந்தது. அரை கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் குழாயில் நீர்ப்பிடித்து வரவேண்டும். குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் அருகிலேயேதான் இருந்தது, ஆனால் அங்கு மற்ற குழந்தைகள் இவர்களை விலக்கியே பார்த்தார்கள். காடும் மலையும் துணையென வாழ்ந்து பழகிய அம்மக்கள் முதல்முறையாக தங்களை ஏதிலிகளாக உணர்ந்தார்கள்.
மல்லி வீட்டின் பின்புறத்தில் இருந்த சிறிய இடத்தைத் தோண்டிக் கரடுமுரடான அந்த நிலத்தில் காட்டிலிருந்து கொண்டு வந்த கிழங்குகளை நட்டாள். தினமும் காலையில் தண்ணீர் ஊற்றினாள். சில நாட்களில் முளைகள் வந்தாலும் செடிகள் வளரவில்லை. இலைகள் மஞ்சளாகி தண்டுகள் வாடின. மல்லி மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது வேர்கள் சிறியதாக நசுங்கி அழுகிப்போயிருந்தன.
“ஏம்மா செடி வளரல?” என்று மூத்தவன் கேட்டான். யோசனையோடு அந்தச் செடிகளை மண்ணில் புதைத்தவள்
“இந்த மண்ணு சரியில்லை போல,” என்றாள்.
மகன் மண்ணைக் கையில் எடுத்துப் பார்த்தான். நெருநெருவென ஈரப்பதமே இல்லாமலிருந்ததை தூக்கி எறிந்தவன்
“நம்ம ஊர்ல இருந்த மண்ணை எடுத்துட்டு வந்திருக்கலாமே?” என்றபடியே தாயைப் பார்த்தான். ’ஒரு மண்ண இன்னொரு இடத்துக்கு எடுத்துட்டு வரமுடியாது தம்பி... அதுல அந்தந்த ஊரோட நினைவும் கதையும் இருக்கு.”
என மல்லி சொன்னதைப் புரிந்துகொள்ளமுடியாமல் ”அட போம்மா இப்பிடித்தான் எதையாச்சும் புரியாம சொல்லுவ..” என சலித்தபடி விளையாட ஓடினான்.
”டேய் இன்னிக்காச்சும் பள்ளிக்கூடம் போகனும்...” என மல்லி அவசரமாக அவனைப் பிடித்து நிறுத்த, அவன் பரிதாபமான முகத்தோடு ”எனக்கு போகவே புடிக்கலம்மா... பாடம் சொல்லிக் குடுக்கற டீச்சரும் சரி, கூடப் படிக்கிற பயலுகளும் சரி நம்மள ஏதோ மாதிரி பாக்கறாங்க..” என்றான். மல்லிக்கு அவனைப் பார்க்க கவலையாக இருந்தது. சமாதானம் சொல்ல முடியாதவளாக அவனது கைகளை விட்டு ’சரி நீ போ’ என்றாள்.
அவள் எழுந்து உணவு தயாரிக்கச் சென்றபோது அரிசி குறைவாக இருப்பதைக் கவனித்தாள். சமைப்பதற்காக கொஞ்சத்தை பாத்திரத்தில் எடுத்துக் கழுவியபடியே வெளியே வந்தபோது மாதன் ஒரு ஆளுடன் பேசியபடி வீட்டை நோக்கிவருவதைப் பார்த்தாள். மோயார் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பதினாறு கிராம மக்களுக்கும் இங்கே அருகருகே தான் வீடுகள் கொடுக்கப்பட்டிருந்தன. சிலர் இவர்களைப்போலவே பணியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். காட்டில் தனித்தனி கிராமங்களில் நீண்டகாலம் வாழ்ந்தபோதும் அவர்களுக்குள் எந்தவிதமான சண்டைகளோ முரன்பாடுகளோ இருந்ததில்லை.
ஆனால் இங்கு வந்த சில நாட்களிலேயே மதுக்கடைகளின் தயவால் பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையாகத் துவங்கியதோடு தங்களுக்குள் அடித்துக்கொள்ளவும் துவங்கியிருந்தார்கள். அதனாலேயே புதிய ஆளோடு மாதனைப் பார்த்ததும் அவள் பதற்றமானாள். அரிசி இருந்த பாத்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு இருவருக்கும் தண்ணீர் எடுத்துக் குடுத்தாள். தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த ஆள் ’சரி மாதா நா ஆபிசர் கிட்ட திரும்பவும் பேசறேன்.. .சீக்ரமே ஏதாச்சும் ஒரு வேலைக்கு வழி பண்ணுவோம்...’ என நம்பிக்கையோடு சொல்லிவிட்டு நகர்ந்தான். வியர்வையில் நனைந்த சட்டையை அவிழ்த்து வாசலில் கிடந்த கொடியில் போட்ட மாதன், வாளியிலிருந்த தண்ணீரை அள்ளி உடலை கழுவிக்கொண்டான். அவள் கேட்காமலேயே ”எதோ தொன்டு நிறுவனத்துல இருந்து வருவாங்களாம். ஒவ்வொருத்தருக்கும் என்ன வேல தெரியும்னு விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி வேல கொடுக்கப்போறாங்களாம்...” என மல்லியிடம் சொல்ல, அவள் கேட்டுக்கொண்டே அரிசியைக் கழுவி முடித்தாள்.
புதிய இடத்தில் வாழ்க்கை தொடங்கிய சில வாரங்களுக்குள் அந்த மக்களின் சேமிப்பிலிருந்த பணம் குறையத் தொடங்கியதோடு வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போனதால் அன்றாட செலவுகளுக்காக போராடினார்கள். புதிதாக சேர்ந்துகொண்ட குடிப்பழக்கமும் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சத் துவங்கியது. ஆடு மாடுகளை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்றார்கள். சிலர் கட்டுமான வேலைக்குச் சென்றார்கள். குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய இவர்களது அறியாமையை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். காட்டில் தங்களது அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு தன்னிறைவோடு வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு இந்த நகரச் சூழலில் எல்லோரையும் போல் உடை உடுத்தவும் மற்றவர்களைப்போல் உண்ணவும் விருப்பம் தோன்றியது, அவர்களது வாழ்க்கை முறை இயற்கையிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் துவங்கியதை வயதில் மூத்தவர்கள் கவலையோடு பார்த்தாலும் இந்தப் புதிய தீமைகளிலிருந்து இனி ஒருபோதும் விடுபட முடியாதென்கிற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள். குடியிருப்பிலிருந்த பெண்களோடு சேர்ந்து மல்லியும் சாலை போடும் வேலைக்குச் சென்றாள். குண்டும் குழியுமான சாலையில் மராமத்து பணிகளுக்காகச் சென்ற அந்தப் பெண்களுக்கு ஒரு சில நாட்களிலேயே வாகனங்களின் இரைச்சலில் காட்டின் நினைவுகள் மறக்கத் துவங்கின.
வக்கீல் நந்தகுமாரின் உதவியோடு மாதனுக்கு ஒரு விடுதியில் செக்யூரிட்டியாக வேலை கிடைத்தது. பெரிய வருமானம் இல்லாதபோதும் அந்த விடுதி ஊரைவிட்டு தூரமாக காட்டிற்குள் இருந்ததால் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டான். மலைச்சரிவில் பரந்து விரிந்திருந்த அந்த விடுதியில் இருபதுக்கும் மேற்பட்ட தனித்தனி வில்லாக்கள் இருந்தன. மையமாய் பெரிய புல்வெளியும் விடுதியை ஒட்டியே அழகான சிறிய ஓடையும் உண்டு, அந்த ஓடையின் இருகரையிலும் நீண்டதூரம் வரை மூங்கில் அடர்ந்து வளர்ந்திருப்பதால் மூங்கிலுக்காகவும் நீருக்காகம் யானைகள் வருவதுண்டு. இந்த ரிசார்ட் கட்டுவதற்கு முன்னால் இது யானைகளின் இடமாக இருந்திருக்க வேண்டும். புல்வெளியில் காது வைத்துக் கேட்டால் இன்னும் யானைகளின் நினைவுகளைக் கேட்க முடியும். ஓரிரு நாட்களிலேயே அந்த வேலைக்கு மாதன் பழகிக் கொண்டான். தூரத்து ஊர்களிலிருந்து வருகிற பயணிகள் இரவுகளில் மதுவருந்திவிட்டு சத்தமாகப் பாடுவதை பார்க்கையில் பைத்தியக்காரத்தனமாக இருக்கும்.
மாதனுக்குத் இரவுப்பணி. . கடும் குளிரில் உறங்காமல் யானைகளின் நடமாட்டத்தைக் கண்கானிக்க வேண்டும். அந்த ரிசார்ட்டைச் சுற்றி மின்சார வேலிப் போடப்பட்டிருந்தாலும் யானைகள் வருவதை நிறுத்தவில்லை. வீட்டிலிருந்து தினமும் வந்து போவதில் சிரமமாக இருந்ததால் இங்கேயே தங்கி, வாரத்தில் ஒரு நாள் மட்டும் சென்றுவருவான். பணியாளர்களுக்கான சிறிய அறையில் பகல் முழுக்க உறங்கிவிட்டு மாலை நேரமாக உணவுக்காக எழும்போது உடலில் அசதி விலகியிருக்காது. இரவு முழுக்க கடும் குளிரில் உறங்காமல் யானைகளின் நடமாட்டத்தைக் கண்கானிக்க வேண்டும். அந்த ரிசார்ட்டைச் சுற்றி மின்சார வேலிப் போடப்பட்டிருந்தாலும் யானைகள் வருவதை நிறுத்தவில்லை.
ஒருநாள் இரவுக் காவலிலிருந்தபோது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மாதன் வேகமாக இருளில் ஓடினான். வேலியைத் தாண்டியிருக்க வேண்டும், அதன் குரலில் திசையை தொலைத்துவிட்ட மூர்க்கமும் ஆத்திரமும் இருந்தது. அருகில் சென்றதுமே பத்து வயதிற்குள் இருக்கும் இளம் யானை என்பதைக் கவனித்தவன் அதனைத் துரத்துவதற்காக விசில் அடித்தான். வினோதமான காட்டின் ஒலிகளை எழுப்பினான். ஆனால் அந்த யானைத் திரும்பிச் செல்வதாக இல்லை. முன்னாலிருந்த சிறிய செடிகளையும் மரங்களையும் மோதித் தகர்த்ததோடு ரிசார்ட்டில் இருந்த வீடுகளின் முன்னால் போடப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களையும் பிளாஸ்டிக் நாற்கலிகளையும் மிதித்து உடைத்தது. ஊழியர்கள் வெடி போட்டுத் துரத்த நினைத்தபோது அந்த சத்தம் முன்னைவிடவும் அதிகமாக தொந்ததவு செய்ய யானை வெடி போட்டவனை நோக்கி ஓடியது. வெடி போட்டவனும் உடன் இருந்தவனும் யானை நெருங்கிவருவதைக் கவனித்து அச்சத்தில் வெடிகளை அதன் மத்தகத்தின் மேலேயே எறிந்தார்கள். யானையின் மேல் வெடித்து நெருப்புப் பொறி பறக்க, அந்த யானை நிலைதடுமாறி அப்படியே நின்றது. அதிர்ச்சி தாளாமல் குழம்பிப்போன யானை வேறு திசையில் அலறியபடி ஓடியது.
தனது வாழ்நாளில் இப்படியானதொரு அநீதியை ஒருநாளும் பார்த்திராத மாதன் ’தாயோலி அந்த சீவன் உன்னய என்னடா செஞ்சுது..? என அலறியபடியே வெடி போட்ட இருவரையும் அடித்து வீழ்த்தினான். ”அது இடத்துல நீ ஓட்டலக் கட்டி வெச்சுட்டு அத வரக்கூடாதுன்னு துரத்துவியா ? எனக் கேட்டபடியே முகத்திலும் கழுத்திலும் மிதித்தான். சத்தம் கேட்டு விடுதியிலிந்த மற்ற பணியாளர்களும் ஒடிவந்துவிலக்கிவிட அத்திரம் அடங்காமல் மாதன் கத்திக்கொண்டே இருந்தான்.
”யானைய விட இப்ப இவனப் பாக்கதான் பயமா இருக்கு..” என அடிவாங்கியவன் முதலாளியிடம் சொல்ல, அடுத்தநாளே மாதன் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டான்.
காட்டில் அவர்களது கிராமங்கள் இருந்த பகுதிகள் எல்லாம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட ஓரிரு வாரங்களுக்குப் பிறகு வனத்துறையின் சார்பில் புலிகளைப் பார்ப்பதற்கான வாகனச் சுற்றுலா அறிவிக்கப்பட்டது. புலி வேட்டையாடப்பட்ட இடம் தான் அந்தச் சுற்றுலாவின் மையமான அம்சம். ராஜஸ்தானத்திலிருந்து வேட்டைக்காரர்கள் எப்படி கிளம்பி வந்தார்கள், அவர்கள் எப்படி வேட்டையாடுவார்கள் என்கிற தகவல்களோடு உள்ளூரிரிலிருந்த பழங்குடி மக்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்கள் என்கிற போலியான செய்திகளும் அந்தக் கதைகளில் சேர்க்கப்பட்டது.
சில மாதங்களாக இரவில் கண் விழித்துப் பழகியவனுக்கு வேலை இல்லாமல் ஆன பிறகும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ரேடியோவில் சன்னமான ஒலியில் பாடல் கேட்டபடி கனத்த போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு வாசலில் அமர்ந்திருப்பான். அந்த சிறிய வீட்டின் அருகிலேயே தனியாக ஒரு குடிசை போட்டு வசித்த மாதனின் தந்தை எப்போது உறங்குகிறார் எப்போது விழித்திருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. அதிகாலையில் எவரும் விழிப்பதற்கு முன்பாக எழுந்து தூரமாக எங்கோ சென்று வருவார். ஒருநாள் அப்படி செல்லும்போது ரோந்து சென்ற போலிஸ்காரர்கள் அவரை மறித்து விசாரிக்க அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.
”யோவ் நீ யாரு என்னன்னு கேட்டா சொல்லமாட்டியா?” என ஆத்திரத்தில் எஸ். ஐ அடித்தபிறகு தனது குடியிருப்ப இருக்கும் திசையை நோக்கிக் கையைக் காட்டினார். ”ஸார் ஆளுக்கு பேச்சு வராது போல... பாவம் ஸார். பைத்தியக்காரன் மாதிரி இருக்கான் விட்றுங்க..” எனச் சொல்ல எஸ் ஐ யோசித்துவிட்டு ”அந்தால வண்டியில தூக்கிப் போடு..” என்று சொன்னார். ஜீப்பில் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு குடியிருப்பிற்கு வந்தபோது
’அந்த மூணாவது வீட்டுக்கு பக்கத்துல இருக்க குடிசதான் என்னது... நிப்பாட்டுங்க நான் இறங்கிக்கறென்.” என மாதனின் தந்தை சொல்ல போலிஸ்காரர்கள் திரும்பி முறைத்தார்கள். ஜீப் சத்தம் கேட்டு மாதன் கதவைத் திறந்து வெளியே வர சரியாக அதே நேரம் எஸ் ஐ இன்னொரு முறை ஓங்கி அறைவிட்டு
”இனிமே உன்னய ராத்திரில வெளில எங்கியாச்சும் பாத்தேன் தூக்கி உள்ள வெச்சு கையக் கால உடச்சிருவேன்..” என சத்தம் போட்டார். மாதன் என்ன நடக்கிறதெனப் புரியாமல் ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டான்.
”ஸார் என்னாச்சு ஸார்... எதும் பிரச்சனையா?”
”நீ யாரு?”
”நா இவரோட மகென்...”
எஸ்.ஐ அவர்கள் இருவரையும் எரிச்சலோரு பார்த்துவிட்டு
”காட்டுக்குள்ள இருந்தவய்ங்கள கூட்டியாந்து இங்க வசதியா இருக்க வெச்சா கொழுப்பேறிப் போயி அலையிறீங்களாடா... ஒழுக்கமா இருக்கனும்...” எனச் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிக்கொள்ள மாதனின் தந்தை அமைதியாக தனது குடிசைக்குள் சென்று படுத்துக் கொண்டார். அவருக்குப் பின்னாலேயே சென்ற மாதன்
”நீ எதுக்குப்பா இந்த நேரத்துல வெளில போன?” எனக் கேட்க அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டார். சில நிமிடங்கள் பதிலுக்காக காத்திருந்தவன் அமைதியாக வெளியேறினான். அதன் பிறகு இரவுகளில் அவர் எங்கும் செல்லாமல் பார்த்துக்கொள்வது பெரும்பாடாக மாறியது. ஓரிரு நாட்களுக்குப்பின் மாதனின் தந்தை அடிக்கடி இரவுகளில் அலறி எழுந்தார். காட்டைத் தொலைத்த மிருகத்தைப்போல் ஓலமிட்டவரை குடியிருப்பில் எல்லோரும் அச்சத்தோடு பார்த்தார்கள்.
”எப்பா இப்பிடி ராத்திரி ராத்திரிக்கு நீ எந்திரிச்சுக் கத்தறதப் பாத்தா எங்க எல்லாருக்கும் பயமா இருக்கு? எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு ஒரு வாட்டிப் போய் பாக்கலாமா?” என மாதன் கவலையோடு அவரிடம் கேட்க,
’”நான் கத்தல மாதா... நம்ம பாட்டன் பூட்டன் அத்தன பேரு ஆவியும் அந்தக் காட்ட சுத்திட்டு இருக்குது. நாம சடங்கு சம்பிரதாயம் பண்ணாம நம்மள பாக்காம அனாதையா சுத்திட்டு இருக்கு. மனுசனுக்கு கொற இருக்க மாதிரி தெய்வத்துக்கும் குற இருக்கு... அதுங்க அழுக சத்தம் தான் என்னயத் தூங்கவிடமாட்டேங்குது..” என பரிதாபமாகப் பார்த்தார்.
”நாம ஒருக்கா காட்டுப் போயி கூளிக்குப் பூச வைக்கனும் மாதா... ஏற்பாடு பண்ணு...” எனச் சொல்லிவிட்டு எழுந்து இருளில் நடந்துபோனார்.
இரண்டு நாட்களுக்குப்பின் தந்தையை அழைத்துக் கொண்டு மாதன் காட்டில் தங்களது கிராமம் இருந்த பகுதியை நோக்கி பயணித்தான். காலை பவர் ஸ்டேஷனுக்கு செல்லும் முதல் பேருந்தில் ஏறிக்கொண்டவர்கள் தங்களது கிராமத்தின் எல்லையில் இறங்கி நடந்தபோது புதிதாக சாலை போடப்பட்டிருப்பதைக் கவனித்தான்.
”நாம வாழ்ந்த காலத்துல ஒரு தடவ கூட ரோடு போட்டதில்ல.. இப்ப யாருக்காக இந்த ரோடு போட்றுக்கானுக...” மாதனின் தந்தை புரியாமல் கேட்டார். அவர்கள் சில நிமிடங்கள் நடந்து சென்றதுமே ஒரு சோதனைச் சாவடியைப் பார்த்தார்கள். உயரமான கண்கானிப்புக் கோபுரமும் அதற்குக் கீழே வனக்காவலர்கள் ஓய்வெடுக்க மர வீடு ஒன்றும் இருந்தது. ஆட்களின் பேச்சு சத்தம் கேட்டு வனக்காவலர் ஒருவர் வெளியே வந்து பார்த்தபோது காலை வெயில் உச்சிக்கு ஏறியது. இந்த மலைச்சரிவில் மற்ற இடங்களை விட எப்போதும் வெயில் அதிகம். வெக்கை தாளாமல் மேல் சட்டை அணியாது பனியனோடு இருந்த அந்தக் காவலர் ”யாருய்யா நீங்க இந்தப் பக்கம் எதுக்கு வரீங்க?” எனக் கேட்டார்.
”ஐயா எங்க கிராமத்துக்குப் போறோம்.” என மாதன் தயக்கத்தோடு சொல்ல அவனது சத்தம் கேட்டு இன்னொரு வனக்காவலரும் வந்தார்.
”உங்க கிராமமா? ஆறு மாசத்துக்கு முன்னாலயே வேற எடத்துல செட்டில்மெண்ட் பண்ணியாச்சே அப்றம் இங்க என்ன வேல...”
என அந்த இரண்டாவது காவலர் அதிகாரத் தொனியில் கேட்க மாதன் தயங்கி நின்று தந்தையைப் பார்த்தான்.
”ஐயா மனுஷங்கள காட்டவிட்டு அனுப்பிட்டிங்க... காட்டுல இருக்க தெய்வத்த என்ன செய்வீங்க... எங்க தெய்வம் இன்னும் காட்டுலதான் இருக்கு... நாங்க போயி ஒரு பூச வெச்சுட்டு கிளம்பிடறோம்...” மாதனின் தந்தை அதே தொனியில் சொல்ல அந்த இரண்டு காவலர்களும் இவர்களை நோக்கி வந்தார்கள்.
”இங்க பாரு..இது எல்லாம் ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் பெர்மிசன் இல்லாம யாரும் உள்ள வரக்கூடாது... சாமி கும்பிடறதுன்னா இப்ப இருக்க இடத்துலயே பூச வெச்சுக்கனும்,,, போ..” என ஒரு காவலர் மாதனின் தந்தையைப் பிடித்துத் தள்ளினார். மாதன் விலக்கிவிட்டபடியே ”ஸார் ஸார் இந்த ஒரு தடவ மட்டும் எங்கள விடுங்கஸார்... எனக் கெஞ்சினான். அருகிலிருந்த இன்னொரு காவலர் ”எனக்கென்னவோ உங்க ரெண்டு பேரையும் பாத்தா சந்தேகமா இருக்கு.. மொதல்ல உங்கள சோதன போடனும்.. இங்க வா..,” எனச சட்டையைப் பிடித்து இழுக்க மாதனின் தந்தை தனது வேட்டியைத் தூக்கிக் காட்டி ”சோதன தான போடனும்... வந்து பாரு என் மாணி தான் இருக்கு..:” என சிரிக்க... அந்த வனக்காவலர்கள் அவரை ஆத்திரமாகப் பார்த்தார்கள். கையிலிருந்த லத்தியால் ஓங்கி அவரது நெஞ்சில் குத்த அவர் அப்படியே சுருண்டு விழுந்தார். மாதன் ஓடிப்போய் அவரைப் பிடித்துக்கொண்டான். ”ஏண்டா தாயோளி பாவம் பாத்து மரியாதையா பேசினா எகத்தாளமா பன்ற... காட்டுக்குள சந்தன மரம் வெட்டினேன்னு கேஸப் போட்டு உன்னயத்தூக்கி உள்ள வெக்கிறனா இல்லயா பாரு..” என ஓடிவந்து அந்தக் காவலன் மிதிக்க மாதன் கையெடுத்துக் கும்பிட்டான். ”ஸார் அடிக்காதிங்க ஸார். தயவு செஞ்சு அடிக்காதிங்க... நாங்க போயிடறோம்...” என மன்றாடியபடியே தந்தையை அழைத்துக் கொண்டு மீண்டும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்



