top of page

கோடைகால புற்கள் - 4 & 5 & 6

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
3 minutes ago
10 min read

ஒருநாள் மறுவாழ்வுத் திட்டத்தை நடத்திவந்த தன்னார்வ அமைப்பினர் அந்தக் குடியிருப்புக்கு வந்தார்கள். மத்திய வயதிலிருந்த மூன்று பெண்களும் குள்ளமான ஒரு முதியவரும் கொண்ட அந்கக் குழு  ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு எழுதிக்கொண்டார்கள்.  குள்ள மனிதர் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு செல்ஃபோனில் ராசிபலன் கேட்டுக்கொண்டிருந்தார். கும்பராசி அன்பர்களுக்கு இந்தவாரம் எப்பிடி இருக்குன்னு பாக்கலாமா என முதலில் ஒரு பெண் குரல் துவங்கியது. பிறகு ஒரு ஆண் குரல் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கும்பராசிக்கு பலன் சொல்லியதை நிதானமாகக் கேட்டபின் அங்கு என்ன நடக்கிறதெனப் பார்த்தார்.  மூன்று பெண்களும் மூன்று வெவ்வேறு திசைகளில் ஆளுக்கொரு குடும்பத்தினரிடமும் பேசிக்கொண்டிருந்தனர்.


’எம்மா எங்களுக்கு இங்க டாக்டர் யாராச்சும் வருவாங்களா? அடிக்கடி உடம்பு சரி இல்லாமப் போகுது.’ என கிழவி கேட்க தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் முறைத்தாள்.

’எனக்கு அதான் வேல பாரு,… கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிதான. டாக்டர் இங்க வரனுமாம். மூஞ்சியும் மொகறையும்... போம்மா அந்தப் பக்கம்..’ என எரிந்து விழுந்தாள். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த மாதனும் அவனது மனைவியும் தயங்கியபடியே  முன்னால் வந்தார்கள்.


 மாதனிடம் கல்வித்தகுதி கேட்டபோது, “எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன்,” என்றான்.  

”போயி ஸாரப் பாருங்க.’ என அந்தப் பெண் சொல்ல மாதன் மரத்தடியை நோக்கி வந்தான். மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த அதிகாரியின் செல்ஃபோனில் இப்பொழுது ராசிபலன் முடிந்து ஆண்டவன் கட்டளை பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருந்தவரை நெருங்கி ’ஸார்.’ என ஒருமுறைக்கு இரண்டு மூன்று முறை மாதன் அழைத்தபின் கண்ணைத் திறந்து என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.


’எட்டாம் வகுப்பு வரைகும் படிச்சிருக்கேன். அவங்க உங்களப் பாக்கச் சொன்னாங்க.’ அதிகாரி அப்படியா என்பது போல் தலையாட்டிக் கொண்டார். தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஹான்ஸ் புகையிலை எடுத்து உருட்டி வாய்க்குள் வைத்துக் கொண்டவர் நிதானமாக எச்சிலைத் துப்பிவிட்டு மாதனைப் பார்த்தார்.

“அலுவலக வேலை செய்ய முடியுமா?”

“என்ன வேலை?”

அந்த அதிகாரி முறைத்தபடி

“எட்டாங்கிளாஸ் படிச்சவனுக்கு கலெக்டர் வேலையா குடுப்பாங்க சுன்னி. ஏதாச்சும் எடுபிடி வேலதாண்டா. . சம்பளம் குடுப்பாங்க.’ என அதிகாரமாகச் சொல்ல மாதன் அமைதியாக நின்றான். கும்பராசிக்காரர் அவனை முழுமையாக எடைபோடுவதுபோல் பார்க்க, தன் குடும்பத்தை நடத்த அந்த வேலை அவசியம் என்பதை உணர்ந்து மாதன் சம்மதித்தான்.


 ”சரி ஒரு பத்து நாள் ல  தகவல் வரும். எங்க வேல அப்டிங்கற வெவரம்லாம் சொல்லுவாங்க.” என அவர் சொல்ல மாதன் நன்றி சொல்லிவிட்டு திரும்ப ’ஏய் எங்கடா போற?’ என அதிகாரி சத்தம் போட்டார்.

’ஸார்.?’ மாதன் என்ன செய்வதெனத் தெரியாமல் பார்க்க அந்த அதிகாரி தனது கால்களைக் காட்டினார். அவன் அப்பொழுதும் புரியாமல் நிற்க, ’ஏன் கால்ல விழுக மாட்டியோ மயிரானே. நான் பாவம் பாத்தாதான் வேல குடுப்பாங்க. என அவர் முறைக்க, மாதன் அவரை முறைத்தான். அவரும் பதிலுக்கு முறைக்க, வேண்டா வெறுப்பாக அவரது காலை தொட்டுக் கும்பிட்டான்.

’ம்ம்ம். மரியாதையா நடந்துக்கனும். வேல குடுத்ததும் முத மாச சம்பளத்துல ரெண்டாயிர ரூவாய எனக்குக் குடுத்துரனும். புரியுதா?’

என்றபடியே தனது செல்ஃபோனைப் பார்த்தவரிடம் ’சரிங்கய்யா.’ எனச் சொல்லிவிட்டு மாதன் நகர்ந்தான்.

 

அன்று முதல் ஒவ்வொரு நாளும் வேலை குறித்த தகவலுக்காக மாதன் காத்திருக்கத் தொடங்கினான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஊட்டியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திலிருந்து அவனை அழைத்திருந்தார்கள். கடைநிலை ஊழியராகப் பணி. அங்கேயே தங்கிக்கொள்ளலாம். ஆறாயிரம் ரூபாய் சம்பளம். விருப்பமிருந்தால் உடனே கிளம்பி வரச் சொன்னார்கள்.


மல்லி நிம்மதியாக மூச்சுவிட்டாள். மசினக்குடிக்கு வந்தபோது முதலில் காட்டைப் பிரிந்தவன், இந்த முறை குடும்பத்தையும் பிரிய வேண்டியிருந்தது. தந்தை செய்த மரயானையைத் துணைக்கு எடுத்துக்கொண்டு அன்று இரவு ஊட்டிக்குக் கிளம்பினான்.


ஊட்டி அவனுக்கு முற்றிலும் புதிய நகரமாக இருந்தது. சாலைகளில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு சென்றன. மனிதர்கள் யாரிடமும் நின்று பேசமுடியாத அவசரத்தில் கடந்துசென்றார்கள்.  நகரைச் சுற்றிலும் மலைகளும் மரங்களும் இருந்தாலும்  அவற்றுக்குள் அவன் அறிந்த காடு இல்லை. கண்ணுகெட்டியதூரம் வரையிலும்  மனிதர்கள்  கடைகளையும் வீடுகளையும் எழுப்பியிருந்தார்கள். சர்க்கஸில் யானையைச் சலாம் போடப் பழக்குவதுபோல் இந்த நகரம் அவனை எல்லாவற்றுக்கும் சலாம் போடப் பழக்கியது.


குட்மார்னிங் சார் என்பது முதல் சலாம்.

சார், மசினக்குடியிலிருந்து வரேன்  அடுத்த சலாம்.

சார், நான் எங்கே தங்கிக்கிறது என்பது அதற்கடுத்த சலாம்.

அவன் வேலை எல்லோருக்கும் சலாம் போடுவதாக இருந்தது.


குன்னூர் செல்லும் சாலையிலிருந்தது வனச்சரகர் அலுவலகம். சிறிய சாலையின் முடிவில் பழைய கட்டிடம். எப்போதும் விலகாத ஈர வாடை அதன் சுவர்களில் தங்கியிருந்தது. காலை அலுவலகத்தைத் திறப்பது முதல் மாலை எல்லோரும் கிளம்பிச் செல்லும்வரை யார் என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டும்.

“மாதா, அந்த ஃபைலை எடுத்துட்டு வா.”


எந்த ஃபைல் என்று தெரியாமல் அலமாரிகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருப்பான். ஒரே மாதிரியான முகங்களைக் கொண்ட கோப்புகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.  சில நேரங்களில் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் இன்னொருவரிடமிருந்து  அழைப்பு வரும். அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவனை அதிகாரம் செய்தார்கள். எல்லாவற்றுக்கும் பழகிக்கொண்டவனைப்போல் சிரித்து வணக்கம் வைத்து சமாளித்தான். முட்டாள்தனமாக நடந்துகொள்கிறவர்களிடம் மனிதர்களுக்கு அசாத்தியமான நம்பிக்கையும் பிரியமும் வந்துவிடுவதை  கண்டுகொண்டவன் அந்த வேடத்தை விரும்பி அணிந்துகொண்டான்.

 

அலுவலகத்தின் பின்பக்கத்தில் இருந்த சிறிய அறையை அவனுக்குத் தங்குவதற்காகக் கொடுத்தார்கள். பழைய கட்டில் ஒன்று இருந்தது. அந்த அறையில் ஜன்னலின் ஒரு பக்கத்தில் மரச்சட்டம் உடைந்திருந்தது. மழை பெய்தால் சுவரில் ஈரம் இறங்கும். வீட்டிலிருந்து கொண்டுவந்த துணிகளை ஒரு மூலையில் வைத்தவன் மரயானையை ஜன்னலோரத்தில் வைத்தான்.


முதல் சில நாட்கள் தூக்கம் வரவில்லை. வெளியே வாகனங்கள் போய்க்கொண்டிருக்கும் சத்தம் இரவு முழுவதும் கேட்டது. அதிகாலையில் குளிரில் எழுந்து முகம் கழுவுவதற்குக்கூடச் சிரமமாக இருந்தது. அருகிலிருந்த உணவகத்தில்வன் முதல் சில தினங்கள் சாப்பிட்டான். உணவின் சுவை பிடிக்கவில்லை.

மெல்ல ஊட்டியின் சாலைகளையும் கடைகளையும் தெரிந்துகொண்டான். எந்தக் கடையில் குறைந்த விலையில் சாப்பிடலாம், எந்தப் பேருந்து எங்கே செல்லும் என்பதெல்லாம் பழகிவிட்டது. ஆனாலும் அவனுக்கு அந்த நகரத்தின் வேகம் பிடிபடவில்லை. சாலையில் நடக்கும்போது பின்னால் வரும் வாகனங்களைக் கவனித்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. மசினக்குடியில் நடப்பதுபோல் இங்கே எங்கும் நின்றுவிட முடியவில்லை.


வேலை முடிந்து இரவு அறைக்குத் திரும்பியதும் மல்லிக்கு அழைப்பான்.

“சாப்பிட்டியா?”

“ம்.”

“அங்க எல்லாம் எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு. இப்ப தினமும் ஏதாச்சும் வேல கெடச்சிடுது.’ 


என மல்லி நம்பிக்கையாகச் சொல்வாள். அதன்பிறகு அவனுக்கு தெரிந்துகொள்ள செய்திகள் எதுவும் இல்லையென்பதுபோல் அமைதியாக இருப்பான். மல்லி வீட்டில் நடந்தவைகளையும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றறு வந்ததையும் அவனது தந்தை புதிதாக மரபொம்மைகள் செய்து மசினகுடியில் விற்றுவருவதையும் சொல்லிக் கொண்டிருப்பாள். சில சமயங்களில் அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் வேறெங்கோ கவனம் சென்றுவிடும்.

“மாதா, கேக்கிறியா?”

“ம். சொல்லு.”  அந்தப் பதிலில் சலிப்பு மட்டுமெ மிஞ்சியிருக்கும். சொந்த நிலத்திலிருந்தும் குடும்பத்திடமிருந்தும் உண்டான தூரம் அவனை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்தது.

மாத இறுதியில்  வீட்டுக்குச் சென்றவனுக்கு  மல்லியைப் பார்த்ததும்  மகிழ்ச்சியாக இருந்தது. அவனது தந்தை வழக்கம்போல் மரத்தைச் செதுக்கிக்கொண்டிருக்க,  அருகில் உட்கார்ந்து சிறிது நேரம் பார்த்தான். மரத்திலிருந்து சிறிய துண்டுகள்  உதிர்ந்து விழும் சத்தம் அவனுக்கு பழைய நினைவுகளைக் கிளறின. குழந்தைப் பருவத்திலிருந்து அவன் கேட்டுப் பழகிய சத்தம். இந்தமுறை மரத்தால் செய்யப்பட்ட சிறிய மான் பொம்மையை அவனுக்கு தந்தை கொடுத்தார். திருத்தமான கண்களும் கொம்புகளும் அந்தப் பொம்மையைப் போல் அழகானதொன்றை இதற்கு முன்னர் அவர் செய்ததில்லை. மாதன் நீண்டநேரம் அந்த பொம்மையை அருகில் வைத்துப் பார்த்துவிட்டு தந்தையைப் பார்த்து சிரித்தான்.


அவன் வேலை செய்த அலுவலகத்தில் நீலகிரி மாவட்டத்திலிருந்த காட்டைக் குறித்த எல்லா விவரங்களும் இருந்தன. சுவரை முழுமையாக ஆக்கிரமித்திருந்த பெரிய வரைபடத்தில் பச்சை நிறத்தில் காடுகளும் நீல நிறத்தில் நீர்நிலைகளும் குறிக்கப்பட்டிருந்தன. மலைகளும் நதிகளும் கோடுகளாகத் தீட்டப்பட்டிருந்தன. மாதன் ஒவ்வொரு நாளும் அந்த வரைபடத்தைப் பார்ப்பான். அவன் வாழ்ந்த கிராமம் அதில் பச்சை நிறமாக குறிக்கப்பட்டிருந்தது.  அங்கே வாழும்  புலிகளைப் பற்றியும்  யானைகளைப் பற்றியும் அக்கறையோடு பேசிக்கொள்ளும் அதிகாரிகள் அங்கிருந்து துரத்தப்பட்ட மனிதர்களை மறந்துபோனார்கள். 

ஒருநாள் வன அதிகாரி அந்த  வரைபடத்தின் முன்னால் நின்ற மாதனை நெருங்கி


’இதுல உன் கிராமம் எங்க இருக்கு மாதா? எனக் கேட்க, மலையடிவாரத்திலிருந்த சிறிய புள்ளியை அவன் தொட்டுக் காட்டினான். அதிகாரி கூர்ந்து பார்த்துவிட்டு ’ம்ம்ம்.. டேமுக்கு மேலயா? அப்டின்னா உனக்கு அந்தக் காட்டுல இருக்க யானையப் பத்தி எல்லா வெவரமும் தெரியுமா? குத்து மதிப்பு உங்க காட்டுல எத்தன யான இருக்கும்னு நெனைக்கிற?”

என்று கேட்டார்.

”எத்தன யான இருக்குன்னு தெரியாது ஸார். ஆனா எந்தப் பருவத்துல என்ன செய்யும், எந்த திசைல போகும் எங்க தண்ணி குடிக்கும் எந்த பருவத்துல இணையோட சேரும்னு எல்லா வெவரமும் தெரியும்.” மாதன் ஆர்வமாகச் சொன்னான்.


அதிகாரி சிரித்தார். ’சந்தோசம்டா.. எனக்கு காட்டுல எத்தன யான இருக்குங்கற கவுண்ட் தான் வேணும். அது என்ன செய்யும் எப்ப செய்யுனும்னு தெரிஞ்சுக்கிட்டு நான் கதையா எழுதப்போறேன்.” என்றபடியே அவர் செல்ல மாதன் மீண்டும் வரைபடத்தைப் பார்த்தான். அதில் வரையப்பட்டிருந்த கோடுகளும் குறியீடுகளும் அவனுக்குப் பரிச்சயமான காடாகத் தெரியவில்லை. சில நேரங்களில் அலுவலகத்தின் பின்புறம் நின்று தூரத்து மலைமுகடுகளைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவற்றுக்கு அப்பால் அவன் வாழ்ந்த காடும் அந்தக் காட்டில்  ஒவ்வொரு பருவத்துக்கும் மாறக்கூடிய  வாழ்க்கையும் இருந்தது. அதிகாரிகள் அந்தக் காட்டையும் மிருகங்களையும் அறிக்கைகளாக மட்டுமே பதிவு செய்துகொண்டனர். அவர்களுக்கு அது ஒரு  வேலை. மாதனுக்கு அவன் என்றென்ரைக்கும் மறக்கமுடியாத உலகம்.

 

                                             5

 மாதன் ஊட்டியின் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டான். அலுவலகம், கடைவீதி என்று அவனுடைய நாட்கள் ஒரு ஒழுங்குக்குள் நகர்ந்தன. ஆனால் தனியாக இருக்கும் நேரங்களில் காடு அவனைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. பாதையைக் கடக்கும் மான், புதருக்குள் மறையும் காட்டுப்பன்றி, தூரத்தில் மரங்களுக்கு இடையே நகரும் யானை என்று அவன் வாழ்ந்த காடு எப்போதும் உயிரோடு இருக்கும். இங்கே அந்தக் காட்டின் நினைவத் தவிர அவனிடம் எதுவும் இல்லை.  இரவு முழுவதும் அவனை அலைக்கழித்த நினைவுகளிலிருந்தும்,  மனதுக்குள் எழுந்த கேள்விகளிலிருந்தும் தப்பிப்பதற்கு வேறு வழி தெரியாமல் குடிக்கத் துவங்கினான். ஆரம்பத்தில் கொஞ்சம் குடித்தால் மனம் அமைதியடைவதாகத் தோன்றியது. மெல்ல மெல்ல குடிக்காமல் அவனால் உறங்க முடியாத நிலை உருவானது. தொடர்ச்சியான குடி அவனை சோர்வாக்கியது.  . இரவுகள் அவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்காததோடு  பகல்கள் எதிலும் ஈடுபட முடியாத சோர்வைத் தந்தன. குடிப்பது அவன் மன உளைச்சலைக் குறைப்பதற்குப் பதிலாக அவனது மனவலிமையை குறைத்தது. 


ஒவ்வொரு மாத இறுதியிலும் ஊருக்குச் செல்பவனிடம் அவனுடைய தந்தை ஒரு புதிய மரப்பொம்மையைக் கொடுப்பார். ஏற்கனவே சிறிய யானையும், மானும் அவனது அறையில் இருந்தது. பின்னர் புலி, சிறுத்தை, கரடி என்று ஒவ்வொன்றாக அவனிடம் சேர்ந்துகொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு விலங்குகளுடன் ஒரு சிறிய மர வீட்டையும் செய்து கொடுத்தார். ஒவ்வொரு பொம்மையும் அவனது ந்தையின் கைகளிலிருந்து உருவானது. அந்த பொம்மைகளின் வழியாக அவர்கள் விட்டுவந்த காட்டை மெல்ல உருவாக்கித் தந்தார். அவனது அறையிலிருந்த சிறிய மேசையின் ஒரு மூலையில் மர யானைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள். நடுவில் ஒரு வீடு. அவற்றைப் பார்க்கும்போது தன் பழைய வாழ்க்கையின் ஒரு பகுதி தன்னுடன் இருப்பதாக உணர்ந்தான்.


பள்ளி விடுமுறைக்கு கதிர் மாதனைப் பார்க்க வந்தான். சில நாட்கள் தந்தையுடன் தங்கியிருக்கப் போவதாக வந்தவன், ஊட்டியின் புதிய சூழலுக்குள் விரைவாகப் பழகிக்கொண்டான். மாதன் அவனை கடைவீதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். கதிருக்கு அங்கிருந்த கடைகளும், வண்ண விளக்குகளும், சாலையோர உணவகங்களும் பிடித்திருந்தன. ஒவ்வொரு நாளும் எங்காவது போக வேண்டும் என்று கேட்டால் மாதனும் மறுக்காமல் அழைத்துச் செல்வான். முன்பெல்லாம் தனக்குப் பிடிக்காதிருந்த சில இடங்களுக்குக்கூட மகனுடன் செல்லும்போது ஒரு புதிய மகிழ்ச்சி கிடைத்தது.


ஒருநாள் மாலை இருவரும் கடைவீதியில் நடந்துகொண்டிருந்தபோது புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடை ஒன்றின் வாசலில் பெரிய பொம்மை யானை வைக்கப்பட்டிருந்தது. திறப்பு விழாவுக்காக வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த யானையின் அருகில் நின்று பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் அதன் தும்பிக்கையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தன. மின்சார உதவியோடு அந்த யானையைத் தலையை இடதும் வலதுமாக அசைப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கதிர் அதைப் பார்த்ததும் ஆர்வமாக மாதனின் கையைப் பிடித்து இழுத்தான்.


“அப்பா, யானை!”


முதலில் அதனை நிஜமான யானையென நினைத்த மாதனுக்கு உயரமும் அசைவுகளும் வித்தியாசமாக இருந்ததில் பொம்மையென பிடிப்பட்டது. கதிர் ஆர்வமாக அதன் அருகில் சென்று நின்று துதிக்கையைத் தொட்டுப் பார்த்தான். அதன் தலை அப்போதும் இட வலமாக அசைந்துகொண்டிருக்க இயந்திரத்தைப்போலிருந்த அதன் வலது காதைத் தொடுவதற்காக எம்பிக் குதித்தான். அவனுக்கு எட்டவில்லை. மாதன் அவனைத்தூக்க இந்தமுறை அதன் காதை மென்மயாக வருடிக் கொடுத்தான். அந்தப் பொம்மைக்கு அருகில் நின்றபோதுதான் அதன் போலியான கண்களிலிருந்த அருவருப்பை மாதன் கவனித்தான். கதிரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியபோது


“அப்பிடியே யான மாதிரியே இருக்குல்லப்பா...’ என அந்த சிறுவன் மகிழ்ச்சியாகக் கேட்டான்.

“இது பொம்ம டா... நம்ம காட்டுல பாக்காத யானையா?”

“அதனால என்னப்பா பொம்மையா இருந்தாலும் யானைதான... ஏன் தாத்தா கூடதான் உனக்கு யான பொம்மை குடுத்திருக்கு.”

மாதன் சிரித்தான்.

“அது தாத்தா செஞ்சது கதிரேசா... அவரோட உடம்புல இன்னும் நம்ம காடு இருக்கு.”

“தாத்தாவும் இப்படி பெரிய யானை செய்யலாமே?”

“அதுக்கு நிறைய மரம் வேணும்.”

“நம்ம ஊர்ல மரம் இல்லையா?”


மாதன் பதில் சொல்லாமல் யானையைப் பார்த்தான். கதிர் மீண்டும் அதன் அருகில் சென்று நின்றான். அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினருடன் சேர்ந்து அவனும் படம் எடுத்துக்கொள்ள விரும்பினான். மாதன் அவனைப் புகைப்படம் எடுத்தான்.

“அப்பா, நம்ம ஊர்ல இப்படி யானையைப் பார்க்க முடியுமா?”

“எந்த ஊர்ல?”

“நம்ம பழைய ஊர்ல. நீங்க இருந்த காட்டுல.”


“அங்கே பொம்மை யானை எதுக்கு? உண்மையான யானையே இருக்கும்.” மாதன் சொன்னதைப் புரிந்துகொள்ள முடியாத கதிர் சிரித்தபடியே ”ஆனா அந்த யானைய நாம பக்கத்துல போயி தொட முடியாதே.” என்றான்.

”காடு மலை ஆறு மாதிரி மிருகங்களும் இயற்கையோட சேந்தது கதிரேசா.. நம்மளுக்கானதா அத மாத்திக்க நினைக்கக் கூடாது.”

”அட சும்மா இருப்பா... எல்லாமே மனுஷனுக்குகாகத்தான் இருக்கனும். எனக்கு நம்ம காட்டுல இருந்தத விட இந்த ஊருதான் புடிச்சிருக்கு.” மாதன் மகனை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“அப்படியா? என்ன பிடிச்சிருக்கு?”


“நிறைய கடைகள் இருக்கு. ஐஸ்கிரீம் வாங்கலாம். சினிமாவுக்குப் போகலாம். ஏதேதோ ஊர்ல இருந்து ஆளுங்க வந்துட்டு இருக்காங்க. அவங்களை எல்லாம் பாக்க நல்லாருக்கு. நம்ம காட்டுலயே இருந்திருந்தா இது எதும் தெரியாமயே போயிருக்கும்.’ தனது மகன் சொன்னதில் தவறேதும் இல்லை என்பதை மாதன் உணர்ந்தான். அந்த வயதில் ஒரு குழந்தை விரும்பக்கூடிய எல்லாமும் அங்கே இருந்தன.

“அப்டின்னா நம்ம பழைய ஊருக்குப் போகணும்னு தோணலையா?”


“ அங்க என்ன இருக்கு? இங்கே இருக்கிற மாதிரி கடைகள் இல்ல. வேடிக்க பாக்கறதுக்கு எதுவும் இல்ல, சினிமா தியேட்டர் இல்ல... அந்தக் காட்டுல போர் அடிக்குமேப்பா...” என முகத்தை கவலையாக வைத்துக் கொண்டான்.


இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வழியில் கதிர் இன்னும் பல கடைகளைப் பார்த்து நின்றான். அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தான் மாதன். மகன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க அவனுக்கும் பிடித்திருந்தது. ஆனால் அந்த மாலை முழுவதும் அவனுக்குள் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டிருந்தது. தான் விட்டுவந்த காட்டை மகன் ஒருபோதும் தன் மனதால் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் வந்தது. அதைவிட, தான் இழந்தவற்றை இழப்பாகவே அவன் உணரவில்லை என்பதுதான் அவனைக் குழப்பியது.

விடுமுறை முடிந்து கதிர் ஊருக்குத் திரும்பினான். அவனை வழியனுப்பிவிட்டு அறைக்குத் திரும்பிய மாதன் நீண்ட நேரம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தான். அறையின் மூலையில் தந்தை செய்து கொடுத்த மர யானையும் மற்ற விலங்குகளும் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அவற்றின் நடுவில் இருந்த சிறிய மர வீட்டைப் பார்த்தான். கதிர் கேட்டதைப் போல அந்த யானையைப் பெரிய பொம்மை யானையின் அருகில் கொண்டு சென்று நிறுத்த முடியாது. அவன் உருவாக்கியிருந்த உலகம் அந்த அறையின் எல்லைக்குள் மட்டுமே இருந்தது.


அன்றிரவு வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்தான். தூக்கம் வருவதற்காகத் தொடங்கிய பழக்கம் இப்போது அவனுடைய தனிமையை மறப்பதற்கான வழியாக மாறியிருந்தது. கதிர் வந்திருந்த நாட்களில் குடிப்பதைத் தவிர்த்திருந்தான். அவன் சென்ற பிறகு அந்த இடைவெளி இன்னும் வெறுமையாகத் தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில் குடிக்கும் அளவு அதிகரித்தது. சில இரவுகளில் சாப்பிடாமலேயே குடித்துவிட்டுப் படுத்தவன் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதற்கு சிரமப்பட்டான். ஆனாலும் மாலையானதும் மீண்டும் மதுக்கடையை நோக்கிச் சென்றான்.


மாதனுக்குள் மெல்ல ஒரு பயம் உருவானது. உண்மையான யானைகள் இல்லாதமல் ஆனபின் கதைகளின் வழியாக குழந்தைகள் யானைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். ஒரு தலைமுறைக்குப் பிறகு யானையை தனது வாழ்வில் பார்க்காத குழந்தை, பொம்மை யானையை உண்மையான யானை என்று நம்பக்கூடும். அந்தப் பொம்மை தவறானது என்று சொல்வதற்கு உயிரோடு ஒரு யானைகூட இல்லாமல் போனால் என்ன செய்வது? அப்போது பொம்மையே யானையாகிவிடும் என்கிற எண்ணம் அவனை அலைக்கழித்தது.


அலுவலகத்தில் அவனுடைய வேலை வழக்கம்போல் தொடர்ந்தது. காலையில் வந்து கோப்புகளை எடுத்துச் செல்வான். பதிவேடுகளை அடுக்குவான். அதிகாரிகளின் குரலுக்கு ஓடி ஓடி வேலை செய்ததால் மாதம் தவறாமல் சம்பளம் வந்தது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்கள். வீட்டில் மின்சாரமும் குடிப்பதற்குத் தண்ணீரும் இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவனுடைய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை எனத் தோன்றும், ஆனால் அவனுக்குள் எதுவும் சரியாக இருக்கவில்லை.


                                                       6


மாதனை அதிகாரி அடிக்கடி தன்னுடன் வெளியே அழைத்துச் செல்லத் துவங்கினார். காட்டின் வழித்தடங்களையும் விலங்குகளின் நடமாட்டத்தையும் நன்றாகத் தெரிந்தவன் என்பதால் சில அவனது உதவி தேவைப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை அழைத்துச் சென்றபோது காட்டைப் பற்றிப் பேசுவதற்கான நேரம் கிடைக்கவில்லை. அதிகாரியின் பையைச் சுமப்பது, அவர் கேட்கும் கோப்புகளை எடுத்துக் கொடுப்பது, வாகனத்தை ஏற்பாடு செய்வது, உடன் வரும் மற்றவர்களுக்குத் தகவல் சொல்வது என்று வேலைகள் நீண்டுகொண்டே போயின. சில நேரங்களில் அவன் காட்டைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்போது அதிகாரி வேறொரு வேலையைச் சொல்லி அனுப்பிவிடுவார். இப்படியே நாட்கள் கடந்தன. காட்டுக்குள் சென்றாலும் அவனால் காட்டைப் பார்க்க முடியவில்லை. எதைத் தேடிப் பார்க்க வேண்டும் என்பதையே மெல்ல மறந்துபோனான். ஒரு காலத்தில் ஒவ்வொரு விலங்கின் தடத்தையும் அதன் காலடிச் சுவடுகளையும் பார்த்து அதன் நகர்வைச் சொல்லிவிடக்கூடியவனாக இருந்த மாதன், இப்போது அதிகாரி காட்டும் இடத்துக்குச் சென்று அவர் சொல்வதைக் குறித்துக்கொண்டு திரும்புபவனாக மாறியிருந்தான். அவனுடைய அனுபவத்துக்கு அங்கே இடமிருக்கவில்லை. 


சில வாரங்களுக்குப் பிறகு நகைக்கடையின் திறப்பு விழா அலங்காரங்கள் அகற்றப்பட்டன. வாசலில் வைக்கப்பட்டிருந்த பொம்மை யானையை ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். அதன் உடலைக் கயிறுகளால் கட்டியிருந்தார்கள். மலைப்பாதையில் வாகனம் வளைவில் திரும்பியபோது யானை ஒரு பக்கமாகச் சாய்ந்ததும் கயிறுகளில் ஒன்று நழுவியது. அடுத்த கணம் பொம்மை யானை வாகனத்திலிருந்து கீழே உருண்டு சரிவில் விழுந்தது. கற்களிலும் மண்ணிலும் மோதியபடி கீழே சென்ற அதன் தும்பிக்கை ஒரு பாறையில் மோதி உடைந்தது. அதன் தந்தம் முறிந்து தனியாக விழ, வயிற்றுப் பகுதி பிளந்து அதன் உள்ளிருந்த மரச்சட்டங்களும் கம்பிகளும் வெளியே தெரிந்தன.


மாதன் சாலையோரத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. சுற்றிலும் யாரும் இல்லை. அவன் சரிவில் இறங்கினான். ஈரமான மண்ணில் கற்கள் வழுக்கின. கைகளை ஊன்றி மெதுவாக இறங்கி உடைந்த யானையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் அதன் தும்பிக்கையை எடுத்துப் பார்த்தான். பின்னர் உடைந்த வயிற்றுக்குள் கையை நுழைத்தபோது மரத்தூள் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டது.


அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்துகொண்டிருந்தது. அந்த யானை பொம்மைதான் என்று அவனுக்குத் தெரியும். அதன் உடலுக்குள் மரச்சட்டங்களும் கம்பிகளும் இருப்பதும் தெரியும். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல அவனால் முடியவில்லை. உடைந்த தும்பிக்கையை எடுத்துத் தன் அருகில் வைத்தான். முறிந்த தந்தத்தைத் தேடினான். புதர்களுக்குள் குனிந்து மண்ணை விலக்கினான். அவன் கைகள் முழுவதும் சேறாகியிருந்தன.


மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. மரத்தூள் அவனுடைய உள்ளங்கையிலிருந்து மழைநீரோடு வழிந்தது. அவன் எழுந்திருக்கவில்லை. சரிவின் மேலிருந்து யாரோ அவனை அழைத்தபோது மாதன் திரும்பிப் பார்க்கவில்லை. உடைந்துபோய்க் கிடந்த அந்தப் பொம்மை யானையைப் பார்த்தபடி சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவனுக்கு சுற்றியிருந்த வெறுமை தன் பழைய வீட்டை நினைவூட்டியது.


சரிவிலிருந்து மேலே வந்தபோது அவனுடைய உடை முழுவதும் சேறாகியிருந்தது. சாலையோரத்தில் நின்றிருந்தவர்களில் சிலர் அவன் கீழே விழுந்து காயம்பட்டிருக்கிறானா என்று பார்த்தார்கள். ஒருவன் ’ஆளுக்கு தண்ணி போதைங்கண்ணா’ என்று சொல்லி ரகசியமாக சிரித்தான். அமாதன் யாருக்கும் பதில் சொல்லவில்லை. தன் கைகளில் ஒட்டியிருந்த சேற்றை சட்டையில் துடைத்தபடியே நடந்தவனுக்கு எங்கு செல்கிறோமென்கிற பிரக்ஞை இல்லை.


அந்த இரவு அவன் அறைக்குத் திரும்பியபோது தந்தை செய்த மர யானையைத் தேடினான். அது வழக்கமாக வைக்கும் இடத்தில் இல்லை. மேசையின் கீழேயும் அலமாரிக்குள்ளும் பார்த்துவிட்டு மற்ற பொம்மைகளுக்கு நடுவிலும் தேடினான். கிடைக்கவில்லை. அதை எங்கே வைத்தோம் என்று நினைவுபடுத்த முயன்றவனுக்கு தந்தை அதை எப்போது கொடுத்தார் என்பதும் நினைவுக்கு வரவில்லை. அதற்குப் பிறகு கடைசியாக தந்தையை எப்போது பார்த்தோம் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது.


அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்றபோது ஒரு கோப்பை எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் நின்றிருந்தவனுக்கு அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. யாரோ அவனைப் பெயர் சொல்லி அழைத்தபோது திரும்பிப் பார்த்தான். அழைத்தவரின் முகம் அவனுக்குத் தெரிந்ததுபோல இருந்தது. ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை.


நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய நினைவுகள் ஒன்றோடொன்று கலக்கத் தொடங்கின. சில நேரங்களில் தன் பழைய வீட்டின் வாசலில் நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவன் அடுத்த கணமே அலுவலகத்தின் படிக்கட்டில் நிற்பதைக் கண்டு திகைத்துப்போனான். சாலையில் நடக்கையில் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் அப்படியே சில நிடங்கள் உறைந்து நிற்பவனை யாராவது உலுக்கி ’எங்கய்யா போகனும் எனக் கேட்டால் தெரியலங்க என அப்பாவியாகச் சொன்னான். அவன் பார்த்த மனிதர்களும் காடும் மலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து அழிந்துகொண்டிருந்தது.


அடுத்த சில நாட்கள் மாதன் அலுவலகத்துக்கு வரவில்லை. முதலில் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவனுடைய அறையைத் திறந்து பார்த்தபோது அங்கே சில துணிகளும் பழைய பொருட்களும் மட்டுமே இருந்தன. மேசையின் மீது அவன் தந்தை செய்து கொடுத்த மர யானையைக் காணவில்லை. அவன் எங்கே சென்றான் என்று தெரியாமல் மசினக்குடியில் அவனது வீட்டிற்கு அழைத்துக் கேட்டபோது அங்கேயும் வரவில்லை என அவனது மனைவி சொன்னாள். ஊட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வனத்துறை அலுவலகத்தின் பதிவேட்டில் அவன் பெயருக்கு எதிரே 'காணவில்லை' என்று எழுதப்பட்டது.ஊட்டி மல்லியும் மாதனின் தந்தையும் காவல்நிலையத்துக்கும் வனத்துறை அலுவலகத்துக்குமாக அலைந்து சோர்ந்துபோனபின் மசினகுடி திரும்பினார்கள். ஊர் வந்து சேர்வதற்கு முன்னால் காட்டில் மழை வலுத்து பெய்தது.


மறுநாள் அதிகாலையில், மோயார் காட்டுக்குள் ஒரு மனிதன் திசை தெரியாமல் அலைந்துகொண்டிருந்தான். பல நாட்களுக்கு முன்பு அங்கே குடிசைகள் இருந்த இடத்தில் இப்போது மழைநீர் தேங்கியிருந்தது. இடிந்த அடுப்பின் கற்களும், மண்ணுக்குள் பாதி புதைந்திருந்த சில பாத்திரங்களும் மட்டுமே அங்கே ஊர் இருந்ததற்கான அடையாளங்களாக எஞ்சியிருந்தன. அவன் ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்தான். ஒரு இடிந்த குடிசையின் யாருக்காகவோ காத்திருப்பதைப்போல் திரும்பி திரும்பிப் பார்த்தான். பிறகு மண்ணில் மண்டியிட்டு எதையோ தேடத் தொடங்கினான். விரல்களால் ஈரமான மண்ணை விலக்கிப் பார்த்தவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.


பெரும் சத்ததோடு ஓடிக்கொண்டிருந்த ஓடையில் குனிந்து தண்ணீரைக் குடித்தவன் அந்த குளிர்ச்சியின் ஆறுதலில் கண்களை மூடினான். மரங்களுக்கு மேலிருந்து ஒரு பறவையின் குரல் கேட்க, அதற்குப் பதிலாக இன்னொரு திசையிலிருந்து வேறொரு குரல் எழுந்தது. தலையை உயர்த்தி மரங்களின் உச்சியைப் பார்த்தவனுக்கு அந்தச் சத்தங்கள் பழக்கமானவையாக இருந்தன. அவற்றின் பெயர்களை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.


அப்போது ஓடைக்கு அப்பால் புதர்களிலிருந்து ஒரு யானை வெளிப்பட்டது. அதன் பின்னால் இன்னொன்றும், அதற்குப் பின்னால் ஒரு குட்டியும் வந்தன. அவன் அசையாமல் நின்றான். முன்னால் வந்த யானை அவனைப் பார்த்து தும்பிக்கையை உயர்த்தி அவனுடைய வாசனையை முகர்ந்தது. அவன் அசையவில்லை. யானையின் காதுகள் மெல்ல அசைந்தன. அதன் காலடியில் ஈரமான இலைகள் நசுங்கின. குட்டி தாயின் உடலை உரசியபடி நடந்தது. அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. யானைகள் ஓடையைக் கடந்து வேறுபக்கமாகச் சென்றன. அந்த திசையை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் அவற்றைப் பின்தொடரவில்லை. அவை வந்த பாதையில் நடக்கத் தொடங்கினான். வழியில் ஒரு மரத்தின் அருகே நின்று அதன் பட்டையைத் தொட்டுப் பார்த்தான். கீழே கிடந்த ஈரமான இலைகளை எடுத்துக் கைகளுக்குள் கசக்கியவன். வாசனையை முகர்ந்தான். அந்த வாசனை அவனுக்குள்ளிருந்து கடந்த கால நினைவுகளைத் திறக்க முயன்றது. ஊரும் மனிதர்களும் மங்கலான சித்திரமாக கரைந்துபோனார்கள். யாரோ அழைப்பதுபோலத் தோன்றியதால் திரும்பிப் பார்த்தான். மரங்களின் இடைவெளியில் காற்று நகர்ந்துகொண்டிருந்தது.


மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. பாதையில் தேங்கியிருந்த நீரில் இலைகள் மிதந்தன. அவன் அவற்றைப் பார்த்தபடி நடந்தான். இருள் இறங்குவதற்கு முன்பாகத் தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டான். இரவு தங்குவதற்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒதுங்கினான். மரத்தடியில் தலை சாய்த்துக் கண்களை மூடிடவனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு அந்த இரவில் தூக்கம் வந்தது.

அதற்குப் பிறகு மாதனை யாரும் பார்க்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page