top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

குருவைக் கண்டடைதல்




அன்பிற்கினிய லஷ்மி அண்ணா....


சுகம் தானே...!?


டி.தர்மராஜ் எனக்கொரு மாஸ்டர் என்று நான் எண்ணிக்கொள்வேன்.


அவரின் அபுனைவுகள் வாசித்து இருக்கிறேன்


"அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை"என்கிற புத்தகம் எனக்கு அந்த நேரங்களில் பெரிய தெளிவுகளை தந்தது,கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் தொகுப்பை இன்றளவும் பெரிய பணியாக கருதுகிறேன்,அவர் வலைப் பக்கத்தில் எழுதி வந்த சினிமா விமர்சனங்களையும், கிழக்கு தளத்தில் வந்த அரசியல் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்தும் வந்தேன்(இப்போதில்லை).


ஆகவேதான் என்னளவில் எனக்கு அவர் ஒரு ஆசிரியர் என்று எண்ணுகிறேன்.


ஆனாலும் அவரின் அய்யோத்திதாசரியம் புத்தகத்தில் சில கட்டுரைகள் மீது எனக்கு விமர்சனங்களும் இருக்கிறது,அவருடைய நீல ஆரவாரம் என்கிற கட்டுரை விமர்சித்து அவருக்கு விமர்சன கடிதமும் எழுதி இருந்தேன்.


இப்படியாகவும் எனக்கு டி.தர்மராஜ் இருக்கிறார்.


உங்களிடம் என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் எவ்வாறு டி.தர்ம ராஜை அணுகுவது என்பதுதான் இது எவ்வளவு பெரிய அபத்தமான கேள்வி என்று எனக்கு நன்கு தெரியும் ஆனாலும் வேறு வழி இல்லாமல் தான் நான் முன்னோடியாகக் கருத்தும் உங்களிடம் கேட்கிறேன்.



நன்றி.

-அன்பு ஹனீஃபா



(இதை நீங்கள் ஒரு தனிப்பட்ட கடிதமாக கூட எடுத்துக்கொள்ளலாம் அண்ணா)






அன்பிற்குரிய ஹனிஃபா.


இந்தக் கடிதம் குறித்த எனது நிலைப்பாடுகளை எழுதுவதற்கு முன்னால் கடந்த சில மாதங்களாக எனக்குள்ளிருந்த குழப்பங்களையும் அதற்கு நான் கண்டடைந்த தெளிவுகளையும் சுருக்கமாக எழுதிவிடுதல் நலமெனத் தோன்றுகிறது. மனித மனம் இயல்பாகவே அவநம்பிக்கைகளை விரும்பக்கூடியது, தன்னை வருத்தத்தில் ஆழ்த்திக் கொண்டு அதற்குத் துணையைத் தேடக்கூடிய அந்தரங்கமான விருப்பம் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உண்டு. இந்த அவநம்பிக்கையும் சோர்வும் நம்மிடம் உருவாக்குவது வாழ்வின் மீதான கசப்புகளையும் மனிதர்களின் மீதான வெறுப்பையும்தான். இத்தனை வருடங்களில் நான் வெறுப்பையும் பகைமையையும் குறித்து மட்டுமே அதிகம் சிந்தித்திருக்கிறேன் என்கிற நிஜம் சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்தது. சரி எதனால் இந்த மனதில் இத்தனை வெறுப்பும் பகையும்? இது முழுக்க முழுக்க ஒரு வகையான அகங்காரம் என்பதுதான் எனது புரிதலாக இருக்கிறது. இந்த அகங்கராம் தான் பல விடயங்களை நான் கற்றுக்கொள்ள முடியாமல் செய்திருக்கிறது. நீண்ட காலம் எழுதியும் ஒரு உயரத்தைச் சென்று அடைய முடியாத நிலைக்கு இத்தனை காலத்திற்கு நான் மற்றவர்களையே குறையாக நினைத்திருக்கிறேன், இல்லை முற்றிலுமாக இது என்னால் மட்டுமே விளைந்தவை. எனது அகங்காரத்தின் விளைவுகள் தான் எனது சரிவுகள்.


ஒரு மனிதனுக்கு குறிப்பாக கலை வடிவங்களில் இயங்கக் கூடியவனுக்கு எந்த வகையில் அகங்காரம் பிறக்கிறது? அச்சம் தான் அதன் துவக்கப்புள்ளி, உலகை நாம் எதிர்கொள்வதற்கும் இந்த உலகம் நம்மை எதிர்கொள்வதற்குமான பெரும் வேறுபாடுகளே இந்த அச்சத்திற்குக் காரணமாய் இருக்கின்றன. நமக்கு ஏதுவானவைகளை மட்டுமே சிந்திக்கப் பழகினால் இடர்களை எதிர்கொள்வதற்கான வலிமையற்றவர்களாகி விடுகிறோம். எவையெல்லாம் நாம் சரியென நினைக்கிறோமோ அது பிசகும்போது உருவாகும் தோல்வியுணர்ச்சி எதன்மேலும் நம்பிக்கையற்ற ஒரு மனதை உருவாக்கிவிடுகிறது. நமது குறைகளை மறைத்துக்கொள்வதற்கான எளிய முகமாக அகங்காரத்தை நாம் அணிந்துகொள்ளத் துவங்கும்போது உலகிற்கும் நமக்கும் இடையில் பெரும் திரை விழத் துவங்குகிறது. இதில் நாம் எதிர்கொள்ளும் பெரிய இழப்பு ஒன்றுண்டு. நமக்கான குருவை நாம் கண்டடையாமல் இருப்பது, அல்லது கண்டடைந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருப்பது.


யார் குரு? ஒரு குரு எப்படி ஒரு மனிதனின் சிந்தனையிலும் வாழ்விலும் முக்கியமானவராகிறார் என்கிற கேள்வி தொடர்ந்து உறுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் யதி தத்துவத்தில் கனிதல் என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது. ஓஷோவையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் கொஞ்சமாய் வாசித்திருந்தாலும் எனது வாழ்க்கைமுறை எந்த வழிகாட்டல்களையும் பொருட்படுத்தக் கூடியதாய் இல்லாமல்தான் இருந்துள்ளது. திரும்பிப் பார்த்தால் எனக்கு எல்லாவற்றின் மேலும் அச்சமுண்டு என்பதை இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது. நீ உன் இயல்பில் இரு என்று யார் எனக்கு அறிவுறுத்தினாலும் என் இயல்பின் மீது ஒருவித விலக்கமே உருவாகி வந்திருக்கிறது. தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ளமுடியாத ஒரு மனிதனின் இயல்பால் அவனுக்கோ இந்த சமூகத்துக்கோ என்ன பயன்? வலிமையான கனவுகள் மட்டும் ஒருவனை சிறந்தவனாக மாற்றிவிடுவதில்லை., அந்தக் கனவிவை செயற்படுத்த அதனிலும் வலிமையானதொரு மனம் தேவையாயிருக்கிறது. அந்த மனம் ஒரு வழிகாட்டியின் மூலமாகத்தான் கிடைக்கப் பெறுகிறது. உங்கள் வழிகாட்டி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் ஒரு ஞானியாகவோ, எழுத்தாளராகவோ, உங்கள் பள்ளி ஆசிரியராகவோ, ஏன் எதிர்பாராதவிதமாய் சந்திக்க நேரும் வழிப்போக்கராகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த ஒரு நபர் உங்கள் மனம் சிந்திப்பதை, உங்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டவராக இருப்பதும் அப்படி இருப்பவர் உங்களோடு உரையாடுகையில் நீங்கள் அகங்காரமின்றி அவரிடம் சரணடைவது முக்கியம். ஆம் சரணடைதல் தான் முக்கியம். அப்படி நீங்கள் சரணடைகிற நபரிடம் இருக்கும் குறைநிறைகள் பற்றி அக்கறைப்பட வேண்டியதில்லை. தனது பிழைகளையும் குறைகளையும் அவர்களால் கடந்து வந்துவிட முடியும். உங்களுக்குத் தேவை, எது நம் பாதையென்கிற தெளிவும் அந்த பாதைக்கு வழிகாட்ட ஒரு வழிகாட்டியும்.





நித்யா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சன்னியாசம் தான் தனது மிச்ச வாழ்க்கை என்கிற எண்ணத்தோடு ஊரிலிருந்து கிளம்பி பயணிக்கத் துவங்குகிறார். கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கும் அவர் ரமண மஹரிஷியை சந்திக்கும் விருப்பத்தோடு திருவண்ணாமலை வந்து சேர்கிறார். அன்றைக்கு துறவறத்தை நோக்கி வந்த மனிதருக்குள் பல்வேறு விதமான கொந்தளிப்புகள். வாழ்நாள் முழுவதிலும் கொந்தளிப்பான மனநிலையைத் தக்கவைத்துக் கொள்வது செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு தனிமனிதனுக்கு முக்கியமானது. தேங்கிப்போகாமல் மனதை உந்தித்தள்வதற்கான ஆற்றலை இந்தக் கொந்தளிப்பே ஒருவனுக்குள் பிரசவிக்கிறது. திருவண்ணாமலை வந்து ரமணரில் ஆஷ்ரமத்தில் தங்கும் நித்யா ஓரிரு நிமிடங்களாவது ரமணருடன் பேசிவிடத் துடிக்கிறார். ரமணர் குறித்து வாசித்தது கேள்விப்பட்டவை எல்லாம் அவரின் மீது அதீதமானதொரு பற்றை விதைத்திருந்ததால் தனது மானசீக குருவின் அருகாமையிலிருக்கும் அந்த கனத்தை பெருமதியாக நினைக்கிறார். அவர் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக ரமணர் பெரும்பாலான நேரங்கள் எதுவும் பேசுவதுமில்லை. காலை எழுந்ததும் அவர் நடைபயிற்சிக்குச் செல்கையில் எல்லோரும் அவரைத் தொடர்ந்து செல்கிறார்கள். ஆனால் அந்த நடை முழுக்க நிலவுவது முழுமையான அமைதி. அதன்பிறகு அவை கூடும் போதும் உரையாடலோ உரையோ எதுவுமில்லை. அமைதியாகவே எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். சொற்களை சிக்கனமாகப் பயன்படுத்துவதைக்கூட அந்த வயதில் சமாளித்துவிடலாம், நம்மை மலைக்குச் செய்யும் அமைதியைக் கடப்பது எளிதானதல்ல.


நித்யா அந்த அமைதியில் உருக்குலைந்து போகும்போது தான் உதாசீனப்படுத்தப்படுகிறோமோ என நினைக்கும்போது அவருக்குள் உடனடியாக ஒரு விலகல் வருகிறது. இரண்டு நாட்களுக்குப்பிறகு அந்த ஒவ்வாமை முன்னிலும் அதிகமாகி அங்கிருந்து உடனடியாக வெளியேறி விடவேண்டுமென்கிற முடிவோடு ஆஷ்ரமத்திற்கு வெளியே சென்று கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு வருகிறார். குருவிடமிருந்து விடைபெறுகையில் வெறுங்கையோடு விடைபெறக்கூடாதென்பது அவரது நம்பிக்கை. கையில் ஆரஞ்சு பழங்களோடு மீண்டும் அவைக்கு வந்து அமர்ந்திருக்கையில் மிகச் சில நொடிகள் ரமணர் திரும்பி நித்யாவை கவனிக்கிறார். சொல்லப்போனால் சூரியனிலிருந்து சிதறும் ஒரு துளியைப்போன்ற பார்வை. நித்யா இதனை வேறு வார்த்தைகளில் எழுதியிருந்தபோதும் நான் எழுதியுள்ளபடியே நான் புரிந்துகொள்கிறேன். அந்த பார்வையை எதிர்கொண்ட கணத்தில் நித்யா ரமணரை தனது குருவாக ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார். அங்கு என்ன பரிமாறப்பட்டது, ஒரு குருவிடமிருந்து தான் என்ன எடுத்துக்கொள்கிறோம் என்பது பிறிதொரு மனிதரால் கண்டுணர முடியாதது.


யதியின் முன்னுரையில் ஜெயமோகன் நித்யாவுடனான தனது முதல் சந்திப்புகளை விவரிக்கையில் சற்றேறக்குறைய இதே போன்றதொரு சம்பவத்தைதான் குறிப்பிடுகிறார். எதிர்கொண்ட நொடியில் நமக்குக் கிடைக்கும் சாத்தியங்களின் அடிப்படையில் ஒருவரைப் புரிந்துகொள்ள முயல்வதென்பது ஆற்றல்மிக்க மனிதன் செய்யக்கூடிய செயலல்ல. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலுமிருக்கும் அர்த்தங்கள் வெவ்வேறாய் இருக்கையில் அந்த அர்த்தங்களுக்கான விடைகளை தேடிச்செல்லா விட்டாலும் உண்மை ஒன்றேயல்ல என்கிற புரிதலை வளர்த்துக்கொள்ளுதல் முக்கியம். வேறு எவரும் தரமுடியாத ஒன்றை உங்களது வழிகாட்டியால் அல்லது குருவால் மட்டுமே தரமுடியும். அது உங்கள் மொத்த வாழ்விற்குமான விடுதலையுணர்வை. நிறைவாக வாழ்தல் உங்களின் பொருளாதார நிலையினாலோ அதிகார தொடர்புகளாலோ நிகழ்வதில்லை. தன்னை முழுமையாய் உணரும்போதும் எந்த நிலையிலும் தான் சிக்கலற்றவன் என்கிற விடுதலையுணர்வுமே மகத்தான நிறைவைத் தருகிறது.


நித்யா எழுதியிருக்கும் விடுதலையில் மெய்யியல் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகளை இங்கு அடிக்கோடிட விரும்புகிறேன். ’மாண்டூக உபநிடதம் என்று அழைக்கப்படும் விடுதலை பற்றிய உபநிடதம் ஒன்று உள்ளது. அதில் தவளை கட்டுண்டிருத்தலுக்கும் விடுதலைக்குமான உருவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தவளை முட்டைகள் இடும்போது, ஒவ்வொரு முட்டையும் அடுத்த முட்டையோடு இணைந்தே இருக்கும். வாழ்வதற்காகப் பிறந்த முட்டை தன்னுடைய அண்டை முட்டைகளோடு ஏற்படும் பிணைப்பால் ஏற்கனவே சிறைப்பட்டுள்ளது. முட்டையிலிருந்து வாழத் தகுதிபெற தவளையை யார் விடுவிப்பார்கள்? அடுத்தவர் வாழ்வும் மேன்மை பெற உதவுவது தங்கள் கடமை என்ற ரீதியிலேயே மனிதர்கள் எப்போதும் சிந்திக்கிறார்கள். இயற்கையிலிருந்து நாம் பெறுவது இந்த வகையான பாடம் அல்ல. ஒரு விதை முளைவிடும்போது, தோட்டத்திலுள்ள வேறெந்தச் செடியோ மரமோ புதிதாக அரும்பும் செடியைப் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்பதில்லை. தன் வழியில் வரும் எவ்வகையானத் தடையிலிருந்தும் தன்னைத்தானே காத்துக்கொள்வதும் விடுதலை செய்துகொள்வதும் முழுக்க முழுக்க அந்த உயிரின் சொந்தக் கடமையாகும்.’ இந்தக் கட்டுரை முழுக்கவே வாழ்க்கை குறித்து நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கைகள் சிலந்தி வலையைப்போல் எத்தனை குழப்பமானவை என்பதை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்தத் தெளிவை நாம் வந்தடைவதற்கும் இதனை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதற்கும் அதே பாதையில் பயணித்த யாரோ ஒருவரின் துணை நமக்குத் தேவையாய் இருக்கிறது.


கலை வடிவங்களைப் பயிலும் மனதில் அதீதமான கற்பனைகள் தோன்றுவது இயல்பு. தனது சின்னஞ்சிறு உலகின் பிரம்மாண்டமே அந்தக் கலைமனதிற்கு முக்கியமானது. இதனாலேயே எல்லாவற்றிலும் அதீதத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்கிறார்கள். இன்றைக்குத் தமிழ் இலக்கியச் சூழலைப் பார்க்கையில் சில சமயங்களில் எல்லாமே விளையாட்டாகவும் இன்னும் சில சமயங்களிலும் எதுவுமே விளையாட்டில்லை என நினைக்கத் தோன்றும். ஒரு வயது வரை நம்பியிருந்த எல்லாவற்றையும் இன்னொரு வயதிற்குப்பின் கைவிடுவதும் புதிய ஒன்றைக் கைகொள்வதும் கற்றலின் வழியாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த அடையாள மாற்றத்தில் நாம் வெவ்வேறு வழிகாட்டிகளை எதிர்கொள்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருமே நமக்கு முக்கியமானவர்கள். சிலர் ஏதோவொரு எளிய குழப்பத்திற்கு உங்களுக்கான தீர்வை வழங்கியவராக இருக்கலாம், அதற்காக அவர் அதிக முக்கியத்துவற்றவராக ஆகிவிடமுடியாது. இங்கு நிகழ்வது என்னவென்றால் ஒருவர் வாசிப்பை நோக்கி வரும்போது சிலரை தனது முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார், பிறகு எழுதத் துவங்கும்போது அந்த முன்னோடியின் மீது ஆர்வமில்லாமல் போய் வேறு ஒருவரின் மீது ஆர்வம் வருகிறது. இந்த மாற்றத்தையும் தேர்வையும் ஒரு ஆபாசமான செயலாகவே இப்பொழுது கருதுகிறேன். முதலாம் வகுப்பில் எழுதக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் நீங்கள் முதுகலைக் கல்வி கற்கையில் உங்களை வழிநடத்துக்கும் ஆசிரியருக்கும் ஒரே முக்கியத்துவத்தைக் கொடுங்கள். முதலாம் நிலையிலிருந்த உங்களை முதுகலைக் கல்வி நோக்கி நகர்த்தியதற்கு அந்த முதல் ஆசிரியருக்கும் பங்குண்டு.


நான் எழுத வந்த காலகட்டத்தையும் இன்றைக்கிருக்கும் இலக்கியச் சூழலையும் ஒப்புநோக்குகையில் வேகமாக மறைந்துகொண்டிருப்பதாக நான் கவனிப்பது குரு மரபு. எதையும் கற்றுக்கொள்ளாமலேயே வல்லவராகிவிட முடியுமென்கிற நம்பிக்கைகளோடு எழுத வருகிறவர்களையே பெரும்பான்மையாகப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குத் தேவை இந்தச் சின்னஞ்சிறிய இலக்கிய வட்டத்தில் கிடைக்கும் சின்னஞ்சிறிய வெளிச்சம். அந்த வெளிச்சத்தை தங்களது ஆற்றலைச் செலவழித்து எழுதுவதன் மூலமாக குறுக்கு வழிகளின் மூலமாக அடைவதையே பெரும்பான்மையானவர்கள் விரும்புகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரிடம் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த வாரத்தில் ஒருநாள் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘நலமா இருக்கீங்களா?’ என நான் கேட்டதும் ‘அதான் இலக்கிய உலகத்துக்கு வந்துட்டனே பின்ன எப்பிடி நலமா இருக்கறது?’ என பதிலளித்தார். எனக்கு ஆச்சர்யம். இவர் எப்போது இலக்கிய உலகத்திற்கு வந்தார்? முகநூலில் பூ படமும் கோலப்படமும் வைத்து நான்கு வரிகளில் எட்டு வார்த்தைகளை எழுதுவதெல்லாம் இலக்கிய உலகிற்கான வருகை என்றால் உண்மையில் இன்று தமிழ் இலக்கியத்தின் போக்குதான் என்ன? மொழியின் மீதான ப்ரேமை துளியுமின்றி தன்னைத் தானே நேசித்துக்கொள்ளும் நார்சிஸ்டுகள் பெருகினால் இந்தச் சூழல் என்னவாகும்?


இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருகிறேன். டி. தர்மராஜ் எனது ஆசிரியர்களில் ஒருவர். த மு எ க ச் ஒருங்கிணைத்த நாட்டார் வழக்காற்றியில் முகாமில் தர்மராஜ் அவர்கள் வழிநடத்திய வகுப்பில் கலந்துகொண்ட தருணங்கள் இன்றளவும் எனக்கு முக்கியமானது. அதன்பிறகு அவரது பெரும்பான்மையான நூல்களை வாசித்திருக்கிறேன், அவரோடு சிலமுறை உரையாடியும் இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல் எனக்கும் அவரது எழுத்துகளில் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் அது அவருக்கான முக்கியத்துவத்தைக் குறைப்பதோ அல்லது அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள எதுமில்லை என்பதோ அல்ல. அவர் எப்போதும் எனது ஆசிரியர்களில் ஒருவர் தான். அந்த அடையாளத்தை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் எனது சிறுகதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்துவதற்கான துவக்கம் அவரது உரைகளிலிருந்து எனக்குக் கிடைத்த ஒன்று. மேலும் ஒரு ஆசிரியர் உங்களுக்கு வாழ்வின் அத்தனை ஞானங்களையும் கற்றுத்தர வேண்டியதில்லை. ஞானமென்பது கடலென்பது எத்தனை உண்மையோ அதேயளவிற்கு ஒருவருக்கு அந்த ஞானத்தைக் கற்றுத்தரவும் நிறைய ஆசிரியர்கள் இருக்க சாத்தியமுண்டு. ஒருவரோடு இணக்கமான கருத்துகளும் உரையாடலும் இருந்ததைப் போலவே நமக்கு உவப்பில்லாத கருத்துக்களை எழுதும்போதும் வாசிக்க வேண்டியது அவசியம். கூட்டு நினைவுகளின் வழியாக பெறும் அறிவுதான் ஒருவரை ஞானியாக்குகிறது.


நான் எனது கடந்த காலங்களில் எனது முன்னோடிகளை கொண்டாடியதைப் போலவே கடுமையாக விமர்சித்தும் எழுதியிருக்கிறேன், இப்பொழுது நிதானமாக யோசிக்கையில் அது எத்தனை வேடிக்கையானதென நகைப்பாய் இருக்கிறது. அந்த அகங்காரம் எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்தவில்லை, சொல்லப்போனால் அந்த கேலியும் எள்ளலும் ஒரு வகையில் இத்தனை காலம் நான் என்மீது தூற்றிக்கொண்டதாகவே இப்பொழுது தோன்றுகிறது. இதற்காக ஒருபுறம் வருந்தினாலும் இன்னொருபுறம் இந்தச் சரிவுகளும் பிழைகளும் கடந்துதான் நான் நானாக உருவாகியிருக்கிறேன் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. மிகச் சமீபத்தில் ஒருநாள் நான் கடும் மனச்சோர்வுற்றிருந்தபோது கார்கி நான் இதுவரை அவதானிக்காத ஒன்றை எனக்கு தெரியப்படுத்தினார். ‘நீ உன்னோட முன்னோடிகள்னு நிறைய பேர மதிக்கிற, ஆனா உன்னோட வாழ்க்கைல ஒரு நெருக்கடி வர்றப்போ அந்தக் குழப்பட்தில இருந்து வழிகாட்ட உனக்கான குருவக் கண்டடையல. உனக்கு நீயே எல்லாமா இருக்க முடியுங்கறதும் ஒருவித அகங்காரந்தான்..’ அந்த வார்த்தைகள் மறுக்கவியலாதவை.


ஒருவன் தொடர்ந்து இலக்கியத்தினுள் இயங்கும்போதுதான் குருவைக் கண்டடைதலுக்கான வேட்கை அதீதமாகிறது. அந்த வேட்கையிலிருந்துதான் அவனது கலைமனம் சுடராகி ஒளி பெருக்குகிறது. நமது பாதை மிக நீண்டதாயின் அதற்கு வெளிச்சமாய் சில சமயம் அகல் விளக்குகளும் சில சமயம் தீப்பந்தங்களும் இன்னும் சில சமயம் கொள்ளிக்கட்டைகளும் கூட கிடைக்கலாம். நெருப்பு எல்லாவற்றிலும் ஒன்றுதான், அதன் தன்மை வேறாக இருந்தாலும் உங்கள் பாதைக்கு சின்னதொரு ஒளியைத் தருமானால் பற்றிக்கொள்ளுங்கள். நமக்கான கலையையும் விடுதலையும் தரும் ஒருவரை அல்லது பலரை என்றெறைக்குமாக ஏற்றுக்கொள்வது முக்கியம். அவர்கள் எத்தனை மேன்மையானவராக இருந்தாலும் சரி, எத்தனை கீழ்மையானவராக இருந்தாலும் சரி. நீங்கள் நீங்களாக இருப்பதை எப்படி விரும்புகிறீர்களோ அப்படியே உங்கள் வழிகாட்டிகளையும் அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.



582 views
bottom of page