top of page

கடவுளெனும் ஆத்ம நண்பன்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Nov 7, 2025
  • 1 min read

1

இருள் அம்மணங்கள் ஆடிக் கொண்டிருப்பதுமாய்பிரித்தறிய முடியாத ஆயிரம் நிறங்களும் குணங்களும் உண்டு.கொஞ்சம் மதுவும், உடன் சில நண்பர்களுமாய் வீதியில் இறங்கினால்நள்ளிரவில் 

எல்லாக் கோவில் வாசல்களிலும் 

கடவுள்கள் தட்டாங்கல் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

2

நீ கொலை செய்ய முடியாத என் கனவில் தான் 

கடவுள் பாதுகாப்பாய் இருக்கிறார். அவருக்கு காதலையும் காதலிகளையும் பிடிக்காதென்பதாலேயே 

அவரின் காதலிகளையும் சேர்த்து நான் காதலிக்க வேண்டியுள்ளது.


3

நள்ளிரவில் மேன்ஷன் ஹவுஸ் குடித்துவிட்டு 

கடவுளும் நானும் மாம்பழம் தேடிச் சென்றோம்…எங்கள் பயணத்தின் இலக்கு தெளிவானதுநிச்சயம் ஒரு கிளி மூக்கு மாம்பழம்.

”மேன்ஷன் ஹவுஸ் மாதிரி கேவலமான சரக்கு எதுவும் இல்ல…” நான்…

“நாயே ஓசில குடிக்கிறவனுக்கு  நல்ல சரக்குனு இருக்கா? கடவுள்..


4

ஒரு மாம்பழம் தேடி அலைந்த எங்களுக்கு 

மாம்பழமோ இன்னொரு போத்தல் மதுவோ  கிடைக்கவில்லை.

கடவுள்  வருவதால்  கிடைக்கவில்லை என நானும் 

என்னுடன் வருவதால்  கிடைக்கவில்லை என அவரும் 

மாறி மாறித் திட்டிக் கொண்டோம்…

“என் மூஞ்சில முழிக்காத… இதுக்கு மேல எங்கூட வராத.”

திட்டிவிட்டு  அவருக்கு எதிர்த்திசையில் நடந்தேன்…..

அருகிலிருந்த பறக்கும் ரயில் ஸ்டேசன் நோக்கி கடவுள் ஓடினார்…திரும்பி பார்த்த எனக்கு அதிர்ச்சி..“ லூசுப் பயலே எங்க போற?..”

“போடா நான் ட்ரெய்ன்ல விழுந்து சாவறேன்…”

“ராத்திரி 12மனிக்கு மேல ட்ரெய்ன் வராதுடா இளிச்சவாயா…”

ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்தார்…

“பரவா இல்ல... மேல இருந்து கீழ குதிச்சு சாகறேன்…”

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது

“சரி சரி அழுவாத… நான் மாம்பழம் வாங்கித் தர்றேன்..”

கட்டித் தழுவி  கூட்டிக் கொண்டு வந்தேன்…

வரும் வழியில் பூட்டிக் கிடந்த ஒரு கடையை உடைத்து 

ஒரு மாஸா பாட்டிலைக் கொடுத்தேன்…

“இது என்ன?..”

பாட்டில்ல மாம்பழம்… எல்லா சீசன்லயும் கிடைக்கும்…”

 

 

  5


பின்னிரவில் பில்லரிலிருந்து 

கேகே நகரில் இருக்கும் அறை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

கடவுள் மிகுதியான போதையில் ஒரு சலூன் கடையின் முன்

 உறங்கிக் கொண்டிருந்தார்.

குளிருக்கு குதூகலமாகியிருந்த 

இரண்டு நாய்கள் அவருக்கு அருகில் விளையாடிக் கொண்டிருக்க,

தொந்தரவு கொண்டவராய் 

 நாய்களைத் துரத்துத் துவங்கினார்.  

பயந்து ஓடி  வந்த நாய்களில் ஒன்று எதிரில் வந்த என்னைத் துரத்த

 நான் கடவுள் வந்த திசை நோக்கி ஓடினேன்.  

இதற்கு முன்பும் மூன்று முறை நாய்கள் கடித்திருப்பதால் 

அதன் அவஸ்தை தெரிந்த அச்சம்.

மூச்சு வாங்க கோவம் குறையாது நின்றிருந்த கடவுள் 

அச்சத்துடனிருந்த என்னை நிறுத்தினார்.

“நாய் இனி கடிக்காது... எங்கூட வா...”

நான் யோசிக்காமல் 

“இல்லைங்க நான் .....*****  இல்ல...”

என்றதும் ஆத்திரத்தில் முகத்தில் அறைந்தவர் 

“நாயே போதைல தல வலிக்கிதுடா.... வந்து டீ வாங்கிக் குடு...”

அந்த வேளையில் தேநீர் கிடைக்கும் இடம் எனக்கும் தெரியாது.

பின்னிரவில் மது வாங்க மட்டுமே 

இந்த நகரில் நீண்ட தூரம் அலைந்ததுண்டு 

தேநீர் கேட்டு நின்ற அவரைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

இருவரும் வடபழனி செல்லும் சாலையில் கால் வலிக்க நடந்தோம்.

தேநீர் கிடைப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

இப்படியே ஓடி விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தவனை 

தீவிரமாக கண்கானித்தபடியே நெருங்கி வந்தார் கடவுள்.

 நடந்த களைப்பில் உறக்கம் கண்ணைச் சுழற்ற 

திரும்பி ஓங்கி அவரின் மூஞ்சியில் குத்தினேன்...

“போயா... இதுக்குப் பேசாம நான் 

அந்த நாய் கிட்டயே கடி வாங்கி இருப்பேன்..” பின்னங்கால் பிடறியில் அடிக்க அறை நோக்கி ஓடிவந்தேன்.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page