top of page

சினிமா யாரையும் காப்பாற்றாது

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Sep 6
9 min read

எழுத்தாளர்கள் திரைப்படம் இயக்கலாமா என என்னிடம் கேட்டால் நான் தயங்காமல் சொல்வேன், இயக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் இயக்குநராக மாறுவதற்கும் திரைப்படத்தை உருவாக்குவதற்கும் இடையில் மிகப்பெரிய தூரம் இருக்கிறது. அந்தத் தூரத்தை ஒரு நல்ல கதையை எழுதத் தெரிந்திருப்பதாலோ, நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பதாலோ, இலக்கியத்தில் சில விருதுகளைப் பெற்றிருப்பதாலோ கடந்து சென்றுவிட முடியாது. அதற்குள் வேறு ஒரு உலகம் இருக்கிறது. பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, சந்தை இருக்கிறது, மனிதர்களின் ஈகோ இருக்கிறது, சமரசங்கள் இருக்கின்றன, காத்திருப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் அவமானமும் இருக்கிறது. அதையெல்லாம் கடந்துதான் ஒரு எழுத்தாளன் கேமராவின் பின்னால் சென்று நிற்க வேண்டியிருக்கிறது.


தமிழ் சூழலில் எழுத்தாளனுக்கும் சினிமாவுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு விசித்திரமான இடைவெளி இருந்து வருகிறது. சினிமாவுக்கு கதைகள் எழுத எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். வசனம் எழுத அழைக்கப்படுகிறார்கள். சில நாவல்கள் திரைப்படமாக்கப்படுகின்றன. ஆனால் அந்த எழுத்தாளனே ஒருநாள் கேமராவின் பின்னால் நின்று ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினால், அங்கே ஒரு தயக்கம் உருவாகிறது. “எழுத்தாளரால் சினிமாவை இயக்க முடியுமா?” என்ற கேள்வி வெளிப்படையாகக் கேட்கப்படாமல் பல வடிவங்களில் நம்மைச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக வணிக சினிமாவைப் பற்றி பேசும்போது, எழுத்தாளர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது என்ற நம்பிக்கை இங்கே இன்னும் வலுவாக இருக்கிறது.

எனக்கு அந்த சந்தேகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல முறை எதிரில் வந்திருக்கிறது.


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இருபத்தைந்து நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏராளமான விருதுகள் கிடைத்திருக்கின்றன. எழுத்தாளனாக எனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக்கொண்டிருந்தேன். அந்த இடத்திலிருந்து சினிமாவுக்குள் சென்றபோது, அந்த இருபது வருடங்களையும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் முதல் அதிர்ச்சி. இலக்கியத்தில் நீங்கள் உருவாக்கிய மதிப்பு சினிமாவில் தானாகவே currency ஆகிவிடாது. நீங்கள் பெற்ற விருதுகளைப் பார்த்து ஒரு படப்பிடிப்புத் தளத்தில் யாரும் கேமராவை உங்களுக்காக வேறு கோணத்தில் வைக்கப்போவதில்லை. இருபது வருடங்களாக எழுதியிருக்கிறீர்கள் என்பதற்காக தயாரிப்பாளர் உங்களுக்கு இன்னும் பத்து நாட்கள் shooting கொடுக்கப்போவதில்லை. சினிமா ஒவ்வொரு நாளும் உங்களை புதிதாக நிரூபிக்கச் சொல்லும். இதுதான் நான் தாமதமாகப் புரிந்துகொண்ட விஷயம்.


ஒரு எழுத்தாளன் ஒரு கதையை எழுதும்போது அவனுடைய உலகில் அவன்தான் முழுமையான அதிகாரம் கொண்டவன். அவனுக்கு ஒரு அறை போதும். ஒரு மேசை போதும். அவன் விரும்பியபடி கதாபாத்திரங்களை உருவாக்கலாம். அவர்களை கொல்லலாம். உயிர்ப்பிக்கலாம். ஒரு மழையை ஐந்து பக்கங்களுக்கு நீட்டிக்கலாம். ஒரு மனிதனின் மனதுக்குள் சென்று அவன் நினைப்பதை நூறு பக்கங்களுக்கு எழுதலாம். ஆனால் சினிமாவில் நீங்கள் நினைத்த மழைக்கு ஒரு பட்ஜெட் இருக்கும். நீங்கள் நினைத்த இரவுக்கு ஒரு shooting schedule இருக்கும். நீங்கள் நினைத்த இடத்துக்கு permission வேண்டும். நீங்கள் உருவாக்கிய கதாபாத்திரத்தை நடிக்க ஒரு நடிகர் வேண்டும். அந்த நடிகருக்கு தேதிகள் வேண்டும். அவருடைய manager-ஐ சமாளிக்க வேண்டும். ஒரு காட்சியை உருவாக்குவதற்காக ஐம்பது பேர் காத்திருக்க வேண்டும். நீங்கள் எழுதிய ஒரு பக்கத்தைப் படமாக்க ஒரு நாள் போகலாம். சில நேரங்களில் நீங்கள் எழுதிய காட்சியே தயாரிப்பாளருக்குப் பிடிக்காமல் போகலாம். நடிகருக்குப் பிடிக்காமல் போகலாம். நிறுவனத்துக்குப் பிடிக்காமல் போகலாம். அல்லது அது அதிகம் செலவாகும் என்பதற்காகவே அந்தக் காட்சி இல்லாமல் போகலாம். அப்போது எழுத்தாளன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுதான். சினிமா என்பது உங்கள் கலை மட்டும் அல்ல.அதை ஏற்றுக்கொள்வதற்கே எனக்கு நீண்ட காலம் பிடித்தது.


நான் இயக்குநராக முயற்சி செய்யத் தொடங்கியபோது, எழுத்தாளன் என்ற அடையாளம் எனக்கு ஒரு பலமாக இருக்கும் என்று நினைத்தேன். சில இடங்களில் அது பலமாக இருந்திருக்கலாம். ஆனால் பல இடங்களில் அதுவே ஒரு சந்தேகத்திற்கான காரணமாக இருந்தது. “இவர் எழுத்தாளர்” என்ற ஒரு வாக்கியத்தின் பின்னால் பல கேள்விகள் இருந்தன. இவர் slow ஆக இருப்பாரோ? இவர் commercial cinema புரிந்துகொள்வாரா? இவரால் set-ஐ handle பண்ண முடியுமா? நடிகர்களை வழிநடத்த முடியுமா? இவர் practical-ஆ இருப்பாரா? எழுத்தாளன் என்றால் புத்தகங்களுக்குள் உட்கார்ந்திருப்பவன் என்ற ஒரு கற்பனை சினிமாவுக்குள் இன்னும் உயிரோடு இருக்கிறது.


ஒரு எழுத்தாளன் நல்ல காட்சியை எழுத முடியும். ஆனால் அந்தக் காட்சியை இருபது தொழிலாளர்களைக் கொண்டு நாற்பது டிகிரி வெயிலில் நின்று உருவாக்க முடியுமா என்பதுதான் சினிமாவின் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதிலை எழுத முடியாது. அதைச் செய்து காட்ட வேண்டும்.

அந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் சினிமாவுக்குள் வரும் எழுத்தாளன் மிக விரைவாக உடைந்துவிடுவான்.

நானும் உடைந்திருக்கிறேன். என்னுடைய அகங்காரமும் உடைந்திருக்கிறது. என்னுடைய இலக்கிய நம்பிக்கைகளும் பல இடங்களில் உடைந்திருக்கின்றன. ஆனால் அந்த உடைவுகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள முடிகிறது.


“லிங்கம்” என்னும் வலைத்தொடரை எழுதவும் இயக்கவும் ஒப்பந்தமான நாள் எனக்கு ஒரு வெற்றியின் நாள் என்று நினைத்தேன். அன்றைக்கு நான் நினைத்தது மிகவும் எளிமையானது. கதை இருக்கிறது. எழுதத் தெரியும். இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என்னால் முடியும். அவ்வளவுதான். அந்த நாளிலிருந்து அது வெளியான நாள் வரை சுமார் ஐந்து ஆண்டுகள். இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்த ஐந்து ஆண்டுகள் எனக்கு ஒரு project-ஐ உருவாக்கிய காலமாக மட்டும் தெரியவில்லை. ஒரு project உருவாகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே அதை காப்பாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை அந்த ஐந்து ஆண்டுகள் எனக்குக் கற்றுக்கொடுத்தன.


ஒரு திரைப்படம் என்பது காகிதத்தில் கையெழுத்திடப்பட்ட நாளில் பிறந்துவிடுவதில்லை. அது ஒவ்வொரு நாளும் இறப்பதற்கான வாய்ப்புடன் பிறக்கிறது. ஒரு நடிகர் விலகலாம். ஒரு தயாரிப்பாளர் விலகலாம். ஒரு platform மாறலாம். Budget கிடைக்காமல் போகலாம். உங்கள்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் வேறு இடத்துக்குப் போகலாம். Project இரண்டு வருடங்கள் அசையாமல் கிடக்கலாம். அப்போது இயக்குநர் அதை இறந்துவிட்டதாக நினைத்துவிட்டால் அது உண்மையிலேயே இறந்துவிடும். காத்திருப்பது மட்டும் போதாது. காத்திருக்கும் காலத்திலும் project-ஐ உயிருடன் வைத்திருக்க வேண்டும். அதுதான் இயக்குநரின் வேலை.


சினிமாவில் நான் கற்றுக்கொண்ட மிகக் கொடூரமான உண்மை ஒன்றும் இருக்கிறது. உங்கள் படத்தைப் பற்றி உங்களைவிட யாருக்கும் அதிகமாகக் கவலை இருக்காது. நான் சொல்வது கொஞ்சம் கடுமையாக இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குநர் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் தயாரிப்பாளர் தனது பணத்தைப் பற்றி கவலைப்படுவார். நடிகர் தனது கதாபாத்திரத்தைப் பற்றி கவலைப்படுவார். ஒளிப்பதிவாளர் தனது frame-ஐப் பற்றி கவலைப்படுவார். Editor தனது rhythm-ஐப் பற்றி கவலைப்படுவார். Platform தனது audience-ஐப் பற்றி கவலைப்படும். ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலை இருக்கும். ஆனால் உங்கள் திரைப்படம் முழுமையாக எப்படி இருக்க வேண்டும் என்ற கவலை இறுதியில் உங்களுக்குத்தான் இருக்கும்.

அதனால் இயக்குநராக நீங்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் திரைப்படத்தை வேறு யாரோ உருவாக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இதற்குள் இன்னொரு முக்கியமான பாடம் இருக்கிறது. உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் உங்களைப் போலவே நேர்மையாக இருப்பார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்கக்கூடாது.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கும் எனக்கு காலம் பிடித்தது.

நான்


நீங்கள் ஒரு project-ஐ உருவாக்குவதற்காக ஐந்து வருடங்கள் போராடியிருக்கலாம். அந்த ஐந்து வருடங்களின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அந்தப் படத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் மற்றொருவருக்கு அது அவருடைய வாழ்க்கையில் வந்துபோகும் இன்னொரு project அவ்வளவுதான். நீங்கள் உங்கள் உயிரை வைத்து ஒரு விஷயத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும்போது, உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அதே அளவு ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.வுதா அவர்கள் எல்லோரும் உங்கள் கனவைப் பார்க்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் எல்லோரும் உங்கள் அளவுக்கு நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். இதைக் கற்றுக்கொண்ட பிறகு மனிதர்களைப் பற்றிய என்னுடைய பார்வையே மாறியது. அதன் பிறகு யாரையும் முழுமையாக சந்தேகிக்கத் தொடங்கவில்லை. அதே நேரத்தில் யாரையும் முழுமையாக நம்புவதையும் நிறுத்திவிட்டேன். நம்பிக்கை இருக்கட்டும். ஆனால் அறிவை மட்டும் நம்புங்கள்.


ஒரு திரைப்படம் வெளியாகும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நம்மோடு நிற்பார்கள் என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். குறிப்பாக நீண்டகால நண்பர்கள். பல வருடங்களாக உங்களுடன் இருந்தவர்கள். உங்கள் எழுத்தைப் பார்த்தவர்கள். உங்கள் போராட்டங்களை அறிந்தவர்கள். உங்கள் கனவைப் பற்றி உங்களைவிட அதிகமாகக் கேட்டவர்கள். ஆனால் திரைப்படம் வெளியாகும் நாளில் அவர்கள் அனைவரும் உங்களோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். சிலர் இருப்பார்கள். சிலர் இருக்கமாட்டார்கள். சிலர் இருப்பதாகச் சொல்லிவிட்டு இருக்கமாட்டார்கள். சிலர் உங்கள் வெற்றியில் மகிழ்வார்கள். சிலர் உங்கள் தோல்வியை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலர் நீங்கள் வெற்றியடையும் போது மட்டும் அருகில் வருவார்கள். இதில் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட துரோகம் என்று எடுத்துக்கொண்டு வாழத் தொடங்கினால் சினிமாவில் நீண்ட காலம் இருக்க முடியாது. மனிதர்களுக்கு அவரவர் வாழ்க்கை இருக்கிறது. அவரவர் கணக்கு இருக்கிறது. அவரவர் பயம் இருக்கிறது. அவரவர் அரசியல் இருக்கிறது. ( இதில் எல்லா அரசியலும் உண்டு.)


ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக்கொள்வதே நமக்கு நிம்மதியைத் தருகிறது. எல்லோரும் நம்முடன் வர வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட வேண்டும். நாம் போக வேண்டிய பாதையில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.

ஒரு திரைப்படம் வெற்றியடைவதற்கும் தோல்வியடைவதற்கும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு நல்ல படம் வெற்றியடையாமல் போகலாம். ஒரு சாதாரண படம் மிகப்பெரிய வெற்றியை அடையலாம். ஒரு திரைப்படம் வெளியாகும் வாரத்தில் வேறு ஒரு பெரிய படம் வரலாம். அரசியல் சூழல் மாறலாம். விநியோகத்தில் பிரச்சினை இருக்கலாம். Promotion சரியாக நடக்காமல் போகலாம். பார்வையாளர்களின் மனநிலை வேறாக இருக்கலாம். ஒரு நடிகரின் image மாறியிருக்கலாம். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த வகையான படத்தைப் பார்க்க மக்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம். சில நேரங்களில் படம் நன்றாக இருக்கும். ஆனால் அது கவனிக்கப்படுவதில்லை. இதற்கெல்லாம் இயக்குநராகிய நாம் ஒவ்வொன்றாக காரணம் தேடிக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையே முடிந்துவிடும். அதனால் இப்போது நான் என்னிடம் சொல்லிக்கொள்வது ஒன்று: சரியாகப் போகவில்லை என்றால் அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிடுங்கள். கவலைப்படாமல் இருப்பது தோல்வியைப் பொருட்படுத்தாமல் இருப்பது அல்ல. அந்தத் தோல்வியில் இருந்து அடுத்த படத்தை கற்றுக்கொள்வதுதான். ஒரு படம் வெளியாகிவிட்ட பிறகு அது நம்முடைய கைகளில் இல்லை. அது பார்வையாளர்களுடையது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். நிராகரிக்கலாம். கவனிக்காமல் போகலாம். அவர்களுடைய முடிவை நாம் கட்டுப்படுத்த முடியாது.

நாம் கட்டுப்படுத்தக்கூடியது அடுத்த படம் மட்டுமே.


எழுத்தாளனாக நான் நீண்ட காலம் இருந்ததால், ஒரு படைப்பின் மீது அதிகமான பற்றை வைத்திருப்பது எனக்கு இயல்பாக இருந்தது. ஆனால் சினிமா அந்தப் பற்றை மெதுவாகக் குறைக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நீங்கள் ஒரு காட்சியை எழுதலாம். அதை உயிரைப் போல நேசிக்கலாம். ஆனால் படப்பிடிப்பில் அது இல்லாமல் போகலாம். நீங்கள் அதைப் பற்றி வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தால் அடுத்த காட்சியை எடுக்க முடியாது. சினிமா தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்.

அதனால்தான் சினிமாவில் ஒரு இயக்குநருக்கு ஒரு விசித்திரமான மனநிலை தேவைப்படுகிறது. அவன் தனது படத்தை ஆழமாக நேசிக்க வேண்டும். அதே நேரத்தில், அது தன்னுடையது அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.


நான் இன்னும் சினிமாவைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த வாக்கியத்தைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒருவேளை நான் இறக்கும் நாள் வரைக்கும் சினிமாவைக் கற்றுக்கொண்டுகொண்டே இருப்பேன். ஒரு நல்ல frame எப்படி உருவாகிறது என்பதை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நடிகரிடமிருந்து எனக்குத் தேவையான நடிப்பை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. Editing-ன் ஆழத்தை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. Sound எவ்வளவு பெரிய கதை சொல்லும் கருவி என்பதை புதிதாகப் புரிந்துகொள்கிறேன். சினிமா எனக்கு இன்னும் ஒரு பள்ளிதான்.

ஒருநாள் இதை முழுமையாகக் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் இருக்கிறது. சினிமாவைச் சுற்றி நடக்கும் அரசியலையும் தந்திரங்களையும் நான் கற்றுக்கொள்வேனா என்பது எனக்குத் தெரியவில்லை. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு முழுமையாக இல்லை.


சினிமாவின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் யாரை எப்போது பயன்படுத்த வேண்டும், யாரிடம் எப்படி பேச வேண்டும், யாருடைய பின்னால் யார் இருக்கிறார்கள், எந்த நேரத்தில் எந்த அரசியல் செய்ய வேண்டும் என்ற கணக்குகளை மட்டும் கற்றுக்கொள்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. ஒருவேளை அது என்னுடைய பலவீனமாக இருக்கலாம். அல்லது அதுவே என்னுடைய பலமாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெரியும்.

சினிமாவைக் கற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சினிமாவுக்காக என்னை முழுமையாக இழந்துவிட நான் தயாராக இல்லை. நான் சினிமாவுக்குள் வந்தபோது என்னிடம் இருந்த இன்னொரு தவறான நம்பிக்கை என்னவென்றால், நன்றாக வேலை செய்தால் அது தானாகவே அங்கீகரிக்கப்படும் என்பதுதான். இலக்கியத்தில் சில சமயங்களில் அது நடக்கலாம். சினிமாவில் அது போதாது.


அதற்காக மனிதர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். யாரிடம் எப்போது பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எப்போது பிடிவாதமாக இருக்க வேண்டும், எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். யார் உண்மையில் உங்களுக்கு உதவுகிறார்கள், யார் உதவுவது போல நடிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். யார் உங்கள் project-ஐ முன்னேற்றுவார்கள், யார் அதை மெதுவாகக் கொன்றுவிடுவார்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு இயக்குநருக்கு கலை அறிவு மட்டும் போதாது. மனித அறிவும் வேண்டும். சினிமாவில் இந்த மனித அறிவு பல நேரங்களில் தொழில்நுட்ப அறிவைவிட முக்கியமானதாகிவிடுகிறது.


யாருடைய ஈகோ எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யார் எதற்காக கோபப்படுகிறார் என்பதை அறிய வேண்டும். ஒரு நடிகருக்கு ஒரு காட்சியை விளக்கும்போது என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளரிடம் எந்த விஷயத்தை இப்போது பேச வேண்டும், எதை பின்னால் பேசலாம் என்பதைக் கணிக்க வேண்டும். இவை எதையும் புத்தகம் படித்துக் கற்றுக்கொள்ள முடியாது. சில நேரங்களில் ஒரு அவமானத்திற்குப் பிறகு கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

சினிமாவுக்குள் வர விரும்பும் இளம் எழுத்தாளர்களிடம் நான் இப்போது கதை பற்றி மட்டும் பேசுவதில்லை. முதலில் அவர்களிடம், உங்கள் கதையை ஒரு வாக்கியத்தில் சொல்லத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்வேன். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளருக்கு இருபது பக்கக் கதையைச் சொல்லி அவருடைய நேரத்தை எடுத்துக்கொள்ள முடியாது. உங்கள் கதையின் இதயம் என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


நீங்கள் எடுக்க விரும்பும் படத்தை மட்டுமல்ல, இப்போது நீங்கள் எடுக்கக்கூடிய படத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். கனவு காண வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஆனால் அந்தக் கனவை உருவாக்குவதற்கான பாதையையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒரு நல்ல குழு தேவை. சினிமா தனிமனிதனின் கலை அல்ல. நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் ஒரு மோசமான குழுவுடன் படம் எடுத்தால் அது பாதிக்கப்படும். அதே நேரத்தில் ஒரு நல்ல குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கடைசி நாள் வரை உங்களுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஒப்பந்தங்களைப் படியுங்கள். உரிமைகள் என்ன, பணம் எப்போது, credit எப்படி, project நின்றுபோனால் என்ன, எந்த medium-க்கான உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். “நம்மை நம்பி வந்திருக்கிறார்கள்” என்று நினைத்து கையெழுத்திடாதீர்கள். நம்பிக்கை இருக்கட்டும். ஆனால் எச்சரிக்கையாக இருங்கள்.


பணம் பற்றிய அடிப்படை அறிவும் இயக்குநருக்கு அவசியம். நீங்கள் தயாரிப்பாளராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு நாள் shooting எவ்வளவு செலவு செய்கிறது என்பதை அறியாத இயக்குநர் தனது படத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியாது.

அதேபோல், உங்கள் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பேசாதீர்கள். சினிமாவில் அதிகமாக பேசப்படும் projects பல நேரங்களில் உருவாகாமல் போய்விடுகின்றன. ஒரு project-க்கு publicity தேவைப்படும் நேரம் வேறு. அது உருவாகிக்கொண்டிருக்கும் நேரம் வேறு. இந்த இரண்டையும் குழப்பாதீர்கள்.

மிக முக்கியமாக, “இல்லை” என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் சம்மதிப்பதால் நல்ல இயக்குநராகிவிட முடியாது. சில விஷயங்களில் சமரசம் செய்யலாம். சில விஷயங்களில் செய்யக்கூடாது. அந்த கோடு எங்கே இருக்கிறது என்பதை project தொடங்குவதற்கு முன்பே உங்களுக்குள் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.


படப்பிடிப்புத் தளத்தில் ego-வை வீட்டிலேயே விட்டுவிட்டு வருவது இன்னும் முக்கியம். உங்களை விட ஒரு assistant ஒரு நல்ல யோசனையைச் சொல்லலாம். ஒரு junior artist ஒரு சிறிய gesture கொடுக்கலாம். ஒரு camera assistant நீங்கள் நினைக்காத ஒரு angle-ஐக் கண்டுபிடிக்கலாம். ஒரு editor நீங்கள் நினைத்ததைவிட சிறந்த rhythm-ஐ உருவாக்கலாம். நல்ல யோசனை எங்கிருந்து வந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இந்த எல்லாவற்றுக்கும் நடுவில் நீங்கள் ஏன் படம் எடுக்கிறீர்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

சந்தையைப் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் சந்தைக்காக மட்டும் எழுதாதீர்கள். வணிக சினிமாவைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் வணிக சினிமா உங்களை முழுமையாக விழுங்கிவிட அனுமதிக்காதீர்கள்.

கலையை காப்பாற்றுவதற்கும் சில சமயம் தந்திரம் தேவைப்படுகிறது. அப்பாவித்தனம் மட்டும் போதாது.

“லிங்கம்” வெளியான நாளில் நான் திரும்பிப் பார்த்தபோது, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாளில் இருந்த மனிதன் நானாக இல்லை. ஐந்து வருடங்களில் ஒரு project உருவானதா என்றால் ஆம். ஆனால் அதைவிட முக்கியமாக அந்த project என்னையும் உருவாக்கியிருந்தது.


என்னுடைய எழுத்து மாறியிருந்தது. மனிதர்களைப் பார்க்கும் விதம் மாறியிருந்தது. சினிமாவைப் பார்க்கும் விதம் மாறியிருந்தது. என் சொந்த அகங்காரத்தைக் கூட வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கியிருந்தேன்.

ஒரு எழுத்தாளனாக நான் நினைத்திருந்த சில விஷயங்கள் சினிமாவில் வேலை செய்யாது என்பதைப் புரிந்துகொண்டேன். அதே நேரத்தில் சினிமா என்னை மாற்ற முயன்றபோது நான் எதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன். இந்த இரண்டிற்கும் இடையேதான் ஒரு இயக்குநரின் வாழ்க்கை இருக்கிறது. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது, சினிமாவில் எனக்கு யாரும் உதவவில்லை என்று சொல்ல விரும்பவில்லை. சிலர் உதவியிருக்கிறார்கள். சிலர் கதவைத் திறந்திருக்கிறார்கள். சிலர் கடினமான நேரத்தில் உடன் நின்றிருக்கிறார்கள். அந்த உதவிகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்றும் இருக்கிறது. இறுதியில் உங்களுக்கு எவரும் உதவி செய்ய வரமாட்டார்கள்.

இந்த வாக்கியம் சோகமானதாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு இது ஒரு விடுதலை.


யாராவது வந்து என்னைக் காப்பாற்றுவார்கள் என்று காத்திருப்பதை நிறுத்திய நாளில்தான் நான் இயக்குநராகத் தொடங்கினேன். யாராவது வாய்ப்பு தர வேண்டும் என்று காத்திருப்பதை நிறுத்திய நாளில்தான் அடுத்த கதையை எழுதத் தொடங்கினேன். யாராவது என்னுடைய திறமையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்தியபோது, என்னுடைய வேலையைப் பற்றியே நான் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

சினிமா உங்களுக்கு வாய்ப்பு தரலாம். ஆனால் அது உங்களுக்கு வாழ்க்கையைத் தராது.

நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதனால் இப்போது ஒரு இளம் எழுத்தாளர் என்னிடம் வந்து, “நான் இயக்குநராக வேண்டும்” என்றால் நான் அவரைத் தடுக்க மாட்டேன். “நீ எழுத்தாளன். எழுத்தை மட்டும் செய்” என்றும் சொல்ல மாட்டேன்.நான் சொல்வது ஒன்றுதான்.

சினிமாவுக்குள் போ.

ஆனால் கண்களைத் திறந்து வைத்துக்கொள்.

தோல்வியடைவாய். அவமானப்படுவாய். சிலர் உன்னை ஏமாற்றுவார்கள். சிலர் உன்னை விட்டு விலகுவார்கள். நீ நம்பியவர்கள் கூட சில நேரங்களில் உன்னோடு இருக்கமாட்டார்கள். உன் படம் நன்றாக இருந்தும் அது கவனிக்கப்படாமல் போகலாம். நீ உன் உயிரைக் கொடுத்து உருவாக்கிய திரைப்படம் சில நாட்களில் மறக்கப்பட்டுவிடலாம். அதற்காக நிறுத்திவிடாதே. எல்லாவற்றையும் கவனி.


Set-ல் இரு. Assistant-களுடன் உட்கார். Light எப்படி வைக்கிறார்கள் என்று பார். Actor எப்படி வேலை செய்கிறார் என்று பார். Editor எப்படி ஒரு காட்சியை எப்படி மாற்றுகிறார் என்று பார். Producer ஏன் ஒரு காட்சியை வெட்டச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள். Sound எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள். சினிமாவின் பொருளாதாரத்தைக் கற்றுக்கொள். அதன் மொழியைக் கற்றுக்கொள். அதே நேரத்தில் மனிதர்களை வாசிக்கக் கற்றுக்கொள். ஆனால் மனிதர்களை வெறும் அரசியலாகப் பார்க்கத் தொடங்கிவிடாதே.

உன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் உனக்காக இருக்கிறார்கள் என்று நினைக்காதே. எல்லோரும் உனக்கு எதிராக இருக்கிறார்கள் என்றும் நினைக்காதே. யாரையும் முழுமையாக நம்பாதே. யாரையும் முழுமையாக சந்தேகிக்காதே. உன் வேலையை மட்டும் தொடர்ந்து செய்.


ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதை அனுபவித்துவிட்டு அடுத்த படத்துக்குச் செல். தோல்வியடைந்தால் அதிலிருந்து இரண்டு விஷயங்களையாவது கற்றுக்கொண்டு அடுத்த படத்துக்குச் செல். கவனிக்கப்படவில்லையென்றால் அதற்காக உன்னைத் தண்டித்துக்கொண்டிருக்காதே.

ஒரு திரைப்படத்தின் வெற்றி உன்னுடைய முழுமையான திறமைக்கான சான்று அல்ல.

அதேபோல அதன் தோல்வியும் உன்னுடைய முழுமையான தோல்வி அல்ல.

திரைப்படம் என்பது பல நூறு மனிதர்களின் உழைப்பு, பல நூறு சூழ்நிலைகளின் சந்திப்பு, பல கணிக்க முடியாத காரணிகளின் முடிவு. அதனால் ஒரு படம் உன்னை வரையறுக்க அனுமதிக்காதே.


ஒரு எழுத்தாளன் இயக்குநராக மாறுவது என்பது கேமராவை இயக்கக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவன் தனது தனிமையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்வது. மனிதர்களை நம்புவதையும் நம்பாமல் இருப்பதையும் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வது. தன்னுடைய படைப்பை நேசித்துக்கொண்டே அதிலிருந்து ஒரு கட்டத்தில் விலகிச் செல்லக் கற்றுக்கொள்வது. வெற்றிக்கு மயங்காமலும் தோல்வியால் உடைந்து போகாமலும் இருப்பதும்.


உங்கள் இலக்கிய வெற்றிகளை எடுத்துக்கொண்டு சினிமாவுக்குள் வராதீர்கள். உங்கள் ஆர்வத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள். உங்கள் தோல்விகளை எடுத்துக்கொண்டு வாருங்கள். கற்றுக்கொள்ளும் மனதை எடுத்துக்கொண்டு வாருங்கள். உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு வாருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் உங்களைப் போல நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்காமல் வாருங்கள். நண்பர்கள் எல்லோரும் கடைசி நாள் வரை உங்களோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்காமல் வாருங்கள். உங்கள் படம் வெற்றி பெறும் என்று உத்தரவாதம் தேடாமல் வாருங்கள்.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டு வராதீர்கள். நீங்கள் ஏன் இந்தக் கதையைச் சொல்ல விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை. அது மட்டும் உங்களுக்குள் உயிரோடு இருந்தால், ஒரு தோல்விக்குப் பிறகும் நீங்கள் மீண்டும் கேமராவை நோக்கி நடக்க முடியும்.


ஒருவேளை அதுதான் ஒரு எழுத்தாளன் இயக்குநராக மாறுவதன் உண்மையான அர்த்தம்.

சினிமா உங்களை ஏற்றுக்கொள்வதற்காக காத்திருக்காமல், நீங்கள் சினிமாவுக்குள் உங்கள் இடத்தை உருவாக்கிக்கொள்வது. அந்த இடம் கிடைத்த பிறகும் அதை நிரந்தரமானது என்று நினைக்காமல் இருப்பது.

ஒவ்வொரு படத்திலும் மீண்டும் புதிதாகத் தொடங்குவது. நான் இப்போது அதைத்தான் செய்கிறேன்.

சினிமாவைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page