top of page

நான் இப்போதும் அங்குதான் இருக்கிறேன்.

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Sep 24
10 min read

வானம் தன் தாய்க்காக அழும்போது,

நான் அந்த வானத்தை அதன் தாயிடமே திருப்பிக் கொடுக்கிறேன்.

திரும்பிச் செல்லும் ஒரு மேகம்

என் கண்ணீரைத் தன்னோடு எடுத்துச் செல்லட்டும்

என்று நான் அழுகிறேன்.

விதிகளை மீறுவதற்காக, இரத்தத்தின் முன் நிறுத்தப்படும்

ஒரு விசாரணைக்குத் தேவையான அத்தனை சொற்களையும்

நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்தச் சொற்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு,

அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்தெறிந்து,

அவற்றிலிருந்து ஒரே ஒரு சொல்லை மட்டும் வரைந்து எடுத்திருக்கிறேன்:

வீடு.

— மஹ்மூத் தர்வீஷ்


1

பேராசிரியர் கர்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கைக் குறித்து இப்போது யாரும் பேசுவதில்லை. ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அருகிலிருந்த அந்தப் பழைய பேக்கரியின் முன் ஒரு செப்டம்பர் மாத வெள்ளிக்கிழமை மாலை அவர் கொல்லப்பட்டதாகத்தான் செய்தித்தாள்கள் முதலில் தெரிவித்தன. ஆனால் அந்த வழக்கைப் பற்றி நான் தேடத் தொடங்கியபோது, செய்திகளுக்கிடையில் இருந்த உண்மையைவிட முரண்பாடுகளே அதிகமாக இருந்தன. சிலர் கொலை பேக்கரியின் வாசலில் நடந்ததாகச் சொன்னார்கள். இன்னும் சிலர், அங்கிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் இருந்த சினிமா அரங்கின் வாசலில்தான் அவர் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு காவல்துறை அறிக்கையில் அது வெள்ளிக்கிழமை. மற்றொரு ஆவணத்தில் வியாழக்கிழமை. அவர் இறந்த நேரமும் இரண்டு அறிக்கைகளில் வேறுபட்டிருந்தது. கொலை நடந்த அன்று மழை பெய்ததாகச் சிலர் சொன்னார்கள்; பெய்யவே இல்லை என்று இன்னும் சிலர் சொன்னார்கள். ஊட்டியில் மழைக்கும் மூடுபனிக்கும் இடையிலான வேறுபாட்டை ஒருவர் சரியாகச் சொல்வது எவ்வளவு கடினமோ, கர்ணனின் வாழ்க்கைக்கும் அவரைப் பற்றிய நினைவுகளுக்கும் இடையிலான வேறுபாடும் அவ்வளவு கடினமானது என்பதை நான் பின்னர்தான் புரிந்துகொண்டேன்.


பேராசிரியர் எங்கே கொல்லப்பட்டார் என்பதைவிட, ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விதான் அவருடைய கதையை எழுதுவதற்கான காரணமாக அமைந்தது. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, கர்ணன் ஒரு கொலை செய்யப்பட்ட பேராசிரியராக மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. அவர் பல வருடங்களாக உருவாக்கப்பட்ட ஒரு மனிதராகத் தெரிந்தார். ஒரு சிறுவனின் கண்களில் தொடங்கிய கோபம், ஒரு தொழிலாளியின் முதுகில் சுமந்த கூடையிலிருந்து பிறந்த கேள்வி, ஒரு கிழிந்த புத்தகத்தின் வழியாக அவனுக்குள் சென்ற உலகம், மலைக்குள் நடந்த ஒரு போராட்டம், பல்கலைக்கழகங்களில் பேசிய சொற்கள், காட்டுக்குள் கேட்ட ஒரு பழங்குடிப் பெண்ணின் கேள்வி, சிறைச்சுவர்களுக்குள் எழுதப்பட்ட கட்டுரைகள்—அவை அனைத்தும் சேர்ந்து அந்த மனிதனை உருவாக்கியிருந்தன.


அவரைச் சந்தித்தவர்கள் சிலர் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னார்கள். சிலர் தாங்கள் உண்மை என்று நம்பியதைச் சொன்னார்கள். சிலர் அவரை நேசித்தார்கள். சிலர் வெறுத்தார்கள். சிலர் அவருடைய புத்தகங்களைப் படித்திருந்தார்கள். சிலர் அவரைப் பற்றி எழுதப்பட்ட செய்திகளை மட்டுமே படித்திருந்தார்கள். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஒரு கதைசொல்லிக்கு, சில நேரங்களில் அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் மனிதர்களை உருவாக்குவது அவர்கள் செய்த செயல்கள் மட்டுமல்ல; அவர்களைப் பற்றிப் பிறர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளும்தான்.


கர்ணனைப் பற்றி நான் முதலில் தெரிந்துகொண்ட மூன்று விஷயங்கள் மட்டும் உறுதியானவை. அவர் ஒரு பேராசிரியர். அவரைக் கொன்றவன் நாக்பூரைச் சேர்ந்த இளைஞன். கொலை ஊட்டியில் நடந்தது. மற்ற அனைத்தையும் நான் ரயில்களிலும் தேநீர்க் கடைகளிலும் காத்திருப்பு அறைகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும், மலைகளில் வாழும் மக்களிடமும், நீதிமன்றப் பதிவுகளிலும், அவருடைய பழைய மாணவர்களிடமும் சேகரித்தேன்.


அந்தத் துண்டுகளிலிருந்து கர்ணனை மீண்டும் உருவாக்கத் தொடங்கினேன்.


2


கர்ணன் பிறந்த கவரெட்டி, ஊட்டிக்கு அருகிலிருந்த ஒரு சிறிய மலைக் கிராமம். தேயிலைத் தோட்டங்களுக்கும் கேரட் வயல்களுக்கும் நடுவே, பெரும்பாலும் மூடுபனிக்குள் மறைந்திருக்கும் நூறு குடும்பங்களுக்கும் குறைவான ஊர். வரைபடங்களில் அதன் பெயர் சில நேரங்களில் கரவெட்டி என்றும், சில நேரங்களில் கரிவெட்டி என்றும் தவறாக அச்சிடப்பட்டிருக்கும். கர்ணன் அதை ஒருபோதும் திருத்தச் சொல்லவில்லை.


“ஊர் தன்னுடைய பெயரைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாதபோது, வேறு எதை காப்பாற்றிக்கொள்ளும்?” என்று ஒருமுறை ஒரு மாணவனிடம் கேட்டிருக்கிறார்.


அவருடைய தந்தை அங்கிருந்த தேயிலைத் தோட்டத்தில் எடை எழுத்தராக வேலை செய்தார். ஒவ்வொரு மாலையும் நான்கு மணிக்கு பெண்கள் முதுகில் கூடைகளைச் சுமந்து எடைக் கொட்டகைக்கு வருவார்கள். அவர்கள் பறித்த தேயிலைக் கொழுந்துகள் தராசில் போடப்படும். எடை எழுதப்படும். அந்த எண்ணிக்கையைப் பொறுத்தே அன்றைய கூலி.


அவருடைய தாயும் அந்தப் பெண்களில் ஒருத்தி.


கர்ணனுக்குப் பதினொரு வயது இருக்கும். ஒரு மாலை அவர் தந்தையுடன் எடைக் கொட்டகையில் உட்கார்ந்திருந்தார். மேலாளரின் ஆள் ஒருவன் வந்து தந்தையின் காதில் ஏதோ சொன்னான். தந்தை உடனே மறுத்தார்.


“அது முடியாது.”

“மேலே என்ன சொல்றாங்களோ அதைக் கேட்கத்தான் நாம இருக்கோம். சொன்னதை மட்டும் செய்ங்க.”

அது தகவல் இல்லை என்பதை அந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை. அது எச்சரிக்கை.


அன்று ஒவ்வொரு கூடையிலிருந்தும் ஒரு கிலோ குறைத்து எழுதப்பட்டது.

பெண்கள் தங்கள் கூடைகளை முதுகிலிருந்து இறக்கும்போது ஒரு கணம் கர்ணனின் தந்தையைப் பார்த்தார்கள். அவர் அவர்களுடைய கண்களைச் சந்திக்காமல் ஏட்டில் குனிந்துகொண்டார்.


அந்த மாலை வீட்டுக்குச் செல்லும் வழியில் கர்ணன் எதுவும் பேசவில்லை.

“என்ன?” என்று தந்தை கேட்டார்.

“அவங்க பறிச்சது ஒரு கிலோ குறைஞ்சிருச்சே.”

தந்தை பதில் சொல்லவில்லை.

“அந்த ஒரு கிலோ எங்கே போச்சு?”

மீண்டும் அமைதி.

“முதலாளி எடுத்துக்கிட்டாரா?”

தந்தை நடந்துகொண்டே இருந்தார்.


அடுத்த நாள் மாலை ராமையா இருக்கும் தொழிலாளர் சங்க வாசகசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார். நாளிதழ்கள் புத்தகங்களோடு தோழர் என்ற சொல்லும் அங்குதான் அறிமுகமானது. அந்த சொல்லுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறதென்பதையும் அரசியல் இருக்கிறதென்பதையும் அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.


அது ஒரு சிறிய கீற்றுக் கொட்டகை. அரிக்கேன் விளக்கு. பழைய செய்தித்தாள்கள். மரப்பெட்டிகளில் குவிக்கப்பட்ட கிழிந்த புத்தகங்கள். ராமையா தேயிலைத் தொழிற்சாலையில் முப்பது ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருடைய ஒரு கண்ணில் பார்வை மங்கியிருந்தது. முதலாளிகளின் பொய்களையும் சுரண்டல்களையும் எதிர்கொண்டு போராடிய அனுபவம் அவரது முகத்தில் இருந்தது.


ராமையா கர்ணனையும் அவனைப் போன்றை சிறுவர்களையும் தினமும் நாளிதழ்களைப் படிக்கச் செய்தார். எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவேண்டுமென சொல்லிக் கொடுத்தார். சிறுவர்கள் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வரும் விளையாட்டுச் செய்திகளை முதலில் வாசித்துவிட்டு அதன்பிறகு சினிமா செய்திகளை வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். கர்ணன் மட்டும் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் வரும் அரசியல் செய்திகளையும் அந்த செய்திகளுக்கு நடுவே அரசியல் தலைவர்கள் ஆவேசமான முகத்தோடு இருப்பதையும் கவனித்தான்.


”இந்த தலைவர்கள் எல்லாம் ஏன் தோழர் எப்பவும் ஃபோட்டோவுல கோவமாவே இருக்கறாங்க...” என ஒரு நாள் ராமையாவிடம் கேட்க, கர்ணனின் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கிப் பார்த்து சிரித்த ராமையா ’அவங்க யாரும் கோவமா இல்ல, கோவமா இருக்கதா நடிக்கிறாங்க... கேமராவப் பாத்ததும் நடிக்கிற வியாதி சினிமா நடிகனுக்கு மட்டுமில்ல நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் இருக்கு கர்ணா... ஒரு வயசுக்கு அப்பறம் இத நீ புரிஞ்சுக்குவ...’ என்றார். கர்ணன் ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் வெளிப்பட்ட பல்வேறு  விதமான முகபாவனைகளைக் கவனிக்கத் துவங்கினான். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் அந்த முக பாவனைகளைக் கவனித்தபோது அவர்கள் ஒவ்வொருவருமே தேர்ந்த நடிகர்களாகத் தெரியத் துவங்கினார்கள்.


தோழர் ராமையா ஒரு நாள் கர்ணனிடம் முதல் நான்கு பக்கங்கள் கிழிந்திருந்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்தார். "இதைப் படிக்கிறதுக்கு முன்னாடி ஒண்ணு கத்துக்கோ  இந்தப் புத்தகம் உனக்கு இந்த வயசுல புரியாம இருக்கலாம், ஆனா பத்து வருசம் கழிச்சு அப்பறம் படிக்கிறப்போ புரியலாம்... உனக்குப் புரியலங்கறதால வாசிக்கிறத கைவிட்றாத.” கர்ணன் அந்தச் சொற்களை தனது இறுதிக் காலம் வரை மறந்திருக்கவில்லை. மாணவர்களிடமும் தன்னைத் தேடி வரும் இளைஞர்களிடமும் அதனை பலநூறு முறை சொல்லியிருக்கிறார். அதை சொல்லி முடிக்கும்போது  ”அந்த வாக்கியம்  ஒரு ஒற்றைக் கண் மனிதனுடையது. எனக் குறிப்பிடவும் அவர் மறந்ததில்லை.


கர்ணனுக்குப் பதினைந்து வயதானபோது தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீலகிரி மலையில் வெவ்வேறு தோட்டங்களிலும் போராட்டங்கள் நடந்ததால் தேயிலைத் தொழில் பெருமளவில் தேக்கமடைந்திருந்தது.  ஒன்பது நாட்கள் நடந்த போராட்டத்தில் பெண்கள் கொழுந்து பறிக்க மறுத்தார்கள். ஆண்கள் தொழிற்சாலையின் வாசலை மிதிப்பதில்லை என உறுதியோடு இருந்தார்கள். மூன்றாம் நாள் பெருமளவில் காவல்துறை தோட்டத்துக்குள் இறங்கியது.  தொழிற்சங்கத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை இரவு பகலென நடந்து சுமூகமான முடிவுகள் எட்டப்படாமல் போனதில் ஐந்தாம் நாள் லத்தி சார்ஜ் நடந்தது. இரண்டு நாட்கள் காத்திருந்த ஆத்திரமும் அந்த மலையின் குளிரும் காவலர்களின் உடலில் இருந்த வன்முறையைத் தீவிரமாகக் கிளறியிருந்தது. எதிரில் இருப்பவரை அடிக்கலாம் என்கிற உத்தரவு  கிடைத்தபின் காவலர்கள் ஆண் பெண் வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை சிறியவர் பெரியவர் என்கிற கட்டுப்பாடுகளும் தகர்ந்து கருணையின் துளி அம்சமும் வெளித்தெரியாதவர்களாக மாறிப்போனார்கள். பைத்தியம் பிடித்த மிருகங்களைப்போல் அப்பாவி தொழிலாளர்களின் மீது பாய்ந்து குதறினார்கள். போராடிய மக்களின் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டு  கொத்து கொத்தாக கைதுசெய்யப்பட்டு கோவை மற்றும் சேலம் மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டார்கள். அந்த மலையிலிருந்த கிராமங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் இருண்டுபோன அந்த நாளில் கர்ணன் ஒரு உண்மையைக் கண்டுகொண்டார். ’எது குற்றம் என்பதை மட்டுந்தான் சட்டம் தீர்மானிக்கிறது. யார் குற்றவாளி என்பதை போலிஸ்காரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களுமே தீர்மானிக்கிறார்கள்.’ அந்த உண்மையை இந்தியாவின் வெவ்வேறு காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் போராட்டங்கவாழும்ளின் வழியாக தனது இறுதிக் காலம்வரை அவர் கண்டார்.



சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் கர்ணனின் குடும்பத்தைப் போல ஏராளமான தொழிலாளர்கள் தங்களது வேலைகளையும் இருப்பிடத்தையும் இழந்து நின்றனர்.  நீலகிரியில் வரலாறு காணாத மழை பெய்த அந்த நாட்களில் மக்களுக்கான பாதுகாப்பைத் தருவது தொழிலாளர் சங்கத்திற்கு பெரும் துயரமாக மாறியது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் நீதி கிடைக்கும்வரை ஓய்வதில்லையென சங்கம் தீவிரமாக வேலை செய்ததோடு முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கைத் தொடர்ந்தது. மனிதன் தனது அடிப்படை உரிமைகளுக்காக பெரும் கூட்டத்துடன் சேர்ந்து போராடும்போது  உலகம் அவனுக்கு சிறிய கூரையாகிவிடுகிறது. தனியொருவனின் நேர்மைக்கும் போராட்டத்திற்கும் ஒரு விலை உண்டு, அந்த விலையை அவன் தனியாகக் கொடுக்க வேண்டியதில்லை என்பதற்குத்தான் சங்கங்கள் இருக்கின்றன.  அந்த வழக்குகளில் தொழிலாளர்கள் வென்று தங்களுக்கான உரிமைகளைத் திரும்ப பெற்றபோது கர்ணனுக்கு சங்கங்களின் மீதும் போராட்டங்களின் மீதும் பெரும் நம்பிக்கை பிறந்தது.

 

கர்ணன் கோயம்புத்தூர் கல்லூரியில் சேர்ந்தார்.   மாணவர் சங்கம். செங்கொடி ஊர்வலங்கள். என தீவிரமான செயற்பாட்டாளராக உருவெடுத்துக் கொண்டிருந்தார். கல்லூரிப் பாடங்களையும் அரசியல் நூல்களையும் தீவிரமாக வாசித்தவர் மார்க்ஸ் அம்பேத்கர் காந்தி கிராம்ஷி என எல்லோரையும் கவனத்தோடு வாசித்தார். அரசியலைப் பொருட்படுத்தாத ஒரு சமூகம் கேளிக்கைகளின் வழியாக அழிந்துபோகும் என்கிற தெளிவு பிறந்ததால் மாணவர்களிடையே அரசியலைக் குறித்து தீவிரமாக உரையாடினார். இருபது வயதிற்குள் பெரும் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் திறனும் அந்தக் கூட்டத்தை அரசியல்படுத்தும் ஆற்றலும் கைகூடியிருந்ததால் கோவையைச் சுற்றியிருந்த கல்லூரிகளிலும் தொழிற்சங்கங்களிலும் அவர் நன்கு அறியப்பட்டிருந்தார். தத்துவமும் அரசியலும் மனிதனை இளவயதிலேயே பண்படுத்தக்கூடும் என்பதற்கு அடையாளமாய் கரணனின் தோற்றம் மாறிப்போயிருந்தது.


கட்சியின் மாணவர் அணியில்  முக்கியமான பொறுப்பிலிருந்த கர்ணனுக்கு கட்சியின் செயல்பாடுகளில் நிறைய விமர்சனங்கள் இருந்தன. அமைப்பில் வேலை செய்கிற ஒருவன் அதன் ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அடிப்படை விதியின் காரணமாக முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொண்டவர் ஒரு எல்லைக்குமேல்  பொறுக்கமாட்டாமல் மாவட்டச் செயலாளரிடம் விவாதிக்கத் துவங்கினான். அவனது விவாதங்களில் இருந்த தீவிரத்தைக் கவனித்த மாவட்ட செயலாளர்  "தோழர் சும்மா எதாச்சும் புத்தகத்த மட்டும் படிச்சிட்டு வந்து அத செய்யனும் இத செய்யனும்னு கேக்காதிங்க... இங்க க்ரவுண்ட் ரியலிட்டியாத் தெரிஞ்சுக்கிட்டுப் பேசனும்.. சும்மா கேள்வி கேட்கிறவன் இந்தக் கட்சிக்குத் தேவையில்லை," என்றார். கர்ணன் நிதானமாக "நான் கேள்வி கேட்கிறதுக்காகத்தான் கட்சிக்கே வந்தேன்."நிதானமாக எனச் சொன்னான். அந்தக் கோவமும் தீவிரமும் அவரை நீண்டநாட்கள் கட்சியில் இருக்கவிடவில்லை.  சில மாதங்களிலேயே அவனுடைய கட்சியின் உறுப்பினர் அட்டை காலாவதியானது; அவன் அதைப் புதுப்பிக்கவில்லை. ஆனால் தன்னை அமைப்பு சாராத கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதை  ஒருபோதும் நிறுத்தவில்லை. அவரது நண்பர்களும் மாணவர்களும் கூட அப்படி அழைக்கத்தான் விரும்பினார்கள்.  



மேல்படிப்பை சென்னையில் முடிக்கும் முன்பாகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதியிருந்தார். அவரது எழுத்துகள் இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களிடமெல்லாம் அவரை அறிமுகப்படுத்தியிருந்தது. வெவ்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் சமூகவியல் பேராசிரியராக வேலை செய்தவர் இறுதியில் நாக்பூரில் ஒரு பல்கலைக்கழகத்தில் நிரந்தரமாக அமர்ந்தார். தமிழ் பேசும் அந்த மனிதன் மராத்திய நகரத்தில் தன் மலையை நினைத்துக்கொண்டு வாழத்துவங்கினார்.

3.

நாக்பூரிலிருந்து சில மணி நேரப் பயணத்தில் தொடங்கும் காட்டுப்பகுதியில் இருக்கிறது கட்சிரோலி. அங்கே கர்ணன் ஆய்வுக்குச் சென்றபோது அவருடைய கல்விசார் மொழியும் அறிவும் உடையத் துவங்கியது. அந்தக் காட்டில்  மக்கள் "அரசியல்" என்று சொல்லை  "நிலம்" என்றும்  "காடு" என்றும் குறிப்பிட்டார்கள்.  "தண்ணீரும்  "எங்கள் வீடும் உரிமைகளுமே அரசியல் என்றார்கள். அரசின் ஆவணங்களில் அந்தக் காட்டை "வளர்ச்சிக்கான வளங்கள் அடங்கிய பகுதி என குறிப்பிட்டிருந்தது. தனது இளமைக்காலத்தில் நீலகிரி மலையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் கண்ட அதே உறுதியும் போராட்ட குணமும் கட்சிரோலி பழங்குடி மக்களிடம் இருப்பதை பேராசிரியர் கண்டுகொண்டார். கவரெட்டியில் அவரது தந்தையின் ஏட்டில் "ஒரு கிலோ தேயிலைக் கொழுந்து   எப்படி ஒரு பெண்ணின் ஒரு நாள் உழைப்பாக இருந்ததோ, அப்படியே இங்கே "வளம்" என்ற சொல்லின் பின்னால் ஏராளமான கிராமங்களின் வாழ்வாதாரம் இருந்தது.


ஒரு வயதான பெண் அவரிடம் கேட்டாள்: "எங்கள் காடு எங்களுடையது இல்லையா?"


கர்ணன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அவளுக்குச் சட்டத்தை விளக்க முடியும். அரசியலமைப்பின் பிரிவுகளைச் சொல்ல முடியும். ஆனால் அந்தப் பெண்ணின் கேள்வி சட்டத்தைவிடத் தீவிரமானது  என்பதை அவர்  அறிவார்.


"நீங்க சொல்றது சரி," என்றார் இறுதியில்.


"அப்போ ஏன் அரசாங்கம் எடுத்துக்க நினைக்கிறாங்க?" என அந்தப் பெண் கேட்டதற்கு கர்ணனிடம் பதில் இல்லை. அன்றிரவு தன் குறிப்பேட்டில் அவர் எழுதினார்:

"ஒரு மனிதனிடமிருந்து வீட்டை எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாகச் சட்டத்தை வழங்கும் அரசு, சட்டத்தைப் பற்றியும் உரிமைகள் பற்றியும் பேசத் தகுதியுடையதா?" அந்தக் கேள்வி பின்னர் ஒரு கட்டுரையாகியது. அந்தக் கட்டுரை அவருடைய வாழ்க்கையை மாற்றியது.


அவர் மீது முதல் வழக்குப் போடப்பட்டபோது கர்ணன் சிரித்தார். "அதிகாரத்தால் செய்ய முடிந்தது இவ்வளவுதானா?” என தனது  நண்பர் அருணிடம் கேட்டார். "இது ஆரம்பம் மட்டுந்தான் தோழர். வழக்கு சிறை இதுக்கெல்லாம் நீங்க பயப்படலையா?" என அருண் ஆர்வத்தோடு கேட்டார்.  "பயமாத்தான் இருக்கு."  என கரணன் அமைதியாகச் சொன்னதை நம்பமுடியாமல் பார்த்த அருண் ”நிஜமாவே பயப்படறிங்களா தோழர்?” எனக் கேட்டார்.


"ஆமா, பயம் இல்லாதவன், முட்டாள். அவன் வீரன் இல்லை. பயம் இருந்தாலும் தான் சரின்னு நினைக்கிறத  பேசனும்.” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். பிற்பாடு சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் அவர் அலைக்கழிக்கப்பட்டபோது தோழர்களிடம் அருண் இப்படிச் சொல்வார். "அவர் எப்போதும் பயந்தார். ஆனால் அதற்காக வெட்கப்படவில்லை."


வழக்குகள் பெருகின. ஒன்று முடியும் முன்பே இன்னொன்று. அவர் பேசிய ஒரே உரையின் மூன்று வேறு பதிப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒரே நாளில் அவர் மூன்று நகரங்களில் இருந்ததாகச் சாட்சிகள் சொன்னார்கள். ஒரு காவல் அதிகாரி அவருடைய எழுத்துக்களைப் பற்றி வாக்குமூலம் அளித்தபோது, அவர் அவற்றை ஒருபோதும் படித்ததில்லை என்பதை வழக்கறிஞர் கண்டுபிடித்தார். இன்னொரு வழக்கில் கர்ணன் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர் என்று சொல்லப்பட்டது. அந்த அதிகாரியிடம் "எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று கரணன் கேட்டார். "ரகசியத் தகவல்." என அதிகாரி நீதிபதியைப் பார்த்துச் சொல்ல, சிரித்தபடியே கர்ணன் தலையசைத்தார். "ரகசியத் தகவலுக்கு ஒரு நல்ல குணம் இருக்கிறது. அதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை." இதைச் சொன்னபோது நீதிமன்றம் நகைச்சுவைக்கனதல்ல எகிற கட்டுப்பாட்டையும் மீறி பார்வையாளர்கள் சத்தமாகச் சிரித்தார்கள்.

 

அவரைக் கைது செய்த நாளன்று பல்கலைக்கழகத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. காவல் ஆய்வாளர் சுரேஷ் ராதோட் அவருடைய அலுவலகத்துக்குள் வந்தபோது கர்ணன் ஒரு மாணவனின் ஆய்வுக் கட்டுரையைத் திருத்திக்கொண்டிருந்தார். "இந்த வாக்கியம் சரியாக எழுதப்படவில்லை," என்றார். அந்த மாணவன் பதற்றத்தோடு கதவருகே நின்ற போலீஸாரைக் காட்டினான். "பார்த்தேன், காத்திருக்கட்டும் என்றார் கர்ணன். கட்டுரையை மாணவனிடம் கொடுத்தவர். "இந்தப் பகுதியை மீண்டும் எழுது." என அழுத்தமாகச் சொன்னார். அந்த தாளைக் கையில் வைத்தபடி குழப்பத்தோடு  "சார், இப்போவா?" "என மாணவன் கேட்க கர்ணன் சிரித்தபடி ”ஆமாம்.” எழுது. நான் திரும்பி வராமலிருந்தாலும் நீ எழுதணும்."நீ என்றார்.


ராதோட் அறைக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார். அவர் கர்ணனை வெறுக்கவில்லை. இதைக் குறிப்பிடாமல் இந்தக் கதையை எழுதுவது அநியாயம். ராதோட் அவருடைய கட்டுரைகளில் ஒன்றைப் படித்திருந்தார்; அது அவருக்குப் பிடித்திருந்தது; அதை  யாரிடமும் சொல்லவில்லை. அவருடைய தந்தையும் காவல்துறையில் இருந்தவர். அதிகாரம் என்றால் பொறுப்பு என்று  வளர்க்கப்பட்டிருந்தார்.. ஆனால் அதிகாரம் மெதுவாகப் பொறுப்பிலிருந்து பிரிகிறது என்பதை வேலைக்குச் சேர்ந்த பிறகுவதான் அறிந்தார்: முதலில் மேலதிகாரியின் உத்தரவு, பின்னர் கோப்பு,  கையெழுத்து, நீதிமன்றம், ஊடகம். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன் மனசாட்சியிலிருந்து ஒரு சிறிய தூரம் நகரவேண்டியிருந்தது.



’ப்ரஃப்சர் உங்களைக் கைது செய்வதற்காக வந்திருக்கிறோம்’ என்பதை ரதோட் கண்ணியமாக தெரியப்படுத்தினார். அறைக்கு வெளியே நின்ற ராதோடையும் மற்ற போலிஸ்காரர்களையும் பார்த்து கர்ணன் கேட்டார்: "உங்களுக்கு நான் குற்றவாளி என்று தோணுதா?" ரதோட் அமைதியாக நின்றார். "சார், அதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்களும் நானும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.” என சொன்னதைக் கேட்டு கர்ணன் மெதுவாகச் சிரித்தார். "அதுதான் உங்களுடைய ஒரே நல்ல விஷயம். இன்னும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று நினைக்கிறீர்கள்." மெதுவாக தனது நாற்காலியிலிருந்து எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.


கர்ணன் காவல் வாகனத்துக்குள் ஏறியபோது மாணவர்கள் பெருந்திரளாகச் சூழ்ந்திருந்தனர். அசம்பாவிதங்கள் நிகழக்கூடுமென ராதோட் உள்ளிட்ட காவலர்கள் அச்சத்தோடு நினைத்துக் கொண்டிருக்கையில் கர்ணன் திரண்டிருந்த மாணவர்களை நோக்கித் திருபினார்.  அவர் கையை உயர்த்தவில்லை. கோஷம் போடவில்லை. வெறுமனே  தலைஅசைத்தார். ’காவல்துறை அவங்களோட பணிய செய்யட்டும். நீங்க எல்லாரும் வகுப்புக்குப் போங்க...” அவரது குரல் அந்தக் கூட்டத்தில் ஒலித்தபின் மாணவர்கள் நிதானமாக அந்த வாகனத்திற்கு வழிவிட்டனர். ராதோட் அந்த ஒழுங்குக்குப் பின்னால் கர்ணனின் மீது அவர்களுக்கிருந்த மரியாதையைத் தெரிந்துகொண்டார்.


அரசியல் என்பது நாடாளுமன்றத்திலும் கட்சிக் கூட்டங்களிலும் மட்டும்  நடப்பதில்லை ஒரு ஆசிரியரைக் காவல்துறை கைது செய்யும்  அந்தச் சிறிய இடத்திலும் நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாணவர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாக மக்களைத் திரட்டினார்கள். அவர் வெளியே நடமாடினால் என்னவெல்லாம் நடக்குமென அரசு அச்சம் கொண்டதோ அதெல்லாம் அவர் சிறைக்குச் சென்ற நாளில் தான் தீவிரமாக பரவியது.

 

சிறை என்பது சுவர்களால் ஆன இடம் என்று கர்ணன் நினைத்திருந்தார். உள்ளே சென்ற பிறகுதான் அது நேரத்தால் ஆனது என்பதை அறிந்தார். ஒரே நாள், மீண்டும் மீண்டும் அதேவிதமான வெளிச்சம், தனிமை, அந்த தனிமையைக் கடந்து வருவதுதான் பெரும் சவாலாக இருந்தது. காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்த மனிதனால் அந்தச் சுவர்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. புத்தகங்கள் இருந்தால் நேரம் சுருங்கும்; புத்தகங்கள் மறுக்கப்பட்ட நாட்களில் நீளும்.  இன்னொரு விதத்தில் அந்த சிறிய அறையிலிருந்துதான் இந்தியாவின் வெவ்வேறு காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளுக்காக அவர் தொடர்ந்து எழுதினார். பசுமை வேட்டை என்ற பெயரில் சட்டீஸ்கர் காடுகளில் வேட்டையாடப்பட்ட அப்பாவிப் பழங்குடிகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் சர்வதேச இதழ்கள் வெளியாகி பரவலாக கவனம் பெற்றது. அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் அவரது உடலை மட்டுமே சிதைக்க முடிந்தது. அவரது சிந்தனை ஒவ்வொரு நாளும் கூர்மையோடும் தீவிரத்தோடும் எழுத்துகளாக வெளிப்பட்டது.


“ஒரு அரசு, தன் மக்கள் எதற்குப் பயப்பட வேண்டும் என்று ஒருபோதும் நேரடியாகச் சொல்லாது. அது பயத்தை ‘பாதுகாப்பு’ என்று பெயர் மாற்றும்; தணிக்கையை ‘ஒழுங்கு’ என்று அழைக்கும்; கண்காணிப்பை ‘பாதுகாப்பின் அவசியம்’ என்று நியாயப்படுத்தும்; எதிர்ப்பை ‘வன்முறை’ என்று குற்றம்சாட்டும்; தன் வன்முறையையே ‘சட்டம்’ என்று அறிவிக்கும். ஒரு கட்டத்தில் மக்கள் இந்த மொழியையே உண்மையின் மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டால், அரசுக்கு அவர்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் அப்போது மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் அச்சங்களைப் பற்றியும், தங்கள் எதிர்ப்பைப் பற்றியும் அரசே உருவாக்கிய மொழியில்தான் பேசத் தொடங்கிவிடுவார்கள்.” ஒரு கட்டுரையில் அவர் எழுதிய இந்த வார்த்தைகள் பல அரசியல் மேடைகளில் மேற்கோள் காட்டப்பட்டன. கர்ணன் என்பது பெயரல்ல, ஒரு சிந்தனை என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள்.


ஒருமுறை அருண் சந்திக்க வந்தபோது: "வெளியே மழை பெய்கிறதா?" என ஆர்வத்தோடு கர்ணன் கேட்டார். அருண் "ஆமாம்." என்றார். கர்ணன் நிதானமாக சுவரை வெறித்தபடி "இங்கே அது தெரியாது. சில நேரங்களில் வெளியுலகம் ஒரு வதந்தி மாதிரி ஆகிடுது. காடு மலை ஆறுகள் எல்லாம் எனக்கு கொஞ்ச நாள் ல வெறும் சொற்களா மட்டுந்தான் நினைவில இருக்குமோன்னு தோணுது... இந்த சிறையிலயே என்னோட நாட்கள் முடிஞ்சிடலாம். ஆனா  நான் எழுதின அவ்வளவும் யாருக்காக எழுதினேனோ அவங்க கிட்ட போய்ச் சேந்துடனும்.” என உறுதியோடு சொன்னார்.


நான்கு ஆண்டுகளில் அவரது  உடல் கடுமையாகச்  சிதைந்தது. நோயுற்ற படுத்தபோது மருத்துவ உதவி கிடைக்க தாமதமானது. ஆனால் அவரது உறுதி குலையவில்லை. அடைத்துவைக்கப்பட்ட காலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்தியாவின் வெவெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மாணவர்களும் அறிஞர்களும் அவரது விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். அவரது சிந்தனைகளை  புத்தகங்களாக வாசித்த மக்கள்  அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புவது தனிமனிதனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கினார்கள்.


சிறையில் அவர் எல்லோருக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தார். பேராசிரியர் என கைதிகளாலும் காவலர்களாலும் மரியாதையோடு அழைக்கப்பட்டார். எடை குறைந்து மெலிந்து மெதுவாகப் பேசினாலும் அவரது  வார்த்தைகளில் ஆழமிருந்தது.. "அவங்க உங்களைப் பாத்து ஏன் இவ்வளவு பயப்படுறாங்க?" என்று ஒரு இளம் கைதி கேட்டான். "என்னைக் கண்டு அல்ல, நான் பேசும் விஷயங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். தத்துவத்தைக் கண்டு அஞ்சும் ஒரு அரசு தற்குறித்தனமானது. தற்குறிகள் ஒரு தேசத்தை ஆளத் துவங்கினால் குற்றங்கள் நியாங்களாகும், அறம் வீழ்ந்து அநீதி பெருகும். அப்படி நடக்கக்கூடாதென்றுதான் நானும் என்னைப் போன்றவர்களும் போராடுகிறோம். எங்களது போராட்டம் உங்களப் போன்றவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டும் என்பதை நினைத்துதான் அதிகார வர்க்கம் அச்சப்படுகிறது. எந்த அரசுமே மக்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டு அச்சப்படுவதில்லை, அவர்கள் ஒன்றாகச் சிந்திப்பதைக் கண்டு அச்சப்படும். சிந்தனை வேறு எதையும்விட வேகமாக பயணிக்க கூடியதில்லையா?”  என  நிதானமாகச் சொன்னார்.


4. 

 நாக்பூரில் வினாயக்கின் வாழ்க்கையில் வேறு விதமாக அரசியல் நுழைந்தது.  அப்போது அவனுக்குப் பதினேழு வயது. படிப்பில் சிறந்தவனோ அல்லது மோசமானவனோ  இல்லை. அவனைப் பற்றிச் சொல்வதற்கு பெரிய கதை எதுவும் இருந்ததில்லை. ஒருநாள் அவனது நண்பன் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றான். நூறு இளைஞர்கள். சாதாரண உடைகள். மலிவான தொலைபேசிகள். கடுமையான கோடைகாலத்தின் மாலைநேரம் அது. எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தோடு கூடியிருந்தார்கள், தான் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் எனத் தெரியாத குழப்பத்தில் நின்றவனின் பெயர் அழைக்கப்பட்டது. கூட்டத்திலிருந்து விலகி மேடையை நோக்கி நடந்ந்தவனை அங்கிருந்தவர் புன்னகையோடு எதிர்கொண்டார். அவனுக்கு ஓர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. அவனது தோளில்  கை வைத்து. "இன்றிலிருந்து நீ எங்களோட ஆள்." என்றார். அந்த நான்கு வார்த்தைகள் அதுவரை இல்லாதமகிழ்ச்சியை அவனுக்குத் தந்தன. அவர்கள் தந்த அடையாளத்தோடு சாலையில் சென்றபோது சிலர் விலகி நடந்தார்கள், பலர் அச்சத்தோடு வணக்கம் வைத்தார்கள். தான் கவனிக்கப்படுகிறோம் என்கிற போதை அவனுக்குள் நிரந்தரமானதொரு  அகங்காரத்தைக் கொடுத்தது.


அதன் பிறகு அவர்களுக்கு  ஒரு புதிய வரலாறு சொல்லப்பட்டது. வீரர்கள், துரோகிகள், படையெடுப்பாளர்கள், புனித நிலம், அவமானம், பழிவாங்க வேண்டிய கடமை என ஏராளமாகக் கற்பிக்கப்பட்டது.  வினாயக் அதை முழுமையாக நம்பினான்; ஏனெனில் அந்த வரலாறு அவனுக்குக் கடந்த காலத்தைச் சொல்வதற்கு மாறாக அவனுடைய நிகழ்காலத்துக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவன்  இப்போது தனிமையில் இருந்த இளைஞன் இல்லை; ஆயிரம் ஆண்டுகளின்  வாரிசு. இந்த தேசத்தை தூய்மைப்படுத்தும் மாபெரும் இயக்கத்தின் ஊழியன். தனது லட்சியத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யும் உறுதியோடு இருந்தான்.

 

அவனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்  அவனுக்கு எதிரியைக் கொடுத்தார்கள். அவர் ஒரு குறிப்பிட்ட மனிதன் அல்ல. ஒரு சமூகம். ஒரு சிந்தனை.  ஒரு பத்திரிகையாளர். ஒரு பேராசிரியர். "அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள்." எனச் சொல்லப்பட்டபோது அவன் புரிந்துகொள்ளமுடியாமல் ஏன் எனக் கேட்டான். ’நாம் யார் என்பதற்காக? நமது இந்த அடையாளத்திற்காக. இந்த தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் புல்லுறுவிகள் அவர்கள் என வெறுப்போடு சொன்னபோது வினாயக்கும் அந்த வெறுப்பின் தீவிரத்தைப் பகிர்ந்துகொண்டான். தனது அடையாளத்தைப் பற்றிப் பெருமைப்படத் தொடங்கிய அதே நேரத்தில் மற்றவர்களின் அடையாளத்தை தீவிரமாக வெறுக்கக் கற்றுக்கொண்டான்.

 

கர்ணனின் கட்டுரைகள் எதையும் வினாயக் வாசித்ததில்லை.  அவனிடம் வந்தது அவற்றின் மீது எழுதப்பட்ட  விமர்சனங்கள்.  "கர்ணன் நமது புன்னிய தேசத்தையும் அதன் பண்பாட்டையும் வெறுக்கிறார்.” என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட விமர்சனங்களும்  அதோடு ஒரு  காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது.  அதில் கர்ணனின் உரை வெட்டி ஒட்டப்பட்டிருந்தது: அவரது வார்த்தைகள் வெட்டி ஒட்டபோது புதிய அர்த்தங்களைக் கொடுத்தது. "இந்த நாட்டுக்கு எதிராக…" என  சொல்லிக் கொண்டிருக்கும்போதே சில விநாடிகள் அமைதி. பின்பு தொடர்பே இல்லாமல் வேறு செய்தியோடு.  கர்ணனின் குரல். அந்த இடைவெளியில் இருந்த உண்மைகள் மறைக்கப்பட்டன. அந்தக் காணொளியைக் கண்ட வினாயக்கின் கோபம் உயர்ந்தது. அவனுக்குத் தெரியாது, நிறைய வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. அந்த வார்த்தைகளில் கர்ணன் சொல்லியிருந்தது: " இந்த நாட்டுக்கு எதிராக நான் சிந்திப்பதாகச் சொல்கிறார்கள், இல்லை நான் மக்களை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மட்டுமே சிந்திக்கிறேன்.”.

( தொடரும் )


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page