top of page

நினைவில் காடுள்ள மிருகம் - 6

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
1 day ago
11 min read


 

 

அடுத்த நாள் காலை இரண்டு காவலர்கள் தேவகியின் வீட்டுக்கு வந்து அவளுடைய  தந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவரின் கையைப் பற்றி இழுத்த ஒரு காவலர் ”ஸ்டேஷன் வரைக்கும் வாங்க உங்கள விசாரிக்கனும்” என கடுமையாகச் சொன்னார்.  அவசரமாக ஓடிவந்த தேவகி தந்தையின் கையைப்பற்றியிருந்த காவலரை விலக்கிவிட்டு ”என்ன விசாரிக்கப் போறிங்க..? வயசுல பெரியவர் கிட்ட இப்பிடித்தான் நடந்துக்குவிங்களா?” என சத்தம் போட்டாள்.  அவளது குரலிலிருந்த எதிர்ப்பைக் கவனித்த போலீஸ்காரன் ”ந்தா பாரு.. பொம்பளையாச்சேன்னு பாக்கறேன்..  இல்லன்னா காதும் காதுமா அறஞ்சிருவேன்... உங்கப்பா மேல புகார் வந்திருக்கு.. விசாரிக்கனும்... மரியாதையா வரச் சொல்லு..” என்றான்.  தேவகி அந்தக் குரலுக்கு அஞ்சுகிறவளாக இல்லை. 


”எந்த நாயி எங்கப்பன் மேல புகார் குடுத்தது. சக்திவேலா? எவ்ளோ காசு குடுத்தான் உங்களுக்கெல்லாம்... இவ்வளவு நாளா எந்தக் கடனையும் கேக்காத நாய் இன்னிக்கி ஏன் கேக்குது? ஏன்னா நேத்து ராத்திரி அந்த நாயி இங்க எங்கிட்ட பொறுக்க வந்து செருப்படி வாங்கிட்டுப் போச்சு... அதுக்குப் பழி வாங்க இப்ப உங்கள அனுப்பி இருக்கு.” 


என அவள் சத்தம்போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களூம் கூடிவிட்டார்கள். பாதிக்கும் மேல் அவளது உறவினர்கள். கூட்டத்தில் திருத்தமாக உடை அணிந்திருந்த  ஒரு இளம் பெண் காவலர்களை நோக்கி முன்னால் வந்தாள். ’அவரக் கூட்டிட்டுப போகனும்னு முதல்ல இங்க ஊர்ல இருக்கவங்க கிட்ட பேசனும்... சும்மா உங்க இஷ்டத்துக்கு செய்யலாம்னு நெனச்சா சும்மா விட மாட்டோம்...” என்றாள். தங்களைச் சூழ்ந்திருக்கும் எதிர்ப்பைக் கவனித்த காவலர்கள் பணிந்தார்கள்.

”ந்தா பாருங்க.. .சக்திவேல் கிட்ட இந்த பெரியவர் நிறைய பணம் வாங்கிட்டு திருப்பித் தரலைன்னு ஆதாரத்தோடு புகார் கொடுத்திருக்காரு.. இன்ஸ்பெக்டர் விசாரிக்கனும்னு சொல்றாரு,… எங்ககிட்ட வாதம் பண்னாம ஒழுங்கா அனுப்பி வெச்சா எல்லாருக்கும் நல்லது..” 


சூழலைப் புரிந்துகொண்ட தேவகியின் தந்தை ”விசாரிக்கனும்னு தான சொல்றாங்க “சொல்றாங், நான் போயிட்டு வரேன்,” என்றார். தேவகியும் அவரது உறவினர்களும் அவரை போக அனுமதிக்கவில்லை. ’நம்ம ஊர் ஸ்டேஷன் தான.. ஒன்னும்  பிரச்சன இல்ல... நான் போயிட்டு வரேன் என்று சொன்னபோது ’சரி அப்போ தனியா போகவேணாம்.. நாங்க ரெண்டு பேர் கூட வரோம்.” என ஒரு ஆள் சொல்ல தேவகியின் தந்தை சம்மதித்தார். போலிஸ்காரர்கள் அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தார்கள்.  காவலர்கள் ஒரு வண்டியிலும் தேவகியின் தந்தையோடு ஊர்க்காரர்கள் இரண்டு பேரும் தனி வண்டியிலுமாக அவர்கள் கிளம்பிச் சென்றதை எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அவளுடைய தந்தை கடன் வாங்கியிருந்ததை மறுக்கவில்லை. வறட்சியிலும் விளைச்சல் குறைந்த ஆண்டுகளிலும் கடன் வாங்காமல் அந்தக் குடும்பம் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. கொடுத்த பணத்துக்கான கணக்கை சக்திவேல் வைத்திருந்தான்; திருப்பிக் கொடுத்த பணத்துக்கான சான்றுகள் மட்டும் குடும்பத்திடம் முழுமையாக இல்லை. சில தொகைகளுக்குப் பழைய ரசீதுகள் இருந்தன. சிலவற்றைச் சந்தையில் விளைச்சலை ஒப்படைத்தபோதே கழித்துக்கொண்டதாகத் தந்தை சொல்லியிருந்தார். இப்போது அந்த இடைவெளிகளுக்குள் ‘மோசடி’ என்ற சொல்லை நுழைப்பது எளிதாகியிருந்தது.


மதனுக்கும் மங்கிலிக்கும் செய்தி கிடைத்ததும்  அவர்கள் கிளம்பி வந்தார்கள்.   வாசற்படியில் அமர்ந்திருந்த தேவகிமதனைக் கண்டதும் எழுந்தவள் சோர்வாக ”கடவ வாங்கிட்டு மோசடி பண்ணிட்டோம்னு  அப்பாமேல புகார் கொடுத்திருக்கான். என்மேல என்ன புகார் குடுத்திருக்கான்னு தெரியல.” என்று சொன்னவளின் அருகில் அமர்ந்த மங்கிலி திரும்பி மதனைப்  பார்த்துவிட்டு ”நாம இந்த பிரச்சனைய முதல்ல ஊர்ப்பெரியவங்கிட்ட பேசுவோம்.” என்றாள். நம்பிக்கையில்லாமல் பார்த்த தேவகி ’எல்லாரும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க மங்கிலி உனக்குத்தான் தெரியுமே?’ எனச் சொல்ல மதன் நம்பிக்கையளிக்கும் விதமாக ”பரவால்ல ஊர்க்காரங்க மனசுல என்ன இருக்குன்னு நம்மளுக்குத்  தெரியனும்ல அதுக்காகவாச்சும் பேசிப் பாத்துடலாம்..” என்றான்.  பிற்பகலுக்குமுன் தேவகியின் உறவினர்கள் சிலர் வந்து அவர்களோடு இணைந்துகொண்டார்கள்.


ஊர்ப்பெரியவர்கள் கோவில் நிர்வாகக் கட்டடத்தின் முன்புற அறையில் காத்திருந்தார்கள்.  சுவரில் கடந்த ஆண்டுத் திருவிழாவின்போது எடுக்கப்பட்ட  புகைப்படம் தொங்கியது. அதன்  நடுவில் சக்திவேல்; அவனைச் சுற்றி ஊரின் முக்கியமானவர்கள். அவன் கொடுத்த நன்கொடையால் புதுப்பிக்கப்பட்ட மண்டபத்தின் திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படம் அது.  தேவகி பேசி முடிக்கும் வரை யாரும் இடைமறிக்காமல் காத்திருந்த ஊர்க்காரப் பெரியவர் “சக்திவேல் கோயிலுக்கும் இந்த ஊருக்கும் எவ்வளவு கொடுக்கிறார்னு  என்று உங்களுக்குத் தெரியும். அதுமில்லாம நீங்க அவர்கிட்ட வாங்கின காசத்தான திருப்பிக் கேக்கறாரு... அதக் கொடுக்கலைங்கறப்போ  போலிஸ்ல புகார் பண்ணி இருக்காரு, இப்ப இந்த பிரச்சனைல உங்களுக்கு ஊர் சப்போர்ட்டுக்கு வந்தா உங்களால மத்த  குடும்பமும் பாதிக்குமே” 

“இருவது வருசம்  முன்ன நம்ம ஊருக்குப் பொழைக்க வந்த நாய் அது...  இன்னிக்கி நாலு காசு அவன் கைல இருக்கவும் அவன் போட்ற எலும்புத் துண்டுக்கு நீங்க எல்லாம் வாலாட்டிட்டு இருக்கீங்க..” என  தேவகி சீறினாள். சக்திவேலின் மாமனார் கூட்டத்திலிருந்து எழுந்து ’ந்தா .. என்ன மரியாத இல்லாம பேசிட்டு இருக்க... என் மகளக் கட்டி இருக்கான். அவனுக்கும் இந்த ஊருல எல்லா உரிமையும் இருக்கு. கடன் வாங்கிட்டுத் திருப்பிக் குடுக்க துப்பில்லாம இருந்துக்கிட்டு என் மருமகன நாயி நரின்னா சொல்ற..” என ஆத்திரத்தோடு இறங்கி வர, ஊர்க்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.  


”காசு குடுத்தவன் திருப்பி காச தரலன்னா போலிஸுக்குப் போகத்தான் செய்வான் தேவகி, உன் தனிப்பட்ட பிரச்சனைய ஊர்ப் பிரச்சனையா ஆக்காத..” என  ஊர்த்தலைவர் எழுந்ந்து கண்டிக்க, தேவகி அவரை நெருங்கி ’எது என் தனிப்பட்ட பிரச்சன...   அவன் எதுக்காக இதையெல்லாம் செஞ்சான்னு உங்க யாருக்கும் தெரியாதுல்ல... இன்னிக்கி எனக்கு வந்த நெலம நாளைக்கு உங்க வீட்டுல வந்தா அப்பயும் இத தனிப்பட்ட பிரச்சனைன்னு தான் சொல்லுவிங்களா?’ என கத்தினாள். அறையில் பதில் இல்லை. அந்த மௌனம் அவர்களின் பயத்தைவிடவும் அவனிடம் வாங்கியிருந்த பணத்தைதான் காட்டியது. தன்னைச் சுற்றியிருந்தவர்களை எல்லாம் எச்சிலை தின்று வாழும் புழுக்களைப்போல் பார்த்தவள் ”சரி என் தனிப்பட்ட பிரச்சனைய எப்பிடி பாத்துக்கனும்னு எனக்குத் தெரியும்... நானே பாத்துக்கறேன்.” எனச் சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறியபோது நிர்வாகக் கட்டிடத்திற்கு கீழே இருந்த பள்ளிக்கூடத்தில் மதிய உணவுக்கான மணி அடிப்பதற்கும் ஊட்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்து ஹாரன் அடித்தபடியே வந்து  நிற்பதற்கும் சரியாக  இருந்தது.


பஞ்சாயத்திற்கு வந்திருந்த கூட்டம் குசுகுசுவெனப் பேசியபடி அவளைக் கடந்து செல்ல மதனும் மங்கிலியும் அவளுக்குப் பின்னால் பொறுமையாக நின்றிருந்தார்கள். தேவகியின் உறவினர்கள் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் குழப்பத்தோடு பார்த்தபோது  

“நல்ல பெருமாளைப் பார்க்கலாம்,” என்றான் மதன். தேவகிக்கும் அதுதான் சரியான யோசனையாகத் தோன்றியது.


நல்ல பெருமாள்  கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகாலமாக செயல்படுகீறவர் என்பதால் அந்தப் பகுதியில் எல்லோருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. தொழிலாளர்களுக்கான. கூலி பாக்கி, குத்தகை நிலத் தகராறு, தொழிலாளர்களுக்கான்காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுப்பது போன்ற பிரச்சினைகளில் மக்களோடு  நின்றவரை, சிலர் கட்சிக்காரர் என்றும் இன்னும் சிலர் தோழர் என்றும் அழைபபர்கள்.  மதன் தேவகியோடும் அவர்களது உறவினர்களோடும்  அவருடைய வீட்டிற்கு வந்தபோது வாசலில்   மங்கிய சிவப்பு நிறப் பதாகை தொங்கியது. அது சிறிய வீடு. நெரிசலாக வீடுகள் இரைந்து கிடக்கும் சிறிய வீதியில் புதிய ஆட்களைப் பார்த்து நாய்கள் குரைத்தன.   சிதறிய செய்தித்தாள்களுக்கு நடுவிலிருந்து பனிக்குல்லாவோடும் ஸ்வெட்டரோடும் வெளியே எட்டிப் பார்த்த நல்லபெருமாள் ஆட்கள் நிற்பதைக் கண்டு எழுந்து வந்தார். தேவகியை அடையாளம் கண்டுகொண்டதும் ’வாம்மா.. எல்லாரும் வாங்க..’ என அழைத்து முன்னறையில் அமர வைத்தார். நடந்த எல்லாமும் அவருக்கு முன்பே தெரிந்திருந்தது.


”ஊர்ப்பஞ்சாயத்துல என்ன சொல்றாங்க...?” எனக் கேட்டவரிடம்  ’எல்லாரும் அவன் பக்கமா நிக்கிறாங்க” என்றாள். புரிந்துகொண்டு தலையசைத்தவர் புகார் எப்போது கொடுக்கப்பட்டது, கடன் தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா? இதற்கு முன் நோட்டீஸ் அனுப்பினார்களா என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு எல்லாவற்றுக்குமான பதில்களைக் குறிப்பெடுத்துக் கொண்டார்.


 தேவகி, மதன், மங்கலி, அவளுடைய உறவினர்கள் இருவர் காவல் நிலையத்துக்குச் சென்றார்கள். வாசலில் இருந்த காவலர் அவர்களை  காத்திருக்கச் சொல்ல அவர்கள் அமைதியாக பெஞ்சில் அமர்ந்தார்கள்.  சுவர்க் கடிகாரத்தின் முள் நகர்ந்தது. அடுத்த அறையில் யாரோ கஒருவர் சத்தமாகப் பேசினார்; வாக்கிடாக்கியின் ஒலி இடைவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்க,  தேவகி அந்தக் கதவுக்கு அப்பால் எட்டிப் பார்த்தாள்.  அவளுடைய தந்தை அந்த அறைகளில் ஒன்றில் இருப்பார் என்ற எண்ணமே அவளை அமைதியாக உட்கார விடவில்லை.

ஆய்வாளர் அழைத்ததும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.  அந்த  அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்த தேவகியின் தந்தை மகளைப் பார்த்ததும் எழ முயல, காவலர் கையால் சைகை செய்து மீண்டும் உட்கார வைத்தார். தேவகி  அந்த நிலையில் தன்னைப் பார்ப்பதை தாங்கமுடியாமல் தனது கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.


”அவரு சீனியர் சிட்டிசன்... அதுக்காகவாச்சும் கெளரவமா நடத்தனும்...” என நல்லபெருமாள் இன்ஸ்பெக்டரிடம் கோவப்பட ”இதுக்கு மேல என்ன ஸார் கெளரவமா நடத்தறது? பெஞ்சுல தான உக்கார வெச்சிருக்கோம்.” என இன்ஸ்பெக்டர் கேலியாகச்  சொன்னார்.  தேவகியின் பின்னால் நின்ற மதனையும் மங்கிலியையும் குறிப்பாகப் பார்த்து முகம் சுளித்த இன்ஸ்பெக்டர் ’நீங்க ரெண்டு பேரும் யாரு? உங்களுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? பொழைக்க வந்த இடத்துல உங்களுக்கு ஏண்டா இதெல்லாம்.. வெளியே போங்க..” என சத்தம் போட, நல்ல பெருமாள் அவசரமாக ’ஏன் ஸார் அவங்கள வெரட்டறீங்க... இந்த போலிஸ் ஸ்டேஷனுக்குள்ல யார் வரனும் வரக்கூடாதுன்னு எதும் சட்டம் இருக்கா? இருந்தா காட்டுங்க... உழைக்கிறவன் எந்த ஊருக்குப் போனாலும் அவன மாதிரி இருக்கவனோட பிரச்சனைல நிக்கத்தான் செய்வான்... அதுக்கு நாடு மொழி மதம் உறவுன்னு எதும் அவசியம் இல்ல..’ என்றார்.


”பெருமாள்  உங்க கட்சித் தத்துவத்த எல்லாம் ஸ்டேஷனுக்கு வெளில பேசுங்க... இப்ப  எதுக்கு வந்திங்களோ அத பேசுங்க..” என்றவர் மதனை நோக்கி ’உனக்கு திரும்பச் சொல்லனுமா போடா வெளிய..” என கத்தியபடியே நாற்காலியிலிருந்து எழ, மதன் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு வெளியே வந்தான். இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகள் மாறத் துவங்கியபோது வெளியே இருந்து இரண்டு பெண்காவலர்கள் அவசரமாக உள்ளே வந்து தேவகியைப் பிடித்துக் கொண்டார்கள். நடப்பதைப் பார்த்துக் குழம்பிப் போன நல்ல் பெருமாளும் தேவகியின் உறவினர்களும் ’என்ன ஸார் பன்றீங்க எதுக்கு அவளப் பிடிச்சு உக்கார வெக்கிறீங்க..” எனக்  கேட்டார்கள். மேசையிலிருந்த மருத்துவர் சான்றிதழ் புகார் எழுதப்பட்ட காகிதம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டிய இன்ஸ்பெக்டர் ”நேத்து ராத்திரி காசு கேட்டு வந்த சக்திவேல இந்தப் பிள்ள பயங்கரமான ஆயுதத்தால தாக்கி  இருக்கா. அதுல காயம்பட்டு அவன் ஆஸ்பத்திரில படுத்திருக்கான்.  இவமேலயும் இவங்க அப்பன் மேலயும்  எஃப் ஐ ஆர் போடத்தான் போரேன்...” என்றார். தேவகி தன்னை அந்தக் காவலரின் பிடியிலிருந்து விலக்கிக்கொள்ள முயன்றபடியே ’அதுல இருக்கது எல்லாம் பொய். அவன் நேத்து ராத்திரி என் வீட்டுக்கு வந்து என்கிட்ட தவறா நடந்துக்கப் பாத்தான். நான் தற்காப்புக்காக மட்டுந்தான் அவன அடிச்சேன்..” எனச் சொல்ல இன்ஸ்பெக்டர் ’இந்தக் கதைய எல்லாம் நீ கோர்ட்டுல சொல்லிக்க...” என்றபடியே அவளை கூட்டிப்போகச் சொல்லி பெண் காவலர்களிடம் உத்தரவிட்டார்.


”ஸார் என்ன நெனச்சிட்டு இருக்கீங்க... இந்தப் பெரியவர் மேல இருக்க புகாரே பொய்யின்னு வந்து பேசிட்டு இருக்கோம்.. நீங்க அந்தப பிள்ளை மேலயும் இப்ப எஃப் ஐ ஆர் போடுவிங்களா? அவன் டாக்டர் சர்டிஃபிகட் குடுத்தான்னா சொல்றதெல்லாம் உண்மையா ஆகிருமா... சாட்சி இருக்கா... இந்தப் பெரியவர கூட்டியாந்தீங்களே கடன் கேட்டு இதுக்கு முன்னாடி அவன் நோட்டீஸ் குடுத்தானான்னு கேட்டிங்களா?”அவங்க ரெண்டுபேரையும் இப்பவே ரிலீஸ் பண்ணனும்.. .இல்லன்னா ராத்திரியோட ராத்திரியா ஊர் மக்கள திரட்டி உங்க ஸ்டேஷன் முன்னால போராட்டம் பண்ணுவோம்,.,” என நல்ல பெருமாள் ஆத்திரமாகச் சொல்ல இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் நிதானமிழந்தார். தனது அறையிலிருந்து வெளியேறி ஸ்டேஷனுக்குப் பின்பக்கமாகச் சென்று புகைப்பிடித்தார். ஒரு கான்ஸ்டபிள்  தண்ணீர் போத்தலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துவிட்டு ”ஸார் ஏற்கனவே ஆட்கள் கிட்ட தகவல் சொல்லிட்டுத்தான் வந்திருப்பாங்க போல... ஸ்டேஷன் வாசல்ல பத்து இருபது பேர் வந்துட்டாங்க.. எலலம் லேடீஸா வேற இருக்காங்க... இதுக்குமேல ஹோல்ட் பண்ணி வெச்சா நம்மளுக்குத்தான் பிரச்சன,.” எனச் சொல்ல இன்ஸ்பெக்டர் சிகரெட்டைடத் தூக்கிப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.


”இங்க பாருங்க பெருமாள். சட்டப்படி என்ன செய்யனுமோ அதத்தான் நான் செய்றேன். இந்தப் பொண்ணு இப்பவர எந்தப் புகாரும் குடுக்கல, முதல்ல புகார் குடுத்தது அவந்தான்.. அப்ப யார நாங்க விசாரிகக் முடியும்... ”  இந்தமுறை இன்ஸ்பெக்டரின் குரலில் முன்பிருந்த ஆத்திரமில்லை.

”ஸார் அவனுக்கு எதிரா புகார் குடுத்தா அவன் பத்து ரவுடிகள அனுப்பி அடிப்பான். இல்லயின்னா யாரையும் இவங்களுக்கு வேல குடுக்கவிடாம செய்வான். அதுக்குப் பயந்துகிட்டு குடுக்காம இருந்திருப்பாங்க.. ” என நல்ல பெருமாள் சொல்ல, ’சரி அந்தப் பொண்ண ஒரு புகா எழுதிக் குடுக்கச் சொல்லிட்டு கூட்டிட்டுப் போங்க... ஆனா நான் திரும்ப விசாரிக்கக் கூப்பிட்டா  அப்பா மக ரெண்டு பேரும் வரனும்,,” எனச் சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் அங்கிருந்து வெளியேறினார். அங்கு நடந்த எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த  மதனும் மங்கிலியும் இன்ஸ்பெக்டர் செல்வதைப் பார்த்துவிட்டு மீண்டும் தேவகியிடம் சென்றார்கள்.


காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் தேவகிக்கு அவமானத்தில்  உடல் நடுங்கியது. மங்கிலி அந்த நடுங்கிய கையைப் பற்றிக்கொள்ள ’நாங்க என்ன தப்பு செஞ்சோம். எங்களுக்கு ஏன் இப்பிடி எல்லாம் நடக்கனும்?” என கேட்டபோது அவளது குரல் உடைந்தது. மங்கலி அந்தக் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு ”தைரியமா இரு.. உனக்கு எதும் ஆகாது.” என்றாள்.  ”தேவகி இது எல்லாம் பூச்சாண்டி காட்ர வேலதாம்மா நீ பயப்படாத... நாங்க  இருக்கோம்... நீ குடுத்த புகாருக்கு நடவடிக்க எடுக்க வெப்போம்... நீ தைர்யமா இரு.. அப்பாவையும் பாத்துக்க..”எனச் சொல்லிவிட்டு நல்லபெருமாளும் உறவினர்களும் கிளம்பிச் சென்றபின் மதனும் மங்கிலியும் அவளையும் அவளது தந்தையும் வீட்டில் வந்ந்து விட்டார்கள். தேவகி அடுத்து என்ன நடக்குமெனத் தெரியாத குழப்பத்தில் உறைந்துபோயிருப்பதைக் கவனித்த மங்கிலி அவளுடைய தோளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள். ”ஆயுதம் வெச்சு சண்டபோடற எதிரிகூட அடுத்து என்ன செய்வான்னு தெரிஞ்சிரும் மங்கிலி... இவன மாதிரி  ஆளுங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது. இன்னிக்கி இன்ஸ்பெக்டரையும் ஊர்க்காரங்களையும் எனக்கு எதிரா திருப்பிவிட்டவன் நாளைக்கு உங்கள எதாச்சும் செய்வான்... யாரெல்லாம் எனக்கு ஆதரவா இருக்காங்களோ அவங்க எல்லாத்தையும் அடக்கி வெக்கனும்னுதான் நெனப்பான்... நான் இந்த ஊர்க்காரி... எதாச்சும் ஒரு வழில பொழச்சுப்பேன்.. உங்களுக்கு ஒரு பிரச்சனன்னு வந்தா என்னாகும்... எனக்கு அத நெனச்சாதான் பயமா இருக்கு...” என்றாள். ”எங்களுக்கு எதுவும் ஆகாது தேவகி.. நீ கவலப்படாத... அப்பாவ கவனமா பாத்துக்க.” என்ற மதன் மங்கிலியைப் பார்க்க அவள் புரிந்துகொண்டு மதனோடு கிளம்பினாள்.  கதவு மூடியதும் தேவகி படுக்கையில் அமர்ந்தாள். காலை முதல் தன்னைத் தாங்கி நிறுத்தியிருந்த உறுதி தளர்ந்து உடைந்து அழுதாள்.  


மதனும் மங்கிலியும் வீடு  திரும்பியபோது அவர்களது குழந்தைகள் வாசலில் அமர்ந்திருந்தார்கள். பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டு அந்த வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது.  குளிரில் சோந்துபோன தனது பிள்ளைகளின் முகத்தைப் பார்த்ததும் மதனின் முகம் மாறியது. அவசரமாக வீட்டை நோக்கி ஓடியவனை இளையன் ஓடிவந்து அணைத்துக்கொண்டான். பகக்ட்து வீட்டிலிருந்த பெண் அவசரமாக வந்து ”சக்திவேல் ஆளுங்க வந்து எல்லாத்தையும் வெளிய எடுத்துப் போட்டுட்டாங்க. நீங்க இனிமெ வேலைக்கும் வரக்கூடாதாம்... எங்களால அவங்கள எதுத்து எதும் செய்ய முடியல மதன்,..’ என கவலையோடு சொன்னாள். இரவு வேலைக்குச் சென்றுவிட்ட ஆட்களைத் தவிர்த்து ஒரு சிலர் மட்டுமே வீடுகளில் இருந்தார்கள்.


”இப்ப என்ன செய்றது மதனா? என மங்கிலி கேட்க அவன் திரும்பி தனது குழந்தைகளைப் பார்த்தான். ”இன்னிக்கி எல்லாரும் பக்கத்து வீட்டுல இருங்க... நாளைக்கு ஏஜெண்ட் கிட்ட பேசிட்டு நாம வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்..”என மதன் நிதானமாகச் சொன்னான். குழந்தைகளை பக்கத்துவீட்டில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு திரும்பி வந்த மங்கிலி மதனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தாள். ”இதெல்லாம் வரும்னு முன்னயே எதிர்பாத்ததுதான் மதனா? நீ எதும் அவசரப்பட்டுடாத...”என்றவளைத் திரும்பி முறைத்த மதன்  ”அதிகாரத்த சகிச்சுக்கறதுக்கும் ஒரு எல்ல இருக்கு மங்கிலி.  எல்லா அதிகாரத்துக்கும் ஒரு முடிவு இருக்கனும், அதுதான் நீதி... உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன். நீ குழந்தைகளப் பாத்துக்க...நான் வந்துடறேன்..” எனச் சொல்லிவிட்டு மதன் தனது வீட்டின் பின்பக்கமாகச் சென்றான். சுவற்றை ஒட்டி வேகமாக பள்ளம் தோண்டியபோது அவன் மறைந்த்து வைத்திருந்த துணிப்பை கிடைத்தது. அதனை எடுத்துக்கொண்டு வயலை நோக்கி நடந்தான்.


            தூரத்தில் மலைச்சரிவின் மேல் ஹில் வியூவின் கட்டுமான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நாற்பது ஏக்கரில் எழுந்த அந்த விடுதி இன்னும் முழுமையடையவில்லை. அதன் விளம்பரத்தில் மலைக்காட்சியும் ஆடம்பரமும் விற்பனைக்காக கடைவிரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டடம் சக்திவேலின் செல்வத்தை காட்டியதோடு  அவன் எதையெல்லாம் அந்த மலையிலிருந்து எடுத்துக்கொண்டான் என்பதையும் வெளிப்படுத்தியது.  மலை முழுவதையும் தன் அறையின் ஜன்னல் வழியாகப் பார்க்கலாம் என்று விளம்பரப் பலகையில் எழுதியிருந்தார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படவிருந்த மலைக்காட்சியை  உருவாக்குவதற்காக  எத்தனைபேருடைய வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது என்பதற்கு அங்கு சாட்சியம் இல்லை. அவன் எடுக்கவிருக்கும் முடிவு தேவகிக்கு நீதியைத் தருமா, அல்லது அவளுடைய போராட்டத்தின் மீது தன் கடந்த காலத்தைத் திணிக்குமா என்பதை அவன் அறியவில்லை. அந்த விடுதி இப்போது அதிகாரத்தின் சின்னமாக அவன் முன் நின்றது. 


மதனுக்கு ‘அழித்தொழிப்பு’ என்ற சொல்லின் பழைய அர்த்தம் நினைவுக்கு வந்தது. ஒருகாலத்தில் அது எதிரியை அழிப்பதற்கான தெளிவான வழி என்று அவன் நம்பினான்.  பின்னர் அந்தத் தெளிவின் பின்னால் சந்தேகமும்  நிரபராதிகளின் உயிர்களும் முடிவில்லாத பழிவாங்கல்கலும்  இருப்பதை அறிந்தான். இப்போது அவன் முன் இருந்த கேள்வி சக்திவேலை எப்படித் தண்டிப்பது என்பது மட்டுமல்ல. அவனது அதிகாரம் இயல்பானது, நிரந்தரமானது, யாராலும் தொட முடியாதது என்ற நம்பிக்கையை  உடைக்கவேண்டும். அதற்கான பதில் வன்முறையில்தான் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஆழமாக அவனுக்குள் விழுந்தது.   முக்கால்வாசி கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்பி அங்கிருந்து துரத்திவிட்டான். கையில் துப்பாக்கியோடு முகத்தை துணியால் மூடியிருந்த அந்த மனிதனைக் கண்ட அச்சத்தில் தொழிலாளர்கள் அவசரமாக ஓடினார்கள். அவன் அந்த கட்டிடத்தைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் வெடிவைத்தான். பிறகு அவசரமாக இருளில் வயலுக்குள் ஓடிமறைய, சில விநாடிகளுக்குப்பின்,  மலை இரண்டாகப் பிளந்ததுபோல் ஒரு வெடிப்புச் சத்தம் எழுந்தது. கம்பீரமாய் இருளில் நின்றிருந்த ஹில் வியூவின் கட்டிடங்கள் தீப்பொறிகளுக்கும் தூசிக்கும் நடுவே சாய்ந்தது. கண்ணாடிகள் உடையும் சத்தம் பள்ளத்தாக்கைத் தாண்டிச் சென்றதைக் கேட்டு நாய்கள் குரைத்தன. வீடுகளின் கதவுகள் திறந்து மக்கள் அச்சத்தோடு கட்டிடங்கள்’எங்கியோ குண்டு வெடிச்சிருக்கு..கட்டிடங்கள்’’ என்று கத்தினார்கள்.  பனியோடு கலந்த புகைமண்டலத்தில் ஹில்வுயூ ரிசார்ட் முழுவதுமாக நிர்மூலமாகிக் கிடந்தது.


மதன் திரும்பியபோது அவனுடைய உடலில் காயம் இல்லை. அவனிடமிருந்த பையை எங்கேயோ புதைத்துவிட்டு வந்திருக்கவேண்டும். வெடி சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட ஊர்க்காரர்களில் மங்கிலிக்கு மட்டும் அதற்கு யார் காரணமெனத் தெரியும். தனது நம்பிக்கையை எல்லாம் முற்றாக அழித்துவிட்டான் என்கிற ஏமாற்றத்தில் பார்த்தவளிடம் ’சீக்ரமே நாம வேற இடத்துக்குப் போயிடலாம்.’ என சன்னமான குரலில் சொன்னான்.  கேரட் வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் வீடு திரும்பிவிட்டார்கள், ஊரில் பாதிப்பேர் விபத்து நடந்த இடத்தைப் பார்க்க ஓடினார்கள். மதன் மற்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் தகர்த்தது ஒரு கட்டடத்தை மட்டுமல்ல நீண்டகாலமாக காத்து வந்த தனது தலைமறைவு வாழ்க்கையின் ரகசியத்தை.  ‘இனி அந்த பழைய வாழ்க்கைக்குத் திரும்பமாட்டேன்’ என மங்கிலிக்குக் கொடுத்திருந்த வாக்கு  அந்த இரவில் கண்ணாடித் துண்டுகளைப்போல் சிதறிப்போனது.


விடிவதற்கு முன்பாகவே சக்திவேல் தன் உறவினர்களோடு அங்கு வந்துவிட்டிருந்தான். இப்படியொரு எதிர்ப்பையும் அழிவையும் எதிர்பார்த்திராத அவன் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததை அங்கிருந்த எல்லோரும் கவனித்தனர்.  குண்டு வெடித்த இடத்தில்  காவல்துறை வாகனங்களும் தீயணைப்பு வண்டிகளும் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தன. அங்கிருந்த தொழிலாளி போலிஸ்காரரிடம் தெளிவாகச் சொன்னான். ’வந்தவன் முகத்த மூடியிருந்தான். எங்க எல்லாரையும்  இந்த எடத்த விட்டு உடனே போங்கன்னு சொன்னான். நாங்க மறுத்து நின்னப்போ துப்பாக்கிய எடுத்துக் காட்டி மிரட்டினான், ஆனா யாரையும் சுடல... என்ன செய்ரதுன்னு தெரியாம தூரமா ஓடிப்போயி பாத்துட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துலயே வெடி வெடிச்சு எல்லாம் இடிஞ்சு போச்சு...” அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட அதிகாரி ’அவனப்பத்தி வேற எதாச்சும் அடையாளம் தெரியுமா?” எனக் கேட்க ”அவன் இந்த ஊருக்காரன் இல்ல... வடக்கன்..” என்று சொல்ல அதிகாரி நம்பமுடியாமல் பார்த்தார்.


எவரையும் பார்க்கப் பிடிக்காமல் தனது காரில் அமர்ந்திருந்த சக்திவேலை அவனது மாமனாரும் மனைவியும் ஆறுதல்படுத்தினார்கள். ’யாரோ எனக்கு வேண்டாத ஆளுங்கதான் இத செஞ்சிருக்கனும்.’ என்றவனிடம் ’இந்த நீலகிரில குண்டு வெக்கிற அளவுக்கெல்லாம் யாருக்கும் தைரியம் இல்ல... இது ஏதோ வெளியாள் செஞ்சதா இருக்கனும், இல்ல விபத்தா இருக்கனும், நீங்க கவலப்படாதிங்க... பாத்துக்கலாம்..’ என மாமனார் சொன்னதில் அவன் சமாதானம் அடையவில்லை.


அன்றைய செய்தித்தாள்களில் ஹில் வியூ குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தன.  ’நீலகிரி மலைப்பகுதியில் குண்டு வெடிப்பு’,  ‘நக்சல் தொடர்பா?’ என்ற தலைப்புகளோடு நீண்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.  தொலைக்காட்சிகள் இடிந்த கட்டடத்தின் காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. ஒரு செய்தியாளர், ‘சுற்றுலா வளர்ச்சியை முடக்க முயற்சி’ என்றார்; மற்றொருவர் ‘நில அபகரிப்புக்கு எதிரான தாக்குதலா?’ என்று கேட்டார். எந்தக் கேள்விக்கும் செவரிடமும் ஆதாரம் இல்லை.


மதன் அந்தச் செய்தியை மங்கலியுடன் பார்த்தபோது திரையில் இடிந்த சுவரின் பின்னால் தெரிந்த மலை அவனுக்கு பஸ்தரை நினைவூட்டியது. சாலை வெட்டியபோது காணாமல் போன சால்மரங்களும் மரத்தடியிலிருந்து நகர்த்தப்பட்ட தெய்வக்கல்லும் பஸ்தரின் அழிவுக்கு சாட்சியென்றால் இங்கு குளங்களும் விவசாய நிலங்களும் சாட்சியங்கள். பஸ்தரில் அவன் தன் மக்களைப் பாதுகாப்பதாக நம்பி ஆயுதம் எடுத்தான். இங்கே அவன் யாருக்காக முடிவு எடுத்தான் என்பதை அவனால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.  முதல் தடவையாக அவனுடைய உள்ளங்கைகள் நடுங்கின. அந்த நடுக்கம் பயத்தாலா, குற்ற உணர்ச்சியாலா, அல்லது தன் பழைய முகத்தை மீண்டும் கண்டதாலா என்று  தெரியவில்லை. ஒரு கட்டடம் இடிந்ததால் சக்திவேலின் அதிகாரம் முடிந்துவிடாது. அவனுக்கு நிச்சயம் காப்பீடு இருக்கும், பீயில் அரிசி பொறுக்கும் ஒருவனுக்கு தனது சொத்துகளை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்காது. அரசியல் தொடர்புகளையும் தன்னிடம் இருக்கும் பணத்தையும் பயன்படுத்தி மீண்டும் அதே இடத்தில் அவனால் புதிய கட்டிடத்தை கட்டிவிட முடியும்.  ஆனால் தனது அதிகாரம் மட்டற்றது என்கிற நம்பிக்கை இருக்காது. எப்போது எங்கு யார் தாக்குவார்கள் என்கிற அச்சம் அவனை விட்டும் ஒருபோது விலகாது.  இந்த மக்களை நீண்டகாலம் அடிமைப்படுத்தி வைக்க முடியாதென்பதை அவன் உணர்ந்திருப்பான்.


. சக்திவேல் தனக்குத் தெரிந்த  ஒவ்வொருவரையும் சந்தேகத்துடன் பார்த்தான். தன்னிடம் வேலை செய்பவர்கள், தொழில் எதிரிகள், உள்ளூர்க்காரர்கள், மலையில் வேறு இடங்களில் ரிசார்ட் வைத்திருப்பவர்கள், கூடவே தேவகியின் உறவினர்களின் மீதும் சந்தேகம் எழுந்தது. இன்ஸ்பெக்டர் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் புதிய பெயர்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.


”சக்திவேல் எனக்கு என்னவோ இந்த இன்சிடெண்ட் அந்தப் பொண்ணோட சம்பந்தப்பட்டதா தெரியுது. ஏன்னா இவ்ளோ நாளா யாருமே உங்கள எதுத்து எதும் செஞ்சதில்ல. நேத்து அந்தப் பொண்ண  ஸ்டேஷன் வரவெச்சதும் நடந்திருக்குன்னா ஒன்னு அவ செஞ்சிருக்கனும், இல்ல அவளுக்கு ஆதரவா இருக்கா யாராச்சும் செஞ்சிருக்கனும்.”  என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் சக்திவேலுக்கு உடனே பொறி தட்டியது. ’நிச்சயமா அவளாலயோ இந்த ஊர்க்காரங்களாலயோ இத செஞ்சிருக்க முடியாது. ஆனா ஒருத்தன் மேல எனக்கு இப்ப சந்தேகம் வருது..” என்றான்.. இன்ஸ்பெக்டர் யாராக இருக்குமென பார்க்க ’மதன். அவனக் கவனிச்சிருக்கேன் தன்னப் பத்தி எந்த விவரத்தையும் சொல்ல மாட்டான்.  அமைதியா இருப்பான், ஆனா எல்லாத்தையும் கவனிப்பான், அவந்தான் தேவகிக்கும் ஆதரவா நின்னது...” என்று எல்லா விவரங்களையு இணைத்து சக்திவேல் சொன்னான்.


“இதையெல்லாம் ஆதாரமா வெச்சு அவன விசாரிகக் முடியாது. இந்த மலை முழுக்க நூத்துக்கணக்கான நார்த் இண்டியன்ஸ் வொர்க்கர்ஸ் இருக்காங்க அவங்க எல்லாரையும் சந்தேக்கபடற மாதிரி ஆகிடும். அதும் இல்லாம பொலிடிகல் இஷ்யூவா ஆகிடும்.” என இன்ஸ்பெக்டர் பதறினார்.


”இங்க இருக்க எல்லா வடநாட்டுக்காரவுகளையும் அப்பிடி நான் பாக்கல.. ஆனா மதன் கிட்ட இத செய்றதுக்கான துணிச்சல் இருக்குன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். அதும் இல்லாம அவனே சொல்லி இருக்கான் அவன் பஸ்தர் ல  இருந்து வந்தவன்னு..’ என்று சக்திவெல் சொல்ல இன்ஸ்பெக்டர் நீண்டநேர யோசனைக்குப்பின் ”சரி இத அஃபிஷியலா செய்ய முடியாது. அன் அஃபிஷியலா விசாரிப்பொம்.’ என்றார்.

சீருடை அணியாத காவலர்கள் அன்று மாலை மதனையும் அவனோடு இன்னும் சில வட இந்திய தொழிலாளர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மங்கலியும்  அவர்களோடு  வர முயன்றபோது  “நீ வீட்டில் இரு,” என்றான் மதன். அவளுடைய கையை உறுதியாகப் பற்றி  “நான் திரும்பி வருவேன்.” என சன்னமான குரலில் சொன்னான். மங்கிலி தனது கண்ணீரையும் பதற்றத்தையும் காட்டிவிடாதவாறு முகத்தை சரிசெய்துகொண்டாள்.


காவல் நிலையத்தில் மற்றவர்களை தனியாக ஒரு அறையில் வைத்துவிட்டு  அவனிடம் ஹில் வியூ விடுதியில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி விசாரித்தார்கள். அந்த இரவு எங்கே இருந்தான், யாருடன் இருந்தான், சத்தீஸ்கரில் எந்தப் பகுதியில் வாழ்ந்தான், ஆயுதக் குழுவில் இருந்தானா என்று அவனிடம் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மதன் பதிலளித்தான். சில கேள்விகளுக்கு அவன் சொன்ன பதில்கள் அவர்களுக்குப் போதவில்லை; சில கேள்விகளுக்கு அவன் சுருக்கமாகப் பதில் சொன்னது  அவர்களை மேலும் எரிச்சலடையச் செய்தது. அவனது முகத்தில்  குற்றத்தின் அடையாளத்தைத் தேடியவர்களுக்கு   துயரப்பட்டவனின் கடந்தகால நினைவுகள் மட்டுமே  கிடைத்தன.


“நீங்க நக்சலைட் இயக்கத்தோட தொடர்பில் இருந்திருக்கிங்களா” என்று ஆய்வாளர் கேட்டதற்கு ”எங்க காட்டுல ஆதிவாசிங்க எல்லாரையுமே அப்பிடி சொல்லித்தான் அடிச்சு  துரத்தினாங்க... எங்க கிட்ட இப்ப எங்க ஊரும் காடும் இல்ல... ஆனா அந்த வார்த்த மட்டும் எங்க போனாலும் துரத்துது ஸார்..” என அமைதியாகச் சொன்னான்.


”நான் கேட்டதுக்கு தெளிவா பதில் சொல்லனும்.” என இன்ஸ்பெக்டர் அவனை ஊடுருவிப் பார்க்க ”நீங்க என்னய அந்த வார்த்தைக்குள்ள அடைக்கனும்னு பாக்கறிங்க.. ஆனா  என்ன மாதிரி காட்ட விட்டுத் துரத்தப்பட்டவங்களோட வலிய பாக்க மாட்றீங்க... எங்களுக்கு காட்டையும் எங்க மக்களையும் விட்டா எதுவும் தெரியாது ஸார்... நீங்க தேட்ற ஆள் நான் இல்ல...” என கவலையோடு சொன்னவனை நம்பிக்கை இல்லாமல் பார்த்த இன்ஸ்பெக்டர் ”சரி உங்களப் பத்தின டீடைல்ஸ் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க..” எனச் சொல்ல மதன் அமைதியாக வெளியே வந்து ஒரு காகிதத்தில் எல்லாவற்றையும் எழுதினான்.  காவல் நிலையத்திலிருந்த அத்தனை காவலர்களின் கண்களும் தன்னைக் கவனிப்பதை உணர்ந்து நிதானமாக எழுதியவன் தலையை உயர்த்தி ஒரு பெண் காவலரிடம் தண்ணி வேணும் என்றாள். அவள் ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுக்க நிதானமாகக் குடித்துவிட்டு மீண்டும் எழுதியவன் காகிதங்களை அவளிடம் கொடுத்துவிட்டு தனது அடையாள் அட்டையையும் கொடுத்தான்.


விசாரணை முடிந்து வெளியே வந்தபோது மங்கலி வாசலில் காத்திருந்தாள்.

“ என்ன கேட்டாங்க?”

“நான் யாருன்னு.”

“நீ என்ன சொன்ன?”

“அவங்களுக்கு என்ன தேவையோ அத மட்டும் சொல்லி இருக்கேன் மங்கிலி.”  புரிந்துகொண்டு அமைதியாக அவனோடு நடந்தாள்.

 

மலையில் பனியும் இருளும் வேகமாக கவிய, புதிய இடத்தில் மதனின் குடும்பத்தினர் தங்கியிருந்தார்கள். முப்பது ஏக்கர் விவசாய நிலம் கொண்ட சிறிய முதலாளியிடம் ஏஜெண்ட் அவர்களை அனுப்பி இருந்தான். இந்த வீடு அவர்களுக்கு வசதியாக இருந்தது. இந்த ஓட்டம் இனும் எத்தனை காலத்திற்கு என்கிற சிந்தனையோடு மதன் வெளியே வந்தான். மலைச்சரிவின் கீழே கேரட் வயல்கள் இருளில் மறைந்திருந்தன. ஒருகாலத்தில் காட்டிற்குள் எத்தனை காலம் வேண்டுமானாலும் மறைந்து வாழ முடியும் என்று நம்பியவனுக்கு எந்த மலையும் காடும் ஒரு மனிதனின் ரகசியத்தை நீண்டகாலம் காப்பதில்லை என்பதைப் புரிந்துகொண்டிருந்தான்.  நிலம் மாறலாம்; பெயர் மாறலாம்; மனிதன் தன் வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் அவனது கடந்தகாலம் அத்தனை எளிதில் அவனை விடுவதில்லை.

டு


மதனின் மனதில்  ஒரு கேள்வி திரும்பத் திரும்ப எழுந்தது, பழைய வாழ்க்கையின் வன்முறையை மறக்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் அதே பாதையில் நடக்கத் தொடங்கிவிட்டானா? அல்லது அந்தப் பாதையிலிருந்துதோற்றுப்போய் நான் ஒருபோதும் வெளியே வரவில்லையா? இருளில் புதிய வயல்களைப் பார்த்தபடி நின்றவனை மங்கிலி அழைத்தாள். மதன் திரும்பிப் பார்த்தபோது மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் வீட்டிற்குள் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.. அந்த குடும்பத்திற்கு அவன் தலைவன்,  மூன்று குழந்தைகளின் தந்தை. ஆனால் அந்த குடும்பத்துக்கு  வெளியே ஒருகாலத்தில் ஆயுதம் ஏந்தியவன்; கொலைகள் செய்தவன்; இன்றும் தேடப்படும் பெயரற்ற குற்றவாளி.  இந்த இரண்டு வாழ்க்கைகளில் எது உண்மை என்று அவனால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இரண்டும் அவனுடையவை. அவன் வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடினான். ஆனால் இந்த முறை, கடந்த காலத்தை வெளியே விட்டுவிட்டதாக அவன் நினைக்கவில்லை.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page