நினைவில் காடுள்ள மிருகம் - 4


தேவகி சில நாட்களாகச் சக்திவேலைத் தவிர்த்தாள். வயலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் கூட்டத்தில் ஒளிந்துகொள்ளப் பழகியதோடு அவன் வீடிருக்கும் பாதையில் வேலைக்குச் செல்வதையும் நிறுத்தினாள். லாரிகள் நிற்கும் இடத்தின் பக்கமாக தனது நிழல்கூட விழாதபடி பார்த்துக்கொண்டவள் மாலை வேலை முடிந்ததும் மற்ற பெண்களுடன் சேர்ந்து வீடு திரும்பினாள். து அவளது நடவடிக்கைகளில் இருந்த மாற்றங்களை மற்றபெண்கள் கவனிக்காதபோது மங்கலி கவனித்திருந்தாள்.
ஒருநாள் கேரட் கழுவும் இடத்தில் தனக்கு அருகில் நின்றிருந்த தேவகியை நெருங்கி கேட்டாள்.
“என்னாச்சு தேவகி, கொஞ்சநாளாவே ஒருமாதிரி இருக்க? தேவகி,
தேவகி தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டு
“ஒண்ணுமில்லையே மங்கிலி’ என சிரித்தாள்.
“நீ ஒண்ணுமில்லைன்னு சொல்லும்போது உன் குரல் மாறுது.” மங்கிலி அவளைக் கூர்மையாகப் பார்க்க தேவகி சிரித்தாள்.
“அதெப்படி என்னோட முகத்தப் பாத்தே எனக்குப் பிரச்சன இருக்குன்னு தெரியும்?”
“ரெண்டாயிரம் கிலோமீட்டர் தாண்டி பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் தேவகி. எங்க காட்டுல நாங்க பாத்த பிரச்சனைல ஒரு கைப்பிடி அளவுக்குக்கூட இங்க யாரும் பாத்திருக்க மாட்டீங்க... எதாச்சும் பிரச்சனைல இருக்கவங்க இல்ல யாரையாச்சும் பாத்து பயந்தவங்க எப்படி நடப்பாங்கன்னு தெரியும்.” என அழுத்தமாகச் சொன்னாள்.
“நான் யாரையும் பாத்து பயப்படல மங்கிலி...” என தேவகி சொல்ல, சிரித்தபடியே
“அப்படின்னா நல்லது.” என்ற மங்கலி மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.
தேவகி கழுவப்பட்ட கேரட்டைகளைப் பிரித்து மூட்டையில் சேமிக்கத் துவங்க அவளுக்கு மட்டும் கேட்கும்படி
” பயப்படுறவங்கதான் பெரும்பாலும் ‘நான் பயப்படல’ன்னு சொல்வாங்க. தேவகி” என மங்கிலி சொன்னாள்.
இந்த முறை தேவகியிடம் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது. அந்த மெளனத்தின் பின்னாலிருந்த ரகசியத்தையும் அச்சத்தையும் அறிந்த மங்கிலி ஆதரவாக அவளது தோளைப் பற்றினாள். ”என்னால உனக்கு துணையா நிக்க முடியுமான்னு தெரியுல.. ஆனா ஏதோ ஒரு வழில உதவியா இருக்க முடியும்...” என்று சொல்ல தேவகி சரியெனத் தலையாட்டினாள்.
”உங்க ஊர்லயும் இப்பிடித்தான மங்கிலி?”
மங்கலி அவளைப் பார்த்தாள். எந்த ஊரைச் சொல்வது? தான் பிறந்த ஊரையா அல்லது மதனோடு சேர்ந்த வாழ்ந்த ஊரையா? பெண்கள் எந்தக் காட்டிலும் மலையிலும் பொறந்தாலும் நகரத்திலும் கிராமத்திலும் இருந்தாலும் அவர்கள் உடல்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள் என்று சொன்னாள் இவளுக்குப் புரியுமா? இந்த தற்காலிகமான அமைதிக்குப்பின்னால் பல வருட போராட்டங்களும் பல நூறு படுகொலைகளும் இருப்பதை எப்படிச் சொல்வது? மங்கிலி என்னாச்சு என தேவகி அவளை உலுக்க
“எல்லா ஊர்லயும் பெண்களுக்கு ஒரே மாதிரிதான் தேவகி. எல்லா சண்டையும் மண்ணு பொண்ணு ரெண்டுக்காகத்தான்னு சொல்லுவாங்க. ஆம்பளைக்கு மண்ணு எப்பிடி ஒரு சொத்தோ பொம்பளையும் ஒரு சொத்து. ஒரு குடும்பத்தையோ ஊரையோ அவமானபப்டுத்தனும்னா கூட அங்க பெண்களத்தான் வேட்டையாடுவாங்க..” அவள் பேசுவதை தேவகி ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்களப் பத்தி அக்கறையே இல்லையா? ”
”இருக்கும். எல்லா பொம்பளையும் தன்கூட இருக்கனும், ஆனா தனக்குக் கீழ கட்டுப்பட்டு இருக்கனும்... சின்னப்பிள்ளைக கிட்ட விளையாட பொம்ம குடுத்தா அது கொஞ்ச நேரம் விளையாடிட்டு பிச்சு போட்டுடும். அப்பிடித்தான் ஆம்பளைங்க..”
தேவகிக்குச் சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு சத்தம் முடிவதற்குள்ளாகவே ஜீப் சத்தம் கேட்டது. தொலைவில் சக்திவேலின் முகத்தைப் பார்த்ததும் அவளது முகம் மாறியதை மங்கிலி கவனித்தாள். இப்போது தேவகி சொல்லாத விஷயத்தின் ஒரு பகுதி அவளுக்குப் புரிந்தது.
அன்று மதியம் தேவகியின் தந்தை சக்திவேலை சந்தித்துவிட்டு வந்தார். இந்த சில வருடங்களில் மிக வேகமாக முதுமை எய்தியிருந்த அவருக்கு மலையில் ஏறி இறங்கியபோது கடுமையாக மூச்சு வாங்கியது. தனது சோர்வையும் களைப்பையும் வீட்டிலிருப்பவர்களிடம் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவரின் முகம் வாடிப்போயிருந்தது. மதிய உணவுக்காக ஆட்களோடு அமர்ந்திருந்த தேவகி அவரை நோக்கி எழுந்து சென்றாள்.
“என்னாச்சுப்பா? ஏன் ஒரு மாதிரியா இருக்கின்க.. என்ன சொன்னான் அவன்?” என்று தேவகி கேட்டாள்.
“இனி தெனமும் வேலை இருக்காதாம் எனக்கு, வேலை இருந்தா கூப்பிடுவானாம்.” தயக்கமாகச் சொன்னார்.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“நான் என்ன சொல்ல முடியும்?”
“வேலை வேணும்னு கேட்டிருக்கலாமே.”
முதியவர் மகளைப் பார்த்தார்.
“அது நம்ம கையில இல்லம்மா.”
முகத்தைத் திருப்பிக்கொண்ட தேவகிக்கு அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் அழுதால் எதுவும் மாறப்போவதில்லை என்பதை அவள் ஏற்கெனவே கற்றிருந்தாள்.
அன்று இரவு மதன் இருந்த வீட்டின் கூரையிலிருந்து நீர் ஒழுகியது. மங்கலி அதன் கீழே ஒரு பாத்திரத்தை வைத்தாள். குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள்.
“இந்த வீட்டை சரி பண்ணணும்,” என்றாள்.
“நாளைக்குப் பார்ப்போம்.”
“நாளைக்கு எப்போ?”
“வேலை முடிஞ்ச வந்த அப்பறம்..”
மதன் அந்த பேச்சை வளர்க்க விரும்பாதவனைப் போல் நகர நினைக்கையில் மங்கலி குழந்தைகளின் காலணிகளைக் காட்டினாள்.
“பசங்களோட் ஷூ ரொம்ப பழசாகிடுச்சு. இத போட்டுட்டு எப்பிடி அவங்க ஸ்கூலுக்குப் போவாங்க... இந்தக் குளிர்ல ஹூ இல்லாம எப்பிடி சமாளிப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தியா?”
“ரெண்டு நாள் ல வாங்கித் தர்றேன்.”
அவள் அவனை ஏமாற்றமாகப் பார்த்தாள். அவனருகில் அமர்ந்தாள்.
“நாம இங்க வந்து எத்தனை வருஷம் ஆகுதுன்னு தெரியுமா?”
“மூணு வருசம்.”
“மூணு வருஷத்துல நம்ம பிள்ளைக இந்த ஊர தங்களோட ஊர்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.”
“ஆமா அது நல்லதுதான..”
“ஆனா நீ மட்டும் ஏன் இந்த ஊர் ஆளா மாறல...”
அவளது கேள்வியினைப் புரிந்துகொண்ட மதன்
“நான் இந்த ஊர் ஆளாதான் இருக்கேன்..” என்றான். மங்கிலியின் முகம் இறுகியிருந்தது.
“உன் உடம்பு மட்டுந்தான் இங்க இருக்கு. மனசு இன்னும் பஸ்தர் ல தான் இருக்கு.... நமக்கு அந்தக் கடந்த காலம் வேணாம் மதன்... இனி இதான் நம்மளோட ஊர்.. நம்ம பிள்ளைகளுக்கும் இதான் எதிர்காலம்...”
”நம்ம இருக்கற இடத்தையும் வேலையயும் சாப்படற சாப்பாட்டயும் வேணா மாத்திக்கலாம் மங்கிலி, நாம யாருங்கறத மாத்திக்க முடியாது..” என்று சொன்னபோது அவன் பழைய மதனாகத் தெரிந்தான். அந்தக் குரல் தந்த நடுக்கத்தில் மங்கிலி அமைதியாக விலகிச் செல்ல அவன் எழுந்து வெளியே சென்றான்.
மறுநாள் சக்திவேலின் அலுவலகத்தில் மூன்று சிறு விவசாயிகள். பழனி ஓரமாக நின்றான். மேசையின் மேல் கணக்குப் புத்தகம் திறந்திருக்க சக்திவேல் எதிரிலிருந்த விவசாயிகளைப் பார்த்தான்.,
“ஒவ்வொரு வருசமும் நீங்க வாங்கற கடன் தான் அதிகமாகுது..; எதையும் திருப்பித் தரமாதிரி தெரியல... உரம் வாங்கனும் , வெத வாங்கனும்னு திரும்பவும் வந்து காசு கேக்கறிங்க.. காசு இல்லாம எப்பிடி விவசாயம் பண்ணுவிங்க...”
மூன்று பேரில் ஒருவர் மிகவும் அமைதியாக அவனைப் பார்த்துச் சொன்னார்.
”அதுக்காக நிலத்த சும்மா போட முடியாதுல்லப்பா...”
சக்திவேல் அவரைப் பார்த்தான்.
“அதனாலதான் சொல்றேன். உங்க கிட்ட பணம் இல்ல. நீங்க தனியா கேரட் போட்டு என்ன செய்யப் போறீங்க? முப்பது மூட்டை வந்தாலும் அதை யார் வாங்குவாங்க? மொத்த வியாபாரி பணத்தை மூணு மாதம் கழிச்சுத்தான் தருவான். அதுவரைக்கும் வீட்டுச் செலவை எப்படி நடத்துவீங்க?” அவன் வார்த்தைகள் தூண்டிலில் இருக்கும் புழுவைப் போல் தங்களை கவிழ்க்க முயற்சிப்பதைப் புரிந்துகொண்ட விவசாயிகள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டார்கள்.
“நாங்க பார்த்துக்கறோம். இந்த அறுவடைல எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்..” என ஒருவர் சொன்னார்.
“இதத்தான் போன வருசமும் சொன்னீங்க... ஒன்னும் நடக்கலையே... உங்களால வாங்கன காச திருப்பித் தாமுடியலன்னா நெலத்த என் பேருக்கு கெரயம் பண்ணிடுங்க... இல்ல உங்க பேர்லயே இருக்கட்டும், நீங்களே விவசாயம் பாருங்க... ஆனா மொத்தமா எங்கிட்டயே குடுத்துடுங்க... வெத உரம் வாங்கறதுல இருந்து அத மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப் போற வர நான் பாத்துக்கறேன் வார காசுல உங்களுக்கு கொஞ்சத்த குடுக்கறேன்..” என்று சொன்னான் .தங்கள் நிலத்தில் தங்களைக் கூலிக்காரர்களாக மாற்றப்பார்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த விவசாயிகள் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக வெளியேறினார்கள். கதவை மூடிவிட்டு வந்த பழனி
“ண்ணா அவங்க ளாம் காலம் காலமா வெவசாயம் பன்றவங்க, அவங்களுக்குனு இருக்கது அந்த நெலம்தான்... அதப்போயி..” எனச் சொல்லும்போதே சக்திவேல் அவனை முறைத்துப் பார்க்க பழனி அமைதியானான்.
“நான் யாரையும் கட்டாயப்படுத்தல. பழனி... காசில்லாம நெலத்த சும்மா போட்றதுக்குப் பதிலா நல்ல மொறையில வாழ ஒருவழி சொன்னேன்..” என சிரித்தான்.
“சரிதாண்ணா...” என்றான் பழனி.
“நிலம் அவங்களோடது, பணம் என்னோடது.” என்றபடியே சக்திவேல் சிரித்தான்.
ஏப்ரல் மாத இறுதியில் விதைக்கப்பட்ட பூண்டுச் செடிகள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஜூலை மாதம் முழுக்க மேட்டுப்பாளையம் சந்தையில் பூண்டு கொள்முதல் செய்ய நாடு முழுவதிலும் இருந்து வியாபாரிகள் வருவதுண்டு. எல்லா ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்தது ஒரே ஆள் தான். அந்த பருவத்தில் அவன் சொல்வதுதான் விலை, நீலகிரி மலையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் பூண்டு வந்து சேரும். அவற்றைப் பிரித்து எந்த மூடையை எந்த ஊருக்குஅனுப்ப வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான். இருபது வருடங்களுக்கு முன்பு அரசுப் பேருந்தில் ஒவ்வொரு ஊருக்கும் சென்று விவசாயிகளிடம் மன்றாடி பொருள் வாங்கிய ஆள். ’உங்கள் ல ஒருத்தனா என்னய நெனச்சுக்கங்க... நியாயமாக வெலைல வாங்கிக்குவேன்..’ என்றுதான் எல்லாமெ துவங்கியது. ஓரிரு வருடங்களிலேயே நியாயம் அவனுக்கானதாக மட்டுமே மாறியது. சந்தையில் பூண்டு விலை ஏறினாலும் விவசாயிகளுக்கு இவன் கொடுக்கும் விலை பெரிய அளவில் மாறுவதில்லை. விவசாயிகள் ஒரு சிண்டிகேட்டாக நின்று அதை முறியடிக்க நினைத்தார்கள். ஆனால் அந்த முயசியிலும் சிண்டிகேட்டின் தலைவராக பெருமுதலாளிகள் மட்டுமே இருக்க முடிந்தது. அவர்கள் நீலகிரி மலையின் பூர்வகுடிகள் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன் பிழைப்பிற்காக வந்தவர்கள். அந்த மலையில் சக்திவேலைப்போல் ஏராளமானோர் இருந்தனர். அப்பாவி பூர்வகுடிகளை தின்று விழுங்கும் அந்த மலைப்பாம்புகளை சமாளிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் பூர்வகுடி மக்கள் வந்த விலைக்கு எல்லாவற்றையும் விற்கக் கூடியவர்களாக மாறியிருந்தார்க்ள்.
சக்திவேலின் வயல்களில் பெரும்பான்மையாக பூண்டு விளைந்து அறுவடைக்குத் தயாராகியிருந்தது. சின்னக்குன்னூர் துவங்கி கடநாடு வரை காற்றில் பூண்டு வாசனை. அன்று அறுவடைக்காக ஏராளமானோர் வயலில் நின்றிருக்க, தொழிலாளர்களில் யாரோ ஒரு பெண் படகா பாடலைப் பாடினாள். தேவகி மதனும் மங்கிலியும் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள். மங்கிலிதான் முதலில் அவளைப் பார்த்தாள்.
”என்னாச்சு?” என சிரித்தபடியே கேட்க கையிலிருந்த பூண்டுச் செடியைக் காட்டினாள். மதனும் திரும்பிப் பார்த்தான்.
“அண்ணா இதைப் பாருங்க.” என அவனிடம் அந்த செடியைக் கொடுக்க மதன் அதை வாங்கினான்.
“இது மண்ணுக்குள்ள இருந்த வரைக்கும் என்னன்னு யாருக்கும் தெரியாது, வெளியே வந்ததும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.”
அவன் அவளைப் பார்த்தான்.
“ஆனா மனுஷங்க மட்டும் அப்படி இல்லயே...” என்றவளிடம் செடியை திருப்பிக் கொடுத்த மதன் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டான்.
”மங்கிலி உங்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்னு சொன்னா... இங்க யாருக்கும் அவன் எதித்து கேக்க துணிச்சல் இல்லாம இருக்கலாம்... அதுக்காக நானும் பயப்படனும்னு இல்ல... எங்கிட்ட இருந்து நிலத்த மட்டுந்தான் எடுத்துக்க முடியும் அவனால... என்னய எடுக்க முடியாது...”
அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையில்ம் தன்னை உணர்ந்த மதன் திரும்பி மங்கிலியைப் பார்த்தான். அவள் தங்களைப் பற்றி ஏதாவது சொல்லி இருப்பாளோ? அந்தப் பார்வையிலிருந்த பொருளைப் புரிந்துகொண்ட மங்கிலி இல்லையெனத் தலையாட்டினாள்.
“அவன் என்ன வேணா செய்யட்டும் நான் அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்,” என்றாள் தேவகி. அவளைப் பார்த்து சிரித்த மதன் “போகாதே.” என்றான்.
“என்னய வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டா?”
“இந்த மலைல உனக்கு கண்டிப்பா வேற வேல கெடைக்கும்..” என்றான். தேவகி அமைதியாக நின்றாள். நீண்ட பெருமூச்சுக்குப்பின் ”அவன எதித்து நிக்கனும்னு மனசு சொல்லுது, ஆனா அதுக்கெல்லாம் உனக்கு தைரியம் புத்தி சொல்லுது... நான் எதக் கேக்கறதுண்ணா... எனக்கும் எதாச்சும் ஆகிட்டா என் குடும்பத்த யார் பாக்கறது?”
என்று சொல்ல அவளது மனபோராட்டத்திற்கு என்ன தீர்வை சொல்வதெனத் தெரியாமல் மதன் குழம்பி நின்றான். அவள் மீண்டும் தனது வேலையைப் பார்க்கச் சென்றாள். மங்கிலிக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தங்களுக்காக இரங்க இந்த உலகில் ஒருவரும் இல்லையென்றாலும் மற்றவருக்காக இரங்கும் மனம் அவளுக்கு.
“அவளுக்காக நீ என்ன செய்யப் போற மதன்?” என தனது கணவனிடம் கேட்டாள்.
“என்னால எதுவும் செய்ய முடியாது மங்கிலி.’ என்று மதன் பின்வாங்கினான். அவனை வருத்தத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்த மங்கிலி
“ஏன்?” என்று கேட்டாள்.
“நமக்கு இந்த வேலை தேவை. குழந்தைகளோட பாதுகாப்பு முக்கியம். நாம யாருன்னு இங்க யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாது அது ரொம்ப முக்கியம்..”
“அதனால?”
“எத்தனை தடவை இதே கேள்வியைக் கேப்ப?”
“நீ பதில் சொல்ற வரைக்கும்.”
மதன் அவளிடமிருந்து விலகி நடக்க முயல, அவனது கையைப் பற்றினாள். அவளது கண்களில் இருந்த தீவிரத்தை கவனித்து கைகளை உதறிக்கொள்ள முயன்றான்.
“நான் அவளைக் காப்பாத்த முடியாது.”
“நான் அவளைக் காப்பாத்தச் சொல்லல.”
“பின்ன என்ன செய்யனும்?”
“அவ கூட நீ நிற்கணும்.” மதன் அவளைப் புரியாமல் பார்த்தான். இவளுக்கு என்ன வேண்டும்? ஏன் யாரென்று தெரியாத ஒரு பெண்ணுக்காக இத்தனை மன்றாடுகிறாள் எனப் புரியாமல் கேட்டான்.
“அதுக்கும் அவளைக் காப்பாத்துறதுக்கும் என்ன வித்தியாசம்?”
“ஒருத்தியைக் காப்பாத்தினா அவ வாழ்க்கை முழுக்க உனக்குக் கடன்பட்டவளா ஆகிடுவா ஆனா அவ கூட நின்னா, அவளுடைய முடிவ அவளே எடுக்க ஒரு வாய்ப்பு கெடைக்கும்”
மதன் அவளைப் புரியாமல் பார்க்க, மங்கிலி நெருங்கி வந்து அவனது காதில் சொன்னாள்.
“நீ ஒரு பிரச்சன வர்றப்போ ஆயுதம் எடுக்கணுமா வேண்டாமான்னு தான் யோசிச்சுக்கிட்டிருக்க.”
மதன் திடுக்கிட்டான். அந்த வார்த்தையை அவள் இதுவரை பயன்படுத்தியதில்லை.
“சில சமயம் ஆயுதம் எடுக்காம போராடுறதுதான் வீரம்.” என்றாள்.மதன் ஸ்தம்பித்துப் போய் நிற்க, அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட அமைதி நிலவியது. அதற்குள் பல ஆண்டுகளின் குரல்கள் இருந்தன.
சக்திவேல் தேவகியின் எதிர்ப்புக்குப் பதில் சொல்லவோ அவளிடம் மீண்டும் பேசவோ இல்லை. அவன் செய்ய வேண்டியதைப் பழனியிடம் சொன்னான். ”தேவகியின் தந்தைக்கு அடுத்த வாரம் வேலை குடுக்காத, அவர் வாங்கியிருந்த முன்பணத்தையும் உடனே திருப்பிக் கேட்க வேண்டாம். கடன் கணக்கில வட்டி மட்டும் சேரட்டும். தேவகிக்கு வேலை இருக்கட்டும். ஆனால் அவ எங்க போரா யாரோட பேசறான்னு மட்டும் கவனி..”
பழனி அவனைப் பார்த்தான். “ண்ணா பெரியவர வேலைய விட்டு நிறுத்திட்டா அந்தக் குடும்பம் என்ன பண்ணும்,?”
“நான் வேலையை நிறுத்தச் சொல்லல. வேலை இருக்குன்னு சொல்லு. எப்போ கூப்பிடுவேன்னு சொல்லாதே.”
சக்திவேல் கணக்குப் புத்தகத்தை மூடினான்.
தேவகி எதிர்த்ததை அவன் அவமானமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தன்னுடைய கட்டளைக்கு வெளியே நிற்க முடியும் என்று நினைத்ததைத்தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அவன் கையை உயர்த்த வேண்டியதில்லை. அவளுடைய குடும்பம் என்னவாகும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இருப்பதை அவளுக்கு நினைவூட்டினால் போதும். அவள் தன்னிடமிருந்து தப்பித்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவளை வேட்டையாடவேண்டுமென்கிற தாபம் கூடியது. இந்த மலைக்கு வந்த இத்தனை வருடங்களில் அவனை எதிர்த்த பெண்கள் மிகச் சிலரே, சண்டையிட்டு யுத்தங்களை வெல்வதை விடவும் சூதினால் வெல்வதையே நம்புகிறவன் அவன். அன்னூரில் சோத்துக்கு வழியில்லாமல் வாழ்ந்த நாட்களில் மலைக்கு வியாபாரத்திற்கு வந்து செல்லும் ஒரு வியாபாரி சொல்லித்தான் வேலை தேடி ஊட்டி வந்தான். சில நாட்களிலேயே எதன் மீதும் அதீத பற்றில்லாத இந்த மக்களின் அறியாமையை எப்படி பயன்படுத்திக் கொள்ல முடியும் என்கிற வித்தையைக் கண்டுகொண்டான். அன்றுமுதல் அந்த மக்களின் அச்சம்தான் அவனது ஆயுதமாகியது. தேவகியின் எதிர்ப்பு அவன் இதுவரை பார்த்திராத ஒன்றென்பதால் அவள் வேறு யாரையும் விட முக்கியமானவளாக இருந்தாள்.
அன்று அதிகாலையில் மதன் சக்திவேலின் லாரியில் மேட்டுப்பாளையம் சந்தைக்குப் புறப்பட்டான். லாரியின் பின்புறம் கேரட் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பள்ளத்திலும் வண்டி குலுங்கும்போது மூட்டைகள் ஒன்றோடொன்று மோதின. ஓட்டுநர் சாலையைப் பார்த்தபடியே இருந்தான்; பழனி முன் இருக்கையில் கணக்குப் புத்தகத்தைத் திறந்து வைத்திருந்தான். மதன் மூட்டைகளுக்கு நடுவே அமர்ந்திருந்தான்.
மலை இறங்கியதும் சாலை அகலமானது. சிறிய கடைகள், கல் உடைக்கும் இடங்கள், சரக்கு வாகனங்கள், தேநீர்க் கடைகளின் முன் நின்றிருந்த ஓட்டுநர்கள் என ஒவ்வொன்றையும் மதன் பார்த்தான். சத்தீஸ்கரில் சாலை வந்தபோது அதன் பின்னால் துப்பாக்கிகளும் முகாம்களும் வந்தன. இங்கே முதலில் லாரி வந்தது. அதற்குப் பின்னால் கடன், குத்தகை, சந்தை விலை என வழி வேறாக இருந்தாலும் மனிதர்களைத் தங்கள் நிலத்திலிருந்து விலக்கிவிடும் முறை மட்டும் ஒன்றாகத்தான் இருந்தது.
மேட்டுப்பாளையம் சந்தையில் லாரி நுழைந்ததும் மனித சத்தம் அவனைச் சூழ்ந்துகொண்டது. லாரியிலிருந்து மூட்டைகள் இறங்கின. வியாபாரிகள் கேரட்டைத் தொட்டுப் பார்த்தார்கள்; சிலவற்றை உடைத்துப் பார்த்தார்கள்; மண்ணைத் தட்டிவிட்டு விலை சொன்னார்கள். தராசின் ஒரு பக்கம் மூட்டைகள் ஏறின. மறுபக்கம் எண்கள் மாறின.
ஒரு விவசாயி வியாபாரியிடம் வாக்குவாதம் செய்தான். அவன் கொண்டுவந்த மூட்டைகளில் எடை குறைவாக இருப்பதாக வியாபாரி சொன்னதும் விவசாயி மீண்டும் தராசில் எடை போடச் சொன்னான். வியாபாரி சிரித்தான். பின்னால் நின்றவர்கள் அந்தச் சிரிப்பைக் கேட்டும் தலையிடவில்லை. கடைசியில் விவசாயி தன் மூட்டைகளைத் திரும்ப ஏற்றிக்கொண்டு போனான். அவன் முகத்தில் கோபத்தைவிடக் கணக்குப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய சோர்வு இருந்தது. அந்த முகத்தை மதன் முன்பும் பார்த்திருக்கிறான், காட்டில் ஒரு கிராமத்தை விட்டு வெளியேறும்போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தைத் திரும்பிப் பார்க்கும் மனிதர்களின் முகம்.
சக்திவேலின் சரக்குகள் மட்டும் தாமதமின்றி நகர்ந்தன. எந்த மூட்டை எங்கே போக வேண்டும், எந்த வியாபாரியிடம் எவ்வளவு பேச வேண்டும், பணம் எப்போது வர வேண்டும் என்று பழனிக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சக்திவேல் நிலத்தை மட்டும் கைப்பற்றவில்லை; அந்த நிலத்தில் விளைந்த பொருள் வெளியேறும் வழியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். மலைக்குத் திரும்பிச் செல்லும் முன் மதன் சந்தையிலிருந்த ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்தான். அப்போது அவனுடைய பழைய தொலைபேசி அதிர்ந்தது.
அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது: “உன்னைப் பற்றி விசாரணை நடக்குது.”
அந்தச் செய்தியில் யார் விசாரிக்கிறார்கள் என்றும் எங்கே விசாரிக்கிறார்கள் என்றும் இல்லாதபோதும் சத்தீஸ்கரிலிருந்து வந்திருக்கிறது என்பதை மதன் அறிந்தான். திரையை அணைத்துவிட்டு சந்தையைப் பார்த்தான். கேரட் மூட்டைகளைத் தூக்கிச் சென்றவர்கள், தராசைச் சுற்றி நின்றவர்கள், விலைக்காகக் காத்திருந்தவர்கள் என ஒரு கணம் அவர்கள் அத்தனை பேரின் முகங்களும் ஒரே முகமாக மாறின. அந்த முகத்தை அவன் அடையாளம் கண்டுகொள்ள முயன்றபோது, லாரியின் ஹாரன் ஒலித்தது.
மேட்டுப்பாளையத்திலிருந்து திரும்பிய இரவு மதன் அந்தச் செய்தியை மீண்டும் திறந்து பார்த்தான். சந்தையில் படித்தபோது அதை ஒரு தகவலாக எடுத்துக்கொள்ள முயன்றிருந்தான். வீட்டுக்குள், குழந்தைகள் தூங்கிய இரவில் அந்த ஒரு வரி வேறு பொருள் கொண்டது. மங்கலி அவன் முகத்தைப் பார்த்தாள்.
“உன்னைப் பற்றி விசாரணை நடக்குது.”
மதன் நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருக்க, மங்கலி அவனது முகத்தைக் கவனித்தாள்.
“யார்?”
“யாருமில்லை.”
அவன் தொலைபேசியை அணைத்தான்.
“நம்ம ஊர்ல இருந்தா?
அவன் பதில் சொல்லவில்லை.
“மதன், அவங்க இங்கே வர மாட்டாங்கன்னு எப்படி உறுதியா சொல்ற?”
“நான் இங்க இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியாது.”
அவள் குழந்தைகளின் அருகில் சென்று படுத்துக்கொண்டாள். மதன் மட்டும் விழித்திருந்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்குத் தெரியவில்லை.
கனவில் அவன் லாரியின் பின்புறம் அமர்ந்திருக்க, மூட்டைகள் அவனைச் சுற்றி அடுக்கப்பட்டிருந்தன. வண்டி மலையிலிருந்து இறங்கவில்லை; ஒரு காட்டுச் சாலையில் ஏறிக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் சால் மரங்கள். அவற்றுக்கு நடுவே மின்கம்பிகள் தொங்கின. முன்னால் சென்ற வாகனத்தின் சிவப்பு விளக்கு அணைந்ததும், இருள் முழுவதும் துப்பாக்கி முனைகளாகப் பிரிந்தது.
அடர்ந்த வனத்தில் ஒரு கிராமத்தின் நடுவே அவன் நின்றிருந்தான். வீடுகளின் கதவுகள் திறந்திருந்தன. அடுப்பில் சோறு கருகியிருந்தது. ஒரு குழந்தை வாசலில் உட்கார்ந்து மண்ணைக் கீறிக்கொண்டிருந்தது. கிராமத்தின் கடைசியில் ஆறு பேர் மல்லாந்து கிடந்தார்கள். அவர்களுடைய உடல்களை யாரும் மூடவில்லை. ஒருவனுடைய கை மட்டும் இன்னும் துப்பாக்கியைப் பிடித்திருந்தது. அந்தக் கை அவனுக்குத் தெரிந்த கை.
“இவங்க எல்லாரும் உன்னோட ஆளுங்கதானே?” என்று யாரோ கேட்டார்கள்.
மதன் திரும்பிப் பார்த்தபோது அவனது பழைய தோழர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஒருவனின் நெற்றியில் காயம். இன்னொருவனின் சட்டையில் உலர்ந்த குருதி. பல ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். அவர்களுடைய முகங்களில் கோபமில்லை. அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டார்களா என்று அவனுக்குப் புரியவில்லை.
தொலைவில் ஒரு மனிதன் மரத்தில் கட்டப்பட்டிருந்தான். அவன் கிராமத்தின் வழியைப் காவல் படையினரிடம் காட்டிக் கொடுத்தவன் என்று சொல்லப்பட்டிருந்தது. அவன் முகாமுக்கு தகவல் அனுப்பியதால் மூன்று தோழர்கள் சிக்கி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். போராளிகளிடம் எதிரிகளை விட துரோகிகளுக்கே உச்சபட்ச தண்டனைகள் என்கிற விதி இருந்தது. அவர்களிடம் மாட்டியிருந்த ஆள்காட்டி செய்த குற்றத்திற்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய பொறுப்பு மதனிடம் வந்திருந்தது. அவன் துப்பாக்கியை உயர்த்தினான். கட்டப்பட்டிருந்த மனிதனின் தலையைத் தூக்கிப் பார்த்தபோது அவனது கண்களில் துரோகம் இல்லை. பயம் மட்டுமே இருந்தது. அந்தப் பயத்தைப் பார்த்து ஒரு நொடி தயங்கிய மதனை உடன் இருந்தவர்கள் சுடச்சொல்லி கத்தினார்கள். துப்பாக்கியிலிருந்த கை அந்த உத்தரவை ஏற்க மறுத்தது, தன்னைப் போலவே ஒரு மனிதன், அதிகாரத்தால் வேட்டையாடப்பட்டு துரத்தப்பட்ட அவனை சுடவேண்டுமா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவன் நெருங்கி வந்து துப்பாக்கி விசையிலிருந்த மதனின் விரலை அழுத்தினான்.
துப்பாக்கி வெடித்ததும் மரத்தில் கட்டப்பட்டிருந்தவன் விழவில்லை. அவன் உடல் மெதுவாகத் தராசின் எடைத் தட்டாக மாறியது. மறுபுறம் ஒரு கேரட் மூட்டை வைக்கப்பட்டது. தராசு அசையாமல் நின்றது. யாரோ எடையை எழுதிக்கொண்டார்கள். மதன் அந்தக் காகிதத்தில் தன் பெயரைப் பார்த்தான். பெயருக்குக் கீழே ஒரு எண். அந்த எண்ணுக்கு அருகில் ஆறு கோடுகள். கொல்லப்பட்ட ஆறு பேருக்கான கணக்கா, அவன் சுட்ட ஆறு பேருக்கான கணக்கா என்று அவனுக்குத் தெரியவில்லை.
“அவனை நீ கொன்றது அவன் காட்டிக்கொடுத்ததற்காகவா?” என்று ஒரு தோழன் கேட்டான். மதன் பதில் சொல்ல முயன்றான். அவனுடைய வாயிலிருந்து சத்தம் வரவில்லை. திடீரென்று அந்தத் தோழனின் முகம் அவன் மகனின் முகமாக மாறியது. பையன் தலையணைக்குக் கீழே வைத்திருந்த சாம்பல் நிறக் கல்லைத் தன் உள்ளங்கையில் வைத்திருந்தான்.
“இது யாரோட கல்?” என்று பையன் கேட்டான்.
மதன் கல்லைப் பிடுங்க முயன்றான். கல் அவனது கையிலிருந்து வழுக்கி மண்ணுக்குள் விழுந்தது. மண் திறந்து அதன் அடியில் ஒரு கிராமம் தெரிந்தது. அந்தக் கிராமத்திலிருந்த வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. தப்பித்து ஓடும் அவனுடைய தோழர்களை காவலர்கள் துரத்தினார்கள். அவர்களுக்கிடையில் சக்திவேல் நின்றிருந்தான். அவனது கையில் துப்பாக்கி இல்லை; கணக்குப் புத்தகம் இருந்தது. ஒவ்வொரு வீடும் எரியும்போது அவன் அந்தப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைத் திருப்பினான்.
அந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் தேவகியின் பெயர் இருந்தது. பெயருக்குக் கீழே அவளுடைய தந்தையின் கடன். அதற்குக் கீழே மதனின் பெயர். மூன்றையும் ஒரே கோட்டால் இணைத்திருந்தார்கள். மதன் அந்தக் கோட்டை அழிக்க முயன்றான். அது அழியவில்லை. மண்ணுக்குள் இருந்து வேர்கள் மேலே வந்து அவனுடைய மணிக்கட்டுகளைச் சுற்றின. அவன் பிடித்திருந்த துப்பாக்கி கனமாகி, அதன் குழலிலிருந்து வேர்கள் முளைத்தன.
அப்போது அவன் முன்பு சுட்ட மனிதன் மீண்டும் எழுந்து நின்றான். அவன்து கழுத்தில் குண்டு துளைத்த காயம் இல்லை. “நீ என்னயக் கொன்னப்போ நான் உன்னைப் பாத்து பயந்தேன், இப்ப நீ யாரைப் பாத்து பயப்படுற?”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மதன் ஓடினான். காட்டுச் சாலை மேட்டுப்பாளையம் சந்தையாக மாறியது. கேரட் மூட்டைகளுக்கிடையில் அவன் தோழர்களின் உடல்கள் கிடந்தன. ஒவ்வொரு மூட்டையையும் திறந்தபோது ஒரு முகம் தெரிந்தது. சில முகங்களை அவன் காப்பாற்ற முடியவில்லை. சில முகங்களைத் தானே மரணத்துக்கு அனுப்பியிருந்தான். அவன் கண்களை மூடினான். ஆனால் அவன் மூடிய கண்களுக்குப் பின்னால் இன்னொரு கிராமம் எரிந்துகொண்டிருந்தது.
கனவின் கடைசியில் அவன் தனியாக இல்லை. அவனைச் சுற்றி கொல்லப்பட்டவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் அவனைத் தாக்கவில்லை; எதுவும் கேட்கவும் இல்லை. அவர்கள் அமைதியாக அவனைப் பார்த்தார்கள். அந்த அமைதியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மதன் திடீரென்று விழித்துக்கொண்டான். அவனுடைய கை இறுக மூடியிருந்தது. உள்ளங்கையில் நகம் பதிந்திருந்தது. மங்கலி எழுந்து அவனைப் பார்த்தாள். அவன் எதையும் சொல்லவில்லை. கனவில் கேட்ட கேள்வியை அவளிடம் சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கான பதிலை அவன் இன்னும் தனக்கே சொல்லியிருக்கவில்லை.
அடுத்த நாள் காலை தேவகி வேலைக்கு வரவில்லை. அவளுடைய தந்தையும் வரவில்லை. மதியம் வரை எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. மாலை பழனி மதனருகில் வந்து மெதுவாகச் சொன்னான்.
“சக்திவேல் வீட்டுக்குப் போயிருக்காராம்.”
“யார்?”
“தேவகியோட அப்பா.”
“எதுக்கு?”
பழனி சக்திவேலின் வீட்டைப் பார்த்தான்.
“என்ன நடந்தது?” என்று மதன் கேட்டான்.
“தெரியாது.”
“தெரிஞ்சதைச் சொல்லு.”
பழனி தயங்கினான்.
“நேத்து ராத்திரி சக்திவேல் அவங்க வீட்டுக்குப் போயிருக்கான்.”
“எதுக்கு?”
“வேலை விஷயம்னு சொன்னாங்க. அதுக்கு மேல தெரியாது.”
மதன் அங்கிருந்து நகர்ந்தான். நேராக தேவகியின் வீட்டுக்குச் செல்லாமல் முதலில் மங்கலியைத் தேடினான். அவள் வயலின் மறுபுறத்தில் இருந்தாள்.
“தேவகிக்கு என்னாச்சுன்னு எதும் தெரியுமா?
மங்கலி அவனைப் பார்த்ததும் அவன் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
“இல்ல.”
“சரி நான் போயி பாக்கறேன்..”
மங்கலி அவன் கையைப் பிடித்தாள்.
“எங்கே?”
“அவங்க வீட்டுக்கு.”
“தனியா போகாதே.”
“ஏன்?”
“இது இப்போ அவளோட பிரச்சனை மட்டும் இல்ல.”
மதன் அவளைப் பார்த்தான்.
“நம்ம பிரச்சனையா?”
“இல்ல.” அவள் அவன் கையை விட்டாள்.
“நாம யாருன்னு முடிவு செய்யப் போற பிரச்சனை.”
அந்த மாலை மலை முழுவதும் பனி இறங்கியது. வயல்களின் எல்லைகள் மறைந்து சாலையும் வீடுகளும் மரங்களும் ஒன்றோடொன்று கலந்தன. மண்ணுக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாததுபோல, பனிக்குள் என்ன இருக்கிறது என்பதும் தெரியவில்லை. மதன் வேகமாக நடந்தான். காலடியில் ஒட்டிய மண்ணை அவன் உதறவில்லை.
சத்தீஸ்கரில் ஒரு நிலத்தைக் காப்பாற்ற முடியாமல் அவன் ஓடிவந்திருந்தான். சின்னக்குன்னூரில் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அமைதியாக இருந்தான். ஆனால் இரண்டு இடங்களிலும் அவனைத் துரத்திய கேள்வி ஒன்றுதான்: தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, இன்னொருவருடைய வாழ்க்கையின் துயரைப் பார்த்தும் பார்க்காதவனாக எவ்வளவு தூரம் இருக்க முடியும்? அதற்கான பதில் அவனிடம் இல்லை. ஆனால் அந்த நாளிலிருந்து அவனுடைய மௌனம் ஒரு முடிவுக்கு வந்தது.



