நினைவில் காடுள்ள மிருகம் -3


சின்னக்குன்னூரில் மழை பெய்த மறுநாள் மலைகளில் பசுமை அடர்ந்திருந்தது. முந்தைய நாள் வரை மண்ணை மூடியிருந்த தூசி கழுவப்பட்டு கற்களின் மேல் நீர் வழிந்துகொண்டிருக்க, சாலையின் ஓரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் யூகலிப்டஸ் இலைகள் மிதந்தன. தேயிலைத் தோட்டங்களின் சரிவுகளில் சிறிய நீர்த்தாரைகள் உருவாகி, கீழே பள்ளத்தாக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க கேரட் வயல்களில் மண் கருமையாகி காலடியில் ஒட்டியது. மண் ஈரமாக இருக்கும்போது கேரட்டைப் பிடுங்குவது எளிது. ஈரம் அதிகமாகிவிட்டால், மண்ணிலிருந்து வெளியே இழுக்கும்போது கேரட் முறிந்து அரைகுறையாக வந்துவிடும்.
அன்று காலையிலேயே சக்திவேலின் ஆட்கள் எந்த வயலில் அறுவடை செய்யலாமெனப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எந்த வயலை இன்னும் இரண்டு நாட்கள் தள்ளிப்போடலாம்? எந்த வயலில் கேரட் அளவு சரியாக வந்திருக்கிறது? எந்தப் பகுதியில் நோய் பிடித்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒவ்வொரு நாளும் மாறினாலும் சக்திவேலின் கணக்கு மாறாது. தன்னுடைய நிலம் ஒருபோதும் வெறுமையாக இருக்கக் கூடாது என்பதிலும் மலையிலிருந்து கேரட் லோடு தினமும் சந்தைக்கு செல்லவேண்டுமென்பதிலும் கவனமாக இருப்பான்.
ஒருமுறை கேரட் நடவு செய்தால் அறுவடைக்கு 90 நாட்கள் ஆகும். அதன்பிறகு மீண்டும் அதே வயலில் கேரட் போட முடியாது, பூண்டோ அல்லது பீட்ரூட்டோ போடுவார்கள். அதுவும் தொண்ணூறிலிருந்து நூற்றி இருபது நாட்கள் அறுவடை காலம் முடிந்ததும் மீண்டும் கேரட் நடவு செய்வார்கள். இந்த சுழற்சியில் கேரட் தொடர்ந்து எல்லா பருவங்களிலும் கிடைக்கவேண்டுமானால் நிலத்தைப் பிரித்து, வெவ்வேறு பருவங்களில் நடவு செய்ய வேண்டும். சக்திவேலின் நிலம் அந்த மலையில் நீண்டதூரம் வரை விரிந்திருந்ததால் வருடம் முழுக்க கேரட் அறுவடை செய்யக்கூடியவனாக இருந்தான். அவன் நிலத்தை வயல்களாகப் பார்க்கவில்லை; காலண்டராகப் பார்த்தான். மண்ணுக்குள் என்ன இருக்கிறது என்பதைவிட, அடுத்த மாதம் என்ன விளைய வேண்டும் என்பதுதான் அவனுடைய கவலை.
அன்று காலை மதன் வேலைக்குச் செல்லும் முன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தான். மூன்று குழந்தைகளும் பள்ளிக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். சின்னவன் காலணியைத் தேடிக்கொண்டிருந்தான். மூத்தவள் தலைமுடியைப் பின்னிக்கொண்டிருந்தாள். இரண்டாவது பையன் புத்தகப்பையைத் திறந்து எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
"என்ன தேடுற?"
மதன் கேட்டான்.
"பென்சில்."
"நேத்து எங்க வெச்ச?”
"தெரியல."
மதன் அவனுடைய பையை எடுத்துக் கீழே கொட்டினான். புத்தகங்கள், உடைந்த ஸ்கேல், மூன்று காகிதங்கள், ஒரு சிறிய கல், இரண்டு பென்சில்கள். எல்லாம் விழுந்தன. மதன் கல்லை எடுத்து அவனிடம் காட்டி
"இது எங்க கிடைச்சது?" என்று கேட்டான்.
பையன் சிரித்தான்.
"வயல்ல."
மதன் அந்தக் கல்லைப் பார்த்தான். சாம்பல் நிறத்தில் ஒரு பக்கம் மண் ஒட்டியிருந்தது.
"எதுக்கு எடுத்த?"
"எனக்குப் பிடிச்சது."
மதன் அதை மீண்டும் பையனிடம் கொடுத்தான்.
"சரி, பாதுகாப்பா வெச்சுக்கோ.”
மங்கலி சமையலறையிலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் சிரிப்பைக் கவனித்த மதன்.
"என்ன?" என்று கேட்டான். அவள் தலை அசைத்தபடியே
"ஒன்னுமில்லை." என்று சிரித்தாள்.
அந்தச் சிரிப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வெளியே சக்திவேலின் ஜீப் ஹாரன் ஒலித்தது. அவன் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம். மதன் அவசரமாக எழுந்து வாசலுக்குச் சென்றான். சக்திவேலின் வயலுக்குச் செல்லும் பாதை மலைச்சரிவில் வளைந்து கீழே இறங்கும். அந்தப் பாதையில் காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் முதுகில் கூடையைக் கட்டியிருப்பார்கள். சிலர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடப்பார்கள். மதனும் மங்கலியும் அந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டபோது இளவெயில் தழுவிக் கொண்டது.
மங்கலி அவனிடம் சட்டீஸ்கரிலிருந்து முந்தைய தினம் வந்த செய்தியைப் பற்றி கேட்கவில்லையென்றாலும் அறிந்திருந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு, தங்களுக்கு அருகில் எவரும் இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டு மங்கலி கேட்டாள்:
"நேத்து நைட் நீ ஏன் தூங்கல."
மதன் அவளைப் பார்த்தான்.
”இல்லையே நான் தூங்கிட்டேன்…”
அவன் இயல்பாகச் சொன்னான். அவனது கண்களை உற்றுநோக்கிய மங்கலி
”பொய் சொல்லாத மதன்…” என கடுமையான குரலில் கேட்டாள்.
"என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு?” அவளது குரலிலிருந்த பதற்றத்தைக் கவனித்து மதன் நடையை நிறுத்தினான்.
"எதுக்கு?"
"அவங்க இங்கயும் நம்மளத் தேடி வந்துருவாங்களோன்னு…”
அவன் எதுவும் சொல்லவில்லை.
"அவங்க நம்மள விசாரிக்க வந்தா என்ன சொல்றது?” அவள் அவனது கையைப் பற்றினாள். ஆறுதலாக அவளது விரல்களை வருடிவிட்டவன்
“எதுவும் சொல்லக்கூடாது,” என்று அவளது விரல்களை வருடியபடி சொன்னான்.
”அவங்களுக்கு நாம எங்க இருந்து வந்தோம்னு தெரிஞ்சதுன்னா நீ யாருன்கற உண்மையும் தெரிஞ்சுதான் இருக்கும்… எதாச்சும் பிரச்சனை ஆகறதுக்கு முன்னாடி எங்கிட்டயாச்சும் எல்லா உண்மையவும் சொல்லிடு மதன்…” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். நீண்ட பெருமூச்சுடன் மதன் எதிரிலிருந்த மலைகளை வெறித்தான்.
"இப்போ அதெல்லாம் வேண்டாம். நம்ம பிள்ளைகள் பெரியவங்க ஆகட்டும்." என்றான்.
"அதுவரைக்கும் நாம் உயிரோட இருக்கணுமே…”
மங்கலி கவலையோடு சொன்னாள்.
அவன் பதில் சொல்லவில்லை. அவர்கள் மீண்டும் நடந்தார்கள். அவர்கள் வேலை செய்ய வேண்டிய வயல் சாலையின் இன்னொரு புறத்தில் இருந்தது. முதலில் கம்பி வேலிக்கு அப்பால் கேரட் இலைகள் மட்டுமே தெரிந்தன. பிறகு முழு சரிவும் தெரிய, அதன் கீழே மற்றொரு வயல். நீண்ட அந்த சரிவு முடியும் இடத்தில் சிறிய குடிசைகள். மலைத் தாழ்வில் பனி இன்னும் தங்கியிருந்தது. அவ்வளவு பெரிய நிலப்பரப்பு ஒரே மனிதனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது மதனுக்கு நம்ப முடியாத விஷயமாக இருந்தது.
சத்தீஸ்கரில் அவன் அறிந்த நிலம் வேறு. அங்கு நிலம் சிறிய துண்டுகளாக குடும்பங்களுக்குள் பிரிந்திருந்தது. காடும் நதியும் மலையும் எல்லோருக்கும் பொதுவானது. இங்கே நிலம் எல்லைகளைப் பெற்றிருந்தது. வேலி. கம்பம். கதவு. பட்டா. விற்பனை. விலை. இறுதியாக சக்திவேல். அந்தப் பெயருக்குரிய மனிதனைப் பார்க்கவோ பேசவோ மதன் விரும்பவில்லை. வேலியைக் கடந்து வயலில் இறங்கியபோது அவர்களுக்குப் பின்னால் பழனியும் வந்து இணைந்துகொண்டான்.
"இது மூன்றாவது அறுவடை." என்ற பழனியை மதன் புரியாமல் பார்த்தான்.
“இந்த வயல்ல இந்த வருசத்துல மூணாவது அறுவடை இது." கருப்பு மணலில் வெயில் பட்டு மினுங்க மதன் சரிவு வரை ஆங்காங்கே வேலை செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்தான். ”இதுக்கு முன்னாடி என்ன அறுவட செஞ்சிங்க…”
"பூண்டு."
"அதுக்கு முன்னாடி?"
"கேரட்."
"அப்படியா?"
"ஆமா. சக்திவேல் நிலத்தை வீணாக்க மாட்டான்."
என்று பழனி சிரித்தான்.
"மண்ணுக்கு ஓய்வு வேணாமா?" மதன் புரியாமல் கேட்டான். பழனி குனிந்து மண்ணுக்குள்ளிருந்து கேரட்டை உருவி எடுத்தபடியே
"மண்ணுக்கு ஓய்வு கொடுத்தா வருமானம் குறஞ்சிருமே." என்று சிரித்தான்.
"மண்ணுக்கு என்னாகும்னு தெரியுமா” மதன் கவலையோடு கேட்க
"அது யாருக்குத் தெரியும்?" என்றபடியே பழனி முன்னோக்கி நடந்தான்.
மதியத்திற்கு முன் சக்திவேல் வயலுக்கு வந்தான். அவனுடன் கணக்குப் புத்தகம் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். அவர்கள் வயலின் ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
"இந்த வாரம் எவ்வளவு போகும்?"
“நூறு மூட்ட, அண்ணா.”
“பெங்களூருக்கு?”
"நாற்பது."
"மீதம்?"
"மெட்டுப்பாளையம்."
“என்ன விலைக்குக் கொடுக்கிறோம்?”
"நேத்து இருந்ததைவிட குறைவு."
என்று அந்த வேலைக்காரன் சொன்னதைக் கேட்டு சக்திவேல் முகத்தைச் சுளித்தான். உடனே கணக்குப் போடத் தொடங்கினான்.
“அந்த விலைக்குக் கொடுக்காதே. இன்னும் இரண்டு நாள் இறுக்கிப் பிடி.” என்றான்.
"கேரட் வீணாப்போயிடுமே, அண்ணா.” என்று வேலைக்காரன் பதற, “என்ன செய்யணும்னு எனக்கு சொல்றியா நீ? சொன்னதைச் செய்டா, தெள்ளவாரி நாயே. ரெண்டு நாள் விட்டுப் பிடி; விலை ஏறட்டும்.” என கடுமையாகச் சொல்ல அந்த வேலையாள் தயங்கினான்.
"“பொருள் நம்ம கையில இருக்கிற வரைக்கும் நாம சொல்றதுதான் விலை. புரிஞ்சுதா?” என இறுதியாகச் சொல்லிட்டு மேட்டிலிருந்த வண்டியை நோக்கி நடந்தான்.
மதன் அந்த வார்த்தையைத் தெளிவாகக் கேட்டான். அவனுக்கு அந்த வார்த்தைகள் வேறு விதமாகத் தோன்றியது. நிலம் யாருடைய கையில் இருக்கிறது? விலை யாருடைய கையில்? விதை யாருடையது? நீர் யாருடையது? சந்தை யாருடையது? இதில் தன்னைப்போன்ற மனிதர்களுடைய உழைப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? என சிந்தித்தபடியே கேரட்டை இழுத்தான். மண் சற்றே உடைந்து உள்ளேயிருந்து ஒரு சிறிய கல் வந்தது. அவன் அதைக் கையில் எடுத்தபோது அவனுடைய குழந்தையின் பையில் வைத்திருந்த கல் நினைவுக்கு வந்தது. அவன் கல்லைத் தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
மதிய உணவு நேரத்தில் தொழிலாளர்கள் வயலின் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சோறு. குழம்பு. சிலருக்கு ரொட்டி. மங்கலி குழந்தைகளுக்காக வைத்திருந்த ஒரு சிறிய எலுமிச்சை ஊறுகாயைத் திறந்தாள். பழனி சிரித்துக்கொண்டு கேட்டான்:
"சத்தீஸ்கர்ல என்ன சாப்பிடுவீங்க?"
மதன் யோசித்தான்.
"எல்லாம்."
"எல்லாம்னா?"
“காடு என்ன கொடுக்குதோ, அதெல்லாமே.”
“கேரட்?” என்று பழனி ஆர்வமாகக் கேட்க, மங்கலி சிரித்தாள்.
"அவனுக்கு கேரட் பிடிக்காது."
மதன் அவளைப் பார்த்தான். பழனி அவசரமாக மதனிடம்
"நேத்து மூணு கேரட் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போன." எனக் கேட்டான்
“அது குழந்தைகளுக்காக. எனக்கில்ல,” என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.
அருகில் இருந்த ஒரு வயதான படுகா தொழிலாளி அந்த சிரிப்பினூடாகப் பேசத் தொடங்கினார்.
"எங்க அப்பா காலத்துல இந்த மலைல கேரட் இவ்வளவு இல்ல."
மதனும் அவனோடு இருந்தவர்களும் அவரைப் பார்த்தார்கள்.
"உருளைக்கிழங்கு. கொஞ்சம் காய்கறி. வருசத்துல ஒரு தடவ கேரட்…” என்று சொல்ல மதன் அவரிடம் ”அப்போ நிலம் யாரோடதா இருந்துச்சு…”
பெரியவர் சாப்பிடுவதை நிறுத்தினார்.
"எங்களுடையது."
சிறிது நேரம் கழித்து சிரித்தார்.
"இப்போ எங்க வயல்லயே நாங்க வேலை செய்றோம்."
அவருடைய குரலில் கோபம் இல்லாததுதான் மதனை வேதனைப்படுத்தியது. கோபம் இருக்கும் காலம் வரைதான் மனிதன் தன் உரிமையை நினைவில் வைத்திருக்கிறான். கோபத்தைக் கைவிடும்போது அந்த இழப்புகளை ஏற்றுக்கொண்டு விடுகிறான். அநீதியை எதிர்க்காமல் போவதிலிருந்துதான் ஒரு இனத்தின் வீழ்ச்சியும் துவங்குகிறது. மதன் அந்த முதியவரை கருணையோடு பார்த்தான்.
மாலை வேலை முடிந்தபோது மங்கலி தேவகியை முதன்முறையாக கவனித்தாள். அவள் வயலின் மறுபுறம் வேலை செய்துகொண்டிருந்தாள். கருத்த தேகத்தோடு உயரமானவளாயிருந்தவள் முடியை இறுக்கமாகப் பின்னியிருந்தாள். மற்ற பெண்களைவிட வேகமாக வேலை செய்தாள். அவள் ஒரு கேரட்டை பிடுங்கும்போது முழு உடலும் கீழே சென்று மீண்டும் மேலே வந்தது. அந்த வேலைக்கு நன்கு பழகியவளாகத் தெரிந்தாலும் முகத்தில் மட்டும் ஒரு எச்சரிக்கை தெரிந்தது. யாராவது தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்று அவள் அவ்வப்போது பார்த்துக்கொண்டதை மங்கலி கவனித்தாள்.
"அவள் யார்?" என்று மதனிடம் அவளைக் காட்டிக் கேட்டாள்.
"தேவகி. இங்க வேலை செய்றவதான். ஏன் அவளுக்கு என்ன?" என்று மதன் கேட்டான்.
"எதையோ பாத்து பயந்த மாதிரி இருக்கா." என மங்கலி சொன்னபிறகு மதன் தேவகியைப் பார்த்தான். அந்த நேரத்தில் சக்திவேலின் வீட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்த தேவகி தூரத்திலிருந்து மதனும் மங்கலியும் தன்னைக் கவனிக்கிறார்கள் எனத் தெரிந்ததும் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். தேவகியின் பதற்றத்தைக் கவனித்த மதன் ”சரி மங்கலி வா நாம வீட்டுக்குப் போவோம்…” என சாலையை நோக்கி நடந்தான்.
”எனக்கு இன்னும் முடியல, வேலை இருக்கு” என மங்கலி சொன்னதை பொருட்படுத்தாமல் வரச் சொல்லி கையசைத்தான். ஏதோ புரிந்துகொண்டு கைகளில் இருந்த மண்ணை உடையில் துடைத்துவிட்டு அவனைத் தொடர்ந்து நடந்தாள். அவர்களுக்குப்பின்னால் இருளும் பனியும் மாய உருவமெனத் தொடர்ந்து வந்தது.
"அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?" மங்கலி தன் கணவனை நெருங்கி வந்து கேட்டாள்.
"தெரியாது." மதன் திரும்பிப் பார்க்காமலேயே சொன்னான்.
"நீ தெரிஞ்சுக்க மாட்டியா?"
"நமக்கு வேலை இருக்கு."
"என்ன பிரச்சனைன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா யாரும் கேட்க மாட்டாங்க."
மதன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
"என்ன செய்ய சொல்ற?"
"ஒன்னும் செய்யச் சொல்லல. நீ எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போறேன்னு கேக்கறேன்." அமைதியாக நின்றவனின் முகத்தைப் பார்த்தாள். அமைதியின்மையால் அவனது முகம் களையிழந்திருந்தது. தான் எந்த நிலத்திலிருந்து வந்தோம் இப்போது இந்த நிலத்தில் என்ன செய்துகொண்டிருகிகிறோம் என்கிற குழப்பங்களில் நிலமற்ற மனிதனாகத் தெரிந்தான்.
"எதைப் பார்த்தாலும் திரும்பிப் போற."
"இன்னொரு தடவ என்னால நம்ம குடும்பத்த ஆபத்துல விடமுடியாது மங்கலி” என்றான்.
"நாம ஏற்கனவே ஆபத்துலதான் இருக்கோம் மதனா.” என்று அவள் சொன்னதும் அவனது முகம் மாறியது. ”போதும் மங்கலி அமைதியா வா.” எனச் சொல்லிவிட்டு வேகமாக மேட்டிலிருந்த வீட்டை நோக்கி நடந்தான்.
மங்கலி வேகமாக ஓடிவந்து அவனை பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள்.
"மதனா ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். நீ எவ்வளவு தூரம் ஓடினாலும், உன்னோட வர்றது நம்ம குடும்பம் மட்டும் இல்ல. நம்மளோட காடும் மலையும் நம்ம மக்களோட நினைவுகளும் இருக்கு. மறந்துடாத… நமக்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக்கூடாதுன்னுதான் நீ காட்டுக்குள்ள ஆயுதம் எடுக்கப் போன… அதுதான் உன்னொட நிஜம்… இப்போ இருக்க இந்த ஆள் இல்ல… ” என்று சொன்னபோது மதனுக்குக் கண்கலங்கியது, தனது அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஒரு போராளியின் கண்ணீரை அவனது குடும்பம் பார்க்கக் கூடாது.
அடுத்த நாள் காலை சின்னக்குன்னூரில் மலையும் வயலும் தெரியாத அள்விர்கு பனி அதிகமாக இருந்தது. கேரட் அலசும் யூனிட்டுக்குள் ஆட்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். சக்திவேலின் லாரி அந்தப் பனிக்குள் வந்து நின்றது. டிரைவர் இறங்கி கத்தினான்:
"மூட்டைய சீக்கிரம் ஏத்துங்கடா…’
மதன், பழனி, மேலும் நால்வர் ஓடினர். மூட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக லாரியில் ஏறின. மங்கலி பெண்களுடன் சேர்ந்து கழுவப்பட்ட கேரட்டுகளை தரம் பிரித்து அடுக்கினாள். அந்தக் கூட்டத்தில் தேவகியும் இருந்தாள். நேற்று இருந்த பதற்றம் குறைந்து முகம் அமைதியாக இருந்தது. சக்திவேல் தூரத்தில் நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்ததை வேலைசெய்தபடியே மதன் கவனித்தான். சில நொடிகளிலேயே மதன் தன்னைக் கவனிப்பதை சக்திவேலும் பார்க்க, இருவரும் தீவிரமாக பார்த்துக் கொண்டார்கள். தேவகியை நோக்கி சக்திவேல் நகர அந்தக் காலனியின் சத்தம் கேட்டு அவளுடைய தோள்கள் இறுக்கமாயின. சக்திவேல் அவளைக் கடந்து இன்னொரு பெண்ணிடம் சென்று பேசினான். மீண்டும் திரும்பி மதனைப் பார்த்தபோது அவனது பார்வையிலிருந்த சினத்தை உணர்ந்துகொண்டான். வேட்டைக்குக் காத்திருக்கும் புலியைப்போல் தீவிரமான பார்வை. காட்டில் நீண்டகாலம் வேட்டையாடி குருதி சுவை பார்த்த புலிக்கு மட்டுமே இருக்கும் சினம் அது. அவன் தனது நிலத்தில் வேலையை பார்க்கும் சாதாரணக் கூலிக்காரன் இல்லை என்பதை அந்த நொடியே உணர்ந்துகொண்டான். மதன் தன் கையை மூட்டையின் கயிற்றில் இறுக்கமாகப் பிடித்தான். அவன் உள்ளங்கையில் கயிறு வெட்டி ரத்தம் கசிய அதனைத் தலையில் துடைத்துக்கொண்டான். சக்திவேல் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவசரமாக கிளம்பிச் சென்றான்.
அன்று இரவு குழந்தைகள் சீக்கிரமே தூங்கிவிட்டார்கள். மதன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பழைய துணியைப் பார்த்தான். அழுக்கேறிய சிவப்புத் துணியில் அவர்களது தெய்வத்தின் உருவம் மட்டும் அப்படியெ இருந்தது. அந்தத் துணியைக் கையில் ஏந்தி கண்களில் ஒற்றிக்கொண்டபோது துப்பாக்கி சத்தங்களும் காடு அதிர ஓடிய பூட்ஸ்கால்களின் சத்தமும் கேட்டது. குருதியின் வாசம் சூழ்ந்துகொண்டது. பல வருடங்களுக்கு முன்பு உடைந்த கல் நினைவுக்கு வர அவன் அந்தத்துணியைப் பார்த்தான்.
"நீங்க எங்க இருக்கீங்க?"
யாரிடம் கேட்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
தெய்வத்திடமா? தன் தந்தையிடமா? காட்டிடமா? கொல்லப்பட்ட பழங்குடி மக்களிடமா? அல்லது தன்னிடமா? மலையிலிருந்து மூர்க்கமாக காற்று இறங்கியதில் தகரக் கூரை அதிர்ந்தது. மதன் கண்களை மூடினான். அவனுக்கு சத்தீஸ்கரும் பஸ்தர் காடும் தெரிந்தது. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு சாலை. அந்தச் சாலையில் பெரிய வாகனங்கள் ஊர்ந்துவர, அவற்றின் பின்னால் தூசி பறக்கிறது. அந்தத் தூசியின் பின்னால் இயந்திரங்களின் சத்தம். இயந்திரங்களின் முன்னால் வெட்டப்படும் மரங்கள். வெட்டப்படுமந்த மரங்களின் பின்னால் மக்கள். மக்களின் முன்னால் ஆயுதங்கள். அந்தக் காட்சியின் நடுவில் அவனுடைய தந்தை உடல் முழுக்கக் காயங்களோடு குருதி வழிந்தபடி சொல்கிறார்.
”நம்ம மண்ண விட்றாத மதனா?”
மதன் திடீரென்று கண்களைத் திறந்தான். அவனது சுவாசம் வேகமானது. அருகில் மங்கலி விழித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவன் படுத்துக்கொண்டான். மங்கலி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டாள்.
குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சின்னவனின் தலையணைக்குக் கீழே ஏதோ இருப்பதைக் கவனித்த மதன் அதை எடுத்து பார்த்தான். முன்னொரு நாள் வயலில் கண்டெடுத்த கல். கல் எடுக்கப்பட்டதும் தூக்கத்திலேயே கண்ணைத் திறந்து பார்த்த சின்னவன் அதைக் கொடுக்கச் சொல்லி கையை நீட்ட
"இதை எதுக்கு வெச்சிருக்க?” என மதன் கேட்டான்.."ஏன்னா அது நம்மளோட கல்." தூக்கக் கலக்கத்திலேயே சின்னவன் சொல்ல, மதன் புரியாமல் "யாரு சொன்னது?" என்று கேட்டான்.
”அம்மா” என்று அவன் சொல்ல அந்தக் கல்லை சில நொடிப் பார்த்துவிட்டு மகனிடம் கொடுத்தான். அவன் தலையணைக்குக் கீழ் கல்லை வைத்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டான்.
அவன் கையிலிருந்தது ஒரு சாதாரண கல். ஈர மண் படிந்த கருமையான அந்தக் கல் அவனுக்கு வேறொரு கல்லாகத் தோன்றியது. சால்மரத்தின் கீழே இருந்த மஞ்சள் பூசப்பட்ட கல். அதன் முன் அவன் தாய் வைத்திருந்த மகுவா பூக்கள்.
"நம்ம பிள்ளைகள் இங்கதான் வளரணும். அவங்களுக்கு நம்ம ஊர் தெரியக் கூடாது." என மங்கலியிடம் சொன்னான். அவிழ்ந்த கூந்தலை முடிந்தபடியே அவள் மதனை நெருங்கினாள்.
"ஏன்?"
"அவங்களுக்கு நம்மள மாதிரி பயம் இருக்கக் கூடாது."
மங்கலி எதிரே வந்து அமர்ந்தாள்.
"நம்ம ஊர் எதுன்னு தெரியாம வளர்ந்தா பயம் வராதா? தான் யாருன்னு தெரியாம வளர்வாங்க. மதனா?”
"அதுதான் நல்லது." என்றான்.
மங்கலி அவனது சுருண்ட கேசத்தில் விரல்வைத்துக் கோதினாள்.
"யாருக்கு நல்லது?”
அவன் பதில் சொல்லவில்லை.
"நீ எதிலிருந்து அவங்கள காப்பாத்தனும்னு நெனைக்கிற?”
”எங்கிட்ட இருந்து, என்னோட கடந்த காலத்துக்கிட்ட இருந்து…”
அந்த வார்த்தை மங்கலியைத் திடுக்கிட வைத்தது. அவனது தலையிலிருந்து கையை எடுத்துக்கொள்ள, மதன் எழுந்து வெளியே சென்றான். மங்கலி அவனைத் தடுக்கவில்லை. திறந்த கதவின்வழியாக பனிக்காற்று வீட்டுக்குள் புகுந்தது.
மதன் வயலின் ஓரத்தில் நின்று கைகளில் ஒட்டியிருந்த மண்ணைத் தேய்த்துக் கொண்டிருக்க, மங்கலி பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து தேநீரை ஊற்றி அவனிடம் கொடுத்தபோது அவனது பார்வை எங்கோ நிலைகுத்திப் போயிருந்ததை கவனித்தாள்.
”என்னாச்சு? ஏன் இப்படி நிக்கிற?"
மதன் வயலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"நேத்து ராத்திரி தேவகி சக்திவேலோட தோட்டத்து வீட்டுக்குப் போயிருந்தாளா?"
மங்கலி அமைதியாக இருந்தாள்.
”உனக்கு என்ன அதப்பத்தி பேசாம டீயக் குடி.”
மங்கலி தேநீரை அவன் கையில் வலுக்கட்டாயமாகத் திணிக்க, குவளையை வாங்கிக்கொண்டான். தேவகி அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக வந்தாள். குளிருக்கு மறைப்பாக தலையில் துண்டைச் சுற்றியிருந்தாள். அவளது தலைமுடி கழுத்தின் பின்புறத்தில் ஒட்டியிருந்தது. அவள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் நேராக வேலைக்குச் சென்றதை மதன் கவனித்தான். அவள் வயலில் இறங்கிய சில நிமிடங்களிலேயே சக்திவேலின் கருப்பு நிற ஸ்கார்பியோ வந்தது. வண்டியிலிருந்து இறங்கியவன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வயலில் நின்ற தேவகியை வெறித்தான். அவனது கண்கள் அவளது உடலை வெறித்தது. தனது வேலையாளிடம் லாரி வரும் நேரத்தை விசாரித்துவிட்டு எந்த ஊருக்கு எத்தனை மணிக்கு லோட் செல்லவேண்டுமென்பதையும் குறிப்பிட்டான். கண்கள் மட்டும் தேவகியின் மீதிருந்து நகரவில்லை. தனது உடலை யாரோ நீண்டநேரமாக கவனிக்கிறார்கள் என்கிற குறுகுறுப்பில் தேவகி தற்செயலாகத் திரும்பிப் பார்த்தபோது சக்திவேல் அவளை வரச்சொல்லி கையக் காட்டினான். அவளுக்கு அந்தக் குளிரும் நெற்றியில் வியர்க்க, உடையைச் சரிசெய்துகொண்டு மேட்டிலிருந்த சக்திவேலின் வண்டியை நோக்கி நடந்தாள். சக்திவேல் தனது வேலைக்காரனைத் திரும்பிப் பார்க்க அவன் அவசரமாக விலகி நடந்தான்.
தேவகி சக்திவேலை நெருங்கும் சமயத்தில் மதன் அவர்கள் இருவரையும் கவனித்தான். குனிந்து வேலை செய்துகொண்டிருந்த மங்கலி ஒரு மண் கட்டியைத் தூக்கி அவன் மீது எறிந்து ”வேலையப்பாரு…” என்றாள். மதன் மண்ணை நோக்கித் திரும்பினான். சக்திவேலின் முன்னால் நின்றிருந்த தேவகியின் உடலில் வெளிப்படையான நடுக்கம். அவள் கழுத்திலும் நெற்றியிலும் இருந்த வியர்வையைப் பார்த்தபடியே சக்திவேல் சிகரெட்டை ஆழமாக இழுத்து புகையை வெளியே விட்டான்…
"நேத்து ஏன் வரல?" அவளது கண்களை ஊடுருவிப் பார்க்க,, அவள் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.
"வீட்டுல நிறைய வேல இருந்துச்சு…” அவளது குரல் நடுங்கியது.
அவன் சிரித்தான்.
"அத வீட்டுல இருக்கவங்க பாக்க மாட்டங்களா? நான் என்ன சொல்றனோ அதத்தான் நீ செய்யனும்… புரியுதா?” அச்சத்தோடு தேவகி அவனைப் பார்த்தாள். சக்திவேல் அவளை நெருங்கினான். அவளது ஒரு கையைப் பற்றி இறுக்கியபடியே ’நீ இங்க வேல பாக்கனுங்கறதுக்காக உனக்கு வேல கொடுக்கல… நான் கூப்டறப்பலாம் என்கூட படுக்கனுங்கறதுக்காக குடுத்திருக்கேன். புரியுதா?…” என்றபடியே அவளது கையை இறுக்க அவள் வலியில் முனகினாள். அந்த வேதனையைக் கண்டு சிரித்தவன் ’என்னடி இப்பதான் புதுசா தொடற மாதிரி துடிக்கிற…” என அவளை இன்னும் நெருங்க சரியாக அதே நேரம் மதன் மீண்டும் அவர்களைப் பார்த்துவிட்டான். கையிலிருந்த மண்ணை உதறிவிட்டு வேகமாக வயலிலிருந்து சாலையை நோக்கி நடக்க மங்கலியும் கவனித்துவிட்டாள். என்னவாகப்போகிறதோ என இதயம் படபடக்க, ஆவேசமாக நடந்து செல்லும் மதனை வயலில் வேலை செய்த எல்லோருமே இப்போது கவனித்தார்கள்.
வயலிலிருந்து யாரோ ஒருவன் நடந்து வரும் சத்தம் கேட்டு சக்திவேல் திரும்பிப் பார்த்தபோது காற்றில் மதனின் உடையிலிருந்த மண் பறந்தது, மதனின் பார்வை நேராகத் தன்னைத் துளைப்பதை உணர்ந்த சக்திவேல், தேவகியின் கையை அவசரமாக விட்டுவிட்டு காரில் ஏறினான். தேவகி சில அடிகள் விலகி நடப்பதற்கும் மதன் அங்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. அவனது தீவிரத்தைக் கண்ட அச்சத்தில் சக்திவேல் அவசரமாக வண்டியை ஸ்டார்ட் செய்ய மதன் கையைக் கட்டிக்கொண்டு பணிவாகக் குனிந்தான். ’அண்ணா அடுத்தவாட்டி லோட் ஏத்திட்டுப் போறப்போ நானும் மேட்டுப்பாளையம் போகட்டுமா? உங்களுக்கு உதவியா இருக்கும் ல…” என்று சொல்ல சக்திவேல் அவனை அமைதியாகப் பார்த்தான். அந்தக் குரலிலிருந்த பணிவு போலியானதென்பதை நன்கறிந்தவனைப் போல் ’சரி என்றான்… அவனது வண்டி அங்கிருந்து வேகமாக மறைந்து சரிவில் இறங்கியது.
அன்று மாலை சக்திவேல் வீட்டின் பின்புறம் லாரிகள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு லாரியில் கேரட் மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. மற்றொரு லாரியில் பூண்டு மூட்டைகள். மூன்றாவது லாரி கீழே செல்லத் தயாராக இருந்தது. மலைச்சாலையில் இரவு பயணம் செய்யும் முன் டிரைவர் டயரை உதைத்துப் பார்த்துக்கொண்டான். சக்திவேல் ஒரு சிறிய அலுவலகத்தில் கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த அறைக்குள் இருந்த புத்தகங்களும், ரசீதுகளும், நில ஆவணங்களும் சேர்ந்துதான் அந்த மலைப்பகுதியின் பல குடும்பங்களின் வாழ்க்கையை அவனிடம் அடமானம் வைத்திருந்தன. பழனி கதவுக்கருகில் வந்து நின்றான். ’வரச் சொல்லி இருந்தீங்க அண்ணா?” பழனி மெல்லியக் குரலில் கேட்க, சக்திவேல கணக்குப் புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்துகொண்டான்.
”லாரிலாம் கிளம்பிடுச்சா பழனி…”
”ண்ணா இன்னும் பத்து பதினஞ்சு நிமிசத்துல மூணு வண்டியும் கிளம்பிடும்ணாஅ…” என்று பணிவாகச் சொன்னான். சக்திவேல் உடையை சரிசெய்தபடியே நெருங்கி வந்தான்…
”ந்த மதன் எப்பிடி…”
”எந்த மதன் ண்ணா?”
”அதான் இந்த சத்தீஸ்கர் காரன்…” சக்திவேலின் குரல் கூர்மையானது.
”ண்ணா ரொம்ப தங்கமான ஆளுண்னா… அப்பிராணி… என்னாச்சுங்கண்னா…”
”ஒன்னுமில்ல… லோட் ஏத்திட்டு மேட்டுப்பாளையம் போற வண்டில வேலைக்கு வரேன்னு சொல்றான். அதான் நம்பலாமா வேணாமான்னு…”
சக்திவேல் பழனியிடம் ஆழம் பார்க்கும் தொனியில் கேட்க, அவன் சிரித்தபடி
”அட நல்லா சேத்துக்கங்கண்ணா… பாவம் மூணு புள்ள வெச்சிருக்கான். நாலு காசு சேத்துக்கனும்னு நெனைக்கிறான்…” என்றான். சக்திவேல் நிதானமாக யோசித்தபடியே ”ச்சேரி நீ பொ நா பாத்துக்கறேன்…” என்று சொல்ல, பழனி இறங்கி வெளியே சென்றான். முதல் லாரி ஸ்டார்ட் செய்யப்பட்டு கிளம்பும் சத்தம் கேட்க, சக்திவேல் ஜன்னல் வழியாக வண்டி செல்வதைப் பார்த்தான்.
லாரிக்குப் பின்னாலிருந்த இருளில் மலை முழுக்க அவனுடைய நிலம் சிதறியிருந்தது. மலைச்சரிவின் பல பகுதிகளில் பல ஆண்டுகளில் பல பெயர்களில் வாங்கப்பட்ட நிலங்களின் கூட்டுத்தொகை. ஒரு இடத்தில் கேரட். இன்னொரு இடத்தில் பூண்டு. கீழே பீட்ரூட். வேறொரு சரிவில் மீண்டும் கேரட். அவன் விவசாயி அல்ல; நேரத்தைப் பயிரிட்டான். எதை விளைவிக்கவேண்டும், என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதை மட்டுமல்லாமல் அந்த ஊரில் என்ன நடக்கவேண்டும் என்பதையும் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக வளர்ந்திருந்தான்.
தேவகியின் தந்தை தனது பழைய நிலத்தில் கேரட் மூட்டையைத் தூக்கிக்கொண்டிருந்தார். மூட்டையைத் தூக்கிய அவரது முதுகைப் பார்க்க, பல ஆண்டுகளாகத் தன் நிலத்தையே சுமந்துகொண்டிருப்பதைப் போலிருந்தது. மதன் அவருக்கு உதவி செய்ய வேண்டி அவசரமாக நெருங்கினான், சிரித்தபடியே அவர் "வேண்டாம்," என்றார்.
"நான் எடுத்துட்டுப் போறேன். நீங்க விடுங்க…” என மதன் மூட்டையை வாங்க முன்வர, அவர் மறுத்து "என் நிலத்துல வெளஞ்சத நான் தான் சுமக்கணும்.” என்று சொல்ல மதன் அப்படியே நின்றுவிட்டான். சுமையோடு நிதானமாக அவர் நடந்துசென்றார்.
மலைக்காற்று அவனது முகத்தைத் தழுவியபோது ஒன்றை விளங்கிக் கொண்டான். பூர்வகுடிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்க எல்லா நேரங்களிலும் துப்பாக்கி தேவையில்லை. சில நேரங்களில் அவர்களுக்குக் கொடுக்கும் கடன் போதும். சில நேரங்களில் அந்த மக்களுக்கு வேலை கொடுத்தால் போதும். சில இடங்களில் அந்த மக்களின் உடலுக்குள் பயத்தை விதைத்தால் போதும். தான் அறிந்த வன்முறைகளை விடவும் இவை தீவிரமானவை என்பதை உணர்ந்ததும் அவனது உடலில் அச்சம் நிரம்பியது.
அன்று இரவு தேவகி வீட்டில் உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வீடு முழுக்க இரைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குசெய்தபடியே வாசலில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்தாள். யாரிடமோ பேசிவிட்டு உள்ளே வந்தவர்
"நாளைக்கு வேலைக்குப் போறியா?" என்று அவளிடம் கேட்டார்.
"போகணும்." கையிலிருந்த தம்பியின் சட்டையை மடித்தபடியே சொன்னாள்.
"ம்ம்ம்” அவர் தண்ணீர் எடுத்துக் குடித்தார்.
அப்பா. நான் வேலைக்குப் போகாம இருக்கவா?” தேவகி அவரை நெருங்கி வந்துகேட்டாள். கையிலிருந்த குவளையைக் கீழே வைத்தவர்
"வேலைக்குப் போகலன்னா சாப்பாட்டுக்கு என்னம்மா செய்றது?”
அவள் அமைதியாக இருந்தாள்.
"உங்கம்மாவுக்கும் எனக்கும் மருந்து? உன் தம்பியோட படிப்பு?”
அவள் பதில் சொல்ல முடியாத அமைதியில் தலையை குனிந்துகொள்ள,
"நிலம் போன மாதிரி வேலையும் போயிருக்கக் கூடாது,” என அவளது தந்தை தழுதழுக்கும் குரலில் சொன்னார்.
அந்த வார்த்தையில் கோபம் இல்லை; வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் மட்டுமே இருந்தது. தேவகி கதவின் அருகே நின்று வெளியே பார்த்தாள். தொலைவில் சக்திவேலின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவளுக்கு வயலின் நடுவில் கட்டப்பட்ட பெரிய கணக்குப் புத்தகமாகத் தெரிந்தது. யார் எவ்வளவு வேலை செய்தார்கள். எவ்வளவு கடன் வாங்கினார்கள். யார் எப்போது வேலைக்கு வர வேண்டும். யார் எப்போது பேச வேண்டும். எல்லாம் அதற்குள் எழுதப்பட்டிருந்தது. பெண்களின் பெயர்கள் மட்டும் பிரத்யேகமாக வேறு பக்கத்தில் இருந்தன. அந்தப் பக்கத்தை யாரும் திறந்து பார்க்கவில்லை. தன் நிலத்தில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்களின் உடல்களைத் தன் உரிமைக்கு உட்பட்டவைபோல் அவன் கருதியிருந்தான்.
தேவகி தனது சிறுவயதில் அவனைப் பார்த்திருக்கிறாள். ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக இருந்த அவர்களது நிலத்தில் ஒரு பருவத்திற்கு கேரட்டும் இன்னொரு பருவத்திற்கு உருளைக்கிழங்கும் மட்டுமே விளைவிப்பார்கள். வீட்டிலிருந்தவர்களும் உறவினர்களுமாகச் சேர்ந்து அறுவடை வேலைகளை கவனித்துக் கொள்வார்கள். அதிகாலையில் லோட் ஏற்றுவதற்கு முந்தைய இரவே வந்துவிடும் சக்திவேல் இவர்களது வீட்டிற்குப் பின்னால் இருக்கு மாடு அடைக்கும் இடத்தில் அமர்ந்து மது அருந்துவான். தேவகியின் தந்தையும் அவனோடு குடிப்பதுண்டு. மலையில் அமைதியாக வாழ்ந்த மனிதர்களின் வாழ்வை நாசப்படுத்தியதில் பெரும் பங்கு இந்த சாராயத்திற்கு உண்டு… குடிக்கத் துவங்கும்போது பணிபணிவோடு அவரிடம் பேசும் சக்திவேல் போதையேறியதும் அதிகாரம் செய்வான். அவனது முரட்டு உருவமும் குரலும் எதிரிலிருக்கிறவரை எளிதில் கட்டுப்படுத்திவிடும். ’காட்ட வித்து கள்ளுக் குடிச்ச வம்சம்யா நாங்க…” என தொடையில் தட்டிச் சிரிப்பான். அவன் காட்டை விற்று அல்ல மற்றவர்களின் காட்டை அடித்துப் பிடுங்கி அதை விற்றுக் கள்ளுக் குடிக்கும் திருடன் என்பதை சில வருடங்களுக்குப் பிறகுதான் அந்த ஊர்க்காரர்கள் தெரிந்துகொண்டனர். ஒரு புறம் லாரிகளை புதிதாக வாங்கத் துவங்கியவன் அந்த மலையிலிருந்த வளமான நிலங்களின் மீதான மோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்து ஊரிலிருந்த படுகா சமூகத்தைச் சேர்ந்த பெரும் நிலக்கிழாரின் மகளைத் திருமணம் செய்துகொண்டான். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களோடு அதிகாரமும் அவனிடம் வந்தது.
தேவகி இருளில் சக்திவேலின் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். சரிவிலிருந்து மேடு நோக்கி ஏறியபோது லேசான தூரல் ஆரம்பித்தது. தலையில் அணிந்திருந்த பனிக்குல்லாவை காதை மறைக்கும்படி இழுத்துவிட்டுக் கொண்டவள் இருளில் நடையின் வேகத்தை அதிகமாக்கினாள். அவளுக்குத் தெரியும் இந்த நேரத்தில் அவன் வீட்டின் பின்புறம் இருக்கும் அறையில் இருப்பான். இதற்கு முன்பும் சிலமுறை அங்கு அவள் சென்றிருக்கிறாள். குடிவெறியில் சிவந்த அவனது கண்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறாள். பேராசை கொண்டவனுக்கு உடலெல்லாம் கண்கள் முளைத்துவிடுமென அவனைப் பார்த்துதான் தெரிந்துகொண்டாள். இந்த மலையிலிருந்த நிலங்களை எத்தனை வேட்கையோடு எடுத்துக்கொண்டானோ அப்படித்தான் இங்கிருக்கும் பெண்களையும் எடுத்துக்கொள்ள நினைத்தான்.
அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த சக்திவேல் நன்கு குடித்திருந்தான். அந்த அறை முழுவதும் மதுவின் வாடை தீவிரமாகப் பரவியிருந்தது. தேவகி கூச்சத்துடனும் அருவருப்புடனும் ஒரு ஓரத்தில் நின்றாள். அவளைப் பார்த்துச் சிரித்தபடியே நெருங்கியவன், அவளது கழுத்தைக் கடித்தான். வலியில் துடித்த தேவகி ’எனக்கு இதெல்லாம் புடிக்கல… என்னய விட்றுங்களேன்’ என மன்றாடினாள். வேட்டையிலிருந்து தப்பி ஓடும் மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டபடியே
"உன் வீட்டோட நிலை என்னன்னு எனக்குத் தெரியும். உனக்கு உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளு" அவள் சிரமத்தோடு அவனிடமிருந்து விலகி பின்னால் நகர்ந்தாள்.
"எனக்கு இப்ப இருக்க வேலை போதும். என் குடும்பத்துக்காக தான் நான் வேலைக்கு வரேன்… அதுக்காக எங்கிட்ட அத்துமீறலாம்னு இனி நெனைக்காதிங்க…”
சக்திவேல் சிரித்தான்.
”அந்த வருமானத்த வெச்சு எப்பிடி குடும்பம் நடத்துவ? நல்லா வாழ்ந்த குடும்பம் வேற,… உன்னய நல்லா கவனிச்சுக்கறேன்னுதான் சொல்றேன்…”
அவன் மெதுவாக அவளுடைய தோளில் கை வைக்க, தேவகி மீண்டும் விலகினாள்.
"என்னைத் தொடாதீங்க. என்னய மட்டுமில்ல உங்க வயல்ல வேல செய்ற எந்த பொண்ணையும் தொடாதிங்க… எல்லா நேரமும் எல்லாரும் பொறுமையா இருக்க மாட்டாங்க…”
அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது.
"யாரு உனக்கு இந்த தைரியம் கொடுத்தது?"
தேவகி பதில் சொல்லவில்லை. தன்னை எதிர்க்கத் துணிந்த அவளின் கூந்தலை அள்ளிப் பற்றியவன் அறைய கை ஓங்கியபோது அலைபேசி ஒலித்தது. திரும்பி பெயரைக் கவனித்தான். சக்திவேல் தேவகியின் கூந்தலிலிருந்து கையை எடுக்க, அவள் அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.



