top of page

நினைவில் காடுள்ள மிருகம் - 2

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
6 days ago
11 min read


அந்தக் கிராமத்தின் பெயரை அரசு அதிகாரிகள் ஒருபோதும் சரியாக உச்சரித்ததில்லை. வரைபடத்தில் அது ஒரு சிறிய புள்ளி; மாவட்ட அலுவலகத்தில் ஓர் எண். காவல்துறையின் பதிவேட்டில் ஒரு பெயர், தேர்தல் பட்டியலில் இன்னொரு பெயர். ஆனால் அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்கு ஊரின் பெயரைச் சொல்லும்போதே அதன் பின்னால் இருந்த மலை, ஆறு, சால் மரங்கள், மகுவா மலர்களின் வாசனை, மழைக்குப் பிறகு கால்களில் ஒட்டிக்கொள்ளும் சிவப்பு மண் எல்லாம் நினைவுக்கு வந்துவிடும். மதனுக்கு அந்தப் பெயரை நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது கிராமமல்ல; அவனுடைய தாயின் குரல்.


அவனுடைய வீடு கிராமத்தின் எல்லையில் இருந்தது. சில அடிகள் நடந்தாலே சால் மரங்கள் தொடங்கிவிடும். வீட்டுக்குப் பின்னால் ஓடிய ஓடை கோடைக்காலத்தில் கற்களுக்கிடையே மெல்லிய நீராகச் சலசலக்கும். குழந்தைகள் கற்களைத் திருப்பி நண்டுகளைப் பிடிப்பார்கள். பெண்கள் காலையில் அங்கே துணி துவைப்பார்கள். மாலையில் ஆண்கள் அதன் கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த ஓடை அவர்களுக்கு வெறுமனே நீர்வழி அல்ல; வாழ்வின் ஒரு பகுதி. ஆனால் நகரத்திலிருந்து வந்த அதிகாரிகளின் ஆவணங்களில் அது ஒரு “நீர்வழி” மட்டுமே. அந்த இரண்டு சொற்களுக்கிடையே அவர்கள் வாழ்ந்த உலகமும், வெளியிலிருந்து அவர்களைப் பார்த்த உலகமும் பிரிந்திருந்தன.


மதனின் தந்தை அந்த ஓடையைப் பற்றிச் சொல்லும்போது, “இது நம்ம பாட்டன் காலத்துல இருந்தே இருக்கு,” என்பார். அவர் “பாட்டன் காலம்” என்று சொல்லும்போதெல்லாம் அது எத்தனை தலைமுறைகளுக்கு முந்தையது என்று மதனுக்குத் தெரியாது. “காலத்தை எண்ணிப் பார்த்து யாரும் வாழல,” என்று தந்தை சிரிப்பார். அந்தச் சொல்லின் பொருள் மதனுக்குப் புரிய நீண்ட காலம் ஆனது. அவர்களுடைய உலகில் காலத்தை ஆண்டுகளால் அளப்பதில்லை; இயற்கையின் மாற்றங்களால் அளந்தார்கள். ஒரு மரம் வளர்ந்த காலம், ஒரு கல் அந்த இடத்தில் இருந்த காலம், ஒரு குளம் வற்றிய காலம், ஒரு குடும்பம் அந்த மண்ணில் புதைக்கப்பட்ட காலம். அவர்களுக்குப் பழையது என்பது வருடங்களின் கணக்கல்ல; நினைவுகளின் தொடர்ச்சி.


“என் தாத்தா காலத்திலிருந்தே இருக்கு.”

அந்தச் சொல் போதுமானது. அதற்குப் பிறகு எந்த ஆவணமும் தேவையில்லை.

கிராமத்தின் மையத்தில் வீடுகள் இல்லை; திறந்த நிலம் இருந்தது. அதன் ஓரத்தில் ஒரு பெரிய சால் மரம். அந்த மரத்தின் அடியில்தான் கல் இருந்தது. அவர்கள் அதைத் தனியாகக் கோயில் என்று அழைக்கவில்லை. அங்கே சுவரோ கூரையோ இல்லை; கதவோ கோபுரமோ இல்லை. கல்லைச் சுற்றி மண் மட்டுமே. மழை பெய்தால் ஈரமாகும்; வெயில் அடித்தால் உலரும். யாராவது நோயுற்றால் அங்கே செல்வார்கள். குழந்தை பிறந்ததும் வழிபடுவார்கள். மணமகன் வீட்டிலிருந்து மணமகள் வீட்டுக்குச் செல்லும் முன் ஒரு கைப்பிடி அரிசியை அங்கே வைப்பார்கள். மழை வராமல் போனால் பெண்கள் அங்கே சென்று பாடுவார்கள்.


அது தெய்வமா, நினைவா, மண்ணா, அல்லது அந்த மக்களின் அடையாளமா என்று மதனுக்குத் தெரியாது. அவனுடைய அம்மா ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் அந்தக் கல்லுக்கு மஞ்சள் பூசுவாள்.

“தெய்வத்துக்கு ஏம்மா மஞ்சள் பூசற?” என்று மதன் கேட்டால், “தெய்வத்துக்கு இல்ல, மதன். நம்ம நினைவுக்கு,” என்பாள்.

“நீ ஒருநாள் எல்லாத்தையும் மறந்துடுவ. ஆனா மரமும் தெய்வமும் உனக்கு நினைவுபடுத்திட்டே இருக்கும். இந்த ஊரையும் காட்டையும் இங்க இருக்கிற புழு பூச்சியையும் பற்றிய நினைவுகள் அழிஞ்சு போகாம இருக்கத்தான் இந்தக் கல்லுக்கு நாம மஞ்சள் பூசறோம். ஒருநாள் நாமளே இந்தக் காட்டுல இல்லாமப் போனாலும் நம்ம நினைவுகள் இங்கே இருக்கணும் இல்லையா?”

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மதன் அமைதியாகக் கேட்டுக்கொள்வான்.


அப்போது மதன் இளைஞன். அவனுடைய உடலில் மலைக்காட்டின் வலிமை இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்தாலும் இரவில் அவன் சோர்வடைவதில்லை. மரம் வெட்டுவது, காட்டுக்குள் செல்வது, வயலில் உழைப்பது, இரவில் நண்பர்களுடன் தொலைதூரம் நடப்பது—அவனுடைய உடல் எல்லாவற்றுக்கும் பழகியிருந்தது. மங்கலி அவனுடைய புதிய மனைவி. அவர்களுக்குக் குழந்தை பிறந்திருக்கவில்லை. மாலை நேரங்களில் மதன் வீட்டின் முன் உட்கார்ந்திருப்பான். மங்கலி அரிசியில் இருந்த கற்களைப் பொறுக்கிக்கொண்டிருப்பாள். அவளுடைய தலையில் கட்டியிருந்த துணியின் ஒரு முனை தோளிலிருந்து வழுக்கி இறங்குவதை அவன் பார்த்துக்கொண்டிருப்பான்.


“எதுக்கு அப்படிப் பாக்கற?” என்று சேலையைச் சரிசெய்தபடி அவள் கேட்பாள்.

“ஒண்ணுமில்ல. சும்மா உன்னைப் பாக்கறேன்.”

அவன் சொல்லும்போது அவள்மீதான விருப்பம் கண்களில் வெளிப்படும். அந்த நாட்களில் மதனுக்கு வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. பகலில் காட்டுவேலை; இரவில் மங்கலியுடன் அமைதியான உறக்கம். அந்த வாழ்க்கைக்குள் அரசியல் என்ற சொல் இன்னும் நுழைந்திருக்கவில்லை.

ஒருநாள் காட்டுக்குள் அரசாங்கக் காகிதங்களுடன், சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்ட வெள்ளை நிறக் கார்களில் சிலர் வந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு காவல்துறை ஜீப்புகளும் வந்தன. அதற்கு முன்பு ஜீப்புகளைப் பார்த்திராத குழந்தைகள் ஆர்வத்துடன் வண்டிகளை நெருங்கினார்கள். அதிகாரிகள் அவர்களை விரட்டினர். பெண்கள் வீட்டு வாசல்களில் பதற்றத்துடன் நின்று பார்த்தார்கள். ஆண்கள் அதிகாரிகளுக்கு முன்னால் கைகட்டி நின்றார்கள்.


ஜீப்பிலிருந்து இறங்கியவர்களில் ஒருவனிடம் நீண்ட காகிதம் இருந்தது; இன்னொருவனிடம் நிலத்தை அளக்கும் கருவி. அவர்கள் மரங்களைப் பார்த்தார்கள், மண்ணைப் பார்த்தார்கள், மலைச்சரிவுகளைப் பார்த்தார்கள். பிறகு ஒருவன் சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான். மதனின் தந்தை அவனை நெருங்கினார்.

“என்ன வேணும், ஐயா?”

அந்த அதிகாரி முதியவரை அருவருப்புடன் பார்த்தான்.

“சர்வே எடுக்க வந்திருக்கோம்.”

“என்ன சர்வே?” என்று முதியவர் புரியாமல் கேட்டார்.

அவன் சிரித்தான். “சர்வேன்னா சர்வேதான்.”

இந்த முறை முதியவர் இன்னும் அழுத்தமாகக் கேட்டார்.

“எதைச் சர்வே எடுக்கணும்?”

அவன் பதில் சொல்லவில்லை. கையில் இருந்த வரைபடத்தை விரித்தான். மதனும் இன்னும் சிலரும் அருகில் வந்து பார்த்தார்கள். அந்த வரைபடத்தில் அவர்களுடைய கிராமத்துக்குப் பதிலாகக் கோடுகளும் சிறிய வட்டங்களும் எண்களும் இருந்தன. மதனின் தந்தை அதிலிருந்த ஒரு புள்ளியைச் சுட்டிக்காட்டினார்.

“இதுதான் எங்க ஊரா?”

“இல்ல. இது மேப்,” என்று அதிகாரி சிரித்தான்.


மதனின் தந்தைக்கு அந்தச் சொல்லின் பொருள் புரியவில்லை. அன்று மாலை வீட்டுக்குத் திரும்பியவர் நீண்ட நேரம் பேசாமல் இருந்தார். மதனின் அம்மா கேட்டாள்:

“எதுக்கு மலையை அளக்கறாங்க? மலை எங்க இருந்தா என்ன? எவ்வளவு இருந்தா அவங்களுக்கு என்ன?”

அவர் பதில் சொல்லவில்லை. மதன் அந்தக் கேள்வியை நினைவில் வைத்துக்கொண்டான். மலை எவ்வளவு இருக்கிறது என்பதையும் அதன் அடியில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள அவர்கள் ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள்?


அதற்குப் பிறகு சில மாதங்கள் கிராமத்தில் பழைய வாழ்க்கை தொடர்ந்தது. மகுவா மலர்கள் உதிர்ந்தன. அதிகாலையில் கூடைகளை எடுத்துக்கொண்டு செல்லும் பெண்கள் தரையில் விழுந்த பூக்களைப் பொறுக்கினார்கள். மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் கிடந்த பூக்களைத் திரட்டியபடியே ஊர்க்கதைகள் பேசினார்கள். உலகம் மாறிக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் அந்த மரத்திடம் அனுமதி கேட்பவர்கள் அவர்கள். ஆனால் காட்டுக்கு வெளியிலிருந்து ஜீப்பிலும் லாரியிலும் வந்து மரங்களை வெட்டுகிறவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியிருக்கவில்லை.

முதல் முறையாகத் துப்பாக்கி கிராமத்துக்குள் வந்த நாளை மதனால் மறக்க முடியவில்லை.

அன்று காலையில் மழை பெய்திருந்தது. சேறும் சகதியுமாக இருந்த பாதையில் கிராமத்துக்குள் நுழைய முடியாமல் வாகனம் ஓரத்தில் நின்றது. அதிலிருந்து ஆயுதம் ஏந்தியவர்கள் இறங்கினார்கள். வாகனங்களின் சத்தத்தைக் கேட்டதும் குழந்தைகளும் பெண்களும் முதலில் ஓடிவிட்டார்கள். ஆண்கள் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்கள்.


காக்கி உடை அணிந்த முரட்டுத்தனமான ஒருவன் எதிரில் நின்றவர்களைப் பார்த்துக் கத்தினான்.

“யார் இங்க தலைவன்?”

யாரும் பதில் சொல்லவில்லை. அவன் மீண்டும் கேட்டான்.

“நக்சலைட்ட எங்க ஒளிச்சு வெச்சிருக்கீங்க?”

அந்தச் சொல் அன்றுதான் மதனின் காதில் விழுந்தது. நக்சலைட். அவன் அதுவரை அந்தச் சொல்லைக் கேட்டதில்லை. அருகில் நின்ற பெரியவரின் முகத்தைப் பார்த்தபோது அவருக்கும் அதன் பொருள் தெரியவில்லை என்பது புரிந்தது.

அதிகாரி இன்னும் சத்தமாகக் கத்தினான்.

“கேக்கறன்ல! சொல்லுங்கடா, காட்டுவாசித் தாயோளிங்களா! நக்சலைட் எங்க?”


அவனுடன் வந்தவர்கள் வேட்டைக்குத் தயாராகும் மனிதர்களைப் போல ஆயுதங்களை இறுகப் பிடித்தார்கள். எந்த நொடியிலும் கிராமத்தையே வேட்டையாடிவிடுவார்கள் என்ற ஆவேசம் அவர்களுடைய உடல்களில் தெரிந்தது. மதனின் தந்தை முன்னால் சென்றார்.


“எங்க கிராமத்துல அப்படியெல்லாம் யாரும் இல்ல,” என்றார் பணிவாக.

அதிகாரியின் பழுப்பு நிறக் கண்கள் முதியவரை எரித்துவிடுவதுபோல் பார்த்தன. அவன் அவரை நெருங்கினான்.

“பொய் சொல்லாதே. எங்க ஒளிச்சு வெச்சிருக்க நக்சல் ஆளுங்களை?”

அவனுடைய குரலும் உடல்மொழியும் மதனின் தந்தையை அச்சுறுத்தின. நடுக்கத்தை மறைத்துக்கொண்டு முதியவர் சொன்னார்:


“ஐயா, நீங்க யாரைத் தேடுறீங்கன்னே எங்களுக்குத் தெரியல.”

அடுத்த கணம் துப்பாக்கியின் பின்புறம் முதியவரின் மார்பில் மோதியது. அடியின் வேகத்தில் அவர் தடுமாறி விழுந்தார். மதன் பதறி முன்னால் வர முயன்றபோது தந்தை கையை உயர்த்தினார்.

“பின்னாடி போ.”

மெதுவாக எழுந்தபோது அவருடைய உடலில் சிவப்பு மண் ஒட்டியிருந்தது. இந்தக் காட்டில் எதற்கும் அச்சப்படக்கூடாது என்று சொல்லியிருந்த தந்தை இப்போது அச்சத்துடன் நடந்துகொள்வதையும், தன்னையும் அப்படியே இருக்கச் சொல்வதையும் பார்த்து மதன் உறைந்துபோனான்.


மதனின் தந்தை அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

“இந்தக் கிராமத்துல எங்களத் தவிர வேற யாரும் இல்லங்க. நீங்க வேணும்னா சோதனை போட்டுக்கலாம்.”

அதிகாரி தன்னுடன் வந்த வீரர்களைப் பார்த்தான். அவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து கிராமத்தைத் தேடினார்கள். பூட்ஸ் கால்களின் சத்தத்தைக் கேட்டு நாய்கள் பதற்றத்துடன் குரைத்தன. மரங்களில் இருந்த குரங்குகள் இடைவிடாமல் கத்தின. காற்று மரங்களுக்கிடையே ஊளையிட்டது. கிராமத்துக்குள் வீரர்கள் ஓடிய சத்தம் நீண்ட நேரம் எதிரொலித்தது. யாரும் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் அவர்கள் ஆத்திரத்துடன் திரும்பிச் சென்றார்கள். குறுகிய பாதையில் வாகனங்கள் விட்டுச் சென்ற தடங்கள் ஆழமாகப் பதிந்திருந்தன.

அன்று இரவு வீட்டுக்குள் எல்லோரும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கூரையின் மீது மழை விழுந்துகொண்டிருந்தது. மங்கலி மலையின் மறுபக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து திருமணமாகி வந்தவள். இதுவரை கதைகளில் மட்டுமே கேட்டிருந்த சம்பவங்களை நேரில் பார்த்த பிறகு, பயம் அவளுடைய கண்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது.


“அவங்க திரும்ப வருவாங்களா?” என்று கேட்டாள்.

மதன் பதில் சொல்லவில்லை. அவனுடைய தந்தை சுவரைப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.

“யாரைத் தேடுறாங்க? நம்ம ஊர்ல யாராவது இருக்காங்களா?” என்று மதன் கேட்டான்.

“அவங்க தேடுற யாரும் இங்க இல்ல, மதனா,” என்றார் தந்தை. அவருடைய குரலில் முன்பிருந்த வலிமை இல்லை.

“ஒருவேளை அப்படியாராவது இருந்தாலும், அதைக் கேக்க இவங்க யாரு?” என்றான் மதன்.

தந்தை அவனைப் பார்த்தார்.

“அரசு தேடுறது ஆளையோ ஒரு கூட்டத்தையோ மட்டும் இல்ல. அரசைக் கேள்வி கேட்கற சிந்தனையையும் தேடுது. இந்தக் காட்டையும் நம்மளையும் ஆயுதத்தால கட்டுப்படுத்திடலாம்னு நினைக்கிறவங்க, அதே ஆயுதத்தால தங்களோட அதிகாரத்தையும் அச்சுறுத்த முடியும்னு காட்டிய சிந்தனையைக் கண்டு பயப்படுறாங்க.”

மதன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.


“நாம யாருக்கும் நக்சலைட்டுகளைத் தெரியாதுன்னு சொன்னாலும் நம்பமாட்டாங்க. நாம சொல்ற எதையும் நம்பக்கூடாதுங்கறதுதான் அவங்க முதல்ல நமக்குக் கத்துக்கொடுக்கிற பாடம்.”

“அப்போ நமக்கு என்னதான் வழி?”

“தெரியல,” என்றார் தந்தை. “இந்தக் காட்டுல யாருக்காவது நக்சல்களைத் தெரிஞ்சிருந்தாலும் போதும். அவங்களோட பேசினா நீயும் அவங்க ஆளாகிடுவ. அப்படிப் பார்த்தா இந்தக் கிராமத்துல எல்லாருமே நக்சல்தான். அவங்க திரும்ப வருவாங்க.”

சொல்லிவிட்டு அவர் எழுந்து வெளியே சென்றார்.


அந்த இரவு மதன் தூங்கவில்லை. ஒருவர் செய்த செயலுக்காக மட்டுமல்ல, அவர் யாரை அறிந்திருக்கிறார் என்பதற்காகவும் குற்றவாளியாக்கப்பட முடியும் என்பதை முதன்முறையாக உணர்ந்தான்.

அவன் தந்தை சொன்னதுபோல காடு வேட்டையாடப்படத் தொடங்கியது. மலையின் வெவ்வேறு கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுடைய தெய்வங்கள் கைவிடப்பட்டன. காட்டில் இரவுகள் அலறல்களால் நிறைந்தன.

அடுத்த சில வாரங்களிலேயே அந்தக் காட்டைச் சுற்றியிருந்த கிராமங்களின் மீது புதிய சொற்கள் விழத் தொடங்கின.

“சந்தேகம்.”

“தகவல்.”

“இன்ஃபார்மர்.”

“நக்சல்.”

“காம்பிங்.”

“சர்ச்.”

“கேம்ப்.”

அந்தச் சொற்கள் முதலில் காவல்துறையினருடையவை. பிறகு கிராமத்தினரின் அன்றாட மொழியாகிவிட்டன. யார் காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்? யார் காட்டுக்குள் செல்கிறார்? யார் இரவில் வீடு திரும்பவில்லை? யார் யாருடைய வீட்டில் சாப்பிட்டார்? யார் கடந்த வாரம் சந்தைக்குப் போனார்? யார் காவல்துறையிடம் பேசினார்? யார் மௌனமாக இருந்தார்?


அந்த நாட்களில் காட்டுக்குள் இன்னொரு உலகமும் உருவானது. காவல்துறையும் அரசும் அச்சத்துடன் பார்த்த சிவப்புக் கொடிகளும் ஆயுதங்களும் காட்டின் வெவ்வேறு கிராமங்கள் வழியாகப் பரவின. காவல்துறை ஒரு பழங்குடி மனிதனைக் கொன்ற இடங்களில் அச்சத்துடன் சேர்ந்து எதிர்ப்பும் பிறந்தது. அந்த எதிர்ப்பில் சிவப்புக் கொடிகள் உயர்ந்தன. வெறும் கால்களாலும் பூட்ஸ் கால்களை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை சிலருக்குள் உருவானது.


தளர்ந்த உடைகள், சோர்ந்த முகங்கள், தோள்களில் இறுகப் பற்றிய துப்பாக்கிகள்—இவற்றுடன் ஒரு கூட்டம் காட்டுக்குள் வாழ்ந்த பழங்குடி மக்களோடு இணைந்து நின்றது. படித்தவர்களும் படிக்காதவர்களும் அதில் இருந்தார்கள். வேறு காடுகளிலிருந்து துரத்தப்பட்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் இரவில் உணவு கேட்டு வந்தார்கள். சில நேரங்களில் உணவுடன் தகவல்களையும் சேகரித்துச் சென்றார்கள்.

“போலீஸ் எந்த வழியில வந்தது?”

“நேத்து எத்தனை வண்டி?”

“யாரெல்லாம் வந்தாங்க?”

கிராமத்தவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள். சொல்லாவிட்டால் ஒரு பயம்; சொன்னால் இன்னொரு பயம். ஒரு பக்கம் அரசு, மறுபக்கம் மாவோயிஸ்டுகள். நடுவில் மக்கள்.


அவர்களுக்கு அரசியல் கொள்கைகள் பற்றிய பெரிய விவாதங்கள் தேவையில்லை. அடுத்த நாள் காலையில் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் விரும்பியது. அதுவே அவர்களுடைய அரசியல்; அதுவே அவர்களுடைய சுதந்திரம். ஆனால் எந்தத் தரப்பும் அவர்களை நடுவில் நிற்க அனுமதிக்கவில்லை.

காடு ஆயுதங்களால் ஆளப்படத் தொடங்கியபோது, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தார்கள். காட்டின் பாடல்கள் பெருநகர வீதிகளில், சாலை அமைக்கும் இடங்களிலும் கட்டிட வேலைகள் நடக்கும் தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கின.


பின்னாளில் அங்கே நடந்தவற்றை விசாரிக்க அமைக்கப்பட்ட மனித உரிமை ஆய்வுகளின் அறிக்கைகளில் பதிவான சாட்சியங்கள், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது கடுமையான கேள்விகளை எழுப்பின. மதன் வாழ்ந்த மக்களின் மீது ஒரு பக்கம் மாவோயிஸ்டுகளின் அழுத்தமும் மறுபக்கம் அரசு பாதுகாப்புப் படைகள் மற்றும் சல்வா ஜுடுமின் வன்முறையும் இருந்தன. நடுநிலையாக இருப்பதே தண்டனையாக மாறியதாகப் பலர் சாட்சியமளித்தனர்.


ஒருநாள் மதனின் பதினாறு வயது தம்பி காணாமல் போனான். காலையில் காட்டுக்குள் சென்றவன் இரவாகியும் திரும்பவில்லை. எல்லோரும் அச்சத்துடன் தேடினார்கள். அவன் கிடைக்கவில்லை. மறுநாளும் வரவில்லை. மூன்றாம் நாள் ஒருவர் வந்து சொன்னார்:

“அவனைப் போலீஸ் பிடிச்சிருக்கலாம்.”

மதனின் அம்மா உடனே மறுத்தாள்.

“அவன் நக்சல் இல்லையே.”

“அதை அவங்க கேட்பாங்களா?”

அந்தக் கேள்விக்குப் பிறகு வீட்டில் யாரும் பேசவில்லை.

மதன் காவல் நிலையத்துக்குச் சென்றான். அங்கே அவனை வெளியே நிற்க வைத்தார்கள்.

“யாரைப் பார்க்க வந்த?”

“என் தம்பியை.”

“பெயர்?”

அவன் பெயரைச் சொன்னான். வாயில் மாவாவை மென்றுகொண்டிருந்த காவலர் மதனின் காலடியில் துப்பினான். தண்ணீர் குடித்துவிட்டு அவனையே பார்த்துக் கேட்டான்:

“அவன் எங்கே போனான்?”

“தெரியல. அதான் உங்ககிட்ட கேக்க வந்தேன்.”

காவலர் மதனின் வயிற்றில் ஓங்கி உதைத்தான்.


“நக்சல்களோட போயிருப்பான். நீங்க எல்லாருமே நக்சல்தானடா. தேசத்துரோகிகளா?”

வலியில் சுருண்டு விழுந்த மதன் எழுவதற்குச் சில நொடிகள் ஆனது. கண்கள் இருண்டன. மெல்ல எழுந்து அந்தக் காவலரைப் பார்த்தான். தான் எந்தத் தேசத்தின் குடிமகன், எந்தத் தேசத்துக்குத் துரோகி என்று அவனுக்குப் புரியவில்லை.

“ஐயா, அவன் நக்சல்கிட்ட போகல.”

“உனக்கு எப்படித் தெரியும்?”

“அவன் என் தம்பி.”

காவலர் சிரித்தான்.

“அதனால?”

மதன் பதில் சொல்லவில்லை. அவனுடைய கைகள் நடுங்கின. இந்தக் காட்டில் ஒருவர் காணாமல் போனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் காட்டிலும் யாருடைய ஆள் என்பதுதான் அரசுக்கு முக்கியமாகிவிடுகிறது என்பதை அவன் உணர்ந்தான்.

அவமானத்துடனும் வலியுடனும் கிராமத்துக்குத் திரும்பிய மதனுக்கு, பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தம்பி திரும்பிவந்த செய்தி கிடைத்தது. அவனுடைய முகத்தில் அடிபட்ட தடங்கள் இருந்தன. உதடு வீங்கியிருந்தது. காதின் அருகே காயம். வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா அவனைத் தழுவிக்கொண்டாள்.

மதன் அவனுடைய காயங்களைப் பார்த்தான்.

“என்ன நடந்தது?”

தம்பி பதில் சொல்லவில்லை. மங்கலி அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள். குடித்துவிட்டு அவன் தரையில் படுத்துக்கொண்டான். அவனிடமிருந்து சிறிய கேவல் ஒன்று எழுந்ததும் அம்மா அவனுடைய கால்களைப் பற்றிக்கொண்டாள்.

அன்று இரவு எல்லோரும் தூங்கிய பிறகு தம்பி மதனை எழுப்பி வெளியே அழைத்துச் சென்றான்.

“அவங்களுக்கு நம்ம ஊர்ல இருந்து யாராவது நக்சல் வேணுமாம். எனக்கு யாரையெல்லாம் தெரியும்னு கேட்டாங்க.”


அவன் பேசும்போதுதான் அவனுடைய பற்கள் உடைந்திருப்பதை மதன் கவனித்தான். வலியை மறைக்கத் தம்பி வாயைத் திறக்காமலேயே பேச முயன்றான். மதனுக்கு அழுகை முட்டியது.

“நீ என்ன சொன்ன?”

“எதுவும் தெரியாதுன்னு.”

“அதனாலதான் அடிச்சாங்களா?”

அவன் தலையசைத்தான்.

“நீ யாரையாவது சொல்லியிருக்கலாமே…”

தம்பி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“நான் சொன்னா அந்த ஆளையும் பிடிப்பாங்க.”

அவனுடைய குரல் உடைந்தது.


இதுவரை காவல்துறையைப் பார்த்துப் பயந்திருந்த மதன், அன்று அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றான். அந்த முயற்சி பயத்தைவிட ஆபத்தானது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

மதனின் தம்பி முகாமிலிருந்து திரும்பிய ஓரிரு நாட்களிலேயே கிராமத்துக்கு வெளியே சாலையோரத்தில் புதிய முகாம் ஒன்று உருவானது. முதலில் சில கூடாரங்கள்; பின்னர் துப்பாக்கி ஏந்திய முப்பது காவலர்கள். அடுப்பிலிருந்து எழுந்த புகை மரங்களுக்கு நடுவே படர்ந்து புதிய சூழலை உருவாக்கியது. வாகனங்களின் இடைவிடாத சத்தத்தால் மிருகங்கள் வழக்கமான பாதைகளில் செல்லத் தயங்கின.


சில வாரங்களிலேயே முகாம் இருந்த இடங்களில் தற்காலிகக் கட்டிடங்கள் எழுந்தன. கட்டுமானம் தொடங்கிய நாளிலேயே முகாமின் அருகே ஒரு சிறிய கடையும் உருவானது. காடும் கிராமமும் தனித்திருந்த நிலை மாறி, அந்த இடத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் பெருகியது. வெவ்வேறு கிராமங்களிலிருந்து சந்தேகத்தின் பேரில் பிடித்துவரப்பட்டவர்களும், காவல்துறைக்காக வேலை செய்ய அழைத்துவரப்பட்டவர்களும் உடல் மெலிந்து அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். மலையிலிருந்து இறங்கிவந்த ஓடையில் முகாமினர் மோட்டார் வைத்து நீரை எடுத்ததால் கிராமத்தவர்களுக்குப் போதுமான குடிநீர் கிடைக்காமல் போனது.


மதன் ஒருமுறை அந்த முகாமுக்குச் சென்றான். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் நெருக்கமாக வாழ்ந்தார்கள். சரியான கூரைகூட இல்லாத மண் வீடுகளில் அவர்கள் முடங்கிக் கிடந்தார்கள். வெவ்வேறு கிராமங்களிலிருந்து இழுத்துவரப்பட்டவர்களில் பலருக்குத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் பாதையே மறந்திருந்தது. அவர்களுடைய வயல்களும் வீடுகளும் எரிக்கப்பட்டுவிட்டதாக ஒரு கிழவி மதனிடம் புலம்பினாள்.

“உங்க ஊர் எங்க இருக்கு?” என்று அவளிடம் கேட்டான்.

“அது இன்னும் அங்கதான் இருக்கு. மலைக்கு நடுவுல. ஆனா அது எங்களோட ஊரா இல்லையே…”

“அப்போ நீங்க? திரும்பிப் போகலாமே?”

அவள் மதனைப் பார்த்தாள்.

“எங்கே போறது? எங்க தெய்வத்துக்குக்கூட நாங்க குருதிப்பலி கொடுக்க மாட்டோம். ஆனா அந்த மண்ணுலயும் எங்க தெய்வம் இருந்த இடத்துலயும் எத்தனையோ பேரைச் சர்க்கார் பலி கொடுத்துடுச்சே. நாங்க எப்படி அங்க வாழ முடியும்?”

அந்த வார்த்தைகள் மதனை உலுக்கின.


கிராமத்துக்கு அடுத்த முறை காவல்துறை வந்தபோது அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. முன்னால் சீருடை அணிந்தவர்கள்; பின்னால் சில உள்ளூர் ஆட்கள். அவர்களில் சிலர் சல்வா ஜுடுமுடன் இணைந்தவர்கள். அவர்கள் கிராமத்துக்குள் நுழைந்ததும் முதலில் ஆண்களை அழைத்தார்கள்.

“எல்லாரும் வெளியே வாங்க.”

யாரும் வரவில்லை.

“வெளியே வாங்க!”

மதன் வீட்டுக் கதவுக்குப் பின்னால் நின்றான். மங்கலி அச்சத்துடன் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டிருந்தாள்.

“நீ போகாதே, மதன்.”

“ஏன்? போனா என்ன செய்வாங்க?”

அவன் அவளுடைய கையை விலக்க முயன்றான்.

“தெரியல. ஆனா போகாத.”


அவள் இந்த முறை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளுடைய நடுக்கத்தை உணர்ந்த மதனுக்கு தன் தாயின் கைகள் நினைவுக்கு வந்தன. மஞ்சள் பூசப்பட்ட தெய்வக் கல்லைச் சுற்றி உதிர்ந்துகிடந்த மகுவா மலர்கள், தம்பியின் காயங்கள், முகாமில் தன் நிலத்தை இழந்த பெண்ணின் அழுகுரல்—எல்லாம் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நின்றான்.

“நாம இப்ப என்ன செய்யப்போறோம்?” என்று மங்கலி கேட்டாள்.

மதனால் பதில் சொல்ல முடியவில்லை.


அவர்களுடைய நடுக்கத்தைச் சிதறடித்தபடி வெளியிலிருந்து ஒரு குரல் கேட்டது:

“எல்லா வீட்டுலயும் தேடுங்க. நக்சலைட்டோ, அவங்களுக்கு தகவல் சொல்றவங்களோ யாரு இருந்தாலும் தூக்கிட்டு வாங்க!”

பூட்ஸ் கால்கள் ஓடும் சத்தமும் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களைத் தூக்கியெறியும் சத்தமும் கேட்டன. மக்கள் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள காவலர்களிடம் மன்றாடினார்கள். அவர்களின் அழுகுரல்கள் அதிகாரத்தின் முன்னால் வலுவிழந்து மறைந்தன. ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றித் தாக்கப்பட்டார்கள்.


மதனின் வீட்டை நோக்கி ஓடிவந்த இரண்டு காவலர்கள் வாசலை மறித்து நின்ற அவனைத் தூக்கி வெளியே எறிந்தார்கள். காகித உருண்டையைப் போலத் தூரத்தில் போய் விழுந்தான். “அய்யோ, மதனா!” என்று அலறியபடி ஓடிவந்த மங்கலியின் முதுகில் ஒருவன் துப்பாக்கியால் அடித்தான். அவள் அலறியபடி கீழே விழுந்தாள். வீட்டுச் சுவர்களிலும் வாசலிலும் குருதி சிதறியது.

ஒரு பெண்ணின் மார்பின் மீது மிதித்த காவலனை நோக்கி நாய் ஒன்று ஆவேசமாகப் பாய்ந்து அவனைப் பிறாண்டியது. காவலன் துப்பாக்கிக் கட்டையால் நாயை ஓங்கி அடித்தான். அது அந்தப் பெண்ணின் அருகிலேயே மயங்கிச் சுருண்டது.


மதன் கதறியபடி மங்கலியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது ஒரு குடிசை தீப்பற்றியது. மக்களின் அலறல் அதிகரித்தது. அடுத்தடுத்த குடிசைகளும் எரியத் தொடங்கின. முதிய பெண்கள் உடலிலும் முகத்திலும் சாம்பல் படியக் காவலர்களைச் சபித்தார்கள்.

“இந்தக் காடு எந்நைக்கும் உங்களைப் பழிவாங்கக் காத்திருக்கும்!”

மதன் மங்கலியைத் தூக்கிக்கொண்டு ஓடையை நோக்கி ஓடினான். ஓடையின் மறுகரையில் நின்ற மக்கள் தங்கள் கிராமம் எரிவதை அழுகையுடன் பார்த்தார்கள். ஊரின் மையத்தில் இருந்த மரத்தின் அடியிலிருந்த தெய்வக் கல்லைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. அவர்கள் வணங்கிய கல்லையும் ஒருவன் வெடிவைத்துத் தகர்த்தான். காடு ஆவேசமாக அசைந்தது. அந்தக் கூட்டத்தின் தலைவன் உடைக்கப்பட்ட கல்லின் மீது சிறுநீர் கழித்தான். கல்லின் மீது பூசப்பட்டிருந்த மஞ்சள் கரைந்து ஓடியது. சில நொடிகளில் இடி இடித்து மழை பெய்யத் தொடங்கியது.


அந்த இரவுக்குப் பிறகு மதனும் அவனைப் போலவே கிராமத்திலிருந்த சில இளைஞர்களும் மாறத் தொடங்கினார்கள். அவன் ஆயுதம் எடுத்தது கோபத்தால் மட்டுமல்ல; அச்சத்தாலும். காட்டுக்குள் சென்று தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதம் கேட்டபோது, அங்கே இருந்தவர்கள் தங்களுடன் இணைந்துகொள்ளச் சொன்னார்கள்.

துப்பாக்கிகளால் அழிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்தவர்கள், தாங்கள் எதிர்த்துப் போராட நினைப்பது பெரும் ஆயுதங்களைக் கொண்ட அதிகார அமைப்பை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டார்கள். எல்லா சர்வாதிகாரமும் ஒருநாள் வீழும் என்பதே அந்தக் காட்டில் அவர்கள் கற்றுக்கொண்ட முதல் பாடமாக இருந்தது.

ஜார்கண்டிலிருந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வந்த தோழன் ஒருவன் பிர்சா முண்டாவைப் பற்றிச் சொன்னான்.


“அரசியல் விடுதலைப் போராட்டங்கள் பலவும் தங்களோட நிலத்தையும் பண்பாட்டையும் காப்பாத்திக்கத்தான் தொடங்கின. இந்தக் காட்டுல நிலத்தையும் உறவுகளையும் இழந்து அதிகாரத்தால் நசுக்கப்படுறவங்களுக்குத்தான் உரிமைக்காகப் போராட வேண்டிய தேவை இருக்கு. நகரத்துல இருக்கிறவங்களுக்கு உங்க குரல் கேட்காது. கேட்டாலும் அதைப் பொருட்படுத்த அவங்களுக்கு நேரமிருக்காது. இந்தக் காடு உங்களுக்கு வேண்டும்னா அதற்காகப் போராடுங்க. எந்த ஆயுதம் உங்களை இந்தக் காட்டிலிருந்து துரத்த முயலுதோ, அந்த ஆயுதத்துக்கு எதிராக நிற்கக் கற்றுக்கொள்ளுங்க.”

மதன் கடந்த காலத்தின் மகிழ்ச்சியான நாட்களை நினைத்துப் பார்க்க விரும்பாதவனைப் போலப் புதிய வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக்கொண்டான். அவனுடைய கையில் கொடுக்கப்பட்ட ஆயுதத்தின் எடை, கைகளைவிட மனதில் அதிகமாக இருந்தது. பழியுணர்ச்சியும் மீட்சிக்கான தேடலும் அவனை இரவுகளில் தூங்கவிடவில்லை. அவனுடைய தந்தை மண்ணைத் தொட்டு, “இந்தக் காடும் மண்ணும் நம்மளோடது,” என்று சொன்ன காட்சி மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.


காலம் செல்லச் செல்ல காட்டுக்குள் நடந்துகொண்டிருந்த அரசியலைப் பற்றிப் படிக்கத் தொடங்கினான். நிலம், கனிமவளம், அரசு, நிறுவனங்கள்—இவற்றைப் பற்றி அறிந்துகொண்டான். அவனுக்குப் புரியாத சொற்கள் பல இருந்தாலும் ஒரு விஷயம் தெளிவாகியது. மலையின் அடியில் இருக்கும் இரும்புத் தாது ஒரு நிறுவனத்தின் பணமாக மாறலாம். காட்டுக்குள் இருக்கும் நிலக்கரி மின்சாரமாக மாறலாம். நதியின் நீர் அணையாக மாறலாம். ஆனால் அதற்கு முன் அந்த இடத்தில் வாழ்ந்த மனிதன் ஓர் எண்ணாக மாற்றப்படுகிறான்.

அந்த எண்ணாக மாறுவதை மதன் விரும்பவில்லை. அவன் ஆயுதத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

அதே நேரத்தில் மங்கலி வேறொரு வாழ்க்கையை வாழ்ந்தாள். மதன் இல்லாத நாட்களை எண்ணத் தொடங்கினாள். அவன் எப்போது வருவான் என்று தெரியாது. பின்னிரவில் திடீரென வருபவன், எஞ்சியிருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு சில நிமிடங்களிலேயே கிளம்பிவிடுவான். சில சமயம் மூன்று அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி இருக்கும்; சில நேரங்களில் இரண்டு, மூன்று வாரங்கள்கூட அவன் வரமாட்டான்.

எங்கே செல்கிறாய், ஏன் செல்கிறாய், யாருடன் இருக்கிறாய், பாதுகாப்பாக இருக்கிறாயா—என்று மங்கலி அவனிடம் கேட்பதில்லை. ஒருநாள் விடியற்காலையில் குடிசைக்குப் பின்னால் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு அவள் எழுந்தாள். உறக்கம் முழுவதுமாகக் கலையாத கண்களுடன் வெளியே வந்தபோது மதனும் அவனுடன் இன்னும் இருவரும் அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.


“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிக் காட்டுக்குள்ளேயே இருக்கப்போற, மதன்?”

மதன் அவளைப் பார்த்தான்.

“தெரியல. என்ன காரணத்துக்காகக் காட்டுக்குள்ள போனேனோ, அந்தக் காரியம் முடியறவரைக்கும்.”

“எப்போ முடியும்?”

“தெரியல, மங்கலி. இன்னைக்கு இந்தக் காடு; நாளைக்கு இன்னொரு காடு. இந்தச் சுரண்டல் எப்போ நிக்கும்னு தெரியல.”

அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு தண்ணீர் குடித்தான். மங்கலி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.


“உனக்கு இந்தக் காடும் மக்களும் எவ்வளவு முக்கியமோ, எனக்கு நீயும் குழந்தைகளும் அவ்வளவு முக்கியம்.”

மதன் அவளைப் புரிந்துகொண்டான். அவன் காட்டுக்குள் இருந்தபோது அங்கிருந்த மரங்கள் ஒவ்வொன்றும் எண்களால் குறிக்கப்பட்டிருந்தன. எங்கிருந்து என்ன எடுக்கலாம் என்பதற்கான புதிய வரைபடம் தயாராகி, அதன் அடிப்படையில் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. போராட்டம் தீவிரமடைந்தாலும் அரசு நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தன.


ஒருநாள் அதிகாலையில் மதனும் மங்கலியும் சாமிக்கல் இருந்த இடத்துக்குச் சென்றார்கள். அங்கே ஒரு பெரிய குழி மட்டுமே எஞ்சியிருந்தது. பட்டைகள் உரிக்கப்பட்ட மரம் குளிர்ந்து, கைவிடப்பட்ட உடலைப்போல் கிடந்தது. தொலைவில் மரம் அறுக்கும் இயந்திரத்தின் சத்தம் கேட்டது.

மதன் காலடியில் இருந்த மண்ணைப் பார்த்தான். அப்போது ஒரு விஷயம் அவனுக்குப் புரிந்தது. மனிதர்கள் ஓர் இடத்தை விட்டு வெளியேறலாம். வீடுகள் எரிக்கப்படலாம். கல் உடைக்கப்படலாம். மரம் வெட்டப்படலாம். ஊரின் பெயரைக்கூட வரைபடத்திலிருந்து அழித்துவிடலாம். ஆனால் மண்ணை அழிக்க முடியாது. அது வேறோர் இடத்துக்குச் சென்று, வேறொரு மனிதனின் காலடியில் ஒட்டிக்கொண்டு, புதிய பெயரை ஏற்றுக்கொண்டாலும் அதன் பழைய நினைவுகளை முழுமையாக இழப்பதில்லை.

பல வருடங்கள் கழித்து, சின்னக்குன்னூரில் மதன் கேரட்டைப் பிடுங்கிக்கொண்டிருந்தபோது அவனுடைய விரல்களுக்கிடையே மண் ஒட்டியிருந்தது. அந்த மண்ணின் வாசனை சில சமயங்களில் அவனுக்கு மகுவா மலர்களை நினைவூட்டும். கைகளில் கேரட்டின் ஈரம் இருந்தாலும் மனதில் சால் மரங்களின் நிழல் தங்கியிருந்தது.


அவன் தன் கடந்த காலத்தைப் பற்றி யாரிடமும் பேசவில்லை. மங்கலியிடம்கூட முழுமையாகச் சொல்லியதில்லை. அவனுடைய குழந்தைகளுக்கு பஸ்தர், சத்தீஸ்கர் ஆகியவை தொலைவில் இருக்கும் மாநிலங்களின் பெயர்கள் மட்டுமே. அவர்கள் தமிழில் சிரித்தார்கள்; தமிழ்ப் பள்ளிக்குச் சென்றார்கள். சின்னக்குன்னூரின் குளிரில் விளையாடினார்கள். ஓய்வு நேரங்களில் கேரட் வயல்களில் பெற்றோருக்கு உதவினார்கள். தங்களுக்குப் பின்னால் இருந்த காடு பற்றி அவர்களுக்குத் தெரியாது. அந்தக் காடு அவர்களுடைய தந்தையின் உடலுக்குள் இன்னும் உயிரோடு இருப்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்த இரவு மதனுக்கு சத்தீஸ்கரிலிருந்து ஒரு கடிதம் வந்தது. யாரோ இன்னும் அவனுடைய பெயரை நினைவில் வைத்திருந்தார்கள். அந்தச் செய்தியை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவனிடம் மங்கலி கேட்டாள்:


“என்ன?”

அவன் உடனே காகிதத்தை மூடினான்.

“ஒண்ணுமில்லை.”

அவள் அருகில் வந்து அவன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தாள். இம்முறை அவன் மறைக்கவில்லை. செய்தியின் கடைசி வரியை மட்டும் அவள் வாசித்தாள்.

“உன்னைப் பற்றி விசாரிக்கிறார்கள்.”

மங்கலி தலையை உயர்த்திப் பார்த்தாள். இருவருக்கும் இடையில் நீண்ட மௌனம். வெளியே பனி படர்ந்துகொண்டிருந்தது.

“அவர்கள் இங்கே வருவாங்களா, மதனா?”

மதனால் பதில் சொல்ல முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். சின்னக்குன்னூரின் மலை அவனுக்கு முன்னால் இருந்தது. பல வருடங்களாகத் தப்பித்துக்கொண்டிருந்த இன்னொரு மலை அவனுக்குள் இருந்தது. அந்த இரண்டு மலைகளுக்கும் நடுவில் அவனுடைய குடும்பம் இருந்தது.


“நம்ம யார்னு இங்க யாருக்கும் தெரியாது.”

மங்கலி அவனைப் பார்த்தாள்.

“நம்ம யார்னு நமக்குத் தெரியுமே.”


அவர்கள் இருவரும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்கள். பனி வயல்களை மூடிக்கொண்டிருந்தது. அதன் கீழே கேரட்டுகள் வளர்ந்துகொண்டிருந்தன. அவற்றின் வேர்கள் மண்ணுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றன.

அந்த இரவில் மதனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. சத்தீஸ்கரும் பஸ்தர் காடும் அவனைத் தேடி வர வேண்டியதில்லை. அவன் எங்கே சென்றாலும், அவை அவனுக்குள் எப்போதும் இருந்தன.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page