நினைவில் காடுள்ள மிருகம் - 5


கடநாட்டுக்கு மேலே, தேயிலைத் தோட்டங்களின் நடுவே நாற்பது ஏக்கர் நிலத்தில் சக்திவேலின் ‘ஹில் வியூ’ ரிசார்ட் பிரம்மாண்டமாக எழுந்துகொண்டிருந்தது. கட்டுமானப் பணிகள் முக்கால்வாசி முடிந்திருந்த அந்த இடத்தைத் தனது நண்பர்களுக்குச் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தான். மலைமுகட்டில் எழுந்திருந்த கட்டடத்தையும், அதன் முன்பாகத் திறந்துகிடந்த பள்ளத்தாக்கையும் பார்த்த நண்பர்கள் வியப்புடன் நின்றனர். தொலைவில் காட்டுமாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. கட்டடத்தின் கீழே பழைய வயல்வரப்புகள் இன்னும் சில இடங்களில் தெரிந்தன; அவற்றின் எல்லைகளைத் தாண்டி கான்கிரீட் சுவர்கள் முன்னேறியிருந்தன. தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது சக்திவேல் அவர்களைப் பார்க்கவில்லை. அவனுடைய பார்வை பள்ளத்தாக்கின் மீது இருந்தது.
“இன்னும் ஒரு மாசத்துல வேலை முடிஞ்சிரும். கவர்னரை வரவழைச்சுத் திறப்புவிழா நடத்தலாமான்னு யோசிச்சிருக்கேன். இந்த நீலகிரியில வேற யாரும் செய்யாத ஒரு திட்டம் இருக்கு. நம்ம ரிசார்ட்டுல நாலு நாள் தங்குறவங்களுக்கு, ஒரு நாள் இரண்டு மணி நேரம் ஹெலிகாப்டர்ல மலைகளைச் சுத்திக்காட்டப் போறோம்.” தன் திட்டத்தைச் சொன்னபோது நண்பர்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள்.
சக்திவேலின் வேலையாள் ஒவ்வொருவருக்கும் கண்ணாடிக் குவளையில் மதுவை ஊற்றிக் கொடுத்தான். அவர்களில் ஒருவன் விஸ்கியைச் உறிஞ்சியபடி கேட்டான். “எப்படிண்ணே, பத்து பதினஞ்சு வருஷத்துல இவ்வளவு செல்வாக்கு வந்துச்சு?” சக்திவேல் சிரித்தான். “இந்த மலைல விவசாயம் பண்ணுறவங்களுக்கு அவங்க விளைச்சலோட விலை தெரியும். ஆனா, அந்தப் பொருள் சந்தைக்குப் போன பிறகு என்ன விலைக்கு விக்குதுன்னு தெரியாது.”
அவன் குவளையை உயர்த்தினான். “அந்த இடைவெளிதான் வியாபாரம். அவங்க உழைக்கிறாங்க; நான் சந்தையைத் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இரண்டுக்கும் நடுவில இருக்கிற விலையைப் புரிஞ்சவன்தான் சம்பாதிப்பான்.”
நண்பர்களில் ஒருவன் சிரித்தான். “அப்போ விவசாயிங்க உங்களை நம்பித்தானே இருக்கணும்?”
“நம்பிக்கைன்னு சொல்லாதே. தேவைன்னு சொல்,” என்றான் சக்திவேல். “மனுஷனுக்கு ஒரு தேவை இருந்தா, அதுக்கான வழியைத் வெச்சிருக்கவந்தான் முக்கியமானவன்.” அந்த வாக்கியத்தைச் சொன்னபோது அவனது குரலில் பெருமை தெரிந்தது. தன்னை அவன் ஏமாற்றுக்காரனாக நினைக்கவில்லை. நிலங்களை வாங்கியிருந்தான்; அதற்கான பத்திரங்கள் அவனிடம் இருந்தன. கொடுத்த கடன்களுக்குக் கணக்குப் புத்தகங்கள் இருந்தன. ஒவ்வொரு அநீதியையும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி நியாயமான பரிவர்த்தனையாக மாற்றியிருந்தான். பெரிய அநீதிகளைச் செய்பவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிகளைச் சட்டமே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடும் என்பதைச் சிறுவயதிலேயே புரிந்துகொண்டிருந்தான்.
சமவெளியிலிருந்து விடுமுறைக்காக மலைகளைத் தேடி வருபவர்களுக்கு இயற்கை மட்டும் போதாது; ஆடம்பரமும் கொண்டாட்டமும் வேண்டும். அந்தத் தேவைக்காக விவசாய நிலங்கள் வேகமாக ரிசார்ட்டுகளாக மாறின. நீலகிரியில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்குக் கட்டுப்பாடுகள் இருந்தும், அவற்றை மதிக்காதவர்கள் ஏராளம். சக்திவேலிடம் பணம் மட்டுமல்ல, அதிகாரத்தையும் தன் பக்கம் வளைத்துக்கொள்ளும் வழிகளும் இருந்தன. “எப்படிண்ணே, உங்களால எல்லாரையும் சமாளிக்க முடியுது?” என்று யாராவது கேட்டால், “அதிகாரத்துல இருக்கிற நாய்களுக்கு பிஸ்கட் போட்டுக்கிட்டே இருக்கணும். எந்த நாய்க்கு என்ன பிஸ்கட் போடணும்னு தெரிஞ்சா போதும். நம்மள யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க,” என்று சிரிப்பான்.
அவன் சொன்னதை நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்தார்கள். ஆனால் அந்தச் சிரிப்புக்குள் இருந்த உண்மையை யாரும் மறுக்கவில்லை. சட்டம், அனுமதி, சுற்றுச்சூழல் விதி, உள்ளாட்சி அலுவலகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலை இருந்தது.
அடுத்த நாள் காலை சின்னக்குன்னூர் வழக்கம்போல விழித்தபோது, மலைச்சரிவுகளில் பனி இறங்கிக்கொண்டிருந்தது. கேரட் வயல்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை இன்னும் தொடங்கவில்லை. தேவகியின் வீட்டுக்குச் செல்ல மதன் முடிவு செய்தான். மூன்று வருடங்களாகத் தனது கடந்த காலத்தை மறைத்துக்கொண்டு வாழ்ந்தவனுக்கு, அந்த அமைதியிலிருந்து வெளியேற வேண்டிய நாள் நெருங்கிவிட்டதுபோல் தோன்றியது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் அமைதியாக இருந்தான் என்பதை உலகம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை; எந்த நாளில் அந்த அமைதியை உடைத்தான் என்பதையே நினைவில் வைத்துக்கொள்கிறது.
குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்திக்கொண்டிருந்த மங்கிலி அவனைப் பார்த்தாள். மதன் சட்டையின் பொத்தானை மாட்டியபடியே “நான் தேவகியைப் பார்க்கப் போறேன். நீயும் வர்றியா?” எனக் கேட்க மங்கிலி ஒரு நொடி வேலைகளை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். உடையை சரிசெய்துகொண்டு எழுந்தவள் ”சரி வரேன்..” எனத் தயாரானாள். தங்களது பெற்றோர்களிடம் வெளிப்பட்ட திடீர் மாற்றங்களை கவனித்த குழந்தைகள் அவர்களை வினோதமாகப் பார்க்க மதன் அந்த சலனத்தை உணர்ந்தான். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக “சும்மா பார்க்கத்தான் போறோம். நீங்க ஸ்கூலுக்குப் போங்க,” என்று சிரித்தான். குழந்தைகள் தங்களது பள்ளிக்கூட பையை எடுத்துக் கொண்டு வெளியேறியபோது வாசலில் வேறு குழந்தைகளும் இணைந்து கொண்டனர். அவனது வீட்டை ஒட்டியே இன்னும் சில குடும்பங்கள் இங்கு பிழைப்பிற்காக வந்து தங்கியிருந்தார்கள். தனது குழந்தைகளைப் போலவே அந்தக் குழந்தைகளும் உள்ளூர்வாசிகளாக மாறிக்கொண்டிருப்பதை மதன் கவனித்தான். திரும்பி மங்கிலியிடம் ’நீ வரவேணாம் அது சரியா இருக்காது... நான் போயி பாத்துட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினான். அவசரமாகப் பின்னால் வந்த மங்கிலி “நீ என்ன செய்யப் போற மதனா?” என சத்தமாகக் கேட்க, திரும்பிப் பார்த்த மதன் ”அவ என்ன செய்ய நினைக்கிறாளோ அத செய்றதுக்கு துணையா இருக்கப் போறேன்..” என்றான். அவள் நிதானமாக கேட்டுவிட்டு ”சரி கவனமா போயிட்டு வா ”என்றாள்.
வயல்களைக் கடந்து செல்லும் குறுகிய பாதையின் முடிவில் தேவகியின் வீடு இருந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பாதையைக் கடந்து அவளது வீட்டை அடைந்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே தேவகியின் தந்தை சோர்வாக அமர்ந்திருந்தார். அடுப்பருகே நின்றிருந்த தேவகி, மதனைப் பார்த்ததும் அவசரமாக முகத்தைத் துடைத்துக்கொண்டாள். “வாங்கண்ணா,” என்று வாசலை நோக்கி வந்தவளின் முகத்திலும் உடல்மொழியிலும் தெரிந்த மாற்றத்தை மதன் கவனித்தான். அவசரப்படுத்தாமல், “என்ன நடந்துச்சு?” என்று கேட்டான். கதவு, ஜன்னல் வழியாக வந்த காலை வெளிச்சம் தரையில் நீண்ட சதுரங்களாக விழுந்திருந்தது. தேவகியும் அவளது தந்தையும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். இறுதியில் தேவகியின் தந்தை அந்த அமைதியைக் கலைத்தார். “நேத்து ராத்திரி வேலை விஷயமா பேசணும்னு சொல்லிட்டு வந்தான். என்னை வெளியே போகச் சொன்னான். நான் போகல. உடனே என்னை வலுக்கட்டாயமா வெளியே தள்ளிவிட்டு கதவைச் சாத்திட்டான்.” தேவகி ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துவந்து மதனிடம் கொடுத்துவிட்டு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். மதன் தண்ணீரைக் குடிக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நேத்து மதியானத்தில இருந்தே எனக்கு ஒரு மாதிரி படபடப்பா தான் இருந்துச்சு. ஏதோ இன்னிக்கு தப்பா நடக்கப் போகுதுன்னு பயந்துட்டு இருந்தேன். அவெ இங்க வந்தப்போ நல்லா குடிச்சிருந்தான். அப்பாவ வெளிய தள்ளிட்டு எங்கிட்ட வந்தப்போ நான் பயந்து அவன விலக்கிவிட்டேன், ஆனா அவென் விடல... என் கைய புடிச்சு முறுக்கிட்டான். என் முகத்திலயும் முதுகிலயும் அடிச்சான்...” அவளுடைய குரல் உடைந்தது. அழுகையை அடக்கிக்கொண்டாள். மதன் அவளது கையில் இருந்த காயத்தைக் கவனித்தான். “உனக்கு வேலை கொடுத்ததே நீ என்னோட படுக்கணும்னுதான்னு சொல்லி என்னைப் பிடிச்சு இழுத்தப்போ எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல... எப்பிடியாச்சும் அவங்கிட்ட இருந்து தப்பிக்கனும்னு போராடினப்போ காய்கறி வெட்ட வெச்சிருந்த கத்திதான் கெடச்சது. அத எடுத்து அவன் முகத்திலயும் வயித்துலயும் குத்திட்டேன்...” அந்த இரவில் என்ன நடந்திருக்குமென்பதை தேவகியின் பதற்றத்திலிருந்து மதன் புரிந்துகொண்டான்.
நீண்ட அமைதிக்குப்பின் ’அதுக்கு அப்பறம் அவன் பார்த்த பார்வைய என்னால மறக்க முடியலண்ணா.. உடம்பெல்லாம் ரத்தம் கொப்பளிக்க அடிபட்ட மிருகம் மாதிரி பாத்துட்டுப்போனான்.” என்று சொன்னபோது அவளுக்கு அச்சத்தில் உடல் நடுங்கியது.“போகும்போது எதும் சொன்னானா?” என்று மதன் கேட்க, ஆம் என தலையசைத்தாள்.
“இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவன்னு சொன்னான்..” தேவகியின் தந்தை தலைகுனிந்தார். “என்னால அவனைத் தடுக்க முடியல.”தேவகி தன்னைச் சமநிலைக்குக் கொண்டுவர முயன்றாள். “நான் அவன எதுத்து கத்தியால குத்தினதுக்காக பயப்படல... ஆனா இதுக்கு அப்பறம் என்ன நடக்குமோன்னு நெனச்சாதான் பயமா இருக்கு...” என்று குழப்பத்தோடு மதனைப் பார்த்தாள். ”சரி... என்ன வந்தாலும் பாத்துக்கலாம்... நீ என்ன செய்யனும்னு நெனைக்கற?” “எனக்குத் தெரியல. ஆனா அவன் முன்னாடி மறுபடியும் தலைகுனிய மாட்டேன்,” என்றாள்.
மதன் அவளைப் பார்த்துத் தலையசைத்தான். “இனி அவன் எனக்கு வேலை கொடுக்க மாட்டான். வாங்கின கடனை உடனே திருப்பிக் கொடுக்கச் சொல்லுவான். ஊர்ல இருக்கிற எல்லாரையும் எங்களுக்கு எதிரா திருப்புவான்.” “என்ன நடந்தாலும் பாத்துக்கலாம், தேவகி. ஆனா பழைய மாதிரி பயந்துகிட்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.” ”இப்ப எனக்கும் என் குடும்பத்துக்கும் வேல இல்லயேண்ணா...” ”யோசிப்போம். நிச்சயமா ஒரு வழி கிடைக்கும்.” இவ்வளவு உறுதியோடு பேசும் ஒருவனை அவள் இதற்கு முன் சந்தித்ததில்லை. எங்கோ தூரத்தில் ஒரு காட்டிலிருந்து பிழைப்பிற்காக வந்தவனால் எப்படி தன் பிரச்சனையில் தன்னோடு நிற்கமுடிகிறது? அவன் தன்னிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறானோ என்ற சந்தேகமும் அவளுக்குள் எழுந்தது.
“நீங்க உண்மையாவே யாரு அண்ணா? இங்க சக்திவேல எதித்து உங்களால என்ன செய்ய முடியும்?” மதன் பதில் சொல்லவில்லை.
“எங்கிட்ட என்னயப் பத்தி எதுவும் கேக்காத தேவகி... இந்த பிரச்சனைய எப்பிடி சரி செய்றதுன்னு மட்டும் யோசிப்போம். நீ தைரியமா இரு...” என்று சொல்லிவிட்டு மதன் அங்கிருந்து வெளியேறினான். சக்திவேலின் அதிகாரம் அவனுடைய வயலின் எல்லையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை மதன் அறிந்திருந்தான். நிலம், கடன், லாரி, சந்தை, வேலை—எல்லாவற்றையும் அவன் ஒன்றோடொன்று கட்டியிருந்தான். ஒருவன் அவனை எதிர்த்தால் முதலில் அவனுக்கு வேலை போகும்; வேலை இல்லையென்றால் அவனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாது; கடனை அடைக்க முடியாவிட்டால் வீட்டையோ அல்லது நிலத்தையோ எழுதி வாங்கிக்கொள்வான். அவன் யாரையும் நேரடியாகச் சிறையில் அடைப்பதில்லை, தன்னை எதிர்ப்பவர்களின் வாழ்வாதரங்களை முடக்கி அவர்களை மண்டியிடச் செய்வான். வீட்டுக்குத் திரும்பியபோது மங்கிலி சொன்னாள்.
”இங்க இருக்க நிலத்தை மட்டும் அவன் வாங்கல. மனுஷங்களையும் அவனுக்குச் சொந்தமாக்கிக்கிட்டான். சொல்லப்போனா இந்த ஊருக்கு ஒரு அரசாங்கம் மாதிரி இருக்கான்,” மதன் அமைதியாக வயலைப் பார்த்தபடியே “இல்ல, மங்கிலி. ஒரு அரசாங்கம் மாறும்போது அதோட அதிகார அமைப்பும் மாறலாம். ஆனா இவன மாதிரி ஆளுங்க எந்த அரசாங்கம் வந்தாலும் தங்களோட இடத்தைத் தக்கவெச்சுக்குவாங்க. கட்சி மாறுவாங்க, கொடி மாறும்; ஆனா இவங்களுக்குக் கீழே இருக்கிற மக்கள் மட்டும் மாற மாட்டாங்க. இவனை எதிர்க்கிறது ஒரு மனுஷனை எதிர்க்கிறதல்ல. அவனைத் தாங்கி நிற்கிற உறவுகளையும் பயங்களையும் தேவைகளையும் எதிர்க்கிறது.” என்ற சொன்னபோது பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ்தரில் ஒரு முதியவர் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. “ஒரு மரத்தை வெட்டினால் காடு அழிஞ்சிடாது, மரங்களுக்கு இடையிலிருக்க உறவை வெட்டினால்தான் காடு அழியும்.” அதன் பொருளை இப்போது புரிந்துகொண்டான்.
ஊர் ஏன் ஒவ்வொரு முறையும் சக்திவேலின் பக்கம் நிற்கிறது என்று மதன் பலமுறை யோசித்திருக்கிறான். யார் கேட்டாலும் அவன் கடன் கொடுப்பான். ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வந்ததும், கடனுடன் சேர்த்து அவர்களுடைய நிலத்தையும் மரியாதையையும் கைப்பற்றுவான். சந்தையில் விலை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வளவு கூலி கிடைக்க வேண்டும் என்பதையும் அவனே தீர்மானித்தான். அவனுடைய கொடுமையால் பலர் பாதிக்கப்பட்டார்கள்; அதே நேரத்தில் சிலர் அவனுடைய அதிகாரத்தால் ஆதாயமும் அடைந்தார்கள். அவனிடம் அதிகாரம் இருந்ததால், அவனை அண்டித் தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஊர்க்கோவிலில் திருவிழா நடக்கும். மற்றவர்கள் நூறு, இருநூறு ரூபாய் என்று நன்கொடை கொடுப்பது வழக்கம். சக்திவேல் மட்டும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் கொடுப்பான். அவனுடைய மனைவி அந்த ஊரைச் சேர்ந்தவள்; அந்தக் கோவிலுடன் அவனுக்கு இருந்த ஒரே தொடர்பு அதுதான். அந்த ஊரின் அதிகாரத்தை அவன் கோவிலின் வழியாகவே கைப்பற்றத் தொடங்கியிருந்தான். கோவிலுக்குப் பெரிய நன்கொடை கொடுக்கும் வியாபாரியை ஊர்ப் பஞ்சாயத்தில் கேள்வி கேட்க பலருக்கும் தயக்கமாக இருந்தது. கோவில் மட்டுமல்லாமல் பள்ளிக்கூடம், தண்ணீர்த் தொட்டி, தெருவிளக்கு என எல்லாவற்றுக்கும் அவன் நிதி கொடுப்பான். அதற்குப் பதிலாக, அந்த இடங்களில் தன் பெயர் மறக்காமல் எழுதப்பட்டிருப்பதை உறுதிசெய்வான். ஊரை மட்டுமல்ல, அதன் அதிகாரத்தையும் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை மக்கள் முழுமையாக உணரவில்லை.
திருவிழா நாளில் கோவிலில் அவனுக்குச் சிறப்பு மரியாதை அளிக்கப்படும். ஊர்த்தலைவர்களும் பிரமுகர்களும் அவனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப் போட்டியிடுவார்கள். அவனே முன்னின்று எல்லோருக்கும் அன்னதானம் செய்வான். அந்த மரியாதை எல்லாம் அந்த ஒரு நாளுக்குத்தான். அடுத்த நாள் மீண்டும் ஊர்மக்களின் கடன் கணக்குகள் திறக்கப்படும், யாருடைய நில எல்லை எங்கே என்று அவன் தீர்மானிப்பான். அந்த ஒரு நாள் அவனுடைய மற்ற நாட்களை ஊர்க்காரர்கள் மறக்க உதவியது. அவன் செய்த அநீதிகள் அழிந்துவிடவில்லை. அவற்றை நினைவில் வைத்துக்கொள்வதுதான் சமூகத்துக்கு அசௌகரியமாக இருந்தது. “அவன் கெட்டவன் தான் ஆனா கோவிலுக்கு அவன் கொடுக்கிற பணத்தால்தான் திருவிழா நடக்குது. அவனைப் பகைச்சுக்கிட்டு நமக்கு என்ன கிடைக்கும்?” என்று ஒருவர் மதனிடமே சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்னவரும் சக்திவேலிடம் கடன்பட்டவர்தான். சக்திவேலின் வலிமை அவன் வைத்திருந்த பணத்தில் மட்டும் இல்லை. அவனைப் பற்றிய முழு உண்மையை அறிந்திருந்தும், அவனை எதிர்க்கமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். அவனை எதிர்ப்பது ஒரு மனிதனை எதிர்ப்பது மட்டும் அல்ல, கோவில், வேலை, கடன், சந்தை, உறவினர் திருமணம், ஊரின் மரியாதை என இவற்றின் வழியே பின்னப்பட்ட அமைப்பை எதிர்ப்பது. அந்த அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் அவனை வீழ்த்த முடியாது என்று மதன் புரிந்துகொண்டான்.
அன்றிரவு மதனின் தொலைபேசி ஒலித்தது. மறந்துவிட முயன்ற கடந்த காலம் மீண்டும் அவனைத் தேடி வந்திருந்தது. அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே அது நின்றது. சில நொடிகளில் மீண்டும் ஒலித்தது. மதன் அந்த அழைப்பை ஏற்றான். மறுமுனையில் சில விநாடிகள் அமைதி. பின்னர் பழக்கப்பட்ட ஒரு குரல். ”எப்படி இருக்க மதன்/” நீண்ட காலமாகக் கேட்டிராத குரல். ஆனாலும் ஒரு கணத்திலேயே அதை அடையாளம் கண்டுகொண்டான். ”ம்ம்ம் இருக்கேன்..” என சுருக்கமாக பதில் சொன்னான். “இங்க என்ன நடந்துகிட்டிருக்குன்னு தெரியுமா? நம்மோட இருந்த எத்தனை பேர் இப்போ உயிரோட இல்லைன்னு தெரியுமா?” ”தெரியாது.” சலனமே இல்லாமல் மதன் சொல்ல எதிரில் மீண்டும் அமைதி.. “இப்போ மிச்சம் இருக்கிறது நானும் நீயும்தான். நீ உயிரோட இருக்கியான்னே பல பேருக்குச் சந்தேகம். எப்பவோ செத்துப்போயிட்டேன்னு நம்பிக்கிட்டிருக்காங்க.”
மதன் பதில் சொல்லவில்லை. தொலைபேசியின் மறுமுனையில் மூச்சின் சத்தம் மட்டும் கேட்டது.
”ரொம்ப நல்லது... நீ எதுக்காக இதையெல்லாம் இப்பசொல்லிட்டு இருக்க?”எதிர் முனையில் சிரிப்பு.
“என்னோட நேரம் நெருங்கிடுச்சுன்னு நினைக்கிறேன். நீயாவது பாதுகாப்பா இருக்கணும்னுதான் சொல்றேன். முப்பத்தாறு வழக்குகள்ல உன்னைத் தேடுறாங்க, மதன். நாம் காட்டுக்குள் சென்றதிலிருந்து வெளியேறிய நான்கு வருடங்களில் என்ன செய்தோம் என்பதில் கொஞ்சம் உண்மையை எடுத்துக்கொண்டு நிறைய கதைகளை எழுதியிருக்கிறார்கள். அந்தக் கதையின் முடிவில் நீயும் நானும் செத்துப்போயிட்டோம்னு எழுதிவச்சிருந்தாங்க. இப்போ நான் உயிரோட இருக்கிறது தெரிஞ்சிருச்சு. அதனால் நீயும் உயிரோட இருக்கலாம்னு தேடுவாங்க. அவங்க எழுதிய கதையை அவங்களால மாத்த முடியாது, மதன். கவனமா இரு.”
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மதன் தொலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். வாசலருகே கிடந்த கல்லால் அதை அடித்துச் சுக்குநூறாக்கினான்.
சத்தம் கேட்டு வந்த மங்கிலி பதறினாள். “என்னாச்சு? யாரு போன் பண்ணது?” “காட்டில என்னோட இருந்த பழைய நண்பன்.”
“நல்ல செய்தியா?”
“இல்ல.”
“கெட்ட செய்தியா?”
மதன் அவளைப் பார்த்தான்.
“அதைவிட மோசமானது. முடிஞ்சுபோச்சுன்னு நினைச்ச வாழ்க்கை இன்னும் முடிஞ்சிடலன்னு சொல்ற செய்தி.” “இப்பவாவது சொல்லு, மதன். அங்க என்னதான் நடந்துச்சு?”
“நான் என்ன செஞ்சேன்னு மட்டும் சொல்ல முடியாது. எங்க குழு என்ன செஞ்சது, எதை எதிர்த்தோம், எங்ககிட்ட என்ன தவறுகள் இருந்துச்சு இதையெல்லாம்தான் சொல்லணும்.
ரத்தத்தால் எழுதப்பட்டு, பல ஆண்டுகளாக அவனுடைய மனதை அரித்துக்கொண்டிருந்த கதையை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
“நான் என்ன செஞ்சேன்னு தெரிஞ்சா, ஒருவேளை நீ என்னைப் பார்த்துப் பயப்படலாம்.” என்று தயங்கினான். அவள் நெருங்கி அவனது தோள்களைப் பற்றிக்கொண்டாள். மேகம் விலகியதும் அரைநிலா வெளியே வந்தது. மரங்களுக்கு இடையே பனியில் மறைந்திருந்த ஆந்தை அலறியபடி பறந்தது.
“நான் உன்னைப் பார்த்து எப்போ பயந்திருக்கேன்?” என்றாள்.
மதனுக்கு அந்த நம்பிக்கை ஆறுதலாக இருந்தது. கடந்த காலம் கனவாக விரிந்தது. கிராமத்தின் நடுவே தூசி எழுந்தது. வாகனங்களின் விளக்குகள் மரங்களின் கிளைகளில் அசைந்தன. யாரோ ஓடினார்கள். தூரத்தில் ஒரு குழந்தை அழுதது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் எல்லோரும் தரையில் விழுந்தார்கள். மதன் ஓட முயன்றான். ஆனால் அவன் கால்கள் மண்ணுக்குள் புதைந்திருந்தன. அவன் தோழன் ஒருவன் கையை நீட்டினான். அவனுடைய உள்ளங்கையில் ரத்தம் நிரம்பியிருந்தது.
“நக்சலைட்” என்ற சொல்லை மதன் முதலில் கேட்டது, காட்டுக்குள் வந்த காவலர்களின் வாயிலிருந்துதான். கிராமத்தில் யாரையாவது தேடி வந்தால், “நக்சல் எங்கே?” என்று கேட்பார்கள். யாரையாவது கைது செய்தால், “நக்சல்களுக்கு உதவினான்” என்று குற்றம் சுமத்துவார்கள். அந்தச் சொல்லுக்குள் ஒருவனுடைய பெயர் மட்டுமல்ல; அவன் செய்ததும் செய்யாததும், அவனுடைய குடும்பமும் அவன் வாழ்ந்த நிலமும் எல்லாம் ஒன்றாக அடைக்கப்பட்டுவிடும். ஒரு கிராமத்தின் மீது அந்தப் பெயர் ஒட்டப்பட்டுவிட்டால், அதன் பிறகு அங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் விளக்கம் தேவையில்லை. சந்தேகமே சான்றாகிவிடும்; அச்சமே விசாரணையாகிவிடும். அதிகாரிகளின் நடவடிக்கைகளாலும் காவல்துறையின் துப்பாக்கிகளாலும் அவனுடைய கிராமம் சிதைக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, மதன் காட்டுக்குள் இருந்த தோழர்களின் முகாம்களைத் தேடிச் சென்றான். அவனும் அவனுடைய ஊர்க்காரர்களும் எதற்காகத் துன்புறுத்தப்பட்டார்களோ, அந்தப் பெயரையே ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. அவனுடன் மேலும் எட்டுப் பேர் இணைந்துகொண்டார்கள். வேட்டையில் தப்பிய விலங்குகளைப்போல் வெறிகொண்ட கண்களும் மெலிந்த உருவங்களுமாய் இருந்தவர்களை அந்த முகாம் அரவணைத்துக் கொண்டது. பசியும் அச்சமும் அவர்களைச் சுற்றியிருந்தன. ஆனாலும் அங்கே தத்துவத்துக்காக வாழ்வதும், தனிப்பட்ட துயரத்தை அரசியல் கோபமாக மாற்றுவதும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
பயிற்சிகளும் அரசியல் வகுப்புகளும் தொடங்கியபோது மதன் அந்த இயக்கத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளத் தொடங்கினான். 1967-ல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரியில் நிலமற்ற விவசாயிகளும் பங்குச்செய்கையாளர்களும் நில உரிமைக்காக எழுந்த போராட்டத்திலிருந்து “நக்சலைட்” என்ற பெயர் பரவியது. “நிலத்தை உழைப்பவனுக்கே உரிமை” என்ற கோரிக்கை, நிலப்பிரபுத்துவத்துக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிரான கோபம்—இவை அதன் தொடக்கத்தில் இருந்தன. சாரு மஜும்தார் உள்ளிட்ட தலைவர்கள் ஆயுதப் புரட்சியை வலியுறுத்தினர். பின்னர் இயக்கம் பல பிரிவுகளாகப் பிளந்து, வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பாதைகளில் சென்றது. மத்திய இந்தியாவின் பழங்குடிப் பகுதிகளில் நிலம், காடு, கனிம வளங்கள், இடப்பெயர்வு, அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை மோதலின் மையமாகின.
ஆனால் வகுப்பில் கற்ற வரலாறுக்கும் காட்டுக்குள் அவன் பார்த்த வாழ்க்கைக்கும் இடையே எப்போதும் ஓர் இடைவெளி இருந்தது. எல்லா பழங்குடியினரும் நக்சலைட்டுகள் அல்ல. அநீதியை எதிர்த்த ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தவில்லை. ஆயுதம் ஏந்திய எல்லோரும் ஒரே காரணத்துக்காகவும் போராடவில்லை. காவல்துறையின் கண்களில் சில சமயம் எதிர்ப்பே குற்றத்துக்கான சான்றாகிவிடும்; இயக்கத்தின் கண்களில் சில சமயம் சந்தேகமே துரோகத்துக்கான சான்றாகிவிடும். அந்த இரண்டிற்கும் நடுவே சிக்கிக்கொண்ட மனிதர்களைப் பற்றி எந்த வகுப்பும் முழுமையாகச் சொல்லவில்லை.முதலில் ஆயுதக் குழுவுக்கு உணவு எடுத்துச் சென்றான். பிறகு தகவல்களை எடுத்துச் சென்றான். காட்டு வழிகளை அறிந்திருந்ததால் அவர்கள் அவனைத் தங்களோடு வெவ்வேறு இடங்களூக்கு அழைத்துச் செல்லத் துவங்கினார்கள். துப்பாக்கியை ஏந்தியதும் உலகம் தெளிவாகிவிடும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் கேள்விகள் அதிகரித்தன. யாரை எதிரி என்று அழைப்பது? யார் கட்டாயத்தால் தகவல் கொடுத்தார்? யார் பயத்தில் வழி காட்டினார்? யார் உண்மையிலேயே துரோகம் செய்தார்? காட்டின் இருளில் சில முடிவுகள் ஒரு கணத்தில் எடுக்கப்பட்டன. அதன் விளைவுகள் மட்டும் வாழ்நாள் முழுவதும் அவனைத் தொடர்ந்தன.
ஒரு இரவு, முகாமின் இருப்பிடத்தை காவல்துறையினர் அறிந்துகொண்டதற்கு ஒரு கிராமவாசிதான் காரணம் என்று குழுவுக்குள் பேசப்பட்டது. அவனை அழைத்துவந்தபோது அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தனர். காவலர்கள் அவர்களை மிரட்டியதாக அவன் சொன்னான். சிலர் அவனை நம்பவில்லை. சிலர் விசாரிக்க வேண்டும் என்றார்கள். தன் தோழர்களின் மரணத்துக்குக் காரணமானவன் அவன்தான் என்ற கோபம் மதனுக்குள் எரிந்தது. அவனை உயிரோடு விடக்கூடாது என்று அந்தக் கோபம் கட்டளையிட்டது. அவன் துப்பாக்கியை உயர்த்தினான். அடுத்த கணம் அந்த மனிதன் தரையில் விழுந்துகிடந்தான். அந்த இடத்தில் ஒரு கணம் யாரும் அசையவில்லை. யாரும் மதனைப் புகழவில்லை; யாரும் தடுக்கவும் இல்லை. அவன் செய்தது குழுவின் முடிவா, அவனுடைய கோபத்தின் முடிவா என்று யாரும் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை எழுப்புவதற்கான துணிவு அங்கே யாருக்கும் இல்லை. அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள். அந்த மனிதனின் முகம் மட்டும் மதனுடன் வந்துகொண்டே இருந்தது. அவன் உண்மையில் துரோகியா, பயத்தில் தகவல் கொடுத்தவனா, அல்லது வேறு யாரோ செய்த தவறுக்குப் பலியானவனா என்பதை மதன் ஒருபோதும் அறியவில்லை. ஆயுதம் ஒரு முடிவை எளிதாக்கலாம்; ஆனால் அந்த முடிவு சரியானதா என்ற தெளிவை ஒருபோதும் கொடுக்காது.
காட்டைப் பற்றிய அறிவும் மனவுறுதியும் மதனுக்கு இருந்ததால், தோழர்கள் அவனுக்குப் புதிய பொறுப்பைக் கொடுத்தார்கள். அந்தக் காட்டில் முன்னூறு, நானூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல வெளியாட்கள் லாரிகளுடன் காட்டுக்குள் வந்தார்கள். “காடு பாதுகாப்பாக இருந்தால்தான் இங்கே வாழும் மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்ற எண்ணம் அவனுக்குள் பதியவைக்கப்பட்டது. அவனுடன் ஏழு பேர் கொண்ட குழு காட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்து எங்கெல்லாம் வெளியிலிருந்து மரம் வெட்டும் குழுக்கள் வந்தனவோ, அங்கெல்லாம் அவர்களை எதிர்கொண்டு விரட்டினார்கள். எதிர்தரப்பு வலிமையாக இருந்தபோது மோதல்கள் தீவிரமடைந்தன; சில நேரங்களில் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. மதன் ‘பூமரேங்’ என்ற பெயரால் அறியப்படத் தொடங்கினான். அந்தப் பெயர் அவனுக்குப் பெருமையாகத் தோன்றிய நாட்களும் இருந்தன; பிறகு அது தன்னைவிட்டு விலகி, தனக்கென ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிழல் என்று புரிந்த நாட்களும் வந்தன.
ஒரே நேரத்தில் இயக்கத்திலும் காவல்துறையிலும் அவனைக் குறித்த செய்திகள் வேகமாகப் பரவின. அவன் செய்த செயல்களைவிட அவற்றைப் பற்றிப் பரவிய கதைகள் பெரிதாக வளர்ந்தபோது அவன் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டிய எதிரி என்று குறிக்கப்பட்டான். மத்திய இந்தியா முழுவதும் முகம் மறைத்து ஓடிய நாட்களில், தன்னுடன் இருந்தவர்களையே சந்தேகிக்கத் தொடங்கினான். அச்சமும் சந்தேகமும் தன்னுடன் இருந்தவர்களின் உயிரையே பறிக்கத் தொடங்கியபோது, அவன் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையிழந்தான். பூமரேங் என்ற நிழலை அழித்துவிட்டு தனது கிராமத்தை நோக்கியோ அல்லது இந்த தேசத்தில் தன்னை யாரும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தை நோக்கியோ ஓடிவிட நினைத்தான். அவனோடு இருந்தவர்களும் அந்த முடிவில்தான் இருந்தார்கள். இனி ஒருபோதும் சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவோடு அவர்கள் அந்தக் காட்டிலிருந்து வெளியேறினார்கள்.
மதன் நீண்ட காலமாக அவளிடம் மறைத்துவைத்திருந்த கதைகளைச் சொல்லி முடித்தபோது பின்னிரவு கடந்திருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் மங்கிலி அமைதியாக அமர்ந்திருந்தாள். “சரி, மதன். அடுத்து என்ன நடக்கும்னு இப்பவே யோசிச்சு உன்னை நீயே சிதைக்காதே. உனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய். ஆனா, இந்த முறை நீ என்ன செய்கிறாய் என்பதையும் ஏன் செய்கிறாய் என்பதையும் மறந்துடாதே.” என மங்கிலி நிதானமாகச் சொல்லிவிட்டு எழுந்துகொண்டாள். மதன் மலையின் இருளில் உறங்கிக் கொண்டிருக்கும் வயல்களைப் பார்த்தபடியே நின்றான்.



