நான் இப்போதும் அங்குதான் இருக்கிறேன் - 2


5.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கர்ணனுக்குப் பிணை கிடைத்தது. அவர் நாக்பூருக்குத் திரும்பவில்லை. பல்கலைக் கழகத்தில் அவருக்கு வேலை இல்லை; ஆனால் தேசம் முழுக்க வெவ்வேறு நகரங்களில் அவர் மீது வழக்குகள் இருந்தன; ஒவ்வொரு மாதமும் வழக்குகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்க வேண்டியிருந்தாலும் மலைகளும் தனது ஊருமே தன்னை மீட்கும் என்கிற நம்பிக்கையில் ஊட்டிக்குத் திரும்பியிருந்தார். கவரெட்டியைச் சுற்றிலும் இப்பொழுது கேரட்டும் பீட்ரூட்டும் சமயங்களில் உருளைக்கிழங்கும் விளைவிக்கப்பட்டது. சமவெளியிலிருந்து பேராசையோடு வந்த மனிதர்கள் நிலத்தை பெருமளவில் வாங்கி விவாசயம் செய்ய பலகாலமாக அங்கு வாழ்ந்த மக்கள் கூலிக்குச் சென்றார்கள். சட்டீஸ்கரிலிருந்தும் அஸ்ஸாமிலிருந்தும் ஏராளமானவர்கள் தங்களது குடும்பங்களோடு இங்கு உழைப்புக் கூலிகளாக வந்து சேர்ந்தது மட்டுந்தான் இந்த நீண்ட இடைவெளியில் நடந்திருந்த மாற்றம்.
அவரை வரவேற்க தோழர்கள் வந்திருந்தார்கள். முதுமை எய்திய அவரது தாயை கர்ணனின் சகோதரி பராமரித்து வந்தார், தந்தை எப்போதோ இறந்திருந்தார். கர்ணன் மெலிந்த உருவமாக காரிலிருந்து இறங்கியபோது தன்னை விடவும் நலிந்துபோயிருக்கும் மகனைப் பார்க்க சகிக்காமல் அவரது தாய் அழுதார். அன்று பிற்பகலிலேயே பனி சூழ்ந்து இருளத் துவங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு முன்னைவிடவும் ஆதரவு பெருகியது. மாணவர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் அவர் மீதிருக்கும் வழக்குகளை நீக்கச் சொல்லி போராடி வந்தார்கள். அவருடைய பேட்டிகள் சமூக ஊடகங்களில்டி வேகமாக பரவின. ஒரு பேட்டியில் செய்தியாளர் கேட்டார்: "இந்த அரசை நீங்கள் மன்னிப்பீர்களா?" அவர் பொறுமையாக "நான் யார் அவர்களை மன்னிக்க?" என்றார். கேள்வியாளர் முன்னைவிடவும் ஆர்வத்தோடு "பழிவாங்குவீர்களா?"ஆர்வத்தோடு எனக் கேட்டார். "இல்ல. அவர்கள் என்னை எப்படிப்பட்ட மனிதனாக மாற்ற விரும்புகிறார்களோ அப்படியே நான் மாறிவிட்டால், அவர்கள் வென்றுவிடுவார்கள் இல்லையா? என கர்ணன் சிரித்தார். அவர் மேலும் சொன்னார்: "அரசையும் அதிகாரத்தையும் விமர்சனம் செய்வது நாட்டை வெறுக்கும் செயல் அல்ல. மக்கள் தான் அரசு. நான் மக்களை நேசிக்கிறேன், அவர்களை ஒடுக்கும் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அரசையும் நாட்டையும் ஒன்றாகக் கருதத் தொடங்கும் நாள்தான் ஜனநாயகத்தின் இறுதி நாள்." எனத் தெளிவாகச் சொன்னார்.
அந்தக் காணொளி வினாயக்கிடமும் சென்றது. அவன் அதை முழுமையாகப் பார்த்தான். இந்த முறை அவனால் உடனே அதை அழிக்க முடியவில்லை. தொலைபேசியை அணைத்தான். அதைக் கவனித்த அவனது நண்பன் கேட்டான்: "என்ன வினாயக் அமைதியா இருக்க, அவன் பேச்சு பிடிச்சிருக்கா?" வினாயக் யோசனையோடு அமர்ந்திருக்க. "அவனுக்குப் பேசத் தெரிஞ்சிருக்கு அது தேசத்துக்கு ஆபத்து." என நண்பன் சொன்னதை ஆமோதித்து வினாயக் தலையசைத்தான்.
ஒரு மாலை கர்ணனும் அருணும் தாவரவியல் பூங்காவைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள். இதமான குளிர்காலம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிறைந்திருந்தது. சாலையில் பனிக்குல்லா விற்கிறவர்களும் மக்காச்சோளம் விற்கிறவர்களும் பெரும் சத்தத்தோடு பேசிக்கொண்டார்கள். சிலர் கர்ணனை அடையாளம் கண்டு முகமன் கூறினார்கள். அவர் எல்லோரையும் பார்த்து கனிவோடு சிரித்தார்.
சிறிது நேரம் அமைதியாக நடந்த பிறகு அருண் கேட்டான்.
“நம்மை ஏன் இவ்வளவு வெறுக்கிறாங்க?”
கர்ணன் அவனைப் பார்த்தார்.
“நம்மை அல்ல.”
“பின்ன?”
“நாம் கேட்கிற கேள்விகளை.”
அருண் சிரித்தான்.
“அது என்ன அவ்வளவு பெரிய ஆபத்தா?”
“ஒரு கேள்வி தனியாக இருக்கும்போது ஆபத்தில்லை.”
”ம்ம்ம்”
“அந்தக் கேள்வி யாருடைய வாயிலிருந்து வருகிறது என்பதுதான் முக்கியம்.”
அருண் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஒரு பேராசிரியர் கேட்கிற கேள்வி ஒருவிதம். பத்திரிகையாளர் கேட்கிற கேள்வி இன்னொரு விதம், அதுவே ஒரு பழங்குடிப் பெண் கேட்கிற கேள்வி வேறுவிதம். ஒரு தொழிலாளி கேட்கிற கேள்வி வேறுவிதம். ஒரு மாணவன் கேட்கிற கேள்வி இன்னொரு விதம்.”
கர்ணன் நடையை மெதுவாக்கினார்.
“ஆனா, ஒருநாள் இந்தக் கேள்விகள் எல்லாம் ஒன்றோடொன்று இணைந்துவிட்டால்?”
அருண் அவரைப் பார்த்தான்.
“அதுதான் அரசுக்கு உண்மையான பிரச்சினை.”
“அப்போ அரசு என்ன செய்யும்?”
“முதலில் பதில் சொல்ல முயற்சி செய்யும்.”
“அதுக்குப் பிறகு?”
“பதில் சொல்ல முடியாதப்போ கேள்வியைத் தடை செய்யும்.”
“அதுவும் போதவில்லை என்றால்?”
கர்ணன் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“கேள்வி கேட்ட மனிதனை.”
அருண் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கர்ணன் மெல்லச் சிரித்தார்.
“ஆனா அதுவும் போதாது.”
“ஏன்?”
“ஒரு மனிதனைக் கொன்றுவிட்டால் அவன் கேட்ட கேள்வியும் இறந்துவிடும் என்று நினைப்பது அதிகாரத்தின் பழைய தவறு.”
அவர் மீண்டும் நடக்கத் தொடங்கினார்.
“ஒரு மனிதனை அழிக்கலாம். அவன் குரலை அடக்கலாம். அவன் பெயரையே மறைக்கலாம். ஆனால் அவன் எழுப்பிய கேள்வி ஏற்கனவே இன்னொருவருக்குள் பிறந்துவிடும்…”
கர்ணன் அருணைப் பார்த்தார்.
“அந்தக் கேள்வியை யாராலும் கொல்ல முடியாது.” அருண் அவர் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டினார்.
6.
வினாயக் ஊட்டிக்கு வந்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. நாக்பூரின் மழை நகரத்தின் மீது விசையின்றி அமைதியாக விழும். ஊட்டியின் மழை நகரத்தை உள்ளே இழுத்துக்கொள்ளும்: மரங்களும் வீடுகளும் மறைந்து மனிதர்களின் முகங்கள் மங்கலான நிழல்களாகும். அவன் தங்கியிருந்த லாட்ஜின் சிறிய அறையில் சுவர்கள் ஈரம் படர்ந்திருந்தன. அடர்த்தியான குளிர் பகல் நேரத்திலும் விலகாமல் நிறைந்திருந்தது. ஒரு இரும்புக் கட்டில், சிறிய மேசை, பிளாஸ்டிக் நாற்காலி, இயங்காத ஒரு சுவர்க் கடிகாரம் இருந்தன. படுக்கையின் கீழ் இருந்த கருப்புப் பையில் ஆடைகள், ஒரு ஜெபமாலை, ஒரு சிறிய தெய்வப் படம், ஒரு நோட்டு. அதன் கடைசிப் பக்கத்தில் ஒரே ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது.
கர்ணன்.
அந்தப் பெயர் ஒரு கதவு போல் இருந்தது. அதைத் திறந்தால் அவன் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியும் என்று அவனுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் கொலை மறைவில் நடக்க வேண்டியதில்லை. பட்டப்பகலில், மக்கள் பார்க்கும்படி, முக்கியமான இடத்தில் நடக்கவேண்டும். அது ஒரு மனிதனின் மரணமாக மட்டும் இருக்கக்கூடாது; ஓர் அறிவிப்பாக இருக்க வேண்டும். தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு செய்தி. வினாயக் அந்த வார்த்தையை விரும்பினான்: அறிவிப்பு. தான் ஒரு மனிதனைக் கொல்லப் போவதில்லை என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். ஒரு புனிதக் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என நம்பினான். ஒரு மனிதனைக் கொல்வதற்கும் ஓர் எதிரியை அழிப்பதற்கும் இடையே அவர்கள் நம்பிய தத்துவங்கள் மட்டுமே இருந்தன.
இறுதி உத்தரவு வந்த இரவு அவன் தன் தாயை நினைத்துக் கொண்டான். அவள் நாக்பூரில் தூங்கிக்கொண்டிருப்பாள். அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது: அவள் என்னை எப்படி நினைப்பாள்? அவன் அந்தக் கேள்வியை உடனே மறந்துவிட்டு தனது கடமையில் கவனத்தைச் செலுத்தினான்.
ஊட்டிக்கு வந்தபின் கர்ணன் ஒவ்வொருநாளும் மாலைநேரத்தை தாவரவியல் பூங்காவிற்கு அருகிலிருந்த பேக்கரியில் கழித்தார். தேநீரோடு அமைதியாக ஒரு மேசையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பவரை அங்கு வருகிறவர்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரிப்பார்கள். நாய்கள் அவரது காலடியில் வந்து சூழ்ந்துகொள்ளும். இருட்டியபின் தோழர்களில் எவரேனும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். இந்த அன்றாடம் ரகசியமில்லை என்பதால் ஊட்டியிலிருந்த ஒவ்வொருவருக்கும் அவர் மாலை நேரங்களில் எங்கிருப்பார் என்பது தெரிந்திருந்தது.
அன்று மாலை கர்ணன் வழக்கம்போலப் பேக்கரிக்கு வந்தார். குடையை மடித்து வாசல் அருகே வைத்தவர். தேநீர் கேட்டார். வழக்கமாக அமரும் மேசையில் அமர்ந்து ஒரு பழைய புத்தகத்தைத் திறந்தார். அங்கு அவர் தனியாக இல்லை. ஒரு வயதான தம்பதி. இரண்டு கல்லூரி மாணவர்கள். ஒரு பெண், தன் சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தாள். தேநீரோடு வந்த பேக்கரி ஊழியன் சிரித்த முகமாக கொடுத்துவிட்டுச் சென்றான். சற்று தள்ளி அமர்ந்து வினாயக் எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது உடலில் இனம் புரியாத ஒரு பரபரப்பும் தீவிரமும் ஓடியது. புகைப்படங்களில் இருந்ததைவிட நேரில் கர்ணன் சிறியவராகத் தோன்றினார். பாதிக்கும் மேல் நரைத்ததலை அவரது உண்மையான வயதை விட முதுமையானவராகக் காட்டியது. கண்ணாடிக்குள்லிருந்த கண்களில் அதீதமான சோர்வு. ஒரு இளைஞன் அவரை அடையாளம் கண்டுகொண்டு. "நீங்க கர்ணன் சார்தானே? நான் உங்கள் மாணவன்." என்றான். அவர் ஆர்வமாக "எந்த வருடம்?"எனக் கேட்க அவன் வருடத்தைச் சொன்னான். "அப்போ உனக்கு முடி நிறைய இருந்தது." எனச் சிரித்தார். "இப்போ எல்லாம் போச்சு சார்." என அவன் கவலையாகச் சொல்ல, "அதனால்தான் அடையாளம் தெரியல." என கர்ணன் கேலியாகச் சொல்ல, இருவரும் சத்தமாகச் சிரித்தார்கள். வினாயக் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு பழைய குரல் எழுந்தது: எதிரி மனிதன் அல்ல. உன்னால் கொல்லப்படவேண்டியவன் என்பதைத் தவிர வேறு எண்ணங்கள் இருக்கக்கூடாது. அந்தக் குரலை அவன் நம்ப முயன்றான். ஆனால் கண் முன்னாலிருந்த அவர் மனிதனாகவே இருந்தார். அவருக்கு மரணம் குறித்த அச்சம் இருக்கலாம். உண்மையிலேயே அவர் இந்த நாட்டின் நலனுக்காக சிந்திக்கக் கூடியவராக இருக்கலாம் அவரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் என்னவென்று கூட சிலநொடிகள் யோசித்தான்.
ஒரு மணி நேரம் கழித்து கர்ணன் புத்தகத்தை மூடினார். தேநீருக்குப் பணம் கொடுத்தார். குடையை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்தார். வினாயக் எழுந்து அவர் முன்னால் வந்தான். கர்ணன் அவனைப் பார்த்தார். ஒரு கணம். இரண்டு கணம். எல்லோரிடமும் பகிர்ந்த அதே புன்னகை.
"உன் பெயர் என்ன?"
வினாயக் வாயைத் திறந்தான்.
"வினாயக்."
கர்ணன் சிரித்தார்.
"நல்ல பெயர்."
அந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் ஓர் உலகம் இருந்தது. அந்த உலகத்தை வினாயக் பார்க்கவில்லை. அவன் அதைத் தாண்டிவிட்டான். இடையில் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவன் ’என்னய மன்னிச்சுடுங்க ப்ரஃபசர் நத்திங் பெர்சனல்...’ என்றபடியே அவரை நோக்கிச் சுட்டான்.
அதன் பிறகு நடந்ததைப் பற்றிச் சாட்சிகள் வேறுவேறு விதமாகச் சொன்னார்கள். ஒருவர் ஒரேயொரு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகச் சொன்னார். இன்னொருவர் இரண்டு முறை கேட்டதாகவும் சொன்னார். ஒரு பெண் முதலில் கண்ணாடி உடைந்ததாக நினைத்தாள். அப்போது ஒரு குழந்தை அழுதது. நாற்காலிகளிலிருந்து மக்கள் பதற்றத்தோடு சிதறி ஓடினார்கள். கர்ணன் அதே இடத்தில் சரிந்து விழுந்தார் அவருடைய குடை ஒரு நொடி தனியாக நின்றுவிட்டு, சாய்ந்தது.
வினாயக் அங்கிருந்து ஓடவில்லை. கையில் இருந்த ஆயுதத்தைப் பார்த்தான். பின்னர் கர்ணனைப் பார்த்தான். அவன் எதிர்பார்த்த வெற்றியின் உணர்வு வரவில்லை. புனிதமான அமைதி; அதுவும் வரவில்லை. வெறுமை மட்டும் இருந்தது. அந்த வெறுமையின் நடுவே ஒரு குரல் எழுந்தது: "உன் பெயர் என்ன?" அவன் தலையை உயர்த்தினான். கர்ணன் இறந்துகொண்டிருந்தார். ஆனால் அந்தக் கேள்வி உயிரோடு இருந்தது. அவரது கண்களில் இருந்த அமைதியும் கருணையும் சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசுவின் கண்களை ஒத்திருந்ததாக நினைத்தான்.
7
காவல்துறை அறிக்கை தயாரிக்கப்பட்டது. குற்றவாளியின் பெயர்: வினாயக். காரணம்: தீவிர மத உணர்வுகளால் தூண்டப்பட்ட தனிநபர் செயல். அமைப்புத் தொடர்பு: நிரூபிக்கப்படவில்லை. நிதி உதவி: இல்லை. சதி: இல்லை. அரசியல் தொடர்பு: இல்லை.
அந்த அறிக்கை மிகச் சுத்தமாக இருந்தது. அதில் ஓர் இளைஞனின் நான்கு ஆண்டுகால அரசியல் அழிக்கப்பட்டிருந்தது. அவனுக்கு வழங்கப்பட்ட வரலாறு இல்லை. அவஅழ்ன் கலந்துகொண்ட கூட்டங்களின் பதிவுகள் இல்லை. அவனுடைய தொலைபேசியில் இருந்த ஆயிரக்கணக்கான காணொளிகள் இல்லை. அவனை உருவாக்கிய மொழி இல்லை. ஒரு கொலைகாரன் இருந்தான். அவனை உருவாக்கியவர்களில் ஒருவர்கூட இல்லை. சில உண்மைகள் குற்றப்பத்திரிகையில் இல்லாததால் பொய்யாக மாறுவதில்லை. அவை அங்கே எழுதப்படாமல் இருப்பதால் இன்னும் ஆபத்தானவை ஆகின்றன.
விசாரணைக் குழுவில் நாக்பூரிலிருந்து வந்திருந்த சுரேஷ் ராதோட்டும் இருந்தான். "யார் உன்னை அனுப்பினார்கள்?" அமைதி. "யார் பணம் கொடுத்தார்கள்?" அமைதி. "கர்ணனை ஏன் கொன்றாய்?" என்ற கேள்விக்கு மட்டும் வினாயக் "அவர் நாட்டுக்கு எதிரானவர்." என்றான். "அவர் என்ன செய்தார்? யாரைக் கொன்றார்?" அவனிடம் மீண்டும் அமைதி. "அவர் என்ன குற்றம் செய்தார்?" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டபோது நீண்ட நேரம் கழித்து வினாயக் சொன்னான்: "அவர் கேள்வி கேட்டார்." எதிரிலிருந்த காவல்துறை அதிகாரிகள் இறுக்கமாக இருந்தனர். ராதோட் மட்டும் "அதற்காக ஒருத்தரைக் கொல்ல முடியுமா?" எனக் கேட்டபோது வினாயக் சிரிக்கவில்லை. "அதற்காகத்தானே என்னை அனுப்பினீர்கள்." கேட்டபோது என எதிரிலிருந்த எல்லோரையும் பார்த்துச் சொன்னான். அதிகாரிகள் பதறத்தோடு "யார்?" எனக் கேட்க, "நீங்களே சொல்லுங்க. நான் யாருடைய வார்த்தையைப் பேசுறேன்?" என வினாயக் நிதனாமாகக் கேட்டபோது ஒருவரும் பதில் சொல்லவில்லை. அறையிலிருந்து வெளியே வந்தபோது ராத்தோடுக்கு அவனுடைய மிகப் பழைய நினைவு ஒன்று திரும்பியது: சிறுவயதில் தந்தையின் சீருடையை அணிந்து கண்ணாடி முன் நின்றான். தந்தை சிரித்துக்கொண்டே சொன்னார்: "சீருடை போட்டவன் முதல்ல சட்டத்தை மதிக்கக் கத்துக்கணும்." ராதோட் அந்த வாக்கியத்தை மறந்திருந்தான். அல்லது மறக்கத் தேர்ந்தெடுத்திருந்தான்.
8.
கர்ணனின் இறுதி ஊர்வலம் எதிர்பார்த்ததைவிடப் பெரியதாக இருந்தது. கவரெட்டியிலிருந்தும் அருகிலிருந்த கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் மாணவர்களென பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவருடைய தாய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவள் அழவில்லை. யாரோ அவளிடம் ஏதோ சொல்ல வந்தபோது, "சாப்பிட்டானா?" என்று மட்டும் கேட்டாள். யாருக்கும் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
கர்ணனை முன்பின் பார்த்திராதவர்களும் வந்திருந்தார்கள். கட்சிரோலியிலிருந்து வந்திருந்த ஒரு பழங்குடிப் பெண் அவருடைய புகைப்படத்தை நீண்ட நேரம்றான். அமைதியாகப் பார்த்தாள். ஒரு மாணவி அவளிடம் கேட்டாள்: "அவரை உங்களுக்குத் தெரியுமா?" அந்தப் பெண் கன்னீரைத் துடைத்தபடி "அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கார்." என்றாள். அதற்குப் பிறகு அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த ஒரு வாக்கியம் கர்ணனின் வாழ்க்கையைப் அதிகம் சொன்னது. அவர் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றார், அவர்களோடு இரவும் பகலும் தங்கி உரையாடினார். அவர்களுடன் சாப்பிட்டார். அவர்களுடைய குழந்தைகளின் பெயர்களைக் கேட்டார். அவர்களுடைய துயரத்தை ஆய்வுக் கட்டுரையாக்குவதற்கு முன் அவற்றைத் தன்னுடையத் துயரமாகவே பார்த்தார். அதுதான் அவருடைய அரசியல். அதுதான் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம்.
அவர் இறந்த பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் மீண்டும் அச்சிடப்பட்டன. சிறைக் கடிதங்கள் வெளிவந்தன. ஒரு பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் நடக்க இருந்த கருத்தரங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டது; மாணவர்கள் வாசலில் நின்று அதை நடத்தினார்கள். ஒரு கிராமத்தில் அவர் நினைவாகத் திறக்கப்பட்ட நூலகத்தை இடிக்க உத்தரவு வந்தது; அவர்கள் புத்தகங்களை வேறு வீடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள்.
வினாயக் சிறையில் இருந்தபோது ஏராளமான புத்தகங்கள் அவனிடம் வந்தன. கர்ணனுடையதை மட்டும் அவன் மாதக்கணக்கில் திறக்கவில்லை. அதை விலக்க எடுத்த முயற்சிகள் தோற்று வாசித்தே ஆகவேண்டுமென மனம் தீர்மானத்தது. முதல் பக்கத்தில் ஒரு தனிப்பட்ட குறிப்பு இருந்தது: "எனக்குத் தெரிந்த மனிதர்களில் பெரும்பாலோர் நல்லவர்கள். அவர்கள் தவறு செய்வார்கள். பயப்படுவார்கள். சில நேரங்களில் கோழைகளாக இருப்பார்கள். சில நேரங்களில் கொடூரமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களை ஒரே வார்த்தையில் நல்லவர், கெட்டவர் என்று பிரிக்க முடியாது. அரசியல் இதை மறக்கத் தொடங்கும்போது மனிதனை அழிக்கத் தொடங்குகிறது." அவன் புத்தகத்தை மூடினான். பல நாட்கள் திறக்கவில்லை. ஒரு இரவு மீண்டும் திறந்தான். இந்தமுறை அந்தப் புத்தகம் அவனை தனக்குள் இழுத்துக் கொண்டது, அவர் எழுதிய மற்ற நூல்களையும் தொடர்ந்து வாசித்தபோது அவர் தனக்காகவும் சிந்தித்த மனிதர் என்பதை உணர்ந்து கொண்டான். அவரைக் கொலை செய்ததன் வழியாக இந்த உலகில் வேறு எவருக்கும் அவரோடு இல்லாத ஒரு தனித்த உறவு தனக்கு இருக்கிறது என நினைத்துக் கொண்டான். அவன் கர்ணனைப் பற்றிய தன் நினைவுகளை எழுதத் தொடங்கினான். முதல் பக்கத்தில்: "நான் அவரைக் கொன்றேன்." அடுத்த பக்கத்தில்: "ஆனால் அவர் யார் என்று அவரது மரணத்திற்குப் பின்புதான் தெரிந்துகொண்டேன்." என எழுதினான். அதற்குப் பிறகு பல பக்கங்கள் வெறுமையாக இருந்தன.
அந்த வழக்கில் சாட்சிகள் பிறழ்ந்தன, ஆதாரங்கள் காணாமல் போயின. ஓரிரு வருடங்களில் வழக்கிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான். அவனை அனுப்பிய அமைப்பில் இருந்தவர்களில் சிலர் வேறு நகரங்களுக்குப் போயிருந்தார்கள். சிலர் வேறு பெயர்களில் இருந்தார்கள். சிலர் முன்னைவிடவும் பெரும் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட அவனை நினைவில் வைத்திருக்கவில்லை. அவன் நாக்பூருக்குத் திரும்பவில்லை. ஊட்டிக்குச் சென்றான். தாவரவியல் பூங்காவுக்கு அருகில் அந்த பேக்கரி இல்லை; அங்கு கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு பெரிய கடை. அவன் அதன் வாசலில் நீண்ட நேரம் நின்றான்.
அவனால் கொலைசெய்யப்பட்ட மனிதர் அந்த இடத்தில் இன்னும் இருந்தார். நினைவாக அல்ல; ஒரு கேள்வியாக. இரண்டு சிறுவர்கள் அவனைத் தாண்டிச் சென்றார்கள். வினாயக்கின் கண்களில் நீர் வந்தது. அவன் அழவில்லை. அழுவதற்கான உரிமை தனக்கு உண்டா என்பதிலேயே சந்தேகம் இருந்தது.
அங்கிருந்து வெவ்வேறு நகரங்களுக்குப் பயணிக்கத் துவங்கினான். கர்ணன் பயணித்த காடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்தவன் அவர் யாருக்காகவெல்லாம் எழுதினாரோ பேசினாரோ அவர்களோடு நிற்க துடித்தான். அந்த மக்கள் முதலில் அவனை விலக்கினார்கள். அவன் எவரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை, தன்னை மன்னிக்க வேண்டியவர் ஒருபோதும் வரப்போவதில்லை என்பதால் அவர் விட்டுசென்ற பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டுமெனத் நினைத்தான். ’ஒரு நம்பிக்கைக்காக கொலை செய்யத் துணிந்தவன் இன்னொரு நம்பிக்கைக்காக கொலை செய்யத் தயங்கமாட்டான் என சிலர் சந்தேகதித்தபோது ’நான் கர்ணனை வாசித்திருக்கிறேன். உங்கள் யாரையும் விட அவரைப் புரிந்துகொள்ள முடியும். அவர் எனக்குக் கொடுத்துச் சென்றிருக்கும் ஆயுதம் அவரது புத்தகங்கள் மட்டும்தான்.’ என உறுதியாகச் சொன்னான்.
கர்ணனின் எழுத்துகளை வெளியிடும் அமைப்பு ஒரு கூட்டத்தில் அவனை பேச அழைத்திருந்தனர். திரளான அந்தக் கூட்டத்தின் முன்னால் தயக்கத்தோடு பேசத் துவங்கினான். ”அரசு ஒரு மனிதனைக் கைது செய்யலாம். அவனுடைய புத்தகங்களைப் பறிமுதல் செய்யலாம். அவனுடைய நண்பர்களைக் கண்காணிக்கலாம். அவனுடைய பெயரைக் குற்றப்பத்திரிகையில் எழுதலாம். அவனுடைய குரலைத் தடை செய்யலாம். அவனுடைய உடலைச் சிறையில் அழிக்கலாம். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் "ஏன்?" என்று கேட்பதை அரசால் தடுக்க முடியாது. அந்த "ஏன்" தான் எல்லாவற்றின் தொடக்கம். பசியின் "ஏன்." அநீதியின் "ஏன்." போரின் "ஏன்." சிறையின் "ஏன்." அரசின் "ஏன்." நம்முடைய சொந்த பயத்தின் "ஏன்." அந்த ஒரு வார்த்தையைப் பார்த்துத்தான் எல்லா அதிகாரங்களும் அஞ்சுகின்றன; ஏனெனில் "ஏன்" என்ற கேள்விக்குப் பதில் சொல்ல எந்த அதிகாரத்திற்கும் திராணியில்லை.” அந்த வார்த்தைகளை கர்ணனே பேசியது போலிருந்ததால் கூட்டம் உறைந்துபோனது. ஒருவர் அவசரமாக எழுந்து "நீங்கள் அவரை ஏன் கொன்றீர்கள்?" எனக் கேட்டார். அவன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தான். "எனக்கு அப்போது அவர் யார் என்று தெரியாது." "இப்போது?" "அவர் என்னுடைய எதிரி இல்லை. அவர் என்னை மனிதனாகப் பார்க்க முயன்றவர்." என அவன் சொன்னபோது அங்கு அமைதி சூழ்ந்தது.
கர்ணனின் மரணத்துக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய இந்தியாவின் காட்டினுள் நடந்த ஒரு போராட்டத்தில் ஒரு பெண் தன் நிலத்தை ஒப்படைக்க மறுத்தாள். "இது அரசின் திட்டம்," என்றார் அதிகாரி. "எந்த அரசு?" "இந்திய அரசு." "அரசு யாருடையது?" என அந்த மக்கள் திருப்பிக் கேட்டபோது அதிகாரி கோபப்பட்டார். பின்னால் நின்ற பெண்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். அதிகாரத்திற்கு எதிரான அந்தப் பெண்களின் சிரிப்பு வேறு காடுகளிலும் எதிரொலித்தது. மரங்கள் கேள்வி கேட்டன, மலைகள் கேள்வி கேட்டன, ஆறுகளும் அருவிகளும் கேள்வி கேட்டன. வளங்கள் மக்களுக்கானவை மட்டுமே லாபத்திற்கானவையல்ல என காட்டில் வாழும் பேய்கள் கேள்வி கேட்டன. எங்கெல்லாம் அதிகார வர்க்கத்து நாய்களின் குரைப்பொலி கேட்டதோ அங்கெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.
வங்காளத்தில் ஒரு மாணவன் கைதுசெய்யப்பட்ட தனது நண்பனுக்காகப் போராடினான். தெலுங்கானாவில் ஒரு பத்திரிகையாளர் நில அபகரிப்பு ஆவணங்களை வெளியிட்டாள். மேற்குத் தொடர்ச்சி மலையின் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார்: "நீங்கள் நம்புவது உண்மையா என்று கேளுங்கள். உங்கள் கண்ணுக்கு முன்னால் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நில்லுங்கள் கேள்வி கேட்பதுதான்து உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யும்.” அந்த வார்த்தைகள் அந்த மாணவர்களிடமிருந்து அவர்களது நண்பர்களுக்குப் பரவின.
ஓய்வு பெற்ற ராதோட்டின் மேசையில் கர்ணனின் ஒரு பழைய புகைப்படம் இருந்தது. அதை யாரும் கவனித்ததில்லை. ஒருநாள் அவருடைய மகன் அதை எடுத்துப் பார்த்தான். "இவர் யார்?" எனக் கேட்டான். ராதோட் சிரித்தபடி "ஒரு பேராசிரியர்." என்ரார். "நீங்க இவரைக் கைது பண்ணியிருக்கீங்களா? அவர் குற்றவாளியா?" ராதோட் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.. மழை பெய்துகொண்டிருந்தது. "கைது பண்ணேன், ஆனா குற்றவாளியான்னு எனக்குத் தெரியாது." என்றார். அவரது மகன் சிரித்தான். "நீங்க போலீஸ்தானே?" எனக் கேட்டான். ராதோட் அழுத்தம் திருத்தமாக "அதனாலதான் தெரியாது." என்றார்.
தாவரவியல் பூங்காவுக்கு அருகிலுள்ள அந்தக் கண்ணாடிக் கடையின் பக்கச் சுவரில் ஒருநாள் ஒரு சுவரோவியம் தோன்றியது. அதில் கர்ணனுடைய முகம் இல்லை. பெயரும் இல்லை. ஒரு பெரிய கேள்விக்குறி மட்டும். நகராட்சி அதை அழித்தது. மறுநாள் மீண்டும் அதே இடத்தில் கேள்விக்குறி தோன்றியது. மூன்றாவது நாள் வேறொருவர் அதே இடத்தில் இன்னொரு கேள்வியை எழுதினார்: "நாம் ஏன் பயப்பட வேண்டும்?" அதையும் அழித்தார்கள். அதன் பிறகு யாரும் எதுவும் எழுதவில்லை. ஆனால் சில வாரங்களில் அதே கேள்வி வேறொரு நகரத்தின் சுவரில் தோன்றியது. பின்னர் வேறொரு மாநிலத்தில். அதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அந்தக் கேள்விக்கு யாரும் உரிமை கோரவில்லை. ஒரு கேள்வி உரிமையாளர் அற்றதாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் மாறும்போது ஆபத்தானதாகிறது.
கர்ணனின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாள். அருண் மூப்பெய்திவிட்டார். ராதோட்டும் இறந்துவிட்டார். வினாயக் எங்கு இருக்கிறான் என்பது எவருக்கும் தெரியவில்லை. அவனை அனுப்பியவர்கள் யார் என்பதைப் பற்றி இன்னும் முழுமையான ஆவணம் இல்லை. ஆனால் ஊட்டியில் மழை இப்போதும் பெய்கிறது. ஒரு குழந்தை இன்னும் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. ஒரு இளைஞன் கர்ணன் எழுதிய புத்தகத்தைத் திறக்கிறான். ஒரு பெண் இன்னும் தன் நிலத்தின் முன் நின்றுகொண்டிருக்கிறாள். ஒரு கைதி இன்னும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறான். ஒரு மாணவன் இன்னும் கையை உயர்த்துகிறான். அவனுடைய ஆசிரியர் அவனைப் பார்க்கிறார். "கேள்," என்கிறார். அவன் கேட்கிறான்.
அந்தக் கேள்வி எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. கர்ணனிடமிருந்தா? அவருடைய தந்தையின் குனிந்த முகத்திலிருந்தா? கட்சிரோலி காட்டிலிருந்த பழங்குடி பெண்ணிடமிருந்தா? ஒரு சிறைக்கைதியிடமிருந்தா? அல்லது மனிதன் பிறந்த நாளிலிருந்தே அவனுக்குள் இருந்ததா? அதற்குப் பதில் இல்லை. அதுவே அதன் வலிமை. பதில்களை அதிகாரம் கைப்பற்றிவிடலாம். கேள்விகளை அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியாது.
இன்று அந்த பேக்கரி இல்லை. அந்த மேசை இல்லை. அந்தத் தேநீர்க் கோப்பை இல்லை. கர்ணனும் இல்லை. ஆனால் அந்த இடத்தைக் கடந்து செல்லும் எவருக்கும் அவர்கள் மிதிக்கும் நடைபாதைக்கு அடியில் ஒரு காலத்தில் ஒரு மனிதன் கொல்லப்பட்டான் என்பது தெரியாது. அவர்கள் அறியாத இன்னொன்றும் உண்டு: அந்த மனிதனின் உடல் அங்கேயே முடிந்திருந்தாலும், அவன் எழுப்பிய கேள்வி அந்த நகரத்தைத் தாண்டி நீண்டகாலமாக பயணித்துக் கொண்டிருந்தது. மலைகளையும் காடுகளைத் தாண்டி. சிறைகளையும் பல்கலைக்கழகங்களைத் தாண்டி. மொழிகளைத் தாண்டி. ஒரு நாட்டைத் தாண்டி. மற்றொரு நாட்டுக்குள் பயணித்துக் கொண்டிருந்தது.
அங்கே, இருளில், யாரும் கவனிக்காத ஓர் இடத்தில், ஒரு சிறிய நெருப்பு மீண்டும் பிறந்துகொண்டிருந்தது. அதற்குப் பெயர் இல்லை. தலைவன் இல்லை. கொடி இல்லை. ஆனால் நம்பிக்கை இருந்தது. மனிதன் இன்னும் முழுமையாகத் தோற்கவில்லை என்பதற்கான மிகச் சிறிய, மிகப் பிடிவாதமான சாட்சி போல.
அந்த நெருப்பை யாராலும் கொல்ல முடியாது. ஏனெனில் அது ஒரு தனி மனிதனுடையது அல்ல. ஒரு சிந்தனையினிடமிருந்து பிறந்தது.



