top of page

விழிப்புடன் இருத்தல்

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
5 days ago
5 min read

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, கவனிக்கத் தொடங்க வேண்டும். இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. வாழ்க்கை எங்கே செல்கிறது என்று பார்த்துக்கொண்டிருப்பது வேறு; நாம் எங்கே செல்கிறோம் என்பதை கவனிப்பது வேறு. கடந்த வருடம் வரையிலும் நான் இந்த இரண்டாவது நிலையில் இல்லை. வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது; நானும் அதனோடு நடந்துகொண்டிருந்தேன். அந்த நிமிடத்து மகிழ்ச்சி, துக்கம், கோபம், சண்டை, உறவுகள், எதிர்பார்ப்புகள் என்று அந்தந்தக் கணத்தின் உணர்ச்சிகளால் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. பெரிய இலக்குகள் என்று எதுவும் தெளிவாக இல்லை. செய்ய வேண்டிய வேலைகளுக்கான திட்டமிடலும் இல்லை. ஒன்றைத் தொடங்குவது, பிறகு பாதியில் விட்டுவிடுவது, இன்னொன்றைத் தொடங்குவது, எந்தச் செயலிலும் முழுமையான ஈடுபாடு இல்லாமல் இருப்பது என்று ஒரு விதமான சிதறலிலேயே காலம் சென்றது.


ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு விழிப்பு தேவை என்பதை உணர்ந்தேன். அது திடீரென்று வந்த ஞானம் அல்ல. மாறாக, “நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?” என்ற கேள்வியை என்னிடம் நானே கேட்கத் தொடங்கியது. நான் எதற்காக இந்த நேரத்தை செலவிடுகிறேன்? என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவை எவை? நான் தொடங்கியவற்றில் எதை முடித்திருக்கிறேன்? எதைப் பாதியில் விட்டிருக்கிறேன்? ஏன் விட்டேன்? என்னுடைய நேரத்தை எங்கே இழக்கிறேன்? நான் செய்ய வேண்டிய வேலையைத் தவிர்த்து வேறு எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்? இப்படிப் பார்த்தபோதுதான் நம்முடைய வாழ்க்கையில் நாம் இழப்பது பணமோ பொருளோ அல்ல; நம்முடைய கவனத்தையும் நேரத்தையும்தான் இழக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன்.


விழிப்பு என்பது முதலில் நம்முடைய செயல்களை நாமே கவனிப்பது. அதைவிட முக்கியமாக, நாம் ஏன் அந்தச் செயலைச் செய்கிறோம் என்பதைக் கவனிப்பது. ஒரு மனிதன் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருக்கலாம். அவன் செய்கிற வேலை அவனது வாழ்க்கையின் முக்கியமான இலக்கை நோக்கிச் செல்கிறதா என்பதை அவன் அறியாமல் இருக்கலாம். ஒரு எழுத்தாளர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கலாம். உண்மையில் எழுதுகிறானா, அல்லது எழுதுகிறேன் என்ற எண்ணத்துக்குள் தன்னை வைத்துக்கொண்டு நேரத்தைச் செலவழிக்கிறானா என்பதையும் அவன் கவனிக்க வேண்டும். ஒரு இயக்குநர் தொடர்ந்து ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப் படம் உருவாகிக்கொண்டிருக்கிறதா என்பதையும் அவன் தன்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.


எனக்கு அந்தக் கேள்விகள் முக்கியமானதாக மாறியபோது, என்னுடைய பழைய செயல்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கினேன். பல வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். சிலவற்றை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கியிருக்கிறேன். சிலவற்றை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியிருக்கிறேன். ஆனால் அவற்றில் பல பாதியிலேயே நின்றுபோயிருக்கின்றன. ஒரு வேலையைத் தொடங்குவதற்கான உற்சாகம், அதை முடிப்பதற்கான ஒழுக்கமாக மாறவில்லை. ஒரு புதிய விஷயம் எப்போதும் சுவாரஸ்யமானது. அதன் தொடக்கத்தில் ஒரு பரவசம் இருக்கும். ஆனால் அந்தப் பரவசம் குறைந்தபோதுதான் உண்மையான உழைப்பு ஆரம்பிக்கிறது. அந்த இடத்தில்தான் நான் பலமுறை நின்றிருக்கிறேன்.


ஒரு வேலையைத் தொடங்குவது படைப்பாற்றல். அதை முடிப்பது ஒழுக்கம்.

இந்த இரண்டையும் நாம் ஒன்றாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அவை வேறுபட்டவை. ஒரு கதை தோன்றுவது அந்த கணத்தின் தீப்பொறியாக இருக்கலாம். அந்தக் கதையை முழுமையான படைப்பாக மாற்றுவதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைப்படலாம். முதல் நாளில் இருந்த உற்சாகம் கடைசி நாளில் இருக்காது. அந்த உற்சாகம் இல்லாதபோதும் அந்த வேலையோடு இருப்பதுதான் ஒரு கலைஞனின் உண்மையான சோதனை. விழிப்பு வந்தபின் நான் கைவிட்ட வேலைகளை மீண்டும் பார்க்கத் தொடங்கினேன். அவை ஏன் நின்றன என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்ற அவசரத்தைக் குறைத்து, ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை முடிக்க வேண்டும் என்ற ஒழுக்கம் உருவானது.


விழிப்புடன் இருப்பது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல. நம்முடைய மனநிலையையும் கவனிப்பது. ஒரு வேலையைச் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்? சோம்பலா? பயமா? தோல்வி குறித்த அச்சமா? அந்த வேலை எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்ற ஏமாற்றமா? இன்னொரு புதிய விஷயம் அதிக சுவாரஸ்யமாகத் தோன்றுகிறதா? காரணத்தைப் புரிந்துகொண்டவுடன் அதை எதிர்கொள்ள முடியும். இல்லையென்றால் மனம் உருவாக்கும் ஒவ்வொரு காரணத்தையும் உண்மையான காரணம் என்று நம்பிக்கொண்டு வாழ்ந்துவிடுகிறோம்.


இந்த விழிப்பு என்னுடைய வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் கொண்டு வந்தது. பிறர் என்னைப் பற்றி பேசுவதற்கு நான் எப்படி எதிர்வினையாற்றுகிறேன் என்பதையும் கவனிக்கத் தொடங்கினேன்.

நீண்டகாலமாக இலக்கிய உலகில் இருப்பதால் என்னைப் பற்றிய அவதூறுகள் எங்காவது, யாரிடமாவது பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பொழுதும் நேற்றும் இன்றும் கூட அப்படிப் பேசப்படும் அவதூறுகள் என்னை வந்தடையும் போது சலிப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் அவற்றைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரப்பட்டிருக்கிறேன். உடனடியாகச் சண்டைக்குப் போயிருக்கிறேன். என்னைப் பற்றிய தவறான ஒரு வார்த்தைகூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத காலம் இருந்தது. ஆனால் இப்போது கொஞ்சம் பின்வாங்கி யோசிக்கிறேன். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தொடர்ந்து இன்னொருவருடைய வாழ்க்கையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறான் என்றால், அந்தச் செயலின் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

முன்


செயல்படுகிற ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளலாம். அவன் அடையும் இடத்தைப் பார்த்து வெறுப்பு வரலாம். ஆனால் அந்த உணர்வுகளை உழைப்பாக மாற்ற முடியாதபோது அவை அவதூறாக மாறுகின்றன. தன்னுடைய குரலை உருவாக்க முடியாதவன் இன்னொருவருடைய குரலைக் களங்கப்படுத்துவதில் தற்காலிகமான திருப்தி அடையலாம். தன்னுடைய வாழ்க்கையில் ஒன்றை உருவாக்க முடியாதவன், இன்னொருவர் உருவாக்கிய வாழ்க்கையைப் பற்றிய கதைகளை உருவாக்கத் தொடங்கலாம். இதை நான் இன்று அவர்களைப் பற்றிய கோபத்தோடு அல்ல, ஒரு விதமான பரிதாபத்தோடுதான் பார்க்கிறேன்.

என்னை ஒருபோதும் பார்த்திராத, என்னுடன் பேசியிராத பெண்களுடன் நான் உறவு கொண்டதாகக் கதைகள் உருவாக்கப்படுவதையும் கேட்டிருக்கிறேன். ஒரு மனிதனைப் பற்றிய அவதூறு என்பதே கேடானது; அதைவிட இன்னொரு மனிதரின் பெயரையும் இழுத்துக்கொண்டு வந்து கற்பனையான உறவுகளை உருவாக்குவது இன்னும் கேடானது. இது வெறும் பொய்யல்ல. இன்னொருவருடைய வாழ்க்கை, கண்ணியம், தனிப்பட்ட இருப்பு ஆகியவற்றைத் தங்களுடைய பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திக்கொள்வது. அத்தகைய பேச்சுகள் எவ்வளவு கீழ்த்தரமானவை என்று சிந்திக்கும்போது, அதற்கு பதிலளிப்பதற்கே நாம் நம்மை அந்த அளவுக்குக் கீழே இறக்கிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்விதான் முதலில் வருகிறது.


அதுதான் விழிப்பு எனக்கு கற்றுக்கொடுத்த இன்னொரு விஷயம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லா சண்டைகளிலும் இறங்க வேண்டிய அவசியமில்லை. நம்மைப் பற்றி சொல்லப்படும் ஒவ்வொரு பொய்யையும் மறுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்வதும் ஒரு அறிவு. ஏனெனில், அந்தப் பரிதாபத்திற்குரிய மனிதர்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தால், அவர்களுடைய உலகத்திற்குள் நாமும் சென்று விடுகிறோம். அவர்களை வெறுப்பதில் கூட அவர்களுக்கே நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் கொடுக்கிறோம். இறுதியில் அவர்களைப் பொருட்படுத்துவதற்காக நம்முடைய வாழ்க்கையை விட்டுக்கொடுத்துவிடுகிறோம்.


எனவே இன்று நான் நினைப்பது இதுதான்: என்னுடைய நேரம் என்னுடைய வாழ்க்கைக்கானது. நான் எழுத வேண்டியிருக்கிறது. திரைப்படங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன. கற்றுக்கொள்ள வேண்டியவை இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தை ஒருவருடைய பொய்யான பேச்சுக்காகச் செலவிடுவது, அந்தப் பொய்யைச் சொன்னவனுக்குக் கிடைக்காத ஒரு வெற்றியை அவனுக்குக் கொடுப்பதுபோல ஆகிவிடும்.

ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு அறிமுகமில்லாத மனிதர்களைக் குறித்து அவதூறு பரப்புவது, அவருடைய சவத்தை உண்பதற்கு சமமானது. சவத்தை உண்பது ஒரு நோய். நல்ல மருத்துவரைப் பாருங்கள்.


இது கோபத்தில் சொல்லப்படும் வார்த்தை அல்ல. விழிப்புக்குப் பிறகு வந்த ஒரு தெளிவு.

கலைத்துறையில் இந்த விழிப்பு இன்னும் முக்கியமானது. ஏனெனில் ஒரு கலைஞனை வெளியில் இருந்து யாரும் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. ஒரு அலுவலகத்தில் இருப்பதைப்போல தினமும் எத்தனை மணி நேரம் வேலை செய்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு எழுத்தாளர் மாதக்கணக்கில் எழுதாமல் இருக்கலாம்; ஒரு இயக்குநர் வருடக்கணக்கில் படம் எடுக்காமல் இருக்கலாம். அதற்கான காரணங்களையும் அவன் உருவாக்கிக்கொள்ளலாம். கலைத்துறையின் மிகப்பெரிய சுதந்திரமே அதன் மிகப்பெரிய ஆபத்தும் கூட.

யாரும் உன்னை கட்டுப்படுத்தாத இடத்தில், உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அதிகமாகிறது.


ஒரு நல்ல கலைஞன் தன்னுடைய படைப்பை உருவாக்குபவன் மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து சந்தேகிப்பவனும் கூட. இந்தக் காட்சி உண்மையில் தேவையா? இந்தக் கதாபாத்திரம் இங்கே இருக்க வேண்டுமா? நான் என்னையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேனா? இந்த எழுத்து உண்மையிலிருந்து வருகிறதா, அல்லது எனது சுயதிருப்தியிலிருந்து வருகிறதா? என்று கேட்பவன். இந்த சுயவிசாரணை இல்லாமல் போனால் படைப்பாற்றல் மிக எளிதில் சுயதிருப்தியாக மாறிவிடும்.


சினிமாவிலும் எழுத்திலும் விழிப்பு என்பது இன்னும் ஆழமான பொருளைக் கொண்டது. நாம் எதைப் பார்க்கிறோம், எதைப் பார்க்காமல் விடுகிறோம் என்பதிலேயே ஒரு கலைஞனின் உலகம் உருவாகிறது. மனிதர்களை கவனிப்பது, சமூகத்தை கவனிப்பது, அரசியலைக் கவனிப்பது, உடலைக் கவனிப்பது, மொழியை கவனிப்பது, நம்முடைய சொந்தப் பாசாங்குகளைக் கவனிப்பது—இவை எல்லாமே படைப்பின் ஒரு பகுதிதான். விழித்திருக்காத கலைஞனால் உலகத்தைப் பற்றிய புதிய பார்வையை உருவாக்க முடியாது.

இறுதியில் விழிப்பு என்பது வாழ்க்கையை இயந்திரமாக்குவது அல்ல. மாறாக, வாழ்க்கையை இன்னும் தீவிரமாக வாழ்வது. கோபம் வரலாம்; ஆனால் அந்தக் கோபத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதை கவனிப்பது. துக்கம் வரலாம்; ஆனால் அந்தத் துக்கம் என்னுடைய முழு வாழ்க்கையையும் கைப்பற்ற அனுமதிக்காதிருப்பது. ஒரு புதிய ஆசை தோன்றலாம்; ஆனால் அதற்காக ஏற்கனவே தொடங்கிய வேலையை கைவிடாமல் இருக்கவேண்டும். எவராவது அவதூறு பேசலாம்; ஆனால் அதற்காக என்னுடைய வாழ்க்கையின் நேரத்தை அவர்களிடம் ஒப்படைக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.


விழிப்பு என்பது உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்வது அல்ல. உணர்ச்சிகளுக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளியை உருவாக்குவது. அந்த இடைவெளியில்தான் நமக்கான தேர்வு இருக்கிறது. எனக்கு இப்போது அந்தத் தேர்வு முக்கியமானதாக இருக்கிறது. நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைவிட, உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிரேன் என்பதைக் கவனிக்க வேண்டும். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்பதைவிட, நான் எதை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிக்க வேண்டும். என்னைப் பற்றொ மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைவிட, என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் முக்கியம்.


வாழ்க்கையை முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. ஆனால் நம்முடைய கவனத்தை எங்கே செலுத்துவது என்பதைத் தீர்மானிக்க முடியும். நம்முடைய நேரத்தைப் பாதுகாக்க முடியும். தொடங்கிய வேலையை முடிக்க முடியும். தேவையற்ற சண்டைகளிலிருந்து விலக முடியும். நம்முடைய தோல்விகளை மறைக்காமல் அவற்றைப் படிக்க முடியும். நம்முடைய வாழ்க்கை நாம் விரும்பும் திசையில் செல்கிறதா என்று தினமும் கேட்டுக்கொள்ள முடியும். அதுதான் நான் இப்போது கற்றுக்கொண்டிருக்கும் விஷயம்.


விழிப்பு என்பது ஒருமுறை அடைந்து முடித்துவிடக்கூடிய நிலை அல்ல. இன்று தெளிவாக இருந்தாலும் நாளை மீண்டும் நாம் சிதறிவிடலாம். பழைய பழக்கங்கள் திரும்பலாம். மீண்டும் நேரம் வீணாகலாம். மீண்டும் ஒரு வேலையைப் பாதியில் விட்டுவிடலாம். மீண்டும் ஒரு தேவையற்ற வார்த்தை நம்மை கோபப்படுத்தலாம். அதனால் விழிப்புடன் இருத்தல் என்பது தினமும் தன்னிடம் திரும்பிச் செல்வது.

ஒரு கலைஞனின் மிகப்பெரிய கருவி அவனுடைய பேனா அல்ல. கேமரா அல்ல. தொழில்நுட்ப அறிவும் அல்ல.

அவன் எவ்வளவு விழிப்புடன் வாழ்கிறான் என்பதுதான் அவனுடைய முதல் கருவி. விழித்திருக்கும் மனிதன் மட்டுமே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் எழுத முடியும்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page