top of page

நினைவில் காடுள்ள மிருகம் - 1

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Oct 9
7 min read

சின்னக்குன்னூரில் மலை தன் உடலின் வெப்பத்தை மெதுவாக இழக்கத் தொடங்கும்போதுதான் இரவு இறங்குகிறது. மாலை ஆறு மணிக்குப் பிறகு சாலையில் நடப்பவர்கள் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கைகளை மார்போடு இறுக்கிக் கொள்வார்கள். ஏழு மணிக்குள் தேயிலைத் தோட்டங்களின் பச்சை கருமைக்குள் மறைந்துவிடும். எட்டு மணிக்குப் பிறகு மலைச்சரிவுகளில் சிதறிக் கிடக்கும் வீடுகளின் மின்விளக்குகள் இருளுக்குள் சிறிய கண்களைப்போல் ஒளிரும். அதற்குப் பிறகு பனி சூழத் தொடங்கும்.


பகலில் சாலையோரம் நின்று பார்த்தால் எங்கே முடிகின்றன என்று தெரியும் வயல்களும் மலைகளும் இரவில் முடிவற்றவையாகிவிடும். ஒரு சரிவின் முடிவில் இன்னொரு சரிவு; அதற்குப் பின்னால் இன்னொரு மலை. மலைக்கு அப்பால் பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குக்கு அப்பால் மற்றொரு மலை. எதற்கும் எல்லை இருப்பதாகத் தெரியாது.


அந்த இரவு சக்திவேலின் கேரட் வயலில் வேலை செய்தவர்களில் மதனும் மங்கலியும் இருந்தார்கள். மதன் வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்களைப் பனி விழுங்கியிருந்தது.

“இன்னைக்கு மழை வருமா?” என்று அருகில் நின்ற பழனியிடம் கேட்டான்.

பழனி தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தான். அவன் அந்த மலையிலேயே பிறந்து வளர்ந்தவன். வானத்தைப் பார்த்து மழையைக் கணிக்கிற வயது வந்திருந்தாலும், அன்று அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.


“மழை வந்தா நல்லதுதான்,” என்றான்.

“கேரட்டுக்கா?” என்று மதன் சந்தேகத்துடன் கேட்டான்.

பழனி சிரித்தான். “கேரட்டுக்கு இல்ல. நமக்கு.”

இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.


அருகில் நின்று பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மங்கலி, “நீங்க ரெண்டு பேரும் வேலை செய்ய வந்தீங்களா, பேச வந்தீங்களா?” என்று கேட்டாள்.


“இந்தக் குளிர்ல பேசாம வேல செய்ய முடியுமா, மங்கலி?” என்றான் பழனி.


இருட்டுக்குள் அவளுடைய வெள்ளைப் பற்கள் தெரிந்தன. “நீங்க வேலையை மட்டும் செஞ்சாலே சக்திவேல்கிட்ட இருந்து முழுச் சம்பளம் வராது. பேசிட்டிருந்தா என்னாகும்னு தெரியுமா?”

பழனி வாயை மூடிக்கொண்டு மண்ணைக் குனிந்து பார்த்தான்.


மதன் கேரட்டை மண்ணிலிருந்து எடுக்கத் தொடங்கியிருந்தான். கேரட் மேலே தெரிவதில்லை. மண்ணுக்குள் வளர்வதால் பச்சை இலைகள் மட்டுமே வெளியே தெரியும். அந்த இலைகளைப் பார்த்து அதன் அடியில் எவ்வளவு நீளமாகக் கேரட் வளர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. அதற்குக் கண்களை விடக் கைகளின் அனுபவமே அதிகம் தேவை. மதன் வலது கையை மண்ணுக்குள் நுழைத்தான். குளிர்ந்த மண்ணுக்குள் விரல்கள் சென்றபோது, மென்மையான உடலைத் தொடுவதுபோல் கேரட் அவன் கையில் தட்டுப்பட்டது. அதைச் சுற்றியிருந்த மண்ணை விரல்களால் மெதுவாகத் தளர்த்தினான்.


அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மங்கலி, “எந்தக் கேரட் நல்லா வளர்ந்திருக்குன்னு உனக்கு இப்பப் பழகிடுச்சுல்ல?” என்றாள்.

மதன் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. “ம்… ஆமா. மண்ணுல கை வெச்சா அது நம்மகூட பேச ஆரம்பிச்சிடும்.”

“மண் இன்னும் உன்கிட்ட பேசுதா, மதன்?”

அவன் தலையில் கட்டியிருந்த விளக்கின் ஒளியோடு அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்ட கணத்தில் அவனுடைய கை மண்ணுக்குள் அப்படியே நின்றுவிட்டது.


இந்த மண் யாருடையது?

கேரட்டை வெளியே இழுத்தபோது அதனுடன் மண்ணும் வந்தது. மதன் அதைத் துடைக்காமல் உள்ளங்கையில் வைத்துப் பார்த்தான்.

“என்னாச்சு?” என்று மங்கலி கேட்டாள்.

மதன் அவளைப் பார்க்காமல் இரண்டு அடி நகர்ந்தான். “ஒண்ணுமில்லை.”

அவன் சில விஷயங்களைப் பேசாமல் இருப்பது அவற்றை மறந்துவிட்டதால் அல்ல; ஒருபோதும் மறக்க முடியாததால் என்பது மங்கலிக்குத் தெரியும்.


அன்று இரவு வயலில் மூன்று குடும்பங்கள் சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்தன. சக்திவேல் பெரிய வயல்களை ஒரே குடும்பத்திடம் ஒப்படைப்பதில்லை. வேலை அதிகம். கேரட்டைச் சரியான நேரத்தில் எடுக்காவிட்டால் விலை குறைந்துவிடும்; மண்ணில் ஈரம் அதிகமானால் கேரட் உடைந்துவிடும். சிறிய கேரட், நீளமானது, தடிமனானது, நிறம் சரியாக உள்ளதென ஒவ்வொன்றுக்கும் தரம் வேறு; விலையும் அதற்கேற்ப மாறும்.

ஒரு மூட்டையில் எண்பது கிலோ வரை கேரட் நிரப்புவார்கள். ஒரு ஏக்கரில் பத்து முதல் பன்னிரண்டு மூட்டைகள் கிடைக்கலாம். அந்த மூட்டையை முதுகில் சுமந்து சரிவைக் கடக்கும்போது, தன் உடல் எவ்வளவு எடையைத் தாங்கும் என்பது தொழிலாளிக்குத் தெரிந்திருக்க வேண்டும். சில வயல்களுக்கு லாரி அருகிலேயே வர முடியும். ஆனால் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இருக்கும் பெரும்பாலான வயல்களுக்கு அப்படி வர முடியாது. முதலில் கேரட்டை மண்ணிலிருந்து பிடுங்குவார்கள்; பிறகு தரம் பிரித்து, கழுவும் இடத்துக்குக் கொண்டு செல்வார்கள். அங்கே தண்ணீரில் கழுவப்பட்டதும் மண்ணின் வாசனை மறைந்து, கேரட் சந்தைக்கான பொருளாக மாறும். அதன் மேல் ஒட்டியிருந்த மண்ணைத் தண்ணீர் கழுவிவிடலாம். அதை விளைவிக்கச் செலவிட்ட உழைப்பை எந்தத் தண்ணீராலும் கழுவ முடியாது.


“மதனா!”

சத்தம் வந்த திசையில் அவன் திரும்பினான். இரண்டு பேர் சேர்ந்து ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

“இந்தப் பக்கம் கொண்டு வா.”


மதன் எழுந்தான். மூட்டை முதுகில் ஏறியதும் அவன் உடல் முன்னால் சாய்ந்தது. எண்பது கிலோ எடை. மூட்டைக்குள் கேரட்டுகள் ஒன்றின் மீது ஒன்று நகர்ந்ததால் சுமை ஒரே இடத்தில் நிலையாக இருக்கவில்லை. மதன் ஒரு கையால் மூட்டையைப் பிடித்துச் சமன் செய்தான். மண்ணில் கால் சற்றே வழுக்கியபோது பழனி அருகில் வந்தான்.

“மெதுவா.”

“ம்… தெரியும்,” என்றபடி மதன் காலை ஊன்றப் போனான்.

“அங்க கால் வைக்காத. குழி இருக்கு.”

மதன் நிதானித்தான். பனி படர்ந்த நிலத்தில் காலை மெதுவாக வைத்து அழுத்திப் பார்த்தான். அவனுக்கு முன்னால் நடந்த பழனி பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்து, “இங்க வா, மதனா,” என்று அழைத்தான். இருவரும் மூட்டையைச் சுமந்தபடி மெதுவாக நடந்தார்கள்.


சிறிது தூரத்தில் சாலை தெரிந்தது. சாலையோரத்தில் முன்பே கொண்டுவந்த மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. மதன் தன் மூட்டையைக் கீழே இறக்கிவிட்டு நீண்ட மூச்செடுத்தான். அருகில் பழைய லாரி ஒன்று நின்றிருந்தது. அதன் முன்புறத்தில் “சக்திவேல்” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் மதனுக்குள் விசித்திரமான ஓர் எண்ணம் எழுந்தது. அந்தப் பெயருக்குப் பின்னால் எத்தனை மனிதர்கள் வேலை செய்கிறார்கள்? எத்தனை நிலங்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை லாரிகள், எத்தனை கடன்கள்?


லாரி ஓட்டுநர் சிகரெட் பிடித்தபடி, “இன்னும் எவ்வளவு இருக்கு?” என்று கேட்டான்.

“நிறைய இருக்கு,” என்றான் பழனி.

“சீக்கிரம் எடுத்துட்டு வாங்கய்யா. மணி ஆகுதுல்ல?”

அவன் குரலில் அவசரம் இருந்தது.


சக்திவேல் அன்று இரவு வயலுக்கு வரவில்லை. ஆனாலும் அடுத்த நாள் காலை எத்தனை மூட்டைகள் அனுப்ப வேண்டும், எந்த லாரி எப்போது வர வேண்டும், எந்த வியாபாரியிடம் எவ்வளவு சரக்கு போக வேண்டும், எந்தத் தரமான கேரட் எந்தச் சந்தைக்குச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிட்டிருந்தான். உயர்தரக் கேரட்டுகள் பெரும்பாலும் பெங்களூருக்குப் போகும். இரண்டாம், மூன்றாம் தரக் கேரட்டுகள் கொச்சிக்கும் வேறு சில ஊர்களுக்கும் அனுப்பப்படும். மேட்டுப்பாளையம் சந்தைக்குப் போவது எஞ்சியவைதான்.

நீலகிரியில் சிறு விவசாயிகள் விளைவிக்கும் கேரட்டுகள் பெரும்பாலும் மேட்டுப்பாளையம் சந்தையைச் சென்றடையும். அங்கே கமிஷன்காரன் நிர்ணயிப்பதுதான் விலை. வாங்குபவன் விலையைக் குறைத்துவிட்டால், விவசாயியால் அடுத்த சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாது. போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதோடு, கூடுதல் நேரத்தில் கேரட் கெட்டுப்போகும் அபாயமும் உண்டு. அதனால் பல சிறு விவசாயிகள் சக்திவேல் போன்றவர்களிடம் தங்கள் விளைச்சலைக் கிடைத்த விலைக்கு விற்றுவிடுவார்கள்.


அன்னூரிலிருந்து சாதாரணக் கூலியாளாக மலைக்கு வந்த சக்திவேலை அந்த மலை தாங்கிக்கொண்டது. முதலில் லாரி ஓட்டக் கற்றுக்கொண்டான். பிறகு மலைச்சாலைகளையும் அங்கே வாழும் மனிதர்களின் குணங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டான். நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த படுகா மக்களிடம் ஆரம்பத்தில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொண்டவன், பின்னர் அவர்களுடைய நம்பிக்கையையும் அறியாமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினான்.

போக்குவரத்து வசதி அதிகமாக இல்லாத காலத்தில், ஐந்து அல்லது பத்து மூட்டைகள் கேரட் விளைவிக்கும் விவசாயிகள் பத்து, இருபது பேராகச் சேர்ந்து வயலில் அறுவடை செய்வார்கள். விளைச்சலை மேட்டுப்பாளையத்துக்குக் கொண்டு செல்ல வாகனம் தேவைப்பட்டபோது சக்திவேலின் லாரியைப் பயன்படுத்தத் தொடங்கினர். விவசாயிக்கும் வியாபாரிக்கும் இடையில் இருந்த இடைவெளியை அவன் விரைவில் புரிந்துகொண்டான். சந்தையில் விற்ற பொருளுக்கான பணம் உடனடியாகக் கிடைக்காது; சில நேரங்களில் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் வீட்டை நடத்த வேண்டாமா? விதை, உரம் வாங்க வேண்டாமா? குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு—இவற்றுக்கெல்லாம் பணம் தேவை. விளைச்சலை உடனடியாகப் பணமாக்க வேண்டிய விவசாயியின் அவசரத்தை சக்திவேல் பயன்படுத்திக்கொண்டான்.


ஒரு லாரி இரண்டு, மூன்று லாரிகளாகப் பெருகியபோது அவனுடைய வருமானமும் பெருகியது. அவனிடம் எப்போதும் பணப்புழக்கம் இருந்தது. மேட்டுப்பாளையம் சந்தையில் காய்கறிகளை இறக்கிவிட்டு, திரும்பும்போது மணல் ஏற்றி வந்து மலையில் விற்கத் தொடங்கினான். கட்டிட வேலைகளுக்குப் பெருமளவில் மணல் தேவைப்பட்டதால், மக்கள் எந்த விலையைக் கொடுத்தும் அதை வாங்கத் தயாராக இருந்தார்கள். சக்திவேலைச் சுற்றி அதிகாரம் உருவானபோது, மலையில் ஏராளமான நிலங்களை வாங்கினான். மண் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும்; சில சமயங்களில் அதே மண் அந்தக் குடும்பத்தைக் கடனுக்குள் தள்ளிவிடும். அவனிடம் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க முடியாதபோது, அவர்களுடைய நிலங்களை அடிமாட்டு விலைக்கு எழுதி வாங்கினான்.


“சக்திவேல்கிட்ட போனா எப்போ வேணாலும் பணம் கிடைக்கும்” என்ற பேச்சு பரவியது. அது மரியாதையா, அச்சமா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஓர் உணர்வு மக்களிடையே உருவானது. அந்த அச்சம்தான் அவனுடைய பேரரசின் முதல் கல்.

அதிகாலை மூன்று மணிக்கு மதனும் மங்கலியும் கேரட்டுகளைக் கழுவும் இடத்தில் இருந்தார்கள். மங்கலி இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் விட்டு கேரட்டுகளைத் திருப்பிக்கொண்டிருந்தாள். குளிர் எலும்புகளுக்குள் இறங்கியது.

“கையை வெளியே எடு,” என்றான் மதன்.

“ஏன்? என்னாச்சு?” என்று கேட்டாள் மங்கலி.

“எவ்வளவு நேரமா தண்ணில வெச்சிருக்க? குளிர்ல உறைஞ்சிடப் போகுது.”

“ஏன், உனக்குக் குளிரலையா?” அவள் சிரித்தாள்.


மதன் தன் கைகளைத் தண்ணீரிலிருந்து எடுத்துத் துணியில் அவசரமாகத் துடைத்துக்கொண்டான். பிறகு மங்கலியின் கைகளைப் பிடித்து வெளியே எடுத்தான். துணியால் துடைத்தபோது அவளுடைய விரல்களும் உள்ளங்கையும் ரத்தச் சிவப்பாகியிருந்தன. நகங்களின் ஓரங்களில் மண் படிந்திருந்தது. சிறு காயங்களிலிருந்து கசிந்த குருதியை அவள் பொருட்படுத்தவில்லை. மதன் அவளுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டு விரல்களைத் தேய்த்துவிட்டான். அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.


“இங்க வந்ததிலிருந்து உன் கை ரொம்ப மாறிடுச்சு,” என்றான்.

“நான் பொறந்ததுல இருந்தே காட்டுலயும் மலையிலயும் வேலை செஞ்ச கைதான் இது. நம்ம ஊர்லயும் இப்படித்தான் இருந்துச்சு. நீ என்ன இப்பத்தான் பார்க்கிற மாதிரி சொல்ற?”

அவள் சொன்னதும் மதன் அவளுடைய கைகளை விட்டுவிட்டான். மங்கலி மீண்டும் கேரட்டுகளைக் கழுவத் தொடங்கினாள். அவர்களுக்கிடையில் தண்ணீரின் சத்தமும் இயந்திரம் ஓடும் சத்தமும் மட்டுமே இருந்தன.

“உனக்கு இன்னும் அந்தக் கனவு வருதா, மதன்?”

அவன் தலையை உயர்த்தவில்லை.

“எந்தக் கனவு?”

“நீ தூங்கும்போது சில சமயம் கையைத் தலைக்குக் கீழே வைக்கிற. உனக்கு எதிர்ல யாரோ துப்பாக்கி பிடிச்சு நிக்கிற மாதிரி உடம்பு நடுங்குது.”

அவன் அவளைப் பார்த்தான்.


“அந்தக் காட்டுல என்ன நடந்ததுன்னு நீ எனக்குச் சொல்ல வேண்டாம். ஆனா எல்லாத்தையும் மறந்துட்டதா உன்னையே ஏமாத்திக்காத.”

மங்கலியின் வார்த்தைகள் அவனைச் சலனப்படுத்தின.

“நான் எதையும் மறக்கல,” என்றான். பிறகு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அதிகாலை நான்கு மணிக்குள் கேரட்டுகள் கழுவப்பட்டு மூட்டைகளில் நிரப்பப்பட்டன. ஒன்று, இரண்டு, மூன்று, பத்து, இருபது என்று மூட்டைகள் பெருகின. ஒவ்வொன்றின் வாயையும் கோணி ஊசியால் இறுக்கமாகத் தைத்தார்கள். கேரட்டின் தரத்துக்கு ஏற்ப வெவ்வேறு லாரிகளுக்குச் சரக்கைப் பிரித்தார்கள்.

“இது பெங்களூருக்குப் போகட்டும்.”

“இது மேட்டுப்பாளையம் போகட்டும்.”

“இதைக் கொச்சிக்குத் தள்ளிவிடுங்க.”


உத்தரவுகள் முடிந்ததும் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன. அவை மலையை விட்டு இறங்கத் தொடங்கியபோது சின்னக்குன்னூர் மலைக்குப் பின்னால் சூரிய வெளிச்சம் மெதுவாக எழுந்துகொண்டிருந்தது. வயலின் ஓரத்தில் நின்ற மதன் லாரிகளைப் பார்த்தான். அவற்றில் போனது கேரட் மட்டுமல்ல; முந்தைய இரவு வயலில் உழைத்திருந்த ஏராளமானவர்களின் உழைப்பும்தான். அந்த உழைப்பு கீழே சென்று பணமாக மாறும்போது, அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வயலில் வேலை செய்தவர்களுக்குக் கிடைக்கும்.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே மதன் நிறையக் குடித்திருந்தான். வாகனம் வீட்டை அடைவதற்கு முன்பே சோர்வில் அவனது கண்கள் மூடிக்கொண்டன. ஜன்னல் வழியாகக் கசிந்து வந்த சூரிய வெளிச்சம் உடலைத் தொட்டதைக்கூட உணராமல் தூங்கிக்கொண்டிருந்தான்.


கனவில் ஒரு மரம் வந்தது. அது சால் மரமா, யூகலிப்டஸா என்று அவனால் சொல்ல முடியவில்லை. மரத்தின் அடியில் ஒரு கல் இருந்தது. கல்லின் மீது மஞ்சள் பூசப்பட்டிருந்தது. அதன் முன்னால் ஒரு பெண் அசையாமல் நின்றாள். காட்டு வாசனை அவளைச் சுற்றியிருந்தது. அவள் யார் என்று மதனுக்குத் தெரியவில்லை.

அவன் அவளை நோக்கி நடந்தபோது அவள் பின்னால் நகர்ந்தாள். அவளுக்குப் பின்னால் காடு இல்லை; சிவப்பு மண் விரிந்திருந்தது. அந்த மண்ணுக்குள் யாரோ எதையோ புதைத்துக்கொண்டிருந்தார்கள்.


“என்ன புதைக்கிறீங்க?” என்று கேட்டான்.

யாரும் பதில் சொல்லவில்லை.

அவன் இன்னும் அருகில் சென்றபோது தொலைவில் வாகனங்களின் சத்தம் கேட்டது. பல வாகனங்கள் ஒரே நேரத்தில் நகர்ந்துவருவதைப் போலிருந்தது. மரங்களுக்கு இடையில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஒளிகள் அசைந்தன. என்ன நடக்கிறது என்று புரியாமல் மதன் ஓடத் தொடங்கினான்.

அப்போது அந்தப் பெண் அவன் பெயரைச் சத்தமாக அழைத்தாள்.

“மதனா!”

அவன் திரும்பினான். அவளுடைய குரலில் பயமில்லை. கோபம் இருந்தது. அந்தக் கோபத்தின் அதிர்ச்சியில் மதன் விழித்துக்கொண்டான்.


சில நொடிகள் தான் எங்கே இருக்கிறோம்  என்று அவனுக்குப் புரியவில்லை. மூச்சு வேகமாக வந்தது. பிறகு அந்தச் சிறிய அறையும் சுவரில் தொங்கிய துணிகளும் தெரிந்ததும் மெல்ல இயல்புக்குத் திரும்பினான். சமையலறையிலிருந்து பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது. அவன் எழுந்து உட்கார்ந்தபோது மங்கலி உள்ளே வந்தாள்.

“மறுபடியும் அதே கனவா?”

மதன் பதில் சொல்லவில்லை.

“யாரு வந்தாங்க?”

“யாரும் வரல.”

அவன் அவளைப் பார்த்தான்.

“அந்தக் கல்லா?”

மதனின் முகம் மாறியதை மங்கலி கவனித்தாள்.

“சரி, விடு. நான் எதுவும் கேட்கல,” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனாள்.


மதன் சுவரில் தொங்கிய சிறிய துணியைப் பார்த்தான். சத்தீஸ்கரிலிருந்து அவர்கள் கொண்டுவந்த கடைசிப் பொருட்களில் அதுவும் ஒன்று. அதில் அவர்களுடைய தெய்வத்தின் உருவம் இருந்தது. பலமுறை மடிக்கப்பட்டதால் நிறங்கள் கலைந்து, உருவம் மங்கியிருந்தது. மதன் எழுந்து அந்தத் துணியைத் தொட்டான். கதவுக்குப் பின்னால் நின்று மங்கலி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அதை எடுக்காத, மதன். இருந்த இடத்திலேயே இருக்கட்டும்.”

மதன் கையைப் பின்னால் இழுத்துக்கொண்டான்.


“நம்ம ஊரோட அடையாளமா இது மட்டும்தான் மிச்சம் இருக்கு.”

மங்கலி அவனைப் பார்த்தாள்.

“ஏன், நாம இல்லையா?”

அவன் சிரிக்க முயன்றான்.

“நாம எங்கே இருக்கோம்? ”

மங்கலி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். மழை நின்றிருந்தது. பனி மெதுவாக மலையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது.

“ஊர்னு சொல்றதுக்கு என்ன வேணும்?”

மதன் பதில் சொல்லவில்லை.

“வீடு?” என்று கேட்டாள்.

அவன் அமைதியாக இருந்தான்.

“மக்கள்? மண்?”

அவன் அவளைப் பார்த்தான்.

“இதெல்லாத்தையும் விடப் பாதுகாப்பு,” என்றாள்.

அந்த வார்த்தை அவளுடைய வாயிலிருந்து வந்ததும் மதன் அமைதியாகிவிட்டான்.

“எங்க நம்ம பிள்ளைகள் பயமில்லாம தூங்குறாங்களோ, அந்த இடம்தான் நமக்கு ஊர்.”

சொல்லிவிட்டு அவள் வெளியேறினாள்.

மதன் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தான். அவள் ஆறுதலுக்காகச் சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் இருந்த வலியைக் கிளறிவிட்டிருந்தன. பாதுகாப்பாக வாழ்வதற்காக ஒரு இடத்தைவிட்டு வந்தவனுக்கு, ‘ஊர்’ என்ற சொல் ஒருபோதும் முழுமையாகச் சொந்தமாகாது.


அன்று மாலை சக்திவேல் வயலுக்கு வந்தான். அவனுடைய ஜீப் சாலையிலிருந்து திரும்பி மண்ணில் இறங்கியதும் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் தங்களை அறியாமலேயே நிமிர்ந்து நின்று வணக்கம் வைத்தார்கள்.   அவனது  கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை.  சக மனிதர்களிடம் கருணையற்று நடந்துகொள்கிறவர்களுக்கு அதிகாரம் எளிதாக கிடைத்துவிடுகிறது. அவன் வண்டியிலிருந்து இறங்கியதும்  முதலில் வயலைப் பார்த்தான். பிறகு மண்ணையும்  கடைசியாக தொழிலாளர்களைப் பார்த்து கையசைத்தான்.கையசைத்தான்.  வயலிலிருந்து எடுக்கப்பட்டிருந்த கேரட்டுகள் மூட்டையிலிருந்தது. வயலில் இறங்காமலேயே  எல்லாவற்றையும் ஒருமுறை கவனித்தவன் மதனையும் மங்கிலியையும் குறிப்பாகப் பார்த்துவிட்டு அருகில் வரச்சொல்லி சைகை செய்தான்.  மங்கிலியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மதன் மட்டும் சக்திவேலுக்கு அருகில் வந்தான்.


”நம்ம கிட்ட வேலைக்கு வந்து எவ்ளோ நாளாச்சு?”

மதன் யோசிக்காமல் ’எட்டு மாசம்..” என்றான்.

”இதுக்கு முன்ன கேத்தில இருந்திங்களோ?”

மதன் ஆம் என தலையசைத்தான்.

“நீங்க சத்தீஸ்கரா?”

சக்திவேலின் கேள்வி சாதாரணமாக இருந்தபோதும்  மதனின் உடலுக்குள் அது வேறொரு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

“ஆமா,” என்றான்.

“எந்தப் பக்கம்?”

மதன் ஒரு கணம் தயங்கினான்.

“பஸ்தர் பக்கம்.”

சக்திவேல் சிரித்தான்.

“அங்கயும் நிறையக் காடுதான் இல்லையா?”

மதன் ஆமென தலையசைத்தான்.


“சரி. நல்லபடியா வேலையைப் பாருங்க,” என்று சொல்லிவிட்டு சக்திவேல் அடுத்த வயலை  நோக்கி நடந்தான்.

“பஸ்தர் பக்கம்.”

மதன் அந்த வார்த்தையை மனதுக்குள் மீண்டும் சொல்லிப் பார்த்தான். பல வருடங்களாக யாரிடமும் அந்த இடத்தின் பெயரைச் சொல்லாமல் இருந்தவன், அதைச் சொன்னதும் தனக்குள்ளிருந்த  ஒரு  ரகசியக் கதவு திறந்ததைப் போல உணர்ந்தான்.


அன்று இரவு மதன் வயலில் தனியாகச் சில நிமிடங்கள் நின்றான். மலை இருளுக்குள் மறைந்திருந்தது. கீழே எங்கோ ஒரு லாரி ஹாரன் அடித்துச் சென்றது.  பனி அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. அவன் குனிந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கண்களை மூடினான்.

முதலில் சின்னக்குன்னூர். பிறகு கேரட். மலையிலிருந்து தவழ்ந்து வரும் பனி. மங்கலியின் கை. அவர்களுடைய குழந்தைகளின் முகங்கள். அதற்குப் பிறகு ஒரு காடு. மகுவா பூக்கள். ஒரு கல் ஒரு பெண்ணின் குரல் துப்பாக்கிச் சத்தத்தைத் தொடர்ந்து ஓடும் கால்கள். சடாரென பற்றி எரிந்த காட்டின் நடுவே மீண்டும் சிவந்த மண். அவன் கண்களைத் திறந்து உள்ளங்கையில் இருந்த மண்ணைப் பார்த்தான்.

“எங்க போனாலும் மண்ணுதான்,” என்று மெதுவாகச் சொன்னான்.


அவன் சொன்னதை யாரும் கேட்கவில்லை. மலை கேட்டிருக்கலாம். அவன் கையிலிருந்த மண் கேட்டிருக்கலாம். அல்லது அவனுடைய கடந்த காலம் கேட்டிருக்கலாம். மதன் மண்ணைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தான். அவனுக்குப் பின்னால் கேரட் வயல் இருந்தது. மண்ணுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான கேரட்டுகள் வளர்ந்துகொண்டிருந்தன. மேலே எதுவும் தெரியாமல், கீழே மட்டும் வேர்பிடித்தபடி. அந்த வேர்கள் எவ்வளவு ஆழம் சென்றிருக்கின்றன என்பது அவனுக்கு  இன்னும் தெரியவில்லை.


-தொடரும்

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page