top of page

பி லங்கேஷின் ஓய்வு பெற்றவர்கள்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 5 hours ago
  • 4 min read

Everybody has to have their little tooth of power. Everybody wants to be able to bite. Mary Oliver, Blue Pastures.


ree

 

இந்திய இலக்கியத்தில் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மைகளும் பிரத்யேகமான கதை சொல்லல் முறையும் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும்  கதை சொல்லும் முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உள்ளடக்கத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு நீண்டகால அவகாசம் பிடிக்கும். விடுதலைக்குப் பிறகான புதிய  தேசத்தில் மராத்திய மற்றும் கன்னட இலக்கிய உலகில் நிகழ்ந்த மாற்றங்கள் முக்கியமானவை. அந்த மாற்றம் அந்த மொழிகளை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழிகாட்டியாக இருந்தது. அந்த புது வகையான நேரடிவ் என்பது அசலான தலித் இலக்கியத்திற்கு முன்னோடியாக இருந்தது.  


இந்த புதிய வகை நேரடிவ் வெவ்வேறு குரல்களுக்கான வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் விரிவுபடுத்தியது. இந்த இரண்டு மொழியின் புனைவுகளை மட்டுமே வைத்து தனியாக ஒரு நூல் எழுதும் விருப்பம் எனக்குண்டு. சில வருடங்களில் அதனை செய்துவிடுவேன் என நம்புகிறேன்.


கடந்த காலத்தைக் குறித்த நினைவேக்கங்களை பெரும்பான்மையாக புனைவுகள் பேசிக் கொண்டிருந்தபோது தலித்  எழுத்தாளர்கள் காட்டிய பாதை கடந்த காலத்தின் மீது மடுமில்லாமல் நிகழ் காலத்தின் அரசியல் உரையாடல்களிலும் புதிய புரிதல்களை உருவாக்கியது. இலக்கிய மதிப்பீடுகளுக்குள்  அதுவரையிலும்  அங்கீகரிக்கப்படத குரல்களும் மனிதர்களும் பிரவேசித்தனர்.


தேவனூர மஹாதேவ, குவெம்பு, யு ஆர் அனந்தமூர்த்தி, சித்தலிங்கைய்யா, பைரப்பா என ஏராளமான சாதனையாளர்களைக் கொண்ட கன்னட மொழியில் பி.லங்கேஷும் முக்கியமானவர். தனது எழுத்துச் செயல்பாட்டிற்காகவும் களச்செயல்பாட்டிற்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டவர். அவரது ஓய்வு பெற்றவர்கள் என்ற கதை எழுதப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.  ஆனால் இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.  


ஒவ்வொரு அரசு அலுவலகமும் வதை முகாமிற்கு ஒப்பானது. அந்த முகாமில் கூடுதல் அதிகார மிக்கவர் அவரை விடவும் அதிகாரம் குறைவான அத்தனை பேரையும் புழுவாகப் பார்ப்பார். அடுத்த நிலையில் இருப்பவர் மேலே இருப்பவருக்கு குனிந்து பழக்கப்படுவதோடு தனக்குக் கீழே இருப்பவர்களை தன்னிலும் புழுவாகப் பார்ப்பார். இந்த மனநிலை கடைநிலை வரைத் தொடரும்.


செகாவின் நாய்க்கார சீமாட்டியில் வரும் போலிஸ்காரக் கதாப்பாத்திரம் ஏன் சாகாவரம் பெற்றதாக இருக்கிறது?  ஒரே ஆள் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறான முகத்தைக் காட்டுகிறான். அவனது குணநலன்கள் சடாரென மாறக்கூடியது. பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்கு  தன் எஜமானனிடம் வாலாட்டுவதும் சாலையில் செல்கிறவர்களைப் பார்த்து குரைப்பதற்கும் மட்டுமே தெரியும். காரில் செல்கிறவர்களைப் பார்த்து அந்த நாயால் குரைக்க முடியாது, இரு சக்கர வாகனத்தில் பார்த்து வீட்டிற்குள்ளிருந்தபடியே குரைக்கும், சைக்கிளில் செல்கிறவனைப் பார்த்து வாசல் வரை வந்தது குரைக்கும். நடந்து செல்கிறவனை அந்த வீதி முனை முடியும் வரை விடுவதில்லை. நாய்க்கார சீமாட்டியில் வரும் அந்த போலிஸ்காரர் இப்படியானதொரு உதாரணமென்றால் லங்கேஷின் இந்தக் கதையில் வரக்கூடிய இரண்டு கிழவர்கள்  நீண்டகாலம் வதைமுகாமில் கழித்துவிட்டு வந்தவர்கள். அந்தக் கசப்புகளும் தழும்புகளும் அப்படியே இருக்கின்றன. ஆனால் ஒருவர் அதிகாரத்தின் மேல்நிலையில் இருந்தவர், இன்னொருவர் அடுத்த நிலையில் இருந்தவர்.


ஒரு பூங்காவில் மூன்று மனிதர்களுக்கு இடையிலான உரையாடலின் வழியாக சொல்லப்படும் இந்தக் கதையில் கதை சொல்லி கதை சொல்லியாகவும் இரண்டு கிழவர்களுக்கு இடையில் கதை கேட்பவனாகவும் வருகிறார். அவர் கதை கேட்பதன் வழியாக நாம் கதை கேட்கிறோம்.  கல்லூரியொன்றில்  பேராசிரியராக பணியாற்றும் கதைசொல்லி  தனது பணியிடத்தில் நிகழும் அதிகார போட்டிகள் அதனைச் சுற்றி நிகழும் அருவருப்பான  காய்நகர்த்தல்கள் கணக்கு வழக்குகள் இவற்றைக் குறித்தெல்லாம் கவலைப்படுவதோடு அந்தச்  சூழலுக்குப் பயணிப்பதால் தான் இழக்கும் நன்மைகளைக் குறித்து சொல்வதிலிருந்து இந்தக் கதை துவங்குகிறது.  


பொதுவெளியில் தனியாக இருக்கும் மனிதன் எத்தனைக் கேலிக்குரியவன்? பணியிடத்தைப் போலவே வெளியுலகிலும் அவரால் எல்லோருடனும் சுமூகமாகப் பழகமுடியவில்லை. எங்குதான் அதிகாரமில்லை?  அதனாலேயே எளிமையான வாழ்க்கையை வாழக்கூடிய அவர் அந்தப் பூங்காவில் தனித்து ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார். நடைபயிற்சிக்காக வந்த இரண்டு முதியவர்கள் ஓய்வெடுக்க வேண்டி அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்.


நரசிங்கராயர் பிரகலாத ராயர் என்னும் அவர்களில் நரசிங்கராயர் தலைமை அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். பணிக்காலம் முழுக்க  அவருக்கு கை கட்டி சேவகம் செய்த பிரகலாதர் ஓய்விற்குப்பிறகும் அப்படியே இருக்கிறார்?  பருத்த உருவமும் சத்தமாகப் பேசக் கூடியவருமான நரசிங்கராயரின் தோற்றமும் நடவடிக்கைகளுமே அவர் எல்லோரையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர் என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது.  எல்லோரையும் தனது கட்டளைகளுக்குக் கீழ் படியச் செய்பவருக்கு அதற்குரிய உடல்மொழி வந்துவிடுவது போலவே கீழ் படிவதற்கு பழகியவர்களுக்கு அதற்கான உடல்மொழி வந்துவிடுகிறது.


தங்களது கடந்த காலத்தையும் சொந்த ஊர்ப் பெருமைகளையும் வாய்  ஓயாமல் பேசுகிறவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் விதந்தோதுவது தங்களது அதிகாரம் பசுமையாக இருந்த நாட்களைத்தான். அதனை மீட்டுக் கொள்ளமுடியவில்லை என்கிற ஏக்கம் ஆழ் மனதில் படிந்துவிடுவதாலேயே தங்களது ஊரையோ அடையாளங்களையோ விமர்சிக்கிறவர்களை அவர்களால் மன்னிக்க முடிவதில்லை. கடந்த காலத்தினை பொற்காலமாகப் பார்க்கப் பழக்கப்பட்ட ஒருவன் ஏதோவொரு வகையில் யாரோ சிலரை அதிகாரம் செய்தவனாக மட்டுமே இருக்க முடியும். இங்கும் நரசிங்கராயர் தனது அலுவலகத்தில் எல்லோரையும் எப்படி ஆட்டிப் படைத்தேன் ஆண் பெண் பேதமில்லாமல் மண்டியிட வைத்தேன் என பெருமையாக சொல்ல உடனிருக்கும் லிங்கராயரும் ஆமாம் சாமி போடுகிறார். உச்சகட்டமாக லிங்கராயரையும் விட்டுவைக்கவில்லை. லஞ்சம் வாங்கி சம்பாதித்து வீடு கட்டியதையும் அதனாலேயே அவரது பெண்ணுக்குத் திருமணமாகாமல் இருப்பதையும் குத்திக் காட்டுகிறார். கதைசொல்லி மேற்கொண்டு அவர்களது உரையாடலில் கலந்துகொள்ளாமல் விலகிவிடுகிறார்.


அடுத்தநாள் நரசிங்கராயருக்கு முன்பாகவே லிங்கராயர் வந்துவிட, முந்தைய நாள் நிகழ்ந்த உரையாடலில் தனக்கு உடன்பாடில்லையென கதைசொல்லி சொல்கிறார். லிங்கராயர்  தனது முன்னாள் மேலதிகாரியின்  உண்மையான குணத்தை விளக்குகிறார். மூன்று திருமணம் செய்து மூன்று பேரும் ஓடிப்போய்விட்டார்கள். சரியான பெண் பித்தன். அலுவலத்தில் வேலை செய்தபெண் உண்மையில் அவருக்குக் கட்டுப்படவில்லை அவரைச் செருப்பால் அடித்திருக்கிறாள். இப்படி முந்தைய தினம் நரசிங்கராயர் தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொண்ட அவ்வளவும் அருவருப்பான பொய்கள் என்பதை சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தூரத்தில் நரசிங்கர் வருவது தெரிய அவசரமாகக் கதையை சொல்லி முடிக்கிறார்.


அவர்கள் தன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட நரசிங்கர் கோவத்தோடே வருகிறார். என்ன பேசினீர்கள் என பதற்றமாகக் கேட்க, பொதுவாக பேசிக் கொண்டதாக சொல்கிறார்கள். அவர் விடுவதாக இல்லை. முந்தைய தினம் லிங்கராயரைக் குறித்து பேசியதைத் தொடர அங்கு சூழல் மாறத் துவங்குகிறது.


உச்சக்கட்டமாக நரசிங்கராயர் பழைய அதிகாரத் தொனியோடு போய் வேர்க்கடலை வாங்கி வரச்சொல்ல, லிங்கராயர் அசையாமல் அப்படியே இருக்கிறார். முன்னைவிடவும் அதிகாரத் தொனியில் அவர் சொல்லும்போது லிங்கராயர் சர்தான் போய்யா என நீண்டகாலமாக அடக்கி வைத்த ஆத்திரத்தை வெளிப்படுத்துவிடுகிறார். அதன்பிறகு இரண்டு பேருமே ஒருவரைக் குறித்து ஒருவர் தகாத செய்திகளை பேசி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இருவருமே அருவருப்பான மிருகங்களாகிவிடுகிறார்கள்.


குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை மனித மனம் அதிகார சுவைக்கு எத்தனை ஏங்குகிறது என்பதை நுட்பமாகப் பேசுகிறது. ஒருவன் காலம் முழுக்க அதிகாரம் செலுத்துவது எப்படி குற்றமோ அதனைச் சகித்துக்கொண்டு இருப்பதும் குற்றமே.   இந்த சிறிய வாழ்க்கையில்  பிழைப்பதற்காக நமக்கொரு வேலை அவசியம், ஆனால் சுயமரியாதையை மறந்து அதனைத் தக்கவைக்க போராடக் கூடாது. இந்த இரண்டு அதிகாரிகளின் இடத்தில் அரசு குடிமக்கள் அல்லது கணவன் மனைவி என எந்த எதிர்நிலைகளை வைத்தாலும் ஆதாரப் பிரச்சனை ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு சிறுகதை தான் பேசவிழைவதை மிகவும் மெல்லிய இழையாக வெளிப்படுத்தும் போது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  இந்தக் கதைக்கு தெளிவான துவக்கமும் எதிர்பாராத திருப்பமும் இருக்கிறது. ஆனால் கதையை வளர்த்தெடுத்துச் செல்லும் நடுப்பகுதி கதாப்பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாகவே கடத்தப்படுகிறது.  இதுபோல் ஒரு கதையை வளர்த்தெடுப்பது சவாலான காரியம்.


ஒரு முன்னாள் அதிகாரிக்கும் அவரது உதவியாளருக்குமான அதிகார முரண் புறவயமான கதைமொழியில் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த அதிகார மனோநிலை இரண்டு நபர்களோடு முடியாமல் வர்க்கம், பாலினம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதொன்றாக விரியும்போது சிறுகதைக்கேயான அகவயமான மடிப்புகளையும் கொண்டதாக இருக்கிறது. இந்த மடிப்புகள் தான்  வெவ்வேறு படிநிலைகளில் பொறுத்திப் பார்த்து வாசிக்கும் சாத்தியத்தை அளிக்கிறது. மேலோட்டமாகச் சொல்லப்பட்ட செய்திகளின் கீழ் மறைந்திருக்கும் ரகசியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


ஒரு கதாப்பாத்திரத்தில்  துவங்கும் கதை வேறு கதாப்பாத்திரங்களுக்குள் பயணித்து அந்த புதிய கதாப்பாத்திரங்களையே ஆதாரப் பிரச்சனைகளை வெளிப்படுத்த பயன்படுத்தியிருப்பார். இந்த உத்தியில் கதை சொல்லியின் இடத்தில் வாசகர்கள் எளிமையாக வந்துவிடுவதால் சண்டையிட்டுக் கொள்ளும்  கிழவர்களின் அருகில் நாமும் இருக்கிறோம். அந்த நிமிடமே வாசிக்கிறவர்களுக்குள்ளும் இழையோடியிருக்கும் அதிகாரப் பசியும் அதன் காரணமாக நாம் செய்யும் கேலிக் கூத்துகளும் கொம்பு முளைத்து நம்மை கேலி செய்கிறது.    

 

 

 

 

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page